Monthly Archives: April 2014

இந்துமதம் – 8. சிவன்

Standard

சிவன்

இந்தியாவின் ஆன்மீக வரலாற்றின் தொடக்கப்புள்ளி சிவன்.  இன்றைய சூழலில் அவரைப் பற்றி நிலவும் புரிதல் அல்ல அவரது உண்மை இறை நிலை.  அவரது மேலான தனித்தன்மையைப் புரிந்து கொள்ள, நாம் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட, முன்-வேதகால இந்தியாவின் கலாச்சாரங்களை ஆராய வேண்டும்.  ஆனால் சைவ இயலக்கியங்களின்படி, ஆதி கலாச்சாரங்களில் சிவனின் வழிபாடு பற்றி நாம் அறிந்து கொள்ளக் கிடைப்பவை வெகு சில களிமண் பட்டயங்களில் பொறிக்கப்பட்ட  உருவங்களே.

அவ்வாறு கிடைத்தவற்றில், பசுபதி (சிவகுரு) சின்னம் இந்தியவியல் ஆய்வில் மிகவும் புகழ்பெற்றது.  தியானத்தின் அமைதியில் லயித்து, சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் குருவின் உருவம் அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது.  அந்தச் சித்திரத்தில் பறவைகள், மனிதர்கள், விலங்குகள், கடல் மீன்கள் என அனைத்தும் சிவ குருவைச் சூழ்ந்து நின்று, அவரது திவ்ய மௌனம் பரப்பும்  ஞானத்தை ஏற்று நிற்கின்றன.  இவ்வாறு சிவன் ஆதி முதல் குருவாகிறார். 

தக்ஷிணாமூர்த்தி

சிவனை மெளனத்தின் உன்னத குருவாக மீட்டு நிறுவிய இந்திய மேன்மை வாய்ந்த தத்துவ ஞானிகளில், கேரளாவின் காலடி என்னும் ஊரில் பிறந்த ஜகத்குரு சங்கராச்சாரியர் முதன்மையானவர். அவர் தனது “தக்‌ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில்” சிவனின் நேர்த்தியான ஒரு சித்திரத்தை அளிக்கிறார். அதில் சிவன், ஆலமரத்தின் கீழே, ஒளி பொருந்திய முகத்தோடு, இளைஞனின் தோற்றத்தில் தென் திசை நோக்கித் தவமிருக்கிறார்.  அவரைச் சூழ்ந்து ஐந்து முதியவர்கள், இளம் குருவின் அந்த தியானத்தின் மௌனம், தங்களது ஆயுட்கால அறியாமை மற்றும் சந்தேகங்களை வேரறத் துரத்தும் மகிழ்ச்சியில் களித்திருக்கின்றனர். 

தியானம் விளைவிக்கும் (இருமையற்ற) இரண்டு-அற்ற நிலை (non–dual) என்னும் ஞானம் இந்திய பாரம்பரியத்தின் சொத்து.  இந்தக் கலாச்சரத்தில் வந்த பக்தர்கள் வீரம் மிகுந்த போர்வீர்ர்கள் அல்ல.  செல்வம் சேர்ப்பதில் ஆர்வமுடையவர்களோ, சொகுசான வாழ்கை வசதிகளில் மோகம் கொண்டவர்களோ அல்ல.  ஏனெனில் அவர்களது இறை உருவகம் சிவன்; எதிர்மறை லௌகீக நோக்கைக் (Nivrti Marga) கொண்டவர்.

சிவனின் மற்றொரு உருவும் அவ்வாறு எதிர்மறையானதே – நடராஜர்.

நடராஜ சிவன்

நியூயார்க் நகர வணிகப் பெரும்புள்ளியின் வரவேற்பறையில், பாரிஸில் வாழும் கலைஞனின் படிப்பறையில், லண்டன் அருங்காட்சியகத்தில் மற்றும் இந்திய கோயில் கருவறைகளில் நாம் சாதாரணமாகக் காணும் ஒரு சிலைவடிவம் உண்டு.  நடராஜர், நடனமிடும் சிவன்.  உயரிய ஆன்மீக விழுமியத்தின், அழகுணர்வின் மேல் மனிதனுக்குள்ள புரிதலையும் நன்மதிப்பையும் காட்டும் வடிவம் இது.  அழகுணர்வில் தியானநிலையின் அம்சம் கைகூடியவர்களுக்கு இப்படிமம் அளப்பரிய அர்த்தங்களைச் சொல்கிறது.  தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடராஜர் ஆலையம் சிதம்பரம்.  சிதம்பரம் என்றால் வானம் (Akasa) அதாவது விழிப்புணர்வின் வெற்றிடம் (Cit).

மதிப்பீடுகளின் வரையறைப்படி, புலன்களின் இன்பம் முதல், உயரிய ஆன்மீக மெய்ஞானம் வரை பல்வேறு கோணங்களில் உவகை பரிசீலிக்கப்படுகிறது.  அதில்  உச்சபட்ச ஆனந்தத்திற்கு, சிதம்பரத்தின் நடராஜர் குறியீடாகிறார்.   “உப்பு முதல் கற்பூரம் வரை” என ஒரு சொலவடை தென்னகத்தில் உண்டு.  இது மதிப்பீடுகளின் அணிவரிசையின் தொகுப்பைக் குறிக்க உருவாக்கப்பட்டது.  மலிவாக நமக்குக் கிடைக்கும் பொருள் உப்பு; இது நமது அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளின் குறியீடாகிறது.  ஒரு சிட்டிகை அளவு உப்பு இல்லாமல் உணவு சுவைப்பதில்லை.  ஆனால் வாழ்வென்பது வெறும் உணவுக்கானது மட்டுமல்லவே..  மனிதனின் உணர்விற்கும், அறிவிற்கும் கூட அவன் உணவு ஊட்ட வேண்டியுள்ளது.  அதற்காகத்தான் கலையும் இலக்கியமும் அவனுக்குத் தேவையாயின. அதே நேரம், மகிழ்ச்சிக்கான மனிதனின் நிரந்தரத் தேடல் அவன் புலன் மற்றும் அறிவுக்குக் கொடுக்கும் விருந்தினால், வாதப் பிரதிவாதங்களினால் நிறைவடையாது.  அதற்கு அவன் ஆன்மீகக்தின் ஆழம் புலப்படாத ஆனந்தக் கடலில் முக்குளிக்க வேண்டியிருக்கிறது.  அல்லது, ஆன்மீக உச்சங்களைத் தேடி பயணிக்க வேண்டியிருக்கிறது. 

கற்பூரம் ஏற்றப்பட்டு மூர்த்தியின் முன் தீபாராதனை காட்டப்படும் போது, அதன் ஒளியைப் போல ஒருவரது அகங்காரம் சுடர்விடுகிறது.  முடிவில் சூடத்தின் தழல் எரிந்தணைவதைப் போல, அறிவு நிலை கடந்த ஆன்மீக உன்னதத்தில் அகங்காரமும் காணாமல் போய் விடுகிறது. 

நடராஜர் தரும் குறியீட்டு விளக்கம்

ஒரு காலை உயர்த்தி, மற்றொரு காலை குப்புறப் படுத்திருக்கும் ஒரு குள்ள உருவத்தின் மேல் நிறுத்தி நடராஜர் நடன கோலத்தில் காட்சி தருகிறார்.  அவரது நான்கு திருக்கரங்களில் ஒன்று ஞானத்தின் சைகை காட்டுகிறது.   மற்றொன்றில் அபய முத்திரை.  மேல்நோக்கி உயர்த்திய மற்ற இரு கரங்களில் ஒன்றில்  நெருப்புக்கிண்ணமும், மற்றொன்றில் உடுக்கையும் (Damaru) ஏந்தியிருக்கிறார்.  சமஸ்கிருத இலக்கணத்தின் குருவாகிய பாணினியின் கூற்றின் படி, இந்திய-ஆரிய (Indo-aryan) இன மொழிகளின் அகர வரிசைகள், நடராஜனின் பிரபஞ்ச நடனத்தின் போது சிவ முரசில் எழுந்த மாறுபட்ட நாதத்திலிருந்து உயிர்பெற்றன.  இந்த முரசொலியின் ஞான இணை, அவரது மறுகையில் அசையும் தீச்சுடரில் பிரதிபலிப்பது உயரிய பொருள் பொதிந்த ஒன்று.

நடராஜர் நிலைகொண்டிருக்கும் குள்ள உருவம் மனிதனின் பௌதிக அகங்காரத்தைக் குறிக்கின்றது.  இதனை இவ்வாறு விளக்கப்படுத்திக் கொள்ளலாம் – பூமி அது சுற்றும் சூரியனை விடச் சிறியது.  சூரியன் இந்தப் பிரபஞ்சத்தில் இயங்கும் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களுள் ஒன்று.  பிரபஞ்சத்தை ஒப்பிடுகையில் சூரியன் மிசக்சிறியது.  அடுத்து, பூரணத்தை நோக்குகையில் இப்பிரபஞ்சமே மிக எளியது.  ஆனால் ஆன்மீக தளத்தில் நோக்கும் போது, ”பரம புருஷன்” (Supreme Purusha) ஆகப் பரிணமிக்க, பூரணத்திற்கே இந்தக் குள்ள உருவம்தான் ஏறுபலகையாக இருக்கிறது. 

நடனத்தின் தாளலயம்

அமைதியில் ஆழ்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தி பேருண்மையின் (Satyam)  குறியீடாகும் போது, நடனம் புரியும் சிவன் தாளத்தைச் (லயம்)  சுட்டி நிற்கிறார்.  சத்தியமும் தாளமும் உச்ச எதார்த்தத்தின் (Supreme Reality)  இரு இணை கூறுகள்.  தாளம், வாழ்வின் பன்முக வெளிப்பாடுகளுக்கு ஒழுங்கும் அர்த்தமும் கொடுக்கிறது.  அணுவில் சுழலும் துகள்கள், ரத்தத்தில் மிதக்கும் அணுக்கள், வானில் உயரும் மேகங்கள், அவை மழையாகி, நதியாகி பின் கடல் சேரும் தன்மைகள், பருவகாலங்களின் சுழற்சி, மனித மனதில் பொங்கி அடங்கும் உணர்ச்சி வேகங்கள், கவிஞர்களின் பித்துநிலையின் பரவசம் கூடிய கவிதைகள், வரலாற்றின் முரணியக்கங்கள், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் ஆகிய இவை அனைத்தையும் சிவனது பிரபஞ்ச நடனத்தின் கூறுகளாகக் கொள்ளலாம்.  உலகை இயங்கச் செய்யும் ஒலிநயமும் தாளநயமும் ஒருங்கே முடிவிலா பெருக்கு கொள்ளும் நடனம். 

சிவன் சிவலிங்கமாக

சிற்பவியலில் (Iconography) புலமை பெற்றவர்களிடையே சிவலிங்கம் முக்கியமான சர்ச்சைக்குரியதாவே இருக்கிறது.  கடுந்தூய்மை (Puritanism) ஒழுக்க நெறிகளைப் பின்பற்றும் பெரும்பாலான மேற்கத்திய அறிஞர்கள் சிவலிங்க வழிபாட்டை போலியான, சீர்கெட்ட ஆண்குறி வழிபாடு எனக் குறுக்கியே நெடுங்காலம் விளக்கமளித்தனர்.  பக்தர்களான இந்து அறிஞர்கள் இக்கருத்துகளுடன் முரண்பட்டாலும், இத்தகைய தங்களது மத மரபுகளின் மீது வருத்தம் கொண்டிருந்தனர்.  ஆனால், தெளிந்த சிந்தனையுடைய பண்டைய இந்திய ரிஷிகளுக்கு, பாலியல் விழைவை மனித வாழ்வின் முக்கிய அம்சம் என்று ஏற்றுக்கொள்ளும் மனவிரிவு மட்டுமன்று, அதற்கு ஆன்மீகக் கருத்துருவின் தகுதி தந்து, அதனைக் கையாளும் தெளிவும் இருந்தது.   

இதில் சந்தேகம் எழுபவர்கள், பிருஹதாரண்யக உபநிஷத்தில் விளக்கம் பெறலாம் (அத்தியாயம்-1, பிராமணா-4).  ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புக்கள் இங்கு பிரம்மவித்யாவின் (Brahmavidya) புனிதத்துடன். போற்றப்படுகின்றன.  சிவலிங்கம், ஆன்மீகத்தின் நிமிர்வு நிலையும் (புருஷா),  கிடைத்தள நிலையில் இயற்கையின் தாய்மையும் இணையும் ஒத்திசைவைக் காட்டி நிற்கிறது. 

நந்தி (காளை)

சிவன், காளை வாகனத்தில் வீற்றிருக்கிறார்.  காளை மனித உயிரின் ஆற்றல் நிலையின் குறியீடு.  இதுவே, வாழ்வின் உயிரியல், அழகியல், உளவியல் மற்றும் ஆன்மீகக் கூறுகளின் ஊற்றுமுகம்.  எனவேதான் முரட்டு பலசாலியான ஒருவரை நாம் காளை என்று குறிப்பிடுகிறோம்.  நமக்குள் இருக்கும் இந்தக் காளையைப் பழக்கி, அதை நமது ஆன்மீகப் பயணத்திற்ந்த் துணையாகக் கொள்ள வேண்டும்.   ஆன்மீக நேர்த்திக்கு  விழையும் ஒருவர் இந்த ஆற்றல் நிலையை உன்னதப்படுத்த முதல் சிரத்தை எடுப்பது இதனாலேயே.  இதில் நாம் அடையும் வெற்றி, நமக்கு சிவத்தை அதாவது நித்திய ஜீவனை (ethernal life) அளிக்கும்.  தோல்வியோ நம்மை உயிரற்ற உடலாக, சவமாக ஆக்கும். 

சிவ வழிபாடு

சிவ வழிபாடு செய்து, எதிர்மறை லௌகீக நிலைபாட்டை (Via–negativa) ஏற்றுக் கொண்ட ஒருவர் சத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்களிலிருந்து முளைவிடும் இச்சைகள் அனைத்தையும் அந்த வழிபாட்டு வேள்வித்தீயில் சாம்பலாக்க வேண்டும்.  அதன் பின் விளையும் இச்சைகளற்ற நிலையின் விவேகத்தில் ஒருவர் காலமற்ற உன்னதப் பெருவெளியில் மெல்ல கரைகிறார்.  சாந்தி அடைகிறார்.

நிறைவு

இந்திய ஆன்மீகச் சிந்தனையின் பின்னணியான குறியீடுகளைப் புரிந்து கொள்ள முக்கியமான சில திறப்புகளை மட்டுமே இங்கு நாம் அளித்துள்ளோம்.  இந்திய தத்துவச் சிந்தனை பற்றிய கல்வியின் உச்ச நிலைகளில் சுவாரசியமான தகவல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.  தன்முனைப்பும் ஆர்வமும் உள்ள ஒரு மாணவன் அவற்றைத் தானாகவே தேடிக் கண்டடைய வேண்டும்.  மேலெழுந்தவாரியாக, கற்களின், குறியீடுகளின் மொழியைப் பற்றிய போதிய அறிவு இன்றி, இவையெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று ஒரு தரப்பு கூறிக்கொண்டிருக்கிறது.  அதற்கு மாற்றாக,  நாம் இங்கு அந்த மொழியின் சிறப்புக்களை முன்வைத்து, ஒர் உன்னதக் கருவியாக அது ஞானத்தின் வழியில் எவ்வாறு துணையிருக்கிறது என்பதை விளக்க முயல்கிறோம்.  படிமங்களாக, குறியீடுகளாக, இசைக்கலைஞர்களின் ஒரு குழுவாய் அவை பூரணத்தின்  மகிமையை –  அழிவில்லா மனித சுயத்தின் மகிமையை – பாடிக்கொண்டிருக்கின்றன.