இந்துமதம் – 6. சுப்ரமணியன்

Standard

சுப்பிரமணியன்

இந்திய ஆன்மீக தளத்தில், சுப்பிரமணியனும், கணபதியும் சமமான முக்கியத்துவத்தை பெறுகிறார்கள்.  சுப்பிரமணியன் என்ற பெயரே வேதகால பிராமண தரப்பில் நிகழ்ந்த மறு மதிப்பீட்டை நமக்குத் தெரிவிக்கின்றது.  இந்திய ஆன்மீகம் வேதகாலத்திற்கு முந்தைய காலகட்டத்தில் எதிர்மறை அம்சம் கொண்டதாக இருந்தது.  மாறாக, ஆரிய வாதமோ தீவிரமான நேர்மறை அம்சங்களை முன்வைப்பதாக இருந்தது.  ஆடம்பரத்திலும், புலன் இன்ப நுகர்விலும் கட்டற்ற விருப்பம் கொண்டிருந்தது.   அந்தக் காலகட்டத்தின் (The age of Contemplation) போது, வாழ்வின் இந்த இரு தரப்புக்கும் மையமான ஒரு பொற்பாதை சுப்பிரமணியன் என்ற கருத்துருவில் முன்வைக்கப்பட்டது.  உலகியல் வாழ்வின் நோக்கில் நேர்மறையும், உயர் சிந்தனைத் தளத்தில் எதிர்மறை அம்சமும் கொண்டது இந்த கருத்துரு.

சுப்பிரமணியன் பிறப்பு (குமார சம்பவம்)

 சத்-சித்-ஆனந்தம் என்ற உன்னத தியான ஒருமையில் லயித்திருக்கும் சிவனை அடைய ஹிமவானின் மகளாகிய உமை தவமிருந்தாள்.  காமதேவனால் சிவனின் தியான ஒருமை நிலை கலைகிறது.  சிவன் இதயம் உமையின் அன்பில் கரைகிறது.  தனது அன்பை அதன் தூய நிலையில் அவளுக்குக் கொடுக்கிறார்.  ஆனாலும் கலைந்த தவநிலையால் கோபமுற்ற பெருமான், மன்மதன் தூண்டும் காம விழைவைத் தனது அறிவின் கண்ணால் பொசுக்குகிறார்.  அந்தக் கண்ணிலிருந்து வெளிவந்த அறிவுக்கதிர்கள் சரவணப் பொய்கையில் பாய்ந்து ஆறு பாலகர்கள் வெளிவந்தனர்.  “கார்த்திகா” என்ற நட்சத்திரக் குழு அக்குழந்தைகளைத் தாங்கி உமையிடம் வருகிறது. அவள் அக்குழந்தைகளை அன்பான ஒற்றை அணைப்பில் தூக்குகிறாள்.  அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றாகின்றன.  அந்தக் குழந்தை “குமாரன்”.  அதாவது, ஏமாற்றும் வித்தையில் தேர்ந்தவனாகிய “மாரன்” எனும் காமதேவனின் கொடிய அழிவுக்குக் காரணமானவன்.

சுப்பிரமணியனின் ஆளுமையின் புதிர்

 சுப்பிரமணியன் என்னும் ஆளுமைச் சித்தரிப்பு மிகுந்த முரண்கள் நிறைந்தது.  ஒரு பக்கம் மழித்த தலையுடன் பிரம்மசாரியாக காட்சியளிக்கும் அவர் மறுபுறம் வள்ளி, தேவசேனா என்ற இரு பெண்களுக்கு அன்புக் கணவராக விளங்குகிறார்.  மேலும் இவ்விரு பெண்களின் தனித்தன்மைகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி, இரு துருவங்கள் போல விலகி நிற்கின்றன.  குறப்பெண்ணான வள்ளி கருமை நிறம் கொண்ட அழகி.  தேவசேனாவோ, வேத பரம்பரையில் வந்தவள்.  வள்ளி, “பித்ராயனா” (Pitrayana) என்னும் குலத்தவள்.  தேவசேனா, அவளது பெயர் குறிப்பிடுவது போல, தேவயானா குலத்தவள்.

அகத்தியர் சுப்பிரமணியனை தியான ஒருமை கண்ட குரு எனப் புகழ்கிறார்.  இந்திரனோ, அவரை தேவர்களின் மிகச்சிறந்த தளபதி என போற்றுகிறார்.  அவர் ஏந்தியிருக்கும் திருநீறு “நிர்விசேஷ“ (Nirvisesata) –  அறிவின் எல்லைகடந்த அதீத நிலையைக் குறிக்கிறது.  அவர்தம் வாகனமான மயில், சவிசேஷ வைசித்ரியா (Savisesa vaicitrya), அதாவது பண்புசார் வகைமைகளின் (qualitative variations) சின்னம்.  இச்சந்தர்ப்பத்தில் முரணியக்க மறுமதிப்பீட்டை (dialectical revaluation), சுப்பிரமணியனின் உள்ளுறையும் தத்துவமாகக் கொண்டால் மட்டுமே இப் புதிர்களுக்கு விடைகாண இயலும்.

பழனி

 மதுரையின் மேற்கே, பழனிமலையில் உள்ள புராதனமான, சுப்பிரமணியன் கோயில் மிகப் பிரசித்தி பெற்றது.  பழனியைப் பற்றிய தொன்மம் அறிவார்ந்ததும் ஆர்வமூட்டுவதுமாகும்.

ஒரு நாள் சிவனும் பார்வதியும் தங்களது இரு மகன்களின் ஆன்மீகப் புரிதலின் ஆழத்தை சோதிக்க விரும்பினர்.  அதற்காக தங்களது பிள்ளைகளை அழைத்து,   இந்தப் பிரபஞ்சத்தை ஒரு சுற்று (பிரதட்சணம்) வரப் பணித்தனர்.  முதலில் வருபவர்களுக்குப்ப் பரிசாக ஒரு பழம் அறிவிக்கப்பட்டது.  உற்சாகமான சுப்பிரமணியன், உடனேயே தன் மயில் வாகனத்தில் ஏறி, ஒரு நவீன செயற்கைக் கோள் போல, உலகை வலம் வரத்தொடங்கினார்.  கணபதியோ பழத்தை வெல்ல வேண்டும் என்பதைப் பற்றிய எவ்வித சிரத்தையும் எடுத்துக்கொள்ளாமல் (அதாவது, விளைவின் மேல் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி), தனது தாய் தந்தையரை சுற்றிவந்தார்.   பரிசைப் பற்றிய அக்கறையற்ற, கணபதியின் இந்த அகவிரிவைக் கண்டு நெகிழ்ந்த சிவன் அவருக்கு பழத்தை அளிக்கிறார்.

சிறிது நேரம் சென்ற பின்பு,  “தனது வெற்றி உறுதி” என்ற எண்ணத்தில் சுற்றி முடித்து வரும் முருகன் தாய் தந்தையரின் அருகே கையில் பரிசுடன் நிற்கும் அண்ணன் கணபதியைக் கண்டு ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைகிறார்.  ஆனால் எந்த வலியும் அதன் பலனைக் கொடுக்கும்.  சுப்பிரமணியனின் அறிவார்ந்த மனம் பகை, பொறாமை மற்றும் வருத்தம் ஆகிய இவையே மூல காரணங்கள் என்று கண்டு கொண்டன.  அவனது மனம், உணர்ச்சிவசப்படாத நடுநிலையை எட்டுகிறது.  தனது ஆசைகளை இனிமேல் கணப்பொழுதும் சுமக்கமாட்டேன் என்று முடிவு செய்கிறான்.  மழித்த தலையும், திருநீறு பூசிய மேனியுமாக, தனிமைதேடி மலை உச்சியில் அமர்கிறான்.

சிவனும் பார்வதியும் முருகனின் இந்த மனோதிடம் (வைராக்கியம்) கண்டு உவகை கொள்கிறார்கள்.  அவனிடம் போய், ”அன்பே நீ எங்களிடம் இருந்து பழத்தை பெற விரும்பினாய்.  ஆனால் நீ அல்லவோ இனிய பழம் (பழம் – நீ) – எங்கள் ஆன்மீக இணைவின் பழம்” என்று வாழ்த்துகின்றனர்.

இந்தக் கதை முக்கியமானது.  பிரெஞ்சு தத்துவவியலாளரான ஹென்ரி பெர்க்சனின் (Henri Bergson) கூற்றுப்படி, ஒன்றை உணர்வதற்கு இரு வழிகள் உள்ளன.  முதல் வழி, அதனைச் சுற்றி வந்து, அதைச் சார்ந்த நுணுக்கங்களை பல கோணங்களில் கண்டு, தெளிந்து பின் உணர்ந்து கொள்வது.  மற்றொன்று,  முழுமையாக அதில் ஐக்கியமாகி, அதுவாகவே மாறி அதனை அறிவது.  இதில் முருகன், அனுபவ அறிவு சார்ந்த முதல் வழியைத் தேர்வு செய்தார்.  கணபதியோ, பெற்றோர்களை (causal factor) பிரபஞ்சத்துடன் ஒப்புநோக்கும் முரணியக்கத்தை மேற்கொண்டார். அவ்வாறு, நிறக்கலவையாய், அனைத்துமாகி நிற்பதன் ஆத்மாவைக் கண்டுகொண்டு அதில் அமர்ந்தார்.   அவர் தனது செயல்களில் செயலின்மையின் அமைதியையும், செயலின்மையில் செயலின் தீவிரத்தையும் கண்டுகொண்டார்.  மறுபுறம், சுப்பிரமணியனோ,  கர்ம வினையின் கடினமான பாதையில் உழன்றார்.  விளைவாக அவர் வருந்தவேண்டியிருந்தது.  வருத்தம் தரும் பாடம் வைராக்கியத்தையும், பற்றற்ற நிலையையும் கொடுக்கிறது.  பற்றற்ற நிலை எனும் தவம், மெய்ஞானத்திற்கு வழிவகுக்கிறது.  இந்த மெய்ஞானம் ஒருவரது தன்னிலை (Self) தேடிய ஞானத்தின் கனி.  இது சத்-சித்-ஆனந்தத்தின் தன்மைகளுள் ஒன்று. 

மழித்த தலை

 ஒரு மனிதனின் ஆசிரமம் மற்றும் ஜாதியை அவரது ஆடை மற்றும் சிகை அலங்காரம் ஆகியவற்றைக் கொண்டு ஊகிக்கும் பழக்கம் சமீப காலம் வரை இந்தியாவில் வழக்கில் இருந்தது.  எனவே இந்த சமூக நியதிகளின் எல்லையை மீற விரும்புபவர்கள், இந்த அடையாளங்களை சுமக்க விரும்புவதில்லை.  தலையை மழித்து, ஒரு கோவணத்தை மட்டுமே ஆடையாக ஏற்கிறார்கள்.  சன்னியாசிகள் தங்கள்  பூணூலை அக்கினிக்கு அவிசாக்குவதும் இதனாலேயே.

திருநீறு

திருநீறு பற்றிய அறிவு, வரலாற்றுக் காலகட்டத்திற்கு முந்தயை நாகரிகங்களிலேயே இருந்தது.  வேத காலத்திற்கு முந்தைய, முனிவர்களின் இத்தகைய உலகியல் எதிர்மறை (via-negative character) வாழ்க்கைப் போக்கு இன்றும் ஒரு குறியீட்டு ரீதியில் பேணப்படுகிறது.  தென்னிந்தியாவில், மூன்று விரல் திருநீற்றுப் பட்டை நெற்றியில் அணிவது ஒரு பண்பாட்டு அடையாளம். இந்த மூன்று என்பது, நமது மரபில் பல்வேறு அர்த்தங்களுடன் அடையாளப்படுத்தப்படுகிறது. தமது நெற்றியில் மூன்று வரி திருநீறு அணியும் ஒருவர், சொர்க்கத்திலும், இப்பூவுலகிலும், பாதாள உலகிலும் எதையும் சொந்தம் கொண்டாடாதவர் ஆகிறார்.  விழிப்பிலும், கனவிலும், ஆழ்ந்த தூக்கநிலையிலும் எதனுடனும் பற்றற்ற நிலையில் இருக்கிறார்.  அவர் தனது சொல்லிலும், செயலிலும், எண்ணங்களிலும் எவ்வித இச்சையும் இல்லாதவராக இருக்கிறார்.  சத்வ, ரஜோ, மற்றும் தமோ என்ற முக்குணங்களின் தாக்கத்திலிருந்து விடுதலை பெறுகிறார்.  அறிவு, அறிதல், அறிபவர் என அவரது மனம் சிதறுவதில்லை.  அவர் தனது இருப்பையும், மதிப்பையும் நன்கு உணர்ந்தவராகிறார்.

வேலாயுதம்

 சுப்பிரமணியனின் ஆயுதம் கூரான ஒற்றை முனை வேல்.  ஒரு யோகியான அவரது மனம் எப்போதும் ஒருமை பாவனையில் (ஏகரஸா) குவிவது.  அனைத்துத் தடைகளையும் ஊடுருவித் தகர்க்கும் வல்லமையுடையது.  அதுபோல, விழிப்புணர்வு காண விழையும் ஒரு மனம், இதையொத்த ஒருமுகக் குவிப்பு செய்யும் வல்லமையுடையதாக இருத்தல் வேண்டும்.  சுப்பிரமணியனுடைய வேல், ஒரு போராளியாக அவர் தயாராக இருப்பதையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.  எதார்த்தத்தின் எவ்வித சூழலுக்கும் தன்னைத் தகவமைத்து, அதனை எதிர்கொள்ளும் வல்லமை பெற்றவர் அவர்.  இடையறா விழிப்புணர்வு நிலை எய்தியவர்.

திருவோடு

சுப்பிரமணியன் கையில் ஏந்தியுள்ள திருவோடு (பிச்சைப் பாத்திரம்) அவரது உறைவிடமின்மையின் அடையாளமாகும்.  ”தலை சாய்க்க எனக்கு இடமில்லை” என ஏசு சொன்னது போல.

மயில்

 ”மாயை” என்ற ஒரு கருத்தாக்கம் நம் மரபில் உள்ளது. பெயரும் வடிவும் கொண்டு, காலத்திலும் வெளியிலுமாக,  துலங்கும் நிற வேறுபாடுகளின் கலவை – ஒன்றை இருப்பது போலவும், அதையே இல்லாதது போலவும் பொய்த்தோற்றம் காட்டும் நிகழ்வு மாயை.  மயிலின் அழகான தோகை, நிறப்பிரிகையின் அனைத்து வண்ணங்களையும் கொண்டுள்ளது.  அது ஆயிரம் கண் வடிவங்களைக் கொண்டது.  உண்மையில் அவை இருக்கின்றனவா..? இல்லை.  ஆனால் அவை இல்லையா..? இதற்கும் பதில் “இல்லை” தான்.  ஆம்.  அவை இருக்கின்றன.  ஆக, மயிலின் தோகைக் கண்கள் சத் (உண்மை, இருப்பது) மற்றும் அசத் (உண்மையற்றது, இல்லாதது) என இருநிலை காட்சிகளாக மருகி நிற்கின்றன.  இதுவே மாயை.  சுப்பிரமணியன் மாயையின் மேல் முழுக் கட்டுப்பாடு உடையவர்.  அவர் அதைத் தனது வாகனமாக்கி, மாயையின் மேலமர்கிறார்.

இரு மனைவிகள்

 இரு மனைவியரைக் கொண்ட பிரம்மசாரி! சற்று விந்தையாக உள்ளதல்லவா..? பிரம்மசரியம், திருமணமாகாத நிலைக்கு தொடர்புபடுத்தப்பட்டதன் பின்னால் ஒரு நெடிய வரலாறு உண்டு.  பிரம்மசாரி ஆங்கிலத்தில் ”பாச்சிலர்” (Bachelor) என்று அழைக்கப்படுகிறார்.  இந்த வார்த்தை, பல்கலைக் கழகங்கள் தரும் “பட்டதாரி” என்னும் சொல்லுக்கு இணையானது.  ஒருவர் ஒரு இளங்கலைப் பட்டம் பெறுவதற்கு எந்தப் பல்கலைக்கழகத்திலும் திருமணம் ஒரு தடையாவதில்லை.  குருகுலங்கள் (Monasteries) பல்கலைக்கழகங்களாக விளங்கிய தொடக்க காலங்களில் அங்கு தங்கிப்படித்து பட்டம் பெறும் மாணவர்கள் திருமணமாகாத இளைஞர்களாக இருந்தனர்.  பின்பு கல்வி பொதுவாகி, அனைவருக்கும் கிடைக்கத் தொடங்கிய பின்னும் அந்த வார்த்தை நீடித்தது.  இந்திய மரபில் இளைஞர்கள் பிரம்மத்தின், அதாவது பூரணத்தைப் பற்றிய அறிவின் பாதையில் பயணிக்கும் பருவத்தில், “பிரம்மசாரிகள்” என்று அழைக்கப்பட்டனர்.  பிரம்மசரியத்தின் நேர்ப் பொருள் அதுவே.  அந்தப் பாதையில் இருந்து தவற நேருபவர் “விபசாரிகள்” (Vyabhicaris) என்று அழைக்கப்பட்டனர்.  ”வியாபி” என்றால் விலக்குதல், வக்கிரம் என்று பொருள்.  ஆன்மீக வாழ்வு மேற்கண்ட இரு பாதைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது.  குருவை மனதால் ஏற்று, சாஸ்திரங்களின் பாதையில், பூரணத்தை நோக்கி பயணிப்பவர்கள் “பிரம்மசாரிகள்”.  அவர்கள், திருமணமானவர்களாகவோ, அல்லாதவர்களாகவோ இருக்கலாம்.  பிரம்மசாரிகள் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும் என்று வாதிக்கும் பட்சத்தில் நாம், வசிஷ்டர், யக்ஞவாக்கியர், ஜனகர், ஸ்ரீ ராமகிருஷ்ணர் போன்ற மகான்களை மறைமுகமாக தவிர்க்க நேரிடும்.  ஆக, சுப்பிரமணியனின் திருமணம், எவ்விதத்திலும் பூரண பிரம்மத்தின் பாதையில் பயணிப்பதற்கான அவரது தகுதியைக் குறைத்துவிடாது.

சுப்பிரமணியனின் திருமணம் உணர்த்தும் குறியீட்டு அர்த்தம் இன்னும் சுவாரசியமானது.  அவர், வள்ளி, தேவசேனா என்ற இரு பெண்களை மணந்து இருவரையும் ஒன்று போல் நேசித்தார்.  கருமை நிறம் கொண்ட தென்னகத்து குறப்பெண்ணான வள்ளி, “பித்ராயனா” (Pitryana), அதாவது, மூதாதையரின் பண்பாட்டு வழியில் வந்த, வரலாற்று காலத்திற்கு முந்தைய இந்தியரைக் குறிக்கிறாள்.  அதே நேரம் தேவசேனா, அவள் பெயர் குறிப்பிடுவதைப் போல,  “ஜொலிப்பவற்றின் அல்லது தேவர்களின் பாதை” (தேவயானா) என்னும் வேத வழி மரபின் மேன்மையில் வந்த அழகிய மகள்.  ஆக, சுப்பிரமணியனின் இந்தத் திருமணங்கள், அவர் இந்தியாவின் இவ்விரு பழம் பண்பாடுகளையும் ஏற்றுக்கொண்டதையும் அவற்றின் ஆன்மீக மதிப்பீடுகளை அங்கீகரித்ததையும் சுட்டுகின்றன.

கூவும் சேவல்

 சுப்பிரமணியனது கொடி, கூவும் சேவல் சின்னத்தைக் கொண்டுள்ளது.  அது, அறியாமையின் ஆழ்ந்த உறக்கத்தில் உழலும் விழிகளுக்கு ஞானத்தின் உதயத்தைப் பறைசாற்றுகிறது.  அது ஆகாய வெளியில் தூய விழிப்புணர்வாக (சித்) ஜொலிக்கும் அறிவின் கதிரவனின் கீர்த்தியைக் காண எழுமாறு அழைக்கிறது.

வீர குரு

 சுப்பிரமணியன் ஒரு மாபெரும் போர்வீரர்.  வேதகாலம் மற்றும் அதற்கும் முந்தைய நாகரிகங்களை மறுமதிப்பீடு செய்த, தென்னிந்திய முனிவரான அகஸ்தியர் இவரை,  “அனைத்து குருக்களின் குரு” என்று போற்றுகிறார்.  இந்திரன் இவரை, மாபெரும் தளபதி என்றும், தேவர்களின் பாதையைக் (“தேவயானா”) காப்பவன் என்றும் புகழ்பாடுகிறார்.  அர்ஜுனன் கூட, யதார்த்தத்தின் முகத்தைச்  சந்திக்க நேர்ந்த போது தனது லட்சியவாதக் கனவைக் கைவிட்டுத் தடுமாறினார்.  சுப்பிரமணியன், ஜன்னகர்மசமன்வய என்ற பாதையின் அடிப்படையில் இயங்குகிறார்; “ஜன்னகர்மசமுச்சியாஎன்னும் பிழையான பாதையில் அல்ல.  ஞானத்தின் ஆடிப் பிம்பம் போல செயலைக் கையாளும் முரணியக்க முறை முதல் பாதை.  ஞானத்தையும் செயலையும் பிழையாகக் கலக்க முயல்வது இரண்டாவது பாதை.

நித்தியத்தின் ஒளியை நமக்குக் காட்டும் ஞானகுருவாக சுப்பிரமணியன் வீற்றிருக்கிறார்.  ஓடி மறையும் நிகழ்காலத்தின் ஒவ்வொரு நொடியையும், காலாதீதத்தில் மகிழ்ச்சியும் அமைதியுமாக மாற்றும் வல்லமையையும் துணிவையும் அவர் நமக்கு அருளுகிறார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s