இந்துமதம் – 3. கடவுளரும் வாகனங்களும்

இந்துக் கடவுள்களும் அவர்தம் வாகனங்களும்

உடலும் சுயமும்

கோயில்கள் குறியீட்டு வடிவில், புறவயமாக நமது இருப்பைச் சுட்டுகின்றன. கோயிலில் நுழைந்து சன்னிதியை அணுகி ஒருமுகமாக தியானிக்கும் ஒருவர், அக்கணம் சுயம் விலகி தமது இருப்பை உணர்கிறார்.   ஆய்வுக்கூடங்களில் நாம் பெற முயற்சிக்கும் அறிவு, சார்புத்தன்மையுடையது.  இதை “சுழன்று அறியும் அறிவு” என ஹென்றி பெர்க்ஸன் (Henri Bergson) குறிப்பிடுகிறார்.   ஆனால் தூய அறிவென்பது ஒன்றன் இருப்பை அணுகி, அதனைத் தமது சொந்த அனுபவமாக ஆக்கிக் கொள்வதாகும்.  ஆகவே, இயந்திர கதியில் கோயிலைச் சுற்றுவதைத் தவிர்த்து,  நாம் நமது இருப்பின் அடியாழங்களை தரிசிக்க முயல வேண்டும்.  அங்குதான் நாம் தூய இருப்பின் சைதன்யத்தை, வாழ்வின் உச்ச மதிப்பான ஆனந்தத்தை உணரமுடியும்.

 கோயில் மூர்த்தியும் அவர்தம் வாகனமும் இணையாக ஆராயப்பட வேண்டியவை.  அவைகள் உடலும் சுயமும் என்ற அளவில் இணைந்துள்ளன.  மூர்த்தி நமது மேல் சுயத்தையும், வாகனம் நமது கீழ் சுயத்தையும் குறிக்கின்றன.   புனித பிரான்சிஸ்  தனது உடலை, ”சகோதரனின் கழுதை” என்று கூறியதை இங்கு நினைவு கூரலாம். அவர் ஆன்மா பயணிக்கும் வாகனமாக உடலைக் கண்டார். இந்து வழக்கில் இறைத்தொகைகள் தத்தமது வாகனங்களுடன் வீற்றிருப்பதைக் காணலாம்.

 பறவை வாகனங்கள்

இந்து தெய்வங்களில் மகாவிஷ்ணு, பிரம்மா, சுப்பிரமணியன் மற்றும் சரஸ்வதி தேவி பறவைகளைத் தங்கள் வாகனங்களாகக் கொண்டுள்ளனர்.  விஷ்ணுவின் வாகனம் வெண்கழுகு (கருடன்).  பிரம்மாவும் சரஸ்வதியும் அன்னப்பறவையை (ஹம்சம்) வாகனமாகக் கொண்டுள்ளனர். மற்றும் சுப்பிரமணியனுக்கு மயில். இந்தப் பறவைகளின் குணநலன்களுக்கிடையிலான வேறுபாடு மற்றும் அவற்றின் குறியீட்டு அர்த்தங்கள் ஆராய்ச்சிக்குரியவை.

 ஆரிய மரபு அல்லது வேத காலகட்ட கடவுள்களை பன்முக ஆளுமைகள் (hypostatic) கொண்டவை என்ற பின்புலத்தில் தொகுக்கலாம்.  பிளோட்டோவின் சித்தாந்தங்கள் போல அவை தேவைகளின் உலகுக்கு அப்பாற்பட்டவை.  அத்தகைய ஆளுமைகள் கொண்ட கடவுள்களிடமே ”அவதாரங்கள்” சாத்தியமாயின.  கருணை பொழிந்து காக்கும் ஆன்மீகப் பேரிருப்புகளாக அவதாரங்களை விளக்கலாம்.  அவ்வாறு அவதாரம் கொண்ட கடவுள்களுக்கு பறவைகள் வாகனங்களாயின.

 வெண்கழுகால் மிக உயரத்தில் பறந்து எழ இயலும்.  சொர்க்கத்தை அணுகித் தொட்டது போல அது நீலவானத்தில் மறையும்.  அறிவார்ந்த சபை சார்ந்து உலா வரும் இனமாக அன்னப்பறவை கருதப்படுகிறது.   இப்பறவைகள் ஆரிய வேத பின்புலத்தில் விளக்கப்படுகின்றன.  ஆனால்,  சிவ குடும்பத்தில் வரும் சுப்பிரமணியன், மயிலை வாகனமாகக் கொண்டவர்.  மயில் பெரும்பாலும் தான் வாழும் மரத்தை சார்ந்திருப்பது.  அது உயரப் பறந்தெழுவதுமில்லை.  இதன் குறியீட்டு முக்கியத்துவத்தை விளக்க, சுப்பிரமணியன் என்ற பெயரை சற்று ஆராய வேண்டும்.  சுப்-பிரமணியன் என்ற பெயர் பிராமணியத்தின் ஒளியில் துலக்கப்பட்ட, சைவ ஆன்மீகப் பரப்பை, அதாவது பிராமணியத்தின் தத்துவ நோக்கைக் குறிக்கிறது.  ஆக, சுப்பிரமணியன் முற்கால சிவ பரம்பரையையும், பிற்கால வேத கலாச்சாரங்களையும் இணைக்கும் கண்ணியாக வருகிறார். அதைக் குறிக்கவே அவரது வாகனம் பறவையாகவும், அதேநேரம் அதி உயரத்தில் பறக்க இயலாததாகவும் இருக்கிறது.  அவரது கொடியில் கூவும் சேவல், புவிசார்ந்த வாழ்வையும் ஆன்மிக விழிப்பையும் சுட்டுகிறது.

 காற்றை உள்ளுணர்வின் குறியீடாகவும், வானத்தை (வெளி) ஆன்மாவின் (sprit) குறியீடாகவும் முன்பு குறிப்பிட்டிருந்தோம்.  முடிவற்ற வெளியிலிருந்து ஒரு பறவை காற்றில் வருவது ஆன்மீக உச்சத்திலிருந்து ஓர் உள்ளுணர்வு கருணைவடிவில் கீழிறங்கி வருவதாகக் கருதலாம்.  நித்திய இருப்பின் (eternal being) உச்ச விழுமியமான (Highest Value) விஷ்ணுவிற்கு கருடனும்,  நிதழ்தலின் கடவுளான (the God of Becoming) பிரம்மா, மற்றும் ஞானத்தின் தேவதையான சரஸ்வதிக்கு அன்னமும் வாகனமாகக் கொடுக்கப்பட்டுள்ளது ஆழ்ந்த பொருள் நிறைந்தது.  பிரம்மா எண்ணம் சார்ந்த கருத்து நிலையாகவும், சரஸ்வதி அதன் காட்சி இணையாகவும் நிறைந்திருப்பதால் அவர்களுக்கு ஒரே வாகனம் என்பது மேலும் பொருள் பொதிந்ததாகிறது.  பிரம்மா படைப்புத்தன்மைக்கு, இன்னும் குறிப்பாக, பிரபஞ்ச இயக்க நியதியின் நிலை வெளிப்பாடு.  சரஸ்வதி, அதன் அகவயமான எதிரொளி; அவர் ஏந்தியிருக்கும் கண்ணாடி குறிப்பிடுவது போல.  இதுவே  கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் என்றென்றும் வற்றாத அகத்தூண்டாலுக்கான ஊற்றுமுகமாக அமைகிறது.

வாகன விலங்குகள்

விலங்குகள் நிலத்துடன் உறவாடுபவை.  அவைகளுக்கு பறவைகளைப் போல் காற்றில் பறந்துயர இயலாது.  கிடைத்தளத்தில் (horizontal plane) நகரும் அவை, வாழ்வின் “இங்கே”, ”இப்பொழுது” என்ற நடப்புநிலைகளைச் சுட்டுகின்றன.

தொன்மவியல், தீயை விலங்குகளின் குறியீடாகக் (fire-symbol) கொண்டுள்ளது.  தீ நமது கீழ்மனதை அதாவது பகுத்தறிவைக் குறிக்கும் படிமமாகிறது.   இங்கு பகுத்தறிவு, காரண-காரிய ஆய்வு என்று பொருள்கொள்ளலாகாது.  அது இச்சைகளின் உந்துதலாலும்,  அதன் விளைவான இயந்திரத் தகவமைவுகளாலும் ஆனது.  யானையிலிருந்து சுண்டெலி வரை விலங்குகள் உணவை முகர்ந்து பார்க்கின்றன.   அனுகூலமான வாசம் தரும் உணவுகளை உண்கின்றன.  விரும்பத்தகாத மணம் தரும் உணவுகளை அவை தவிர்க்கின்றன.   இப்பண்பு, நமது பகுத்தறிவு சார்ந்த பாகுபாட்டை பெரிதும் ஒத்திருக்கிறது. ஆதிசங்கரரின் வார்த்தையில் ஒரு மனிதனுக்கும் பசுமாட்டிற்குமிடையே கீழ்மன தளத்தில் வேறுபாடு எதுவுமில்லை.   மாடு அதை விரட்டும் கம்பைக் கண்டால் தொலைவில் ஓடுகிறது; ஒரு புல் கட்டைக் காட்டினால் நெருங்கிவருகிறது.  எனவே தன் முழு வாழ்நாளையும் இச்சைகளை நிறைவு செய்யச் செலவிடும் ஒருவருக்கு மிருக இருப்பு மட்டுமே சாத்தியமாகிறது.   பல்வேறு சுரப்பிகளை உள்ளடக்கிய கனமான உடம்பு, அதன் இச்சைகள்,  உணர்ச்சிகள் போன்றவற்றை நியாயப்படுத்தும் காரணங்கள் யாவும் நமக்குள்ளிருக்கும் விலங்கைக் குறிக்கின்றன,  மிகச்சரியாக நாம் அவற்றின் மீதே சவாரி செய்கிறோம்.

தெய்வமும் மிருகமும் நமக்குள்ளிருக்கின்றன.  சீரிய காரண ஆய்வு, மற்றும் உயர் ஆன்மீக விழுமியங்கள் மீதான நமது உள்ளுணர்வின் பார்வைத்தடம் (தர்சனா) நமது தெய்வீக அம்சமாகும்.  உடல் மற்றும் உணர்ச்சிகள் சார்ந்து உலகியல் தேவைகளின் மேல் நாம் கொள்ளும் பிணைப்பு நம்முள் இருக்கும் விலங்கைக் குறிக்கும்.

சிவனுடைய வாகனம் எருது (நந்தி).  மரணத்தின் கடவுளாகிய எமனுக்கு எருமை.  கணபதி சுண்டெலியை தனது வாகனமாகக் கொண்டுள்ளார்.  தேவிக்கு சிங்கம்.  இந்த மிருகங்களின் தனிக்குணங்கள் அவற்றின் கடவுள்களுடன் இணைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.  சிவனும், எமனும் எதிர்மறை ஆற்றல்கள்.  எதிர்மறை இறையியலில், ஞானமும் செயலின் பின் எஞ்சும் விருப்புகளும் முறையே சிவனாலும் எமனாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.  எருதும்  ஏருமையும் முரட்டு ஆற்றலுடையவை.  ஆனால் சிங்கத்தை ஒப்புநோக்க அவை மந்தமானவை.  சுண்டெலி மிருக உலகின் சிறிய உருவமாகக் கருதப்பட்டால், கணபதி அவ்வரிசையின் மேல்தளத்தில் இருக்கிறார்.

நமது ஆழ் மனத்தின் மிருக முகங்கள்

ஒருங்கே நகர குடியிருப்புகளில் இங்கிதமும, ஒழுக்கமும், செயற்கையான பாவனைகளும் கொண்ட மனிதர்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.  அவர்களுடைய நிஜ மன ஓட்டம், தங்களுடைய செயலில் துலங்காத வண்ணம் அவர்கள் மிகக் கவனமாக இருப்பார்கள்.  தங்களது செயல்கள் சக மனிதர்கள் மதிக்கும் வண்ணம் இருக்க மிக்க கவனம் எடுத்துக்கொள்வார்கள்.  அதே நேரம், வனாந்தரங்களில் நாம் மனித அடிப்படை இயல்புகளைக் கொண்ட பல்வேறு மிருகங்களைப் பார்க்கலாம்.  புலால் உண்ணிகளான சிங்கம், சிறுத்தை, புலி மற்றும் ஓநாய்கள், தந்திர நரிகள், வலிமையான, புத்திசாலி யானைகள், அச்ச குணம் கொணட சுறுசுறுப்பான மான்கள், நாணத்தில் துள்ளிச் செல்லும் முயல்கள் அணில்கள் என.  இயற்கைச்  சூழலுக்கு ஒத்து வாழும் இவ்விலங்குகளுக்கும், செயற்கையான நகரத்து மனிதர்களிடமும் குணமாதிரிகளில் துருவ வேறுபாடுகளை நாம் பார்க்கலாம்.  நகரமும், வனமும் நம் மனதில் உறையக்காணலாம்.  மரபான காட்டுவாழ்க்கை நமது ஆழ்மனம் சார்ந்தது.   சிங்கதின் கொல்லும் இச்சையும்,  காளையின் பாலுணர்வாதிக்க மனநிலையும், நமது இருண்ட ஆழ்மனதில் அவ்வப்போதாகினும் தலை தூக்குவது ஒன்றும் அபூர்வமல்ல.  நம்மில் மறைந்திருக்கும் தந்திர நரி நாம் பேரம் பேசும்போது உச்ச செயலூக்க நிலையில் இருக்கிறது.  இதனால்தான் சிறந்த கற்பனைத்திறன் கொண்ட பழங்கால ஒவியக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றோர், மறைந்திருக்கும் நமது ஆழ்மனதில் உறையும் பல்வேறு குணநிலைகளை விளக்க விலங்குகளை உருவகமாகப் கொண்டனர் போலும்.

 தேவகுணத்திற்கும் விலங்குத்தன்மைக்குமான தெளிவு

கீதையின்படி வேதாந்தத்தின் இறுதிப் பாடம் யோகம்.  கீதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதுப்புது வழிகளில் யோகத்தை விளக்குகிறது.  யோகம் என்பது எதிர் இயக்கங்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துவது என்று பொருள்படும்.   எதிரெதிர் வாழ்கை நிகழ்வுகளை விலக்கிப் பார்க்க வேண்டியதின் அவசியமில்லை.  அவற்றை ஒன்றை ஒன்று முழுமைசெய்ய விழையும் ஒரு முரணியக்கமாகத் தொகுத்துப்பார்க்கலாம்.   சிவாலயங்களில் லிங்கம் யோனியில் நிறுவப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.  இது ஆண் பெண் கூறுகள் ஒன்றையொன்று முழுமைசெய்யும் வண்ணம் இணைந்துள்ளதை விளக்குகிறது.  இதையே நாம் அர்த்தநாரீஸ்வரரிலும் காண்கிறோம்.

இத்தகைய எதிர் நிகழ்வுகளின் சங்கமத்தையே நாம் யோகம் என்கிறோம்.  எருதின் மேல் சிவன்,  எருமையில் வரும் எமன், சிங்கத்தில் வீற்றிருக்கும் தேவி ஆகியவை யோகத்தின் குறியீடுகளாகின்றன.

உலகின் பிற பகுதிகளைப் போல இந்தியாவிலும் தூய்மைவாத (Puritanical) நோக்குடன் ஆன்மீகம் அணுகப்படுவது காணக்கிடைக்கிறது.  இவர்கள் புலனடக்கத்தை மையமாக்கிப் பேசுவார்கள்.  ஆனால் இந்த நோக்கை சாத்திரங்களோ நவீன உளவியலோ ஏற்றுக்கொள்வதில்லை.  இவ்வாறு புலன்களின் மீது கடுமையான கட்டுப்பாடு விதித்து வாழ்பவர்களை கீதை சுய-ஏமாளிகள் (மித்யாச்சாரா) என்று குறிக்கிறது.  ஒருவர் தன் கீழ்மன இயல்பைப் புரிந்து கொண்டு, தன் மேல் மன தளத்திற்கு அதை ஒத்திசைந்து இயங்கவைப்பதே முதன்மையானதாகும்.  புராணங்களில் சிவன்,  தனது ஞானக்கண்ணால் காமதேவனைச் சுட்டெரிக்கிறார்.  அதே நேரம், அவரது வாகனம், காமத்தைக் குறிக்கும் காளை.    அதாவது காமத்தை அழித்தொழிப்பதை அல்ல; காமத்தை, தனது கீழ்மனப் பண்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து,  உன்னதப்படுத்தி வாழ்வு நெடுக தத்தம் வழிகளில் (சுவதர்மா) அதன் மேல் சவாரி செய்வதைக் குறிக்கிறது.   மரணத்தின் அறிவியலை நசிகேதஸுக்கு உரைத்த (கடோபநிஷத்) எமனும் தூய எதிர்மறை ஆற்றலின் குறியீடான எருமையில் சவாரி செய்வதன் பொருளும் இதுவே.  தனது கீழ்மனப் பண்பை (சுவதர்மத்தை) ஆராய முற்படும் ஒருவருக்கு, கீதையின் கடைசி மூன்று அத்தியாயங்கள்  மிக உதவியாயிருக்கும்.  தேவ, மிருக அம்சங்களை ஒத்திசைய வைக்க ஒருவருக்கு அந்த அறிவு மிகவும் உதவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s