இந்துமதம் – 4. கணபதி

கணபதி

எப்பொழுதும் கணபதி முதன்மையானவர்.   என்றும், முதல் வணக்கம் அவருக்கே செல்லும்.  எந்த சுபகாரியத்தையும், கணபதிக்குப் படையலுடன் ஆரம்பிப்பது மரபு.  கணபதி அல்லது கணேசன் “கணங்களின் (உபசரிப்பவர்களின்) அதிபன்” எனக் கருதப்படுகிறார்.  ஒளிரும் கணங்கள் (தேவ கணங்கள்) மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் (பித்ருக்கள்) என கணங்கள் இருவகைப்படுகின்றன.  தேவகணங்கள் ஏற்றப்பாதையையும், பிதிர்கணங்கள் கீழ்நோக்கிய இறக்கப்பாதையையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.  ஏற்றப்பாதை புலனறிவுகளுக்கு அப்பாற்பட்ட தூய அறிவுக்கு இட்டுச்செல்லும்.  கீழ்நோக்கிய பாதை செயல் சரடுகளால் நம்மை  நடப்பு நிலைகளுடன் பிணைக்கிறது.   இவை இரண்டுக்கும் அதிபனான கணபதி, நமக்குத் தடைகளையும் விடுதலையும் அருள்வதாகக் கொள்ளலாம்.

சொல்பிறப்பியல் (Etymology) ஆய்வுகளின்படி “கணேசா” என்ற சொல்லின் சமஸ்கிருத வேர் “ஜனா”.  அது வழி என்ற பொருளில் வரும் “யோனா” என்ற சொல்லுக்கு இணையானது.  புராதன ரோம மரபிலும் “ஜனாஸ்“ என்ற தெய்வம் வழிபடப்பட்டது.  அது வாழ்வில் ஒரு புதிய அத்தியாத்தின் தொடக்கத்தின் குறியீடாகிறது.  கணபதியை வாழ்க்கைப் பாதைகளின் குறுக்கு வெட்டுகளில் வழிகாட்டும் குருவாகக் கருதலாம்.   ஞானம் நோக்கிப் பயணிப்போர், மெய்யுணர்வின் பாதை தெரியாது  தவிப்பது சாரதாரண நிகழ்வு. அப்போது தெளிந்த அறிவுள்ளவர்கள் நேர்வழியைச் சுட்டும்  விரலை அடையாளம் கண்டு  வெளிச்சத்தின் பாதையில் பயணிக்கத் தொடங்குகிறார்கள்.  அந்த விரல்  அமைதியில் வீற்றிருக்கும் குருவினுடையது.  குருவே வழியைத் தெளிய வைக்கும் நல்வெளிச்சம்.  அந்த வெளிச்சத்தை மறுப்பவர்கள் இருட்டில் தள்ளாடுவார்கள்.  குருவை ஏற்பது, கணபதியை விக்னேசுவரனாக ஏற்றுக்கொள்வது;  குருவை நி்ராகரிப்பது,  தடைகள் என்ற சுருக்குக் கயிற்றில் மாட்டிக்கொள்வதைப் போன்றது.

கணபதி ஒரு இணைக்கும் காரணியாக

ஆரிய சமூகத்தின் தோற்றத்திற்கு முன்னரே இந்தியாவின் ஆன்மீக ஞானம் அதன் உச்ச நிலையினை எட்டியிருந்தது.   ஆரியருக்கு முன் நிலவியிருந்த சமூகம் (pre-Aryan) சிந்தனையில் உயர்ந்திருந்தது; ஆனால் அது எதிர்மறை வாழ்க்கை நோக்கு கொண்டதாக இருந்தது.  அவர்களின் ஆன்மீக மையம் சிவன்.  அவரே உச்ச குருவாக வழிபடப்பட்டார்.   மாண்டு போனவர்கள் அவரது அரவணைப்பிலிருப்பார்கள் என்று கருதப்பட்டது.  பற்றற்ற துறவே (Renunciation) இச்சமூகத்தில் உன்னத நிலையாகக் கருதப்பட்டிருந்தது.

தியாகம்

உலகியல் இச்சசைகளைத் துறந்த நிலையே (Relinquishment) அதன் முத்திரை.  ஆனால் ஆரியர்கள், இந்த லௌகீக வினையாற்றலுக்கு எதிரான மனநிலையை ஆமோதிக்கவில்லை. சிறந்ததொரு உதாரணம் கீதையில் வருகிறது.   உறவினர்கள் எதிர்ப்படையில்  அணிதிரண்டிருந்ததைக் காணநேர்ந்த அர்ச்சுனன், மனந்தளர்ந்து, “பிச்சை எடுக்கத் தயாராக இருக்கிறேன்; என்னால் இவர்களுடன் போரிட இயலாது” என்று துவள்கிறான்.  கிருஷ்ணனோ அவனது இந்த எதிர்மறை குணத்தை, “அனார்யஜஸ்தம்” – ஆரியர்களின் மகிமையைக் குறைப்பது என்று கூறுவதைக் காணலாம். 

ஆரியர்களின் நோக்கில் ஒரு சிறந்த வாழ்வென்பது இக்கணம், இங்கு மகிழ்ச்சியை எய்துவதுதான்.  அதன் நீட்சியாக அனைத்து உலகியல் நன்மைகளையும் அடைய முயல்வது, ஒன்றுக்கு மேற்பட்ட அழகிய மனைவிமார்களைக் கொண்டிருப்பது ஆரியர்களிடையே நல்லொழுக்கமாகக் கருதப்பட்டது.  ஒழுக்க சீலர்களான பிள்ளைகள், ஆயிரக்கணக்கில் மாடுகள், ஏராளமான உணவுப் பதார்த்தங்கள், புகழ் என ஆரியர்கள் பலவற்றை விரும்பினர்.  ஆரியர்களின் தெய்வங்கள் மாறாத புன்னகையுடன் வீற்றிருப்பதைக் காணலாம்.  ஆரியர்கள் தீயையும், ஒளியையும் கூட வழிபட்டார்கள்.  யக்ஞம் அவர்களின் விருப்ப வழிபாடாயிருந்தது.

ஆனால் கணபதி என்ற கருத்து நிலையில், எதிர்மறை சிந்தனை கொண்ட ஆரியர்களுக்கு முந்தைய பரம்பரை, ஆரியரின் நேர்மறைச் சிந்தனையுடன் இணைந்தது.  கணபதி வழிபாடு வடக்கையும் தெற்கையும் இணைத்தது.  கணபதி யக்ஞத்தில் (ஹவானா) திலாவுடன் வடக்கிற்கு அன்னியமான தேங்காயும் இடம்பிடித்தது. 

இந்திய ஆன்மீகத்தின் போக்கை சமைத்த வியாசர் மகாபாரதம் சொல்ல, கணபதி தனது உடைந்து போன தந்தத்தை எழுத்தாணியாகக் கொண்டு எழுதினார் என்பது நம்பிக்கை.   இந்திய ஆன்மீகப் பின்னணியை இக்கதை மேலும் துலங்கச் செய்கிறது.  நாம் முன்னரே கண்டபடி, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் ஞான குருவாக சிவன் கருதப்பட்டார்; உலகியல் மறுப்பே இவர்களின் ஆன்மீக உச்சம்.  அத்தகைய இறுகிய சிந்தனை உடைய சிவ வழிபாட்டுப் பாரம்பரியத்தில், சிவனின் நீட்சியைக் கொண்டே வேத வாழ்வின் ஆன்மீக மதிப்பீடுகளை வியாசர் அறிமுகப்படுத்திய விதம் வியப்பூட்டுவது.  அதற்கு இலக்கியத்தை அவர் ஒரு கருவியாக்க முனைந்திருக்கிறார்.   முழுமுதல் ஞானத்திற்கான பிரதி என்று போற்றப்படும் கீதை மகாபாரதத்தின் நடுவே வருகிறது.  இவற்றை தொகுத்துப்பார்க்கும்போது, இந்திய ஆன்மீகத்தில் கணபதியின் பங்களிப்பு என்பது, ஆன்மீகப் புரிதல்கள் மற்றும் பயிற்சிகளுக்கிடையே காணும் மேலோட்டமான வித்தியாசங்களைக் கடந்து, ஒருங்கிணைப்பை முன்வைப்பதே என்பது புலனாகும். 

வியாசரை இந்திய வேத மரபின் பாதுகாவலர் என்றால் அது மிகையாகாது.  வேதங்களை அவற்றின் தற்போதைய விரிவான வடிவில் தொகுத்தவர் அவரே.  உபநிஷத்துக்களின் செறிவான பாடங்கள் “வேதாந்த சூத்திரம்”  என அவரால் கோர்க்கப்பட்டன.  மகாபாரதமும் கீதையும் அவரது தொகுப்புக்களே.  ஆக, இந்தியாவின் உயர் ஆன்மீகப் பாரம்பரியத்தின் காப்பாளராகவே அவர் போற்றப்படுகிறார்.  அவர் கணபதியை முன்னிறுத்தி, பாரம்பரிய ஞானம் காக்கும் பணியை வழிநடத்தினார்.  அவர் காலடியில் அமர்ந்து கணபதி அவரது போதனையைக் கேட்கும் படிமம் சுட்டுவது அதையே. 

தாமரை இருக்கை

கணபதி முழுவதும் மலர்ந்த தாமரைப்பீடத்தில் வீற்றிருக்கிறார்.  தாமரை, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் முழுமுதல் உண்மையை நோக்கிய தேடலால் விளைந்த ஞானத்தின் சின்னம்.  அதில் அமர்வது  அந்த ஞானத்தின் குரு என பறைசாற்றுவது.  இது கணபதியின் குருமுகத்தைக் குறிக்கிறது.

கிரீடம்

தலையைச் சூழ்ந்திருக்கும் ஒளிவட்டம் (Halo) அல்லது தலையை அலங்கரிக்கும் கிரீடம் என்பது புனிதத்தன்மையின் குறியீடு;  உதாரணம் கிறிஸ்து. ”புனிதர்” என்னும் சொல்லுக்கு, தெய்வீகக் கூறுகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்,  உயர்ஞானத்தின் ஆசிரியராகும் தகுதி பெற்றவர் என்பது பொருள்.  முடிசூடிய அரசனுக்கு, அவன் ஆளும் தேசத்தில் முழு உரிமை இருப்பதைப் போல, கணபதி அறிவின்மைக்கும் (அவித்யா) அறிவிற்கும் (வித்யா) அதிகார சக்தியாய் திகழ்கிறார். 

அகன்ற பெரிய காதுகள்

தேடலின்றி ஞானம் விளையாது.  தூய ஞானம் என்பது, கருத்து-பொருள் (subject–object duality) என திரிபற்ற உயரிய அறிவு நிலை. அந்நிலையை எய்த விரும்புபவர்களுக்கு குருவின் பாதமே சரண்.   இந்தியாவின் ஞான இலங்கியங்கள் அவற்றின் உச்சநிலைகளை “சுருதி” என்று அழைக்கிறது.  அதாவது கேட்கப்படுவது.  மரபின்படி,  வேதங்களைக் கற்பது  புத்தகங்கள்  வழியல்ல, குரு முகமாகவே நிகழ்ந்தது.   சமஸ்கிருதம் கவனமாகக் கேட்பதை “சிரவண” எனக் குறிப்பிடும்.    அரிய பல குருக்களிடம் பயின்றவர் “பகு–சுரதா” என்று அழைக்கப்படுவார். 

குருவிடம் சுருதியைக் கேட்டுப் பயில்வது “பிரம்மசரியத்தின்”  இன்றியமையாத பகுதியாகக் கருதப்பட்டது.  பிரம்மசரியம் என்பது பூரணத்தை நோக்கிய பாதையில் நிகழ்த்தும் பயணமாகும்.  சீடன் குருவின் ஆடிப்பிம்பமாக எதிரொளித்துச் சுடரவேண்டும்; அதுவே பொருட்படுத்தத்தக்க கல்வி.   அவர்கள் இருவரும் பொதுவான நோக்கத்தால் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.   தேடலில் குருவுடனான  ஒத்தொழுகல் சாத்தியமாகாதவருக்கு அதுவே  வாழ்வின் பெரும் சோகமாகும். துரதிருஷ்டவசமாக, ஐரோப்பாவில் இந்த சோகம் பலமுறை  அரங்கேறியுள்ளது. குறிப்பாக, பிளேட்டோவுக்கும் அரிஸ்டாட்டிலுக்கும் இடையேயான முறிவு, சாக்ரடீஸின் சிந்தனைப் பரம்பரையில் பெரும் பிளவை நிகழச் செய்தது.  ஆனால் இந்தியாவில், நமது சமகாலத்தில் வாழும் ஒரு குரு அவர்தம் குரு புரம்பரையின் வேர்களை ஆதி நாராயணனிலிருந்து தொடங்கி, பிரம்மா, வசிஷ்டர், சக்தி, பராசர், வியாசர், சுகர், குகபடர், கோவிந்தர், சங்கரர், பத்மபாதர், ஹஸ்தமாலகர்  முதல் தனது குருநாதர் வரை அறுபடாத ஒற்றைச் சரடைக் கண்டடையலாம்.  சுருதிகள் காட்டும் ரகசியங்களின் ரகசியத்தை உணரத் தலைப்படும் ஒருவருக்கு, குருபாதங்களில் ஒருமுகமாக தியானத்திலமர்வது ஒன்றே வழியாகும்.  நம்பிக்கை வைத்து கவனக்குவிப்புடன் கேட்டலின் (சிரத்தா) சின்னமே கணபதியின் அகன்ற பெரிய காதுகள்.

சிறிய கண்கள்

காட்சியை நாம் இரு துருவங்களாக வகுக்கலாம்.  ஒன்று கண் என்ற வெளியுறுப்பு.  இது புறவுலகின் நிறக்கதம்பங்களாக மிளிரும் பொருட்களைக் காண்கிறது.  இரண்டாவது (உள்)துருவம்,  ஒருமுகமான  ஒற்றைப் பார்வையை தொகுத்துக்கொள்கிறது.  அகலத்திறந்த விழிகளால் உலகைப் பார்க்கும் சகஜ சுபாவம் கொண்ட ஒருவருக்கு  இயந்திரமும் தொழில் நுட்பப் போட்டிகளும்  நிறைந்த இப்பெரிய உலகத்தில் தனது ஒற்றை இருப்பு பொருட்படுத்தத்தக்கதாகத் தோன்றாமலிருக்கும்.  இந்த விண்மீன்களளாவிய பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த விரிவை தனக்குள்ளிருக்கும் விழிப்புணர்வின் இணையாக தரிசிக்க, உள்நோக்கிய பார்வை தேவையாகிறது.   நமது விழிகளை உள்நோக்கித் திருப்பி நமது மனதை அவதானிக்க வேண்டும். நமது தனி சுயத்தைக் கண்டுணர வேண்டும்.   இரு உலகங்களிலாக நம் வாழ்வு நடந்தேறுவதாகக் கொள்ளலாம்.  ஒன்று புலன்களால் உணரக்கூடிய பிரபஞ்ச இயக்கத்தின் புறவய நிகழ்வுகளின் தொகை.  மற்றொன்று நமது சொந்த இருப்பின் மதிப்பீடுகள் கட்டமைக்கும் அகவய உலகம்.   நமது அறிவில் இவ்விரு உலகங்களையும் இணைத்து இருமை நிலையைக் (dualistic) கடக்க நாம் தியானிக்க வேண்டும்.  அவ்வாறு உள்நோக்கிக் குவிந்த தியான நிலையையே கணபதியின் பாதி குவிந்த சிறிய விழிகள் குறிக்கின்றன. 

உள்நோக்கிய ஒரு தற்காட்சி (introspective contemplation)  தரும் தியானத்தை சமஸ்கிருதம் “மனனம்” என்று சொல்கிறது.  வேதக்கல்வி, (ஸ்வாத்தியா) என்பது சிந்தனையில் தீவிர ஒருமுகப்படுத்தலைக் கோருவது.  கணபதி சிலையின் முன் நாம் நிற்கும் கணம் நாம் ஆற்றுவது வழிபாடு மட்டுமல்ல.  அவர் உடல் தரும் குறியீடுகளின் மௌன மொழியின் அர்த்தங்களை நம் மனதில் விரித்தெடுக்கிறோம்.  அக்கணங்களில் அவரது கண்கள் நம் சுயத்தையும் வாழ்வின் மதிப்பீடுகளையும் ஆழ்பரிசோதனை செய்ய வைக்கின்றன. 

நீண்ட துதிக்கை

ஏதாவது எதிர்பாராத சூழ்ச்சிகளைப் பற்றிய செய்தியைக் கேட்க நேரும் ஒருவர் “ஆபத்தின் வாசம்” நுகர்ந்ததாகச் சொல்வார்.  மகிழ்ச்சி தராத ஒரு செய்தியைக் கேட்க நேரும் நாம் கெட்ட வாசனையை நுகர்ந்தது போல் நாசியைச் சுளிக்கிறோம்.  வாசனை விலங்குகளுக்கும் முக்கியமானதாக இருப்பதைக் கவனிக்கலாம்.  ஒரு நாய் தன் எஜமானனை வாசனையால் அடையாளம் காண்கிறது.  விரும்பத்தகாத வாசனையை தரும் உணவுப்பொருட்களை விலங்குகள் உண்பதில்லை.  இவ்வாறு, ரம்மியமானவை-அல்லாதவை, நன்மை பயப்பவை-பயக்காதவை எனப் பகுத்துப் பார்க்கும் பணியை நாசி செய்கிறது.  இதனை, உண்மையைப் போலிகளிலிருந்து பிரித்து உணரும் தன்மையாகக் கொள்ளலாம்.   பிரித்தறிதல் (விவேகா), பின்னர் கனியும் சார்பற்ற தனிநிலை (absolute detachment-வைராக்கியா) இவை ஞானத் தேடலின் முதல் தகுதி என ஆதிசங்கரர் விவேகசூடாமணியில் விளக்குகிறார்.  சார்பற்ற தனிநிலை என்ற ஒழுக்கம் ஆன்மீக வாழ்வின் நடைமுறைக் கோணமாகும்.  காதுகளின் குறியீடு, ஞானம் குறித்த கல்வி நோக்கி நம்மை நாம் திறக்கக் கற்பிக்கிறது.  கண்கள், காண்பவை அனைத்தின் மீதும், தீவிரமான அதே நேரம் பரிவுடன் கூடிய ஆய்வைக் கோருகின்றன.  நாசியின் குறியீடு அவ்வாறு நாம் கொண்ட ஞானத்தை மிகச்சரியாகப் பயன்படுத்தி நம் அன்றாட வாழ்வை மலர்விக்கக் கோருகிறது.  இந்நிகழ்வை சமஸ்கிருதம்  நிதிதியாசனா (Nididhyasana) எனக் குறிக்கும்.

 உடைந்த கொம்பு

 கணபதி உடைந்த தந்தத்தோடு காட்சியளிக்கிறார்.  புராணத்தின்படி, இக்குறைபாடு பரசுராமன் உருவாக்கியது.  பரசுராமன் பிராமண தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவர்.  அதற்கு எதிர்நிலையில் இருக்கும் சிவனின் மகனாகிய கணபதியுடன் அவர் மாறுபடுவது இயற்கையே.  ஆனால் பிராமண தத்துவங்களை ஏற்பதன் விலையாக கணபதி தனது தந்தத்தை இழக்க நேரிட்டது.  தந்தம் அவரது தனித்தன்மையைக் குறிக்கிறது.  உயர் ஞானத்தின் படிகளைக் கடக்கும்போது ஒருவருக்கு ஆன்மீகம் சார்ந்த ஆணவங்கள் (spiritual ego)  எழலாம்.  விசுவாமித்திர முனிவரின் வாழ்வு இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அமைந்தது.  இவ்வகை ஆணவம் பிற உலகியல் சார்ந்த ஆணவங்களை விடத் தீமையானது, உடைக்கப்பட வேண்டியது.  நாராயண குரு அவரது “ஆத்மோபதேச சதகம்” என்னும் நூலில்

 எலும்பினாலும் தோல்போர்த்த, மலம் நிறைந்த உடல்மேல்

இச்சை வைக்கும் அகந்தையெனும் அறியாமை நீக்கி

நலம் கொடுக்கும் ‘பரம் பொருளே நான்’ என்னும் உண்மை

ஞானத்தைத் திருவருளால் அடைந்திடுதல் வேண்டும்

என்பார்.

[Skin and bone and excreta

With all those traits of inner life

Which suffering do portend;

These know, one ego wields;

The other, growing

Doth fullness attain;

From self-gratification to save

O ! grant the boon !]

இவ்வாறு கொம்பு முறிக்கப்பட்டதை கணபதிக்கு நேர்ந்த பரிதாபகரமான அவமதிப்பு என்று கொள்ளக் கூடாது.   அவர், நமது ஆணவங்கள் சார்ந்த அனைத்துக் கொம்புகளும் முறிக்கப்பட வேண்டியவையே என்று சுட்டுகிறார்.  கணபதியின் முன்னால் தேங்காய் உடைக்கும் சடங்கின் பொருளும் இதுவே.

பானை வயிறு

பசித்த மனிதனால் அமைதியான தியானத்தில் அமர முடியாது.  சீனாவில் தியான வாழ்வு குறித்து, ”மனதை வெற்றிடமாக்கு, வயிற்றை நிரப்பு” என்று  ஒரு பழமொழி உண்டு. கணபதியின் பெரிய பானை போன்ற வயிறு இந்த நிறைவின் குறியீடாகிறது.

கொழுக்கட்டையும் வேதங்களும்

கணபதி கொழுக்கட்டையை இடது கையிலும், வேதங்களை வலது கையிலும் கொண்டிருப்பார்.  வேதங்களுக்குப் பதிலாக சில நேரங்களில் தாமரையோ, முறிந்த தந்தத்தையோ ஏந்தியிருப்பார்.  அல்லது “ஞான முத்திரை” பிடித்திருப்பார்.  இவை அனைத்தும் ஞானத்தின் குறியீடுகள்.  இது யோகப் பயிற்சியின் நுண்மையான முரண்களில் ஒன்று.  கொழுக்கட்டையால் அவர் நமது வயிற்றையும், ஞானத்தின் குறியீட்டால் நமது ஆன்மாவையும் நிரப்ப விரும்புகிறார்.  உலகின் அனைத்து நன்மைகளையும் “பிரியங்கள்” (Preyas) எனும் பிரிவில் தொகுக்கலாம்.  கொழுக்கட்டை பிரியங்களின் குறியீடாகிறது.  வேதங்கள், தாமரை மற்றும் ஞான முத்திரை இவை ஆன்மீக மதிப்பீடுகளின் தொகுப்பைக் குறிக்கின்றன.  இது “ஸ்ரேயா” (Sreyas) எனக் குறிப்பிடப்படுகிறது.  அறிவார்ந்த மனம் படைத்த ஒருவர், ஒன்றிற்காக மற்றொன்றைத் துறக்கமாட்டார்.  அவர் இரண்டையும் ஏற்றுக்கொள்வார்.  சுவையான உணவை உண்டு மகிழ்வது, கீதை போன்று ஞானம் தரும் புத்தகங்களைப் புரிந்துகொள்ள ஒரு போதும் தடையாக இருப்பதில்லை.  இவை இரண்டிற்கும் நமது வாழ்வில் தனித்தனி இடங்கள் உள்ளன.  உதாரணமாக, தனது ஆன்மீக நற்பண்புகளின் கூறுகளை இழக்காமலேயே ஒரு பெண்மணியால், நுண்மையான ஆபரணங்கள் அணிந்து, தன்னைச் சிறப்பாக அலங்காரம் செய்து கொள்ள முடியும்.  ஆன்மீகத்தின் பெயரால் உணவை மறுப்பது, உண்ணா நோன்பு இருந்து உயிர் துறப்பது போன்ற மிகைகள் தேவையற்றவை.  அனைத்து குருக்களும் இந்த எளிய உண்மையை உணர்ந்தவர்களே.  ஆகவேதான், ஏசு “சீசரின் பங்கை சீசருக்கும், கடவுளின் பங்கை அவருக்கும் அளித்திடுங்கள்” என்று தன் சீடர்களுக்கு உபதேசித்தார்.

கோடரியும் அங்குசமும்

உயர்த்திய தனது ஒரு கரத்தில் கணபதி அங்குசம் ஒன்றை ஏந்தியிருப்பார். அந்த அங்குசம் மறுபக்கத்தில் கூரிய முனை கொண்ட கோடரியைக் கொண்டிருக்கும்.  ஒரு தேடலில் உறுதியான நிலைப்பாடு கொண்ட ஒருவர், அதற்கு ஒவ்வாத ஆற்றல் விரயம் விளைவிக்கும் பிறவற்றிலிருந்து, தனது எண்ணங்கள், வார்த்தைகள், மற்றும் செயல்களை ஒருமை சிதறாமல் காத்துக்கொள்வது அவசியமானது. கீதையின் சொற்களில், சிதறிய சிந்தனைகள் கொண்டு பல முகமாகப் பயணிக்கும் மனது அரிதாகவே உண்மையை உணர இயலும்.  மீண்டும் மீண்டும் ஆதாரப் புள்ளியை நோக்கி மனதைக் குவிக்க வேண்டியிருக்கிறது.  இது அத்தனை சுலபமானது அல்ல.  ஒரு யானையை அதன் பாகன் அங்குசத்தால் கட்டுப்படுத்துகிறான். அதுபோல, பூரணம் குறித்த (Brahmacarya) தேடலின் வேளையில் ஒருவர் தம் பாதையில் நிலைத்திருக்க ஒரு அங்குசம் தேவையாகிறது. ஒட்டுண்ணிகள் ஒரு மரத்தின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது போல, அறிவுக்குப் பொருந்தாத, உணர்வு சார்ந்த பிணைப்புகள் நாம் சுதந்திரமாகப் பயணிக்கத் தடையாக நிற்கும். பகுத்தறிதல் என்னும் கோடரியால் நாம் அவற்றை நறுக்கி முன்னேற வேண்டும். 

சுருக்குக் கயிறு

மற்றொரு கரத்தில் கணபதி சுருக்குக் கயிறு ஒன்றை ஏந்தியிருப்பார்.  சுருக்குக் கயிறு என்பது, பிணைப்பு மற்றும் தடைகளின் குறியீடு. கணபதியின் மற்றொரு பெயரான “விக்னேஸ்வரன்” என்பதற்கு, தடைகளின் (அகற்றும்) தெய்வம் என்பது பொருள்.  தடைகளை விளைவிக்கும் ஒருவருக்கு அவற்றை அகற்றவும் இயலும்.  கணபதியைத் உள்ளடக்கிய சைவ மரபில் அனைத்து உயிர்களும் பசுக்களே.  மாட்டிடையனான சிவன் (பசுபதி), அவற்றை சுருக்குக் கயிற்றால் பிணைத்துக் காக்கிறார். திசையற்று பசுக்கள் வனாந்தரத்தில் அலைய நேரும்போது, அதற்குக் காரணமாகும் அழிவுச் சக்திகளின் சுருக்குக் கயிற்றை இறுக்கி, அவற்றைக் காக்கிறார்.  மனம் மட்டுமே மனதைப் பிணைக்கும்.  இதை உணர்ந்தால் நமது தேடலில் தீவிரம் கூடி அது நமது மீட்சிக்கு ஏதுவாகும்.

கொழுக்கட்டை வைத்திருக்கும் சுண்டெலி

யானைக்கு சவாரி செய்ய ஒரு சுண்டெலி!  விந்தையாக இல்லையா..? ஆனால் இங்குதான் அக்காலக் கலை மேதைகளின் அழகுணர்வும் முரண் நுண்மையும் வெளிப்படுகிறது.  இந்திய சமயங்களில் நகைச்சுவை ஒருபோதும் விலக்கப்பட்டதல்ல, குறிப்பாக தெற்கில்.  தாயுமானவ சுவாமிகள் சிவனை “பித்தன்” என்று அழைக்கிறார்.  நாராயண குரு சுப்பிரமணியனை, “பிச்சைக்காரனின் மகன்” என்கிறார்.  ஆனால் நகைச்சுவைகளுக்கு அப்பாற்பட்டு, சுண்டெலி மீது பயணிக்கும் யானை என்ற முரண், புலப்படுத்தவே முடியாமல் எப்போதும் மறைந்தே இருக்கும் அதிசயம் ஒன்று இருப்பதைக் குறிக்கிறது.  கேனோபநிஷத் இதனை, “ஆஹா!” என்ற வியப்பின் ஒலியால் குறிப்பிடுகிறது.  கீதை இதனை, ஒருவர் பிரம்மத்தோடு பேசும் வியப்பு, பிரம்மத்தை கவனிக்கும்போது கொள்ளும் வியப்பு என்று குறிப்பிடுகிறது. 

 தரைவாழ் விலங்குகளில் அளவில் பெரியது யானை.  சுண்டெலியோ ஒரு சிறிய உயிர்.   இங்கு, கணபதியும், சுண்டெலியும் கொழுக்கட்டையை வைத்திருக்கிறார்கள்.  இது எல்லா உயிர்களும் சமமாக, உணவு என்ற பௌதிக தளத்தில் பிணைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.  எந்த உயிருக்கும் முதல் இயல்பூக்கம் உணவே.  குழந்தை பிறந்த கணம் உணவுக்காக அழுகிறது. விலங்குகளும் அவ்வாறே.  முதலில் அவை தாய்ப்பாலை நாடுகின்றன.  அனைத்து உயிரினங்களுக்கும் அதனதன் தேவைக்கேற்ப உணவும் நீரும் கிடைக்க வழிவகுத்துள்ள இயற்கையின் தன்மை, நாம் காணும் அதன் ஆச்சரியங்களுள் முதன்மையானது.

தைத்திரிய உபநிஷத், உணவை முழு முதல் பிரம்மத்தோடு ஒப்பிடுகிறது. ஏனெனில் உயிரின் முதல் உவகை என்பது உணவு குறித்த உவகையே. உணவு ஊட்டமே உயிர் என்பது.  சிதைவு மரணம் ஆகும்.  உயிரின் அனைத்து வடிவங்களையும், மிகப் பெரியது முதல் நுண்ணியது வரை உணவின் தங்கச் சரடு ஒன்றாய் இணைக்கிறது.  உளவியல் ரீதியில் ஆராய்ந்தால், உணவு உண்பதன் உவகை என்பது ஆத்ம தியானத்தின் உவகைக்கு இணையான ஆன்மீக முக்கியத்துவம் கொண்டது, இந்த உவகையில் கணபதியுடன் சுண்டெலி தொடர்புறுத்தப்படுகின்றது.

தனித்தனியாய் குறிப்பிடப்படும் ஒவ்வொன்றின் தொகையே பிரபஞ்சம். உன்னதத்தின் வடிவம், தூலமாக நாம் காண்பவற்றின் தொகையாக இருக்கலாம். அதுபோல உணர்வு கடந்து அதீதமாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மா ஒவ்வொரு ஜீவனிலும் ஒளிர்கிறது. சுண்டெலியின் மீது சவாரி செய்யும் யானை எனும் உருவகம், எங்கும் நிறைந்துள்ள பரம்பொருள் பக்தனுள் துடிக்கும் சிறு இதயத்திலும் உறைகிறார் என்ற விளக்கம் தருகிறது.

One thought on “இந்துமதம் – 4. கணபதி

  1. நல்ல அறிமுகம், விரைவாக படிக்கமுடிந்தது மொழிபெயர்பாளர்க்கு நன்றி.

    ”கணபதி யக்ஞத்தில் (ஹவானா) திலாவுடன் வடக்கிற்கு அன்னியமான தேங்காயும் இடம்பிடித்தது”

    திலா என்று குறிப்பிடபடுவது எள்தானே?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s