That Alone: The Core of Wisdom
(நாராயண குருவின் ஆத்மோபதேச சதகம் மீதான சிந்தனைகள்)
அறிவினையும் கடந்து அறிபவனின் அகத்தும் புறத்தும் பேரொளியுடன் ஒளிரும் கருவினை புலனைந்தும் உள்ளடக்கி மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்கியோதிடுவோம் (1) ஆன்மாவும் புலன்களும் உடலும் தொட்டறியும் பல்லுலகும் எல்லாம் எண்ணுங்காலை பரவெளியில் உயர்ந்தொளிரும் கதிரவனின் திருவுருவென்று தேடலினால் தெளிந்திடுவோம் (2) புறத்தில் இருப்பதும் அகம் உணர்வதுமான வெளி முதலான பூதங்களைந்தும் ஆழிச்செல்வத்தில் எழும் அலைகள் போல தம்மில் பேதமின்றித் தோன்றிடல் வேண்டும் (3) அறிவும் அறிந்திடும் பொருளும் அறிபவன் தன்னறிவும் எல்லாம் முழுமுதல் மட்டுமேயாம் மயக்கம் நீங்கி விளங்கிடும் உயர்வாம் அறிவிலமர்ந்து அதுமட்டுமாதல் வேண்டும் (4) உலகத்தோர் உறங்குவதையும் விழிப்பதையும் எண்ணுவதையும் உற்றுநோக்கி நிற்கும் ஏற்றப்படாததும் எப்போதும் அணையாததுமான விலைமதிப்பில்லா விளக்கை கண்டறிந்து முன் செல்வோம் (5) எழவேண்டும் பின் உறங்கவேண்டும் உண்ணவேண்டும் இணையவேண்டும் என்றிவ்வண்ணம் பல அவாக்கள் எழும்போது மாறாமல் உள்ள வடிவை அறிய யாருளர்? (6) விழிக்காது உறங்காது அறிவாகவே இருப்பாய்! அவ்வாறிருப்பது கைகூடாதென்றால் ப்ரணவத்தை உணர்ந்து பிறப்பொழிந்து வாழும் முனிஜன சேவையில் உன்னை நிறுத்துவாய்! (7) ஒளிமுதலாய பழமைந்தும் உண்டு நாறும் குழலில் புகுந்து மாறிமாறியாடும் கிளிகளைந்தையும் வீழ்த்தி வெளியுருவையேந்தி அகம் விளங்கிடவேண்டும் (8)