இந்துமதம் – 7. மகாவிஷ்ணு

மகாவிஷ்ணு

நாம் அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றை நோக்கிய முடிவுறாத் தேடலில் இருக்கிறோம்.  அதற்கு, முதலில் நாம் நமது உடல் பற்றியும் அதன் தேவைகள் பற்றியும் புரிதல் பெற்றிருப்பது அவசியமாகிறது.  நாம் வளரும்போது சிந்திக்கத் தொடங்குகிறோம்.  சிந்தனைகளில் மொத்தமாக மூழ்கித்தொலைந்து, சில நேரங்களில் நாம் உடலையே மறந்து வாழவும் நேரிடுகிறது.  உடல், மனம் இவை தவிர்த்து, மேலும் செறிவான, மேலும் நீடித்த, மேலும் மதிப்பு மிக்க ஒன்று இருப்பதாக நாம் மெல்ல உணரத்தொடங்குகிறோம்.  அறிவுக்கு எட்டாத, இப்பரப்பில் மூழ்க, ஒரு புதுத்தேடல் நம்முள் எழுகிறது.  இத்தேடல் திறக்கும் புது அனுபவங்களின் தருணங்களின் தொகையே ஆன்மீகம் ஆகும்.

வேதகாலக் கடவுள்கள் என்ற கருத்தாக்கமும், மேற்கூறிய அனைத்து படிநிலைகளையும் அதன் வளர்ச்சிப் போக்கில் கொண்டுள்ளது.  மானுட அனுபவங்களை உலகியல் நிகழ்வு சார்ந்தவை (Cosmological) மற்றும் ஆன்மீக சாரத்தின் தெய்வீக உளவியல் கொண்டவை (Psychological) என இரு தொகுதிகளாக வகுக்கலாம்.  தொடக்கத்தில், இறைத்தன்மை நேர்க்காட்சி அனுபவங்களாகவே (Phenomenal level) உணரப்பட்டது.  அதாவது, இயற்கை சக்திகளுக்கு மானுட அடையாளங்கள் கற்பிக்கப்பட்டன.  தியானநிலை முதிர்ச்சியடைந்த பிற்காலங்களில், இக்கருத்துகள், மனிதனின் உளவியலில் தங்கள் இணைகளைக் கண்டுகொண்டன.  கடவுள்களும், அவற்றின் வழிபாட்டு முறைகளும் மனித சுயத்தின் பல்வேறு ஆன்மீகக் கூறுகளுடன் அடையாளப்படுத்தப்பட்டன.  ரிக் வேதம் முதல்  விஷ்ணு புராணம் வரையிலான நமது ஆன்மீகப் பயணத்தில் இதனை நாம் தெளிவாக உணரலாம்.  அந்தப் பாதையின் சுவடுகளை இவ்வாறு வகுக்கலாம்.  ரிக் வேதம், யஜுர் வேதம், சாமவேதம், அதர்வவேதம், பிரகதாரண்யக உபநிஷத், சாந்தோகிய உபநிஷத், கதோபநிஷத், தைத்ரிய உபநிஷத், மைத்ரி உபநிஷத், சம்ஹிய காரிகா, யோக சூத்திரம், ராமாயணம், மகாபாரதம், கீதை, பாகவத புராணம் இறுதியில் விஷ்ணு புராணம்.  இவ்வகையில், ஒரு பௌதிக நிகழ்வின் (Physical phenomenon) கருத்துக்களின் தொகை வளர்ந்து, பூரணத்தின் அதி புனிதத்தை குறிக்கும் நிலையை எட்டும் வரையிலான பயணத்தில் அது ஆட்படும் மறு ஆய்வுகள், அதில் நிகழும் மறுமதிப்பீடுகள் இவற்றைப் பற்றிய ஆராய்வு – இவையெல்லாம் மிகவும் சுவாரசியமானவை, ஆச்சரியமூட்டுபவை !

வேத சிந்தனையின் பரிணாம வளர்ச்சி 

வேத காலக் கடவுள் என்ற கருத்துருவின் பரிணாம வளர்ச்சியை இவ்வாறு உரைக்கலாம்.  வேதகால ஆரியர்கள் அவர்களின் நடைமுறை வாழ்க்கையில் நேர்நிலைக் கண்ணோட்டமும், மிகுந்த ஆடம்பரமும் உடையவர்களாயிருந்தனர்.  அதே நேரம்,  அவர்கள் வாழ்வின் மறுபக்கம்  செறிவான ஒளிபொருந்தியதாக இருந்தது.  அனைத்தையும் உள்வாங்கும் பார்வையும், உயர் அங்கதமும், மேலான கற்பனையும், கொண்டிருந்த அவர்கள், மதிப்பீடுகளைப் போற்றுவதில் உன்னத கவித்துவம் பேணினர்.  ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் ஒரு குறிக்கோளை நோக்கி இயங்கும் தாம் காணும் உலகு மறைந்திருக்கும் ஒரு மாயக் கையால் திரைமறைவிலிருந்து வழிநடத்தப்படுவதாகவும், கட்டுப்படுத்தப்படுவதாகவும் உணரத்தொடங்கினர். அகலப்பரப்பில் விரியும் காலநிலைகளின் சுழற்சியை அவர்கள் பூமியில் கண்டனர்.  இரு பொழுதுகளில் வானம் ஒன்றுபோல இருந்ததில்லை.  ஆனால், மாற்றமில்லாத ஒன்றே பல்வேறாகக் காட்சியளிக்கின்றது என்பதில் அவர்கள் உறுதியாயிருந்தனர்.  மாற்றமில்லாத வானம்,  மேகம் மற்றும் ஒளியின் கலவை ஏற்படுத்தும் வண்ணக் கோலங்களால் காட்டும் வடிவ மாதிரிகளைக் கண்டு வியந்தனர்.  மாறும் தாவர வகைகள், பொதிக வடிவமைப்புகள், உயிரியல் பரிணாம மாற்றங்கள் பல நிகழ்ந்த பின்னும், பூமி மாறாதிருப்பதைக் கண்டுணர்ந்தனர்.  மேற்புறத்தில் அலைகளால் ஓயாமல் மாறிக்கொண்டிருக்கும் மாற்றமில்லாத கடலைக் கண்டனர்.  ஒரு அறுபடாத உன்னதத்தின் அம்சம் எங்கும் நிறைந்திருப்பதை அவர்களால் உணர முடிந்தது.  இதனை அதிதி (Aditi) என்று அவர்கள் அழைத்தனர்.  அதாவது, உடைபடாதது, பகுக்க முடியாதது.  அதிதியிலிருந்து வந்த சொல் “ஆதித்யா” (ஒளி தருபவன்).  ஆதித்யா, வானில் ஒளிரும் சூரியனாக மட்டுமே இருக்கவேண்டியதில்லை.  அது, விழிப்புணர்வின் வானில் ஒளிரும் தத்துவமாகவும் (Cidakasa) இருக்கலாம்.

வானுறையும் தெய்வங்கள்

வானத்தை தொடக்ககால ஆரியர்கள் வெற்று வெளியாகக் கருதவில்லை. மாறாக அது, கருணையும் அன்பும் ஒருங்கே நிறைந்து மழை, வெப்பம், வெளிச்சம் முதலியவற்றை மேலிருந்து தங்களுக்கு அருளிச் செய்யும் பெரும் கருணையாளனாகவே அவர்களுக்குத் தோன்றியது.  ஆகவே, வானம் அவர்களின் செயல்களுக்கும் சொற்களுக்கும் ஒரு நிரந்தர சாட்சியாக தூரத்தில் இருப்பதாக அவர்கள் எண்ணினர்.  இந்த அனைத்தையும் அறியும் அதிதியின் தன்மை “வருணன்” என்ற வழிபடும் தெய்வமாக உருக்கொண்டது.  வருணன் அவர்களின் பிரார்த்தனைகளை மட்டும் கேட்பவரன்று.  மாறாக, அவர் மறுமொழி உரைப்பவராகவும் இருந்தார். அவரது கருணை வேண்டி யாகங்கள் (Yajnas) செய்யப்பட்டன.  இந்த வேள்வித் தீ, “அக்னி“ என்றொரு புதிய தெய்வத்திற்கு வழி வகுத்தது.  அந்த யாகத்தில் அவிசாக்கும் புனித நீர் “சோமன்” என்றொரு இறையானது.  தீயை வளர்க்கும் வாயு “மாருதன்” என்றும் பூமிக்கு வெளிச்சமும் உயிரும் ஊட்டும் சூரியன் “ பூஷன்” என்றொரு தெய்வமாகவும் ஆனது.  அவ்வாறாக இங்கு ஒரு இறைத்தொகை உருவாகி வளர்ந்தது.  அந்தப் பட்டியலில் மிர்த்யு, ருத்ரன், இந்திரன் மற்றும் விஷ்ணு என தெய்வங்கள் இணைந்தன.  இவ்வாறு கூட்டாக உணரப்பட்ட தெய்வங்களின் அகிலம் பரவிய தொகை (Macrocosm), பிற்காலத்தில் உபநிஷத்துக்கள் கூறும் நுணுக்கமாதிரி (Microcosm) வகைமைக்கு சீரிய ஒத்திசைவுடன் இருப்பது ஆச்சரியமூட்டும் ஒன்று.  (பார்க்க, பிரஹதாரணியக மற்றும் சாந்தோகிய உபநிஷத்)

விஷ்ணு

காலப்போக்கில் விஷ்ணு, பிராமணர்களின் மந்திரத் தொகுப்பில் இடம்பெறத் தொடங்கினார்.   பிரஹதாரண்யக உபநிஷத்தில் அவருக்கு, கருவுற்ற ஒரு தாயின் வயிற்றைக் காக்கும் சிறிய பாத்திரமே கொடுக்கப்பட்டது.  விஷ்ணு என்ற கருத்தாக்கத்தில் மேலும் நுட்பங்களை, நாம் தைத்ரேய உபநிஷத் மற்றும்  கதோபநிஷத்தில் காண்கிறோம்.  மிக பிற்காலத்தில், அதாவது மைத்ரேய உபநிஷத் உரைக்கப்பட்ட காலகட்டத்தில்தான் விஷ்ணு முப்பெரும் தெய்வங்களுள் ஒருவராகப் பரிணமிக்கிறார்.  விஷ்ணு என்ற கருத்துருவில் மேலும் மறுமதிப்பீடுகள் சாங்கிய தத்துவத்தின் வெளிச்சத்தில் நடந்ததை நாம் காணலாம்.

சாங்கியத்தின் தாக்கம்

காரண காரிய அடிப்படையில் இயங்கும் சாங்கிய தரிசனம், மனம் மற்றும் பருப்பொருள் பற்றி இந்தியாவில் நிகழ்ந்த அறிவியல்பூர்வ ஆய்வுகளின் தொடக்கம் எனக் கொள்ளலாம்.  இறை மறுப்பு நிலை வரை இந்த ஆய்வு ஒரு கட்டத்தில் சென்றது.  சாங்கியர்களின் வாதம் கருத்தில்  கொள்ளுமளவு வலுவானது என்னும் புரிதல் வியாசருக்கு இருந்தது.  இதுதான் அவரை, பிரம்ம சூத்திரத்திலும், மகாபாரத்தின் கீதை பகுதியிலும் வேதாந்த விரிவாக்கம் செய்யும் போது, சாங்கிய மற்றும் யோக தரிசனங்களையும் இணைக்கச் செய்தது.   விளைவாக, மகாவிஷ்ணு  சடங்குகள் சார்ந்த வழிபாடு என்னும் நிலையிலிருந்து “புருஷோத்தமன்” என்ற அரூப இறைநிலைக்கு (Metaphysical) உயர்த்தப்படுகிறார்.  இவ்வாறு சாங்கியமும் ஒரு வகையில் இறை ஏற்பு தரிசனமாகிறது.  பல்வேறு இலக்கியக் கருவிகளின் துணை கொண்டு, சாங்கிய மற்றும் வைஷ்ணவப் பள்ளிகளில் நிகழ்ந்த சீராய்வைப் பற்றிய சித்திரங்களை வியாசர் மகாபாரதத்தில், குறிப்பாக கீதையில் விளக்குகிறார். 

இராமாயணத்தில் விஷ்ணுவின் மறுதிப்பீடு

ராமாயணத்தை இந்தியாவின் கலாச்சார வரலாற்று வெளிச்சத்தில் ஆய்வு செய்வது, ஸ்ரீராமன் என்னும் பாத்திரத்தின் நிஜ மதிப்பை உணரச்செய்யும்.  பகை மனப்பான்மை கொண்டு வாழும் இரு மக்கள் திரளைக் கற்பனை செய்வோம்.  குதிரைகளிலும், தேர்களிலுமாக தமது வம்சப் பெண்களுடன் வந்திறங்கிய அக்கினி கோத்திரம் வழிவந்த ஆரியர்கள்.  பொலிவான தோற்றம் கொண்ட இவர்கள் கங்கை சமவெளியின் வளமான நிலங்களில் குடியேறினர்.  பசுபதியாகிய சிவனின் உருவ வழிபாடு செய்து எளிய வாழ்கை வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள் மற்றொரு சாரார்.  கருமை நிறங்கொண்ட இவர்களே எண்ணிக்கையில் மிகையாயிருந்தனர்.    ஆரியர்கள் தங்களது நல்லெண்ணங்களாலும், பக்குவமான அணுகுமுறையாலும், முக்கியமான பல உள்ளூர் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றனர். சுதேசிகளுடன் திருமண உறவுகூட இவர்கள் கொண்டிருந்தனர்.  கலாச்சார சேர்க்கையும், ஆன்மீக ஒருங்கிணைவும் மேலும் நிகழ்ந்தபோது, அவற்றிற்கு வேதச்சாயல் தர ஆரியர்கள் ஆர்வம் காட்டினர்.  சிவனை, “தமோ குணம்” கொண்ட வேதக்கடவுள் ருத்திரனோடு அடையாளப்படுத்தினர்.  பார்வதி தேவி, ஞான குருவாகிய உமா தேவியோடு இணைக்கப்பட்டார். 

துரதிருஷ்டவசமாக கலாச்சார மையத்தில் ஒரு சீர்குலைவு இரண்டு குழுவினரிடத்தும் தோன்றியது.  சோமரசம், பெண்கள்,  உணவு வகைகள் என ஆரியர்கள் புலன் விழைவில் அதிக நாட்டம் செலுத்தினர்.  பல திருமண உறவுகள் வைத்துக் கொள்வது ஆண்களிலும் பெண்களிலும் சாதாரணமாயிருந்தது.  மறு சாராரும் அவர்கள் பின்பற்றிவந்த ஒழுக்க நெறிகளை  மெல்ல மெல்ல மறந்தனர்.  ஆரிய ஆதிக்கத்தின் மீது இவர்கள் எதிர்ப்பு காட்டிய விதம் மிகவும் எதிர்மறையானதாக இருந்தது.  இந்தச் சூழலில், இவ்விரு இனக்குழுக்களிடையே சமரசத்தை ஏற்படுத்துதல் மிக இன்றியமையாத ஒன்று என இந்திய மக்களின் நல்வாழ்வு மேல் அக்கறை கொண்ட அறிஞர் மத்தியில் ஒரு எண்ணம் தீவிரமடைந்தது.  இரு பிரிவினரையும் ஒரே சமூகமாக ஆக்கி,  மிகைகளைக் களையெடுக்கும் முயற்சி தொடங்கப்பட்டது.  இந்த இருசாராரையும் ஒன்றுபோல் நேசித்த, பழங்குடி மரபில் தோன்றிய வால்மீகி என்னும் ரிஷி உருக்கமான ஒரு காவியத்தை அத்தருணத்தில் எழுதினார்.  அதில் ஸ்ரீராமனின் பாத்திரப்படைப்பு இந்திய மக்களுக்கு, ஒரு லட்சிய மனிதனுக்கான ஆளுமையின் சிறந்த உதாரணத்தைக் காட்டியது. 

ராமாயணத்தின் மறைபொருள்

இந்தியாவின் கலாச்சார வரலாற்றில் ஸ்ரீராமன் ஒரு புது அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார்.  தனது பதின்பருவத்திலேயே, முழுமையான ஞானத்தேடலில் தன்னை ஆட்படுத்திக்கொண்டவர் அவர்.  யோக வசிஷ்ட ராமாயணத்தின் கரு இதுதான்.  சீதா தேவியுடனான இவரது திருமணம் இரு வேறு கலாச்சாரங்களின் சங்கமத்தைக் குறிக்கிறது.  சீதா (குறியீட்டு ரீதியில் பூமியின் மகள்) ஜனகன் என்னும் சுதேச அரசனின் வளர்ப்பு மகள். இவர் யக்ஞவாக்கியன் முதலாய வேத ரிஷிகளின் பெரும் புரவலராக இருந்தார். இவ்வாறு இரு கலாச்சாரங்களின் சங்கமத்திற்கு வழிவகுத்தார். 

திருமணமான உடனேயே, ராமனுக்கு, தனது தகுதியை நிரூபிக்கும் தருணம் வந்தது.  சிவ பாதத்தில் ஞானம் பெற்றவரும்,  ஆரியர்களின் “ரஜோ” குணத்தன்மையைக் களையெடுக்க இருபத்தியெட்டு தலைமுறை க்ஷத்ரியர்களை வேரறுத்த பிராமண ரிஷியுமான பரசுராமரின் சவால்களுக்கு ராமன் பதில் சொல்ல நேர்ந்தது.  இறுதியில் பரசுராமன் அவரை ஆசீர்வதித்து, பிராமணர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் கொடுக்கிறார். 

ஸ்ரீராமன், மேன்னையான ஒழுக்க நெறிகளில் தவறாது ஒழுகும் சீரிய வாழ்க்கைப் பாதையைப் பின்பற்றி,  அனைவருக்கும் உதாரண மனிதனாக விளங்கினார்.  தனது தந்தையின் தார்மீக பெருமையைக் காக்க, சுயமாக ஆட்சியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறினார்.  இரக்கம் காட்டாத தன் வளர்ப்புத் தாயிடம் கூட, அன்பும் பெருமதிப்பும் கொண்டவராயிருந்தார். தனக்கு இழப்புக்கள் நேர மறைமுகக் காரணமாயிருந்த தனது சகோதரனை ஆசீர்வதித்து அவனிடம் தீராத பாசம் வைத்திருந்தார்.  தென்னிந்திய முனிவர்களின் ஆன்மீக மதிப்பீடுகளை மதிக்கும் முகமாக,  சடை முடியும் மரவுரியும் தரித்தார். 

குகனுடனான ராமனின் சந்திப்பை ஒருவர் கண்ணீருடனன்றி வாசிக்க இயலாது.  தாழ்ந்த குலமகனாக குகனை, ராமன் அன்புடன் அணைத்து சகோதரனாகப் பாவித்தது ராமாயணத்தின் ஆத்மா என்றால் அது மிகையாகாது.  இது ஒரு தோணிக்காரனுக்கும், மன்னனுக்குமான இலகுவான நட்பு மட்டுமன்று.  மாறாக, ஆரியர்களுக்கும் வேதகாலத்திற்கு முற்பட்ட கலாச்சாரங்களுக்கும் இடையே இந்தியாவில் நிகழ்ந்த உயரிய ஆன்மீக மதிப்பீடுகளின் சேர்க்கையின் குறியீடாகிறது.  தனது சகோதரனின் பாதையைப் பின்பற்றி, பரதனும் துறவு வேடம் பூண்டு, தண்டகாரண்ய காட்டில் குகனின் பாதம் தொட்டு வணங்கியது இந்நிலைபாட்டை மேலும் உறுதி செய்யும்.

ராவணன்

ராமாயணத்தின் கரு என்பது, ராமனுக்கும் ராவணனுக்குமான போர்.  யார் இந்த ராவணன்?  இவர் ஒரு தீவிர சிவபக்தர்.  அவரது ஒருமுகப்பட்ட தீவிர பக்தி மற்றும் கடும் தவத்தால், தனக்கு எதிரிகளே இல்லாதவராக விளங்கினார்.  ஆனால் அவர் சைவ வழிபாட்டிற்கு ஒரு குறுகிய எல்லை வகுத்துத் தவறான முன்னுதாரணங்களும், தவ நெறிகளும் பரவச்செய்தார். உதாரணமாக, உடல் வருத்தும் தவப் பழக்கங்கள்,  சான்றோர் எழுதி வைத்த வேத மொழிகளை மறுத்தல் முதலியவை.   சிவனின் தொன்மையான ஆன்மீக மரபை, வேத ஞான மரபுடன் ஒத்திசைவில் இணைத்து மறுமதிப்பீடு செய்து ஒருங்கிணைக்க, ராவணன் போன்ற எதிர்மறை தீவிரத்தன்மை கொண்ட சக்திகளை அகற்றுதல் இன்றியமையாதது.  ஆனால்,  ராவணனை அழிக்க சக்கராயுதத்தையோ (விஷ்ணுவின் ஆயுதம்), ராம பாணத்தையோ (தனது திவ்ய அஸ்திரம்) ராமன் உபயோகிக்கவில்லை.  மாறாக, சிவனிடம் ஒப்புதல் வேண்டி, ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜிக்கிறார். சிவன் தனக்கு அருளிய பாசுபதாஸ்திரத்தினால் (சிவன், பண்டைய இந்தியாவில் பசுபதி, அனைத்திற்கும் இறைவன் என்று அழைக்கப்பட்டார்) ராவணனை வதம் செய்கிறார்.  இவ்வாறாக, இந்தியாவின் பகை முகம் காட்டிய மரபுகளை ஒருங்கிணைப்பதில் ராவணனின் மரணம் முக்கியமான நிகழ்வாகும். 

இந்த பின்னணியில் தான் ராமன் ஒரு சூத்திர முனிவரை தண்டித்ததையும் நாம் விளக்க முயல வேண்டும்.   உணவு, தண்ணீர் துறந்து அவர் தலைகீழ் கோலத்தில் உடலை மிக வருத்தி அவர் தவம் புரிந்து கொண்டிருந்தார்.  ஒரு குருவாக, ராஜரிஷியாக ராமன் அவருக்கு மோட்சமளித்தார்.  மறுபக்கம் ஒரு அரசனாக, அந்த சூத்திரர் சாஸ்திரங்களை மறுத்து ஒழுகிய திகிலூட்டும் ஒழுக்க நெறிகளுக்காக அவரை தண்டித்தார்.  இவ்வாறு இந்திய வரலாற்றில் ஒரு தொடக்கமாக, வேறுபட்ட பண்பாடு மற்றும் ஆன்மீகப் போக்குகளை இணைக்கும் பணியைச் செய்தார்.  மனிதனையும் சகமனிதனையும் இணைக்கும் கண்ணியாகத் திகழ்ந்தார்.  நூற்றாண்டுகளுக்குப் பிறகும் ராம நாமம் கன்னியாகுமரியிலிருந்து கைலாசம் வரை வீடுகள் தோறும் ஒலிப்பது இதனால் தான். 

மகாபாரதத்தில் வைஷ்ணவத்தின் மறுமதிப்பீடு

பல்வேறு தத்துவக் கட்டுமானங்களைத் தொடர்புறுத்துதல், சாஸ்திரங்களை இணைத்தல்,  ஆன்மீகக் கருத்துருக்களை மறுஆய்வு செய்தல் போன்ற துறைகளில் வியாசரின் பங்களிப்பு போற்றுவதற்குரியது. வைஷ்ணவ மரபிற்கும் அவர் அரூப இறைநிலை (Metaphysical) சார்ந்து மறுவிளக்கம் அளிக்கிறார்.  தரிசனங்களின், குறிப்பாக சாங்கிய மற்றும் யோக தரிசனங்களின் அடிப்படையில் தனது மதிப்பீடுகளை முன்வைக்கிறார். 

முதலில் வியாசன், கிருஷ்ணன் என்ற ஆளுமையை அதன் அன்பு மற்றும் தீரச்செயல்களால், நமக்கு நெருக்கமானதாக நிறுவுகிறார்.  அவ்வாறு ஒரு மனம் சார்ந்த நெருக்கம் ஏற்படுத்தியபின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறார்.  அதுவரை வசுதேவர் – தேவகி தம்பதியரின் மகன், கோபிகையரின் தோழன், கம்சனை வதம் செய்தவன் என்று வளர்ந்த கிருஷ்ணன் மேலும் தீவிரமான ஆளுமையாக பகவத் கீதையில் பரிணமிக்கிறார்.  அர்ஜுனன் என்ற மாபெரும் வீரனின் தோழன் மற்றும் சாரதியாக சித்தரிக்கத் தொடங்கி, கிருஷ்ணனை ஒரு குருவின் அந்தஸ்துக்கு வியாசர் உயர்த்துகிறார்.  மெல்ல மெல்ல இருவருக்கும் இடையில் ஒரு தத்துவ உரையாடலை வியாசர் வளர்த்தெடுக்கிறார் இறுதியில் அர்ஜுனன் அவருக்குச் சீடனாகிறான்.  இதற்கு, வியாசன் உபயோகித்த இலக்கியக் கருவி முக்கியமானது.  நாடகீய தருணங்களைக் கொண்ட அது, உரையாடலை முரணியக்க முறையில் அமைத்து அர்ஜுனனுக்கு ஞானத்தின் பாதையைத் திறக்கிறது.

பின்வரும் ஏழாம் அத்தியாயத்திலிருந்து பதினொன்றாம் அத்தியாயம் வரை, கிருஷ்ணன் “பூரண பிரம்மம் கனிந்த மனிதன்” (Absolute Brahman persion), “புருஷோத்தமன்” என்று வருணிக்கப்படுகிறார்.  அதாவது, நேர்க்காட்சியாலும், உள்ளுணர்வாலும் நாம் துய்க்கும் இவ்வுலகின் உள்ளுறைக் கருத்தாக உருவகிக்கப்படுகிறார். 

பகவத் கீதையில், விஷ்ணு அவரது இறைச் சின்னங்களான சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரையுடன் காட்சிப்படுத்தப்படுவதே இல்லை – மிகவும் ஆர்வமூட்டும் ஒரு முக்கியமான விடுபடல் இது.

மகாவிஷ்ணுவின் சின்னங்கள்

தொன்மக் கதைகளிலும், கோயில் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களிலும் விஷ்ணு, மனித உருவத்தில் சித்தரிக்கப்படுகிறார்.  தனது நான்கு திருக்கரங்களில் முறையே, சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஏந்தி, அனந்தன் என்னும் சர்ப்பத்தை படுக்கையாக்கி அதில் சாய்ந்திருப்பார்;  அல்லது கருட (வெண்கழுகு) வாகனத்தில் வீற்றிருப்பார். விஷ்ணு தனியாகவோ (அதிகமும் தென்னிந்திய ஆலயங்களில்), அல்லது தனது துணை லட்சுமி தேவியினுடனோ அருள் பாலிக்கிறார்.

கதை (Gada)

கதை, நிலத்தைக் குறிக்கும் ஓர் அடையாளம்.  பௌதிகத் தளத்தில் விஷ்ணுவின் இறைமையை இது சுட்டுகிறது.  காணுலகின் தெய்வம் விஷ்ணு.  காணுலகம் நிலையானதாக இல்லாவிடினும் இருப்பு உடையது. அதன் அடித்தளத்தில் நாம் குறைந்தபட்ச எதார்த்தத்தை உணரலாம்.  இது விஷ்ணுவின் யதார்த்தம் (சத்) அன்றி வேறல்ல.  எங்கும் அழிவற்று எதிலும் உள்ளுறைந்திருக்கும் நாராயணனின் யதார்த்தம் (அந்தர் யாமி அமிர்தா)  இது.    

பத்மம் (தாமரை)

ஆகாயத்திற்கும் நீருக்கும் தாமரை குறியீடாகிறது.  ஆகாயமாக தாமரை, ஒரு குரு அருளும் மெய்யறிவின் சின்னமாகிறது.  ஒரு நீர்மலராக, அது மொட்டு அவிழும் பக்தியைக் குறிக்கும்.  தாமரை, நமக்கு மற்றுமொரு செய்தியை நிசப்தத்தில் உணர்த்துகிறது.  ஆழச் சேற்றில் வேர்களைப் புதையக் கொண்டுள்ளது அது.  அது போல, நமது வேர்கள் சமூகம் என்னும் சேற்றில் புதையுண்டுள்ளன.  தாமரையின் தண்டு, அலைகளால் சுழற்றப்படுவதைப்போல, நாம் சம்சார உணர்ச்சிகளின் ஏற்ற இறக்கங்களால் அலைக்கழிக்கப்படுகிறோம்.   ஆனால்,  விரிந்து மணம் வீசும் தாமரை மலரோ,  சேறும் நீரும் எட்ட முடியாத உயரத்தில் மலர்ந்திருக்கிறது.  சூரியனின் பொன் கிரணங்கள் தழுவும் அன்பில் அதன் இதழ்கள் மலர்கின்றன.  நமது இதய கமலத்தை, வாழ்வின் இருமைகளிலிருந்து காத்து, பூரணத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.  இதுவே தாமரை சொல்லும் செய்தி. 

சக்கரம்

சக்கரம் தீயின் குறியீடு.  அது செயலாற்றலின் பரப்பைச் சுட்டுகிறது. கீதையில் கண்ணன் அர்ஜுனனை நோக்கி, “இறைவன் அனைத்து உயிர்களின் இதயத்திலும்   றைகிறார்.  ஆகவே அர்ஜுனா, அவரது பேராற்றலின் காட்சித் திரிபுகளே அனைத்து ஜீவன்களையும் மாயையின் சுழலில் பிணைத்து இயங்கச் செய்கிறது”  என உபதேசிக்கிறார்.  இந்தச் சக்கரம் மகா விஷ்ணுவின் சக்கரத்தைக் குறிக்கும்.  அவரது விருப்பம் என்ற அச்சில் அந்தச் சக்கரம் சுழல்கிறது; உலகை இயக்குகிறது.  அவர் தான் உச்சமான உண்மை (சத்யா).  சுழலும் இந்தச் சக்கரம், செயல் உலகின் யதார்த்தத்தைக் குறிக்கிறது (ரதம்).

சங்கு

காற்றின் குறியீடான சங்கு, இறைவனின் உன்னதச் சொற்களைப் பிரகடனப்படுத்துவதாக உள்ளது.  கீதை அருளுவதன் தொடக்கமாக கிருஷ்ணன், தனது “பாஞ்சசன்யம்” எனும் சங்கை முழக்குவதாக வருகிறது.

லக்ஷ்மி

மகா விஷ்ணுவின் தெய்வீகத் துணை லக்ஷ்மி தேவி.  விஷ்ணு எதிர்மறை இயல்பின் தெய்வம் அல்ல.  அவர் வாழ்வை வலியுறுத்துபவர்.  அவரது கருணை நமக்கு, இக் காணுலகின் (phenominal world) நன்மைகளையும் (Preyas),  உள்ளுணர்வின் (noumenal) ஆனந்தத்தையும் (Sreyas) அளிக்கின்றது.  அந்தக் கருத்தின் தூலவடிவம் லக்ஷ்மி.

தொன்மக் கதைகளின்படி, பாற்கடலைக் கடையும்போது கண்டெடுத்த அபூர்வம் லக்ஷ்மி.  நமது மனமும் ஓர் பாற்கடல்.  அதனை தேவ, அசுர விசைகள் கடைகின்றன.  இச்சூழலில், மாற்றமற்ற நிலை இருப்பிற்கும், மாறும் யதார்த்தத்திற்கும் நடுவே, நமது அறிவை மையத்தில் சரியாக நிறுவி, முரணியக்க அடிப்படையில் சமன் செய்து, நமது ஒருமித்த சிந்தையை பூரணத்தை (விஷ்ணுவை) நோக்கிக் குவிக்க முடிந்தால், நமது நன்முயற்சி லக்ஷ்மி தேவியால் ஆசீர்வதிக்கப்படும்.  நம்மால் இவ்வுலகையும் (Apara) மேலுலகையும் (Para) துய்த்து அனுபவிக்க இயலும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s