இந்துமதம் – 2. நமது கோயில்கள்

வெளியுலக வாழ்வில் மதச்சடங்குகள், ஆசாரங்கள் போன்றவற்றை ஏற்பவர்களையும் நிராகரிப்பவர்களையும் நாம் அன்றாடம் காணமுடிகிறது.  ஆனால், நம் அனைவரின் வாழ்வும் குறைந்தபட்ச ஆன்மீகப் பாதையில்தான் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது என்ற உண்மை பெரும்பாலும் நம் கவனத்திற்கு வருவதில்லை.   ஒருவரின் வெளி நடத்தையைக்கொண்டு அவர் நம்பிக்கையைத் தீர்மானிப்பது மிகவும் மேலோட்டமான போக்கு.   அனைத்து நிறுவன மதங்களையும், இறையியல் கோட்பாடுகளையும் ஒருங்கே நிராகரிக்கும் ஒருவர் அவரது உள்ளத்தில் பேருவகைகளின் ஊற்றை உணரும் தருணங்கள் அமையலாம்.  அது அவரது ஆளுமையின் உருவாக்கத்தில்,  நடத்தையில் சீரிய ஒழுக்கத்தை மறு தொகுப்பு செய்துகொள்வதின் ஆதாரப்புள்ளியாகிறது.  வாழ்வின் பொருளை நோக்கி இட்டுச்சொல்லும் இத்தருணங்கள் கடவுளை உணர்வதற்கு ஒப்பாகும்; இதுவே உண்மையான ஆன்மீகத்தில் கவிந்திருக்கும் நிலையாகும்.

சிறிய மனத்தடுமாற்றங்கள் ஒருவரை உள்ளார்ந்த இறைத்தேடலுக்கு உட்படுத்துவதுண்டு.  நிலைகொள்ளாமல் தவிக்கும் மனது, அதுவரையில் இறுகப் பற்றியிருந்த பலவற்றிலும் சுவையிழக்கும்.  அகத்தே உருவாகும் வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டான தேடல் அங்கிருந்து தொடங்குகிறது.   தொடர்ந்து, நமது மகிழ்ச்சியின் காரணிகளாக புறத்தே நாம் அடையாளம் காண்பவற்றின் மேல் வெகுவிரைவில் ஆர்வமிழக்க நேரிடும்.  நம் புலனுக்கு சிக்காமல் மறைந்திருக்கும் உண்மையை அப்போது  நாம் தேடத்தொடங்குகிறோம். சினிமா, தொலைக்காட்சி, மது, சீட்டாட்டம் என மகிழ்ச்சிக்கு நாம் கண்ட குறுக்கு வழிகள் அவற்றின் நிழலைத் தவிர்த்துவிட்டு நம் நினைவிலிருந்து மறையத் தொடங்குகின்றன.   தேடலை உள்முகமாக நம் இருப்பை நோக்கித் திருப்பும்போது பெருமகிழ்ச்சிக்கான பாதை நம்முன் திறக்கிறது.    அத்தகைய ஒரு தேடலுக்கு வழிகாட்டுதலாக மெய்ஞானமடைந்த குரு விளங்குவார், சாத்திரங்கள் உதவும், தவிர குறியீட்டு மொழியில் நமது கோவில்களிலும் அவை குறிக்கப்பட்டிருக்கும்.

கோயில்கள்கல்லாலான புத்தகங்கள்

நாம் ”பத்மம்” (தாமரை) எனறு எழுதுவதாகக் கொள்வோம்.  அந்த வார்த்தையிலுள்ள எழுத்துக்கள், குறிப்பிட்ட அவ்வொலி எவ்வாறு எழவேண்டும் என்பதைக் குறியீட்டில் உணர்த்துவதாக  இருப்பதைக் காணலாம்.  அம்மொழியின் அகரவரிசை தெரியாத ஒருவருக்கு அந்த அடையாளங்கள் எவ்விதப் பொருளையும் உணர்த்துவதில்லை. அவ்வெழுத்துக்கள் விசித்திரமான வடிவில் வரையப்பட்டுள்ளதாக  அவருக்குத் தோன்றும்.  பத்மம் என்ற ஒலிகூட ஒரு வகை நீர்ச்செடி என்ற கருத்தை எழுப்புவதாகவே வருகிறது.   நமது மொழி குறியீடுகளின் ஒரு பெருந்திரள்.  தமது எண்ணங்களை கற்களிலும், உலோகங்களிலும் குறியீடுகளாகச் செதுக்கி வைப்பதில் நமது முன்ளோர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர்.   காண்பவை அனைத்தையும் மனித,தேவ, பூத இருப்புகளாகவே அவர்தம் கவிமனம் உள்வாங்கியிருந்தது.   இந்தச் சிற்பங்களின், ஏன், செதுக்கப்படாத கற்களின் மொழியையும் நம்மால் வாசித்தறிய முடிந்தால், நமது ஒவ்வொரு கோயிலும் கடவுளை உணர்த்தும் புத்தகங்களாக ஒளிர்ந்து நிற்கும்.

ஆலயம் தொழுவது தேவையா ?

நம்மைச் சுற்றி எங்கும் தண்ணீர் காணப்படுகிறது.  காற்றில் ஈரப்பதமாக, கடலில் உப்புநீராக, மரத்தில் சாறாக – பல வடிவங்களில் நீர் எங்கும் நிறைந்திருக்கிறது.  நமது உடலும் தொண்ணூறு விழுக்காடு நீராலானதே.  எனினும் நாம் பருகுவதற்கு நன்கு பராமரிக்கப்படும் கிணற்றிலிருந்தோ அல்லது குழாயிலிருந்தோதான் நீர் அள்ளுகிறோம்.  அது போல, கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார். இருப்பினும், கோயிலின் புனிதம், அதைக் கடவுளை உணர மற்ற எவ்விடத்தையும்விட மேலானதாக்குகிறது. உதாரணமாக, அமைதியான கோயில் இரைச்சலான சந்தையை விடவும் ஆன்மீக விரிவுக்கு உகந்த இடம்.   இரண்டாவதாக, கோயிலின் ஒவ்வொரு சிறுபகுதியும் குறிப்புணர்த்தும் தன்மையுடையது.  அதன் ஒவ்வொரு சிலையும், அவற்றின் ஆழ்ந்த அமைதியால் கடவுளின் ஒளியை நம்முள்ளே காணும் விதம் பற்றி நம்முடன் உரையாடிக் கொண்டிருக்கின்றன.  விவேகமுள்ள ஒரு மனிதன் கோயிலில் நுழையும்போது அவனது இருப்பு பல படிநிலைகளினூடே சஞ்சரித்து, உச்சத்தை அடைகிறது.  பரு இருப்பில் தொடங்கி, உணர்வுப்பெருக்கு, தர்க்கம், உள்ளுணர்வு, இறுதியில் ஆன்மீகம் என அது விரிகிறது.   கோயில் பிராகாரங்கள், அமைப்பில் மானிட உடலின் கோசங்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.  உடலின், அன்னமயகோசம் (உணவு சார்ந்த), பிராணமய கோசம் (மூச்சு சார்ந்த), மனோன்மய கோசம் (எண்ணம் சார்ந்த), விக்ஞானமய கோசம் (நனவு சார்ந்த) மற்றும் ஆனந்தமய கோசம் (உள்ளார்ந்த உவகை) என்ற ஐந்து ஆன்மீகக் குறியீட்டு அடுக்குகளைக் கோயில் பிராகாரங்கள் நேர்காட்சிக்கு வைக்கின்றன.   ஒவ்வொன்றும் அதன் மேல்நிலையிலுள்ள அடுக்கிற்கு நம்மை உயரச் செய்து, இறுதியில் நாம் உச்ச ஞானத்தை எய்த வழிவகுக்கின்றன.

ஐந்து மூலகங்களும் அவற்றின் குறியீட்டு விளக்கங்களும்

உலகம் முழுவதிலும் மத இலக்கியங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயத்தை உயிரின் ஆதார சேர்மங்களாக முன்வைக்கின்றன.     சடங்குகள் வழிபாடுகள், கீர்த்தனைகள், புராணத் தொன்மங்கள் மற்றும் மத இலக்கியங்களில் இந்த ஐந்தைப் பற்றியும் பல்வேறு குறிப்புகளை நாம் காணலாம்.  இந்து மத இலக்கியங்களில் காணும் மண், பாறை, நீர், செடிகள், மரங்கள், மலர்கள், நெருப்பு, மிருகங்கள், வாயு, பறவைகள், வானம், மேகம் ஆகியன பற்றிய பல்வேறு குறிப்புகளின் திட்டவட்டமான அர்த்தங்ளை உணர்ந்து தெளிய, அவற்றின் குறியீட்டு முக்கியத்துவத்தைப் பற்றிய புரிதல் இன்றியமையாதது.

1. நிலம்

நிலத்தை பேரிருப்பின் தூலவடிவின் தொகையாகக் கருதலாம்.  அதற்குப் பருவடிவம், நிறை, எடை மற்றும் பல தன்மைகள் உள்ளன.   அதனுடைய துகள்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக, ஒரு ஒழுங்கின் ஒத்திசைவின் அழகோடு இருக்குமானால் நிலம் ஒரு பூரண அணிகலனின் மதிப்பை எய்துகிறது.  அத்துகள்கள் தளர்வாக ஒத்திசைவற்றிருக்கும் போது நாம் அதற்கு மண்ணிற்கு உண்டான சிறுமதிப்பை மட்டுமே அளிப்போம்.  நிலம் நமது பரு இருப்பைச் சுட்டுகிறது.   ஆன்மீக இலக்கியங்களில் நிலம் சார்ந்து வரும் குறிப்புகள் அனைத்தும் நமது பரு இருப்பின் கூறுகள் மற்றும் லௌகீக ஆர்வங்களை உணர்த்தும்.  அகலிகை கற்சிலையாகத் திரிந்ததை நாம் வாசிக்கையில் அவள் இம்மைவாழ்வை மட்டுமே கருத்தில் கொண்டு,  உலகியல் ஆர்வத்தின் உச்சியில் இயங்கியதை அந்த ஆதிகால ஆசிரியர் சுட்டிக்காட்ட விரும்புவதை உணரலாம். விவிலியத்தின் பழைய ஏற்பாடு கூறும்  லாட்(Lot)-ன் கதையில், அவனது மனைவி ஒரு உப்புத் தூணாக மாறிய  நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. அவர்களின் துறவுப் பயணத்தின் தொடக்கத்தில் அவள் கடந்த காலத்தில் வாழ்ந்த பகுதியை திரும்பிப்பார்த்தபோது உப்புச்சிலையாக மாறினாள்.   அகலிகையின்  கதையில் ராமனின் தெய்வீகத் தொடுகை அவளை வாழ்வின் முழுமைக்கு மீட்டெடுத்தது.  இது போன்ற குறியீட்டு நிகழ்வுகள் எல்லா மதங்களிலும் பொதுவாகக் காணப்படுன்றன.  புனித ஜான் எழுதிய சுவிசேஷத்தில் வரும் கானா (Cana) திருவிழா மற்றொரு உதாரணம்.  அந்தத் திருமண விழாவில் இயேசு ஆறு மண்பானைகளில் இருந்த நீரை பழரசமாக மாற்றி மக்களுக்கு அளிக்கிறார்.  அந்தத் திருமணம் ஆத்மாவுக்கும் கடவுளுக்குமான தெய்வீகத் தொடர்புறுத்தலாகும்.  கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவின் அத்தருணங்களில் மனித வாழ்வின் சுவைகளுக்கான விருப்பு அற்றுப் போகிறது.  அப்போது மனிதன் தன் வாழ்வின் உண்மை ரசத்திற்காக கடவுளை நோக்கித் திரும்புகிறான்.  மனிதன் இதற்காக கண், காது, மூக்கு, நாக்கு, தோல் மற்றும் மனம் என்ற ஆறு கொள்கலன்களைச் சுமக்கிறான்.   அவை ஆறும் பொருளியல் இன்பங்களை நோக்கித் திறந்திருக்கும் போது அவன் லௌகிக வாழ்வில் குறுகியிருக்க நேர்கிறது.  ஆனால் இவை பக்தியின் தூய நீரால் நிரப்பப்பட்டு கடவுளால் ஆசீ்ர்வதிக்கப்படும்போது, வாழ்வின் அந்த நீர் தெய்வீகப் பேருவகை தரும் அமுதமாகிறது.  நமது கோயில்களின் வெளிப்பிராகாரம் நிலத்தை, அதாவது நமது பருஇருப்பை குறிப்பதாகிறது.

2. நீர்

கிடைத்தளப் பரப்பும் செங்குத்து ஆழமும் ஒருங்கே கொண்டது நீர்.அது நமது உணர்வுபூர்வமான வாழ்க்கையின் குறியீடாகிறது.   நீரின் கிடைத்தளப் பரப்பு நமது உள்ளத்தின் எண்ணற்ற உணர்ச்சிப்பெருக்குகளால், மனதின் மிகைப்படுத்தல்களால் நிறைந்துள்ளது.  நீரின் செங்குத்து ஆழம் தூய உணர்ச்சியின் மதிப்பீடாகிறது.  உதாரணமாக, ஒரு குளத்தில் தாமரைக் கொடி நீர் மட்டத்தின் பரப்பில் மலர்களுடனும் இலைகளுடனும் படர்ந்திருக்கும்.  அந்தக் கொடி வேரூன்றியிருக்கும் ஆழத்து சேற்று நிலப்பரப்பை நாம் காண்பதில்லை.  அதுபோல, உணர்ச்சி வெளிப்பாடுகளின் உற்சாகம் என்பது,  மனதின் தளத்தில் மலர்ந்து நிற்கும் தாமரை மலரைப் போன்றது; இந்தத் தாமரையும் நமது இருப்பின் உள்ளுணர்வின் ஆழங்களில் வேர்கொண்டுள்ளது. இவற்றைப்பற்றிய முழுமையான புரிதலுக்கு, உறவுச்சிக்கல்கள் மற்றும் மதிப்பீடுகள் பற்றிய தெளிவான உளவியல் அறிவு இன்றியமையாததாகிறது.   நமது புராணங்களெங்கும்,  நன்மையும் தீமையுமாக, வாழ்வின் உணர்வுத் தருணங்களின் நிறப்பிரிகை நீர்க்குறியீட்டில் விரிந்து கிடப்பதைக் காணலாம். இவ்வாறாக, நமது ஆலயங்களின் பத்ம தீர்த்தம், அதாவது தாமரைத்தடாகம் நமது உணர்வுபூர்வ வாழ்வைச் சுட்டுகிறது.

3. நெருப்பு

நீரின் செறிவு நிலத்தைவிடக் குறைந்த அளவிலானது. நெருப்போ இன்னும் நுட்பமானது.  கிரேக்க புராணங்களில் நெருப்பு கடவுள்களிடமிருந்து திருடப்பட்டது என்ற குறிப்பு வருகிறது.  நெருப்பு நமது பகுத்தறிவைக் (rational faculty) குறிக்கிறது; இது இறை அல்லது புனிதத்தன்மையை தன்இயல்பாகக் கொண்டதாகக் கருதலாம்.  நெருப்பின் அலைபாயும் நாவுகளைப்போல, நமது பகுத்தறியும் மனம் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தீராத தாகத்தோடு தாவிக்கொண்டிருக்கிறது.    நெருப்பு, மரத்துண்டுகள் போன்ற எளிய பொருட்களை சாம்பலாக்கும் இயல்பு கொண்டது; ஆனால் அதுவே தங்கத்தை தூய்மைப்படுத்தவும் செய்கிறது.    அதுபோல, போலிகளின் அனைத்து பொய் முகங்களும் காரண ஆய்வு என்ற நெருப்பில் கருகி, உண்மை மட்டும் அச்சுவாலையில் புடம் போடப்படும்.   ஆதி காலங்களில் உண்மையின் சோதனை என்பது, நெருப்பால் நிறைவேற்றப்படுவது என்று கருதப்பட்டது.   ஆனால் அதற்கு நேரடி அர்த்தம் கொள்ளலாகாது.   உதாரணமாக, சீதா தேவி, இராவணனின் அரண்மனையிலிருந்து மீட்கப்பட்ட பின் இராமன் அவளை நெருப்புச் சோதனைக்கு உட்படுத்தினார்.  இதைப் பெரும்பான்மையான பக்தர்கள் சீதை நிஜநெருப்பில் தூக்கி வீசப்பட்டதாகவும், நெருப்பின் கடவுள் அவளைக் காத்ததாகவும் நேரடிப் பொருள் கொள்வதைப் பார்க்கிறோம்.  ஆனால்,அந்நிகழ்வு மேலும் வலுவான குறியீட்டுப்பொருள் செறிந்தது..  சிறைப்பட்ட நிலையில் சீதையின் நாட்களை அறிவின் நெருப்பால் இராமன் பரிசோதனை செய்தார்.  அவர் நம்பும் சீதையின் கற்பும் அவளது தார்மீக நேர்மையும் இதனால் துலக்கம் பெற்றது. இலங்கையில், இராவணனின் அரசகோட்டை தீக்கிரையாக்கப்பட்டதை,  கடவுள்  மறுப்பு நம்பிக்கையின் கோட்டை தீ வைத்துக் கொளுத்தப்பட்டதின்  உருவகமாகக் கொள்ளலாம்.   நமது கோயில்களில் தூய அமைதியில் உறையும் கருவறையின் உள்ள ஆடலரங்கைச் சுற்றிலுமுள்ள தீபஸ்தம்பங்களில் சுடரும் ஒளி அந்த நெருப்பைக் குறிக்கிறது.   அது நமது வாழ்வின் பகுத்தறிவு சார்ந்த அம்சத்தைச் சுட்டுகிறது.

4. காற்று

காற்று நெருப்பினும் நுட்பமானது. அதற்கு வடிவம் கிடையாது;  பார்வைக்கும் சிக்குவதில்லை.  அதன் தாக்கம் மட்டுமே அதன் அனுபவமாக உள்ளது. இயேசுவின் வார்த்தைகளில் ” the air bloweth where it listeth”.   காற்று நமது உள்ளுணர்வின் குறியீடாகிறது.   உள்ளுணர்வு ஒரு எரிகல் வானத்தில் காட்சியளிப்பது போல நமது மனதில் மின்னி மறைகிறது.   காற்று நெருப்பை வளர்க்கும்.  அதுபோல, பகுத்தறிவிற்கு உள்ளுணர்வு துணையாகும் போது, அதிதீவிர ஆற்றலாக அது பரிணமிக்கிறது.  அதற்கு, ஒரு மக்கள் திரளை, ஒரு நாட்டை அல்லது மொத்த மானுடத்தின் மீதே  கூட ஆதிக்கம் செலுத்த முடிகிறது.   காற்றில் உலவும் மேகங்களும் பறவைகளும் கூட இத்தகைய குறியீட்டு அர்த்தங்களைச் சொல்லி நிற்கின்றன.  கோயிலின் குறியீட்டு அமைப்பில் காற்றின் இடம் வாத்திய ஓசையாலும், பக்தர்களின் மந்திர உச்சாடனங்களினாலும் குறிக்கப்படுகிறது.   காற்றில் செல்லும் பறவைகளும் உள்ளுணர்வின் திக்குகளையே காட்டுகின்றன.  கடவுளின் ஆத்மா, ஏசுவின் மீது ஒரு புறாவின் வடிவில் இறங்கியது என பைபிள் குறிப்பிடுவது இதையே.  விஷ்ணுவின் வாகனம் கருடன், பிரம்மா அன்னப்பறவையில் வீற்றிருக்கிறார்.  ஆகவே,  கருவறையில் வீற்றிருக்கும் மூர்த்திக்கு இசையால் ஆராதனை செய்யும் காற்று, வாழ்வின் உள்ளுணர்வின் குறியீடாகி நிற்கிறது.

5. ஆகாயம்

எங்கும் விரிந்திருக்கும் வெளி ஆகாயம்.  மேற்குறிப்பிட்ட நான்கு மூலகங்களைப் போலன்றி,  இதன் பெளதிக இருப்பு பார்வைப் புலன்சார்ந்து உணரக்கூடியதல்ல; மாறாக, ஆராயாமல் ஏற்றுக்கொள்ளத் தூண்டும் ஒன்று.   அது அனைத்திற்கும் கூரையாகிறது.  எவ்விடத்திலும் விரவியிருப்பதும், ஓரிடத்தும் இல்லாமலிருப்பதுமாகிறது; இந்த வானம் ஆன்மாவின் குறியீடாகும்.  வானம் அகிலத்தை மூடி துணையிருப்பது போல ஆன்மா மட்டுமே அனைத்தையும் சூழ்ந்திருக்கும் தூய அறிவின் இருப்பாக மலர்கிறது.  மேல், கீழ் என்று எல்லா திக்குகளிலும் வானம் நிறைந்திருப்பது போல பிரபஞ்ச ஆன்மா எங்கும் நிறைந்துள்ளது.  கோயில் குறியீட்டு அமைப்பில், ஆலய மூர்த்தி எழுந்தருளியிருக்கும் உள்கருவறை, வானம் அல்லது வெளியைக் குறிக்கும் பொருளில் வருகிறது.  உதாரணமாக, ஆடல்வல்லானாகிய நடராஜர், சித்-அம்பரம், அதாவது கட்டற்ற அறிவின் வெளி அல்லது விழிப்புணர்வுநிலை என்னும் இறையாக எழுந்தருளியுள்ளார்.

கோயில் குறியீட்டு முறை

இந்திய  உபகண்டத்திற்கு, எழுதப்பட்ட கால வரலாற்றுக்கும் பல மடங்கு கூடுதலான எழுதப்படாத வரலாற்றுக் காலகட்டம் உள்ளது.  நெடுங்காலமாக நிகழ்ந்த பல்வேறு  நாகரீகங்களின் கலவை  இத்தேசத்திற்கு அதன் தற்போதைய மிகச்சிக்கலான சமூக, மதப் பின்னணியைக் கொடுத்தது.   ஒரே குடும்பத்தில் மங்கோலிய,  ரோம, அரேபிய, திராவிட அடையாளங்களைக் கொண்ட உறுப்பினர்களை இங்கு சாதாரணமாகக் காண முடிகிறது.   கலாச்சார வளர்ச்சி நிலைகளை நோக்கினால், நூற்றாண்டுகளாக பல்வேறு மதஅடையாளங்கள் கொண்ட மக்கள் திரள்களால் பல நூறு வழிபாட்டு ஸ்தலங்கள் இமாலயத்திலிருந்து குமரிமுனை வரை எழுப்பப்பட்டுள்ளன.   ஆனால் விசித்திரமாக,  இந்த ஆலயங்களின் பரவலிலும், அவற்றில் வீற்றிருக்கும் இறை வடிவங்களிலும் காணப்படும் ஒழுங்கு, இத்தேசத்தின் ஆன்மீக வளர்ச்சியின் உள்ளுறைப் பொருளின் விளக்கமாக நிற்கிறது.

இந்தியாவின் வடக்கு எல்லையான கைலாய மலையின் ஒளி பொருந்திய சிகரங்களில் சிவன் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.  அதன் எதிரிணையான கடலை நோக்கி தென் கோடியில் கன்னியாகுமரி கடுந்தவம் புரிகிறாள்.  கைலாய மலைக்கும், ஆழ்கடலுக்கும் பண்பில் துருவ இடைவெளி இருப்பதாகத் தோன்றும்; ஆனால் அவை கருணை, அன்பு ஆகிய விழுமியங்களால் பிணைக்கப்பட்டுள்ளன.  தெற்கே கன்னி நித்ய தவம் புரிகிறாள்.  தவம் என்பது நேர்பொருளில் சூடேற்றுவது என வரும்.  கடலின் நீர் சூடேற்றப்பட்டு பறந்து இமாலயத்தின் சிகரங்களை வெள்ளிப்பனியால் அலங்கரிக்கிறது.   இமாலயத்தில் சிவன் தன் பெருங் கருணையால் அதை கங்கைநீராக்கி, மீண்டும் கடலுக்கு அனுப்புகிறார்; அவ்வாறு நீர் எல்லா ஜீவன்களுக்கும் கிடைக்கச்செய்கிறார்.   .

கைலாயத்தைத் தவிர்த்து வட இந்தியாவிலிருக்கும் பெரும்பாலான கோயில்களில்  இறை வடிவம் துணையுடன் நிறுவப்பட்டுள்ளதைக் காணலாம்.  இராமன்-சீதை,  ராதா-சியாம், சிவன்-பார்வதி என அவை இரட்டை உருவகத்தில் உள்ளன.  ஆனால் தென்னிந்தியக் கோவிலின் இறை வடிவங்கள் தனித்த உருவங்களாக உள்ளன.  இங்கு சிவனும் தேவியும் தனித்தனியாக கோயில் கொண்டிருப்பதை நாம் காணலாம்.  முக்கியமான இன்னொன்று,  வடஇந்தியக் கடவுள் சித்தரிப்பு பெரும்பாலும் செயலூக்க நிலையினைக் குறிப்பவையாக இருக்கையில் தென்னிந்தியக் கடவுள் உருவங்கள் சாந்தமான தியானநிலையையோ,  ஆசுவாசமான ஓய்வு நிலையிலோ செதுக்கப்பட்டுள்ளன.  திருவனந்தபுரத்தின் அனந்த பத்மனாபசுவாமி கோயிலின் மூர்த்தி ஓர் உதாரணம்.

இந்திய ஆலயங்களின் கட்டமைப்பு தன்னளவிலேயே அறிவியல் பூர்வமானது.   கோயிலின் ஒவ்வொரு பகுதியும் மிகச்சிக்கலான பாரம்பரிய உளவியலைக் குறிக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்தியக் கோவில் சிற்பவேலைகளைப் பார்க்கும்போது, ஒன்றும் விடுபடா வண்ணம் அனைத்து மானிட ஆர்வங்களும் பிரதிபலிக்கப்படுவதைக் காணலாம்.   இஸ்லாமிய, கிருஸ்தவ அடிப்படைவாத ஒழுக்கவியல் கொள்கைகளால் ஊனமுற்ற மனங்களுக்கு ஒருவேளை அவை அதிர்ச்சியளிப்பவையாக இருக்கலாம்.  ஆனால் வாழ்வின் பல்வேறு  கோணங்களின் ஒருமித்த நோக்கை உணரும் ஒருவருக்கு, கோயிலின் கலையும் கட்டுமானமும் புலப்படும்; அவை பாலியல் உணர்வால் உந்தப்பட்ட சிற்பியின் தற்செயலான படைப்பு எனத் தோற்றமளிக்காது.

கோயிலின் வெளிப்பிராகாரம்

பகவத்கீதையில் ‘ஷேத்ரா’ (புலம்) மற்றும் ‘ஷேத்ரக்ஞ’ (புலனை உணர்ந்தவர். அதாவது உடம்பில் உறையும் ஆத்மா) என இரு குறிப்புகள் வருகின்றன.   கோயில்  ‘ஷேத்ரா’ என்றும் அழைக்கப்படுகிறது. கோயிலில் இறையுருவகம் உடம்பில் உறையும் உயிர் அல்லது ஆத்மாவைக் குறிக்கிறது.   “முழு பிரபஞ்சமுமே எந்நாளும் அழிவற எங்கும் நிறைந்திருக்கும் இறை குடிகொள்வதற்கான ஆலயம்” என ஸ்ரீராமானுஜர் குறிப்பிடுகிறார்.  கோயிலில் நாம் இறைவனை அணுகும் போது, முதலில் பௌதிக தளத்தைக் குறிக்கும் அதன் வெளிப்பிராகாரத்தில் நுழைகிறோம்.   அதற்கு முன் நாம் நமது காலணிகளை, மேலங்கியை,  அதிகாரத்தின் இலச்சினைகளைக் களைகிறோம்.  அதாவது நமது சமூக அந்தஸ்துகளைத் துறக்கிறோம்.  நாம் கோயிலில் தாயாகவோ, தந்தையாகவோ மற்ற எந்த உறவின் அடையாளமாகவோ நுழைவதில்லை.    அதுபோல படைவீரனாகவோ, வியாபாரியாகவோ  அல்லது மேதையாகவோ அங்கு செல்வதில்லை.அனைவரும் பக்தர்கள் எனும் அடையாளத்தையே கொண்டுள்ளோம்.   கோயிலின் வெளிவாசல் கோபுரத்தைத் தாண்டும்போது, நாம் நமது பௌதிக தேவைகளைக் கடந்து, உணர்வுதளத்தில் நுழைகிறோம் என்ற விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும்.   தினசரி வாழ்வு எண்ணற்ற நமது பெளதிகத் தேவைகளை நிவர்த்தி செய்யும் போராட்டத்தின் கவலைகளையும் மன அழுத்தத்தையும் கொண்டு நிறைந்திருக்கிறது.   நமது கோவில் விஜயம் குறைந்தபட்சம் நம்மை அவற்றிலிருந்து விடுவிக்கும் ஒரு தருணமாக மலரவேண்டும்.

கோயிலின் தடாகம் அல்லது பத்மதீர்த்தம்

கோயில் குறியீட்டு அமைப்பில் நிலத்திற்குப் பின் வருவது உணர்வு ரீதியான வாழ்வைக் குறிக்கும் நீர்.  வாழ்வின் மாறுபட்ட உணர்ச்சிமிகு தருணங்களைத் தொடர்புறுத்தாத நமது பௌதிக இருப்புக்கு எவ்விதமான முக்கியத்துவமும் இல்லை.   உடலை மரத்துப் போகச்செய்வதன் மூலம் உணர்ச்சிகள் தீண்டாத நிலையை அடைவதே யோகக் கலையின் உச்சம் எனச் சொல்பவர்கள் உண்டு.  ஆனால் அது உண்மையல்ல.  ஆரோக்கியமான எல்லா மனிதனுக்கும் புலனுணர்வு இயற்கையிலே உள்ளது.  இந்தியாவைப் பொறுத்தவரை, உறவுகளுடனான பிணைப்பு மற்றும் வெறுப்பு, தற்பெருமை மற்றும் பகை, இச்சை மற்றும் சீற்றம் ஆகிய உணர்வுகள் தவிர்க்கப்படவேண்டிய தீயொழுக்கங்களாகக் கருதப்படுகின்றன.    ஏன் நாம் அவற்றை இவ்வாறு அர்த்தப்படுத்தக் கூடாது? உங்களது அன்பும் பிணைப்பும் இறைவனுடன் இருக்கட்டும். பொய்யையும் பகட்டையும் வெறுப்பவர்களாக இருப்போம்.  நம்மை நமது அனைத்து கீர்த்திகளுடனும் அறிந்து கொள்ள முயல்வோம்.  நமது சிறுமைகளுக்காக சீற்றம் கொள்வோம்.  நமது நேர்மை மேல் பெருமை கொள்வோம்.  உங்களுக்குள் உறையும் நன்மை அவ்வப்போது முளைவிடும் தீய எண்ணங்களுக்கெதிராக தீவிர பகைகொண்டிருக்கட்டும்.   வாழ்வின் பற்றற்ற தன்மை, மேன்மை பொருந்திய ஒன்றன் மீது பற்று ஏற்படும்போது மட்டுமே சாத்தியமாகிறது.  எனவே,  உணர்வுகளின் சிறு தடாகத்தை விரிந்த பாற்கடலாக மாற்ற முயல்வோம்.

பத்ம தீர்த்த தடாகத்தில் மூழ்கி எழுவது கோயிலின் உட்பிராகாரத்தில் நுழைவதற்கு முன்பு இன்றியமையாதது.  இது உடலின் தூய்மை சார்ந்த செயல் மட்டுமன்று;  மாறாக, இது நமது உணர்ச்சிகளையும் சாந்தப்படுத்துகிறது.  நீர் அதன் தூய நிலையில் பக்தியின் குறியீடாகும்.  நமது உடல் வெளிப்புறத்தில் நீரால் நனைக்கப்படும்போது, பக்தியால் நமது உணர்ச்சிகள் உட்புறத்தே குளிர்விக்கப் படுகின்றன.   பத்ம தீர்த்தத்தில் நீராடத் தொடங்குகையில் நாம் சூரியனை வணங்கி, இதயம் கனிந்த நன்றியோடு சிறிது நீரை அவருக்கு அர்ப்பணம் செய்கிறோம்.  பிரபஞசத்தின் ஒவ்வொரு துணுக்கும் ஒற்றை பெரும் நோக்குடன், தற்செயல் நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டு நெய்யப்பட்டுள்ளன என்பதை நாம் நினைவுகூர்வதை இந்த சமர்ப்பணம் குறிக்கிறது.   நமது வயல்வெளிகள்,  கிணறுகள்  மற்றும் நீர்நிலைகளுக்கான நீரை சூரியன் வழங்குகிறது.   கோயில் தடாகத்தில் தாமரையைத் தழுவி உணர்த்தும் சூரியன்,  நமது  மனவெளியில் பிரகாசித்து, பக்தியின் தாமரையை நம்முள் மலரச்செய்யும் சுயத்தின் சூரியனை புறவயமாகச் சுட்டுகிறது.   ஆகவே, ஒரு பக்தனாக நாம் நீராடும்போது,  நமது உணர்ச்சிமிகு வாழ்வின் தூய்மையை நாம் தியானிக்கவேண்டும்.   இதுவே கோயில் வழிபாட்டின் இரண்டாம் நிலையான நமது உணர்ச்சிமிகு இருப்பில் நுழையும் வழியாகும்.

கருவறையை அணுகுதல்

கோயிலின் உட்புறம் நோக்கி மேலும் செல்கையில் ஆமைச் சிலையில் சுற்றி ஏற்றப்பட்டிருக்கும் தீபங்களை நோக்கி பக்தனின் கவனம் திரும்பும்.   இந்தியப் புராணங்களின்படி, தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாக்கி, அமுதம் வேண்டி பாற்கடலைக் கடையும் போது, மலை கடலின் அடியாழத்தை நோக்கி மூழ்கிச்சென்றது.  அப்போது மகாவிஷ்ணு ஆமையாக அவதாரமெடுத்து மலைக்குப் பாறை அடித்தளமாய் அதைத் தாங்கினார்.   வேறு விதமாகச் சொன்னால், தர்க்க அறிவை மத்தாகக் கொண்டு நம்முள் உறையும் எதிர் சக்திகள், நிறுவத் தேவையில்லாத உண்மைகளை தங்கள் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.  ஐரோப்பியத்  தத்துவ இயலின் தந்தை என வருணிக்கப்படும் தெகார்தோ, காரண அறிவால் தான் உணர்ந்த உண்மையை வரையறுக்க முயன்றபோது அது அவரைப் படுகுழி நோக்கிச் செலுத்தியதை உணர்ந்தார்.  ஒரு உறுதியான பற்றுதலுக்காக மூச்சுத் திணறி இறுதியில் ”நான் சிந்திக்கிறேன்; ஆகவே நான் இருக்கிறேன்” என்ற தனது புகழ்பெற்ற மேற்கோளை வந்தடைந்தார்.  அவரது அனைத்து தத்துவ தரிசனங்களையும் தொகுக்க, அது அடித்தளமாகி மலர்ந்தது.  ஆக, தனித்த தர்க்க அறிவு மட்டுமே ஒருவருக்குப் போதாது; அதற்கு ஒரு உறுதியான அடித்தளம் இன்றியமையாததாகிறது.   நெருப்பு நமது காரண அறிவைக் குறிக்கிறது.  ஆனால் அதற்கு ஆமைமேல் நிறுவப்பட்டிருக்கும் ஸ்தம்பம் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.  இது, நமது காரண அறிவுக்கு குரு அல்லது சாஸ்திரங்களின் துணையின் வலுவான தேவையைக் குறிக்கிறது.   நம்பிக்கை எனும் பாறையின் மீதே மதங்களின் நிலையான கட்டமைவுகள் எழுந்துள்ளன.  ஆன்மீகத் தேடலின் குறுக்காக நம் அகங்காரம் வரலாகாது.  தாகூரின் மொழியில், ”நமது துயரக் கூச்சல் தேவ சங்கீதத்திற்கு இடையூறாகாமலிருக்கட்டும்”. ஆக, இயந்திர கதியில் சிந்திப்பதைத் தவிர்த்து,  தீவிர குருபக்தியுடன் தியானிக்கும் பக்குவத்தை பக்தன் எய்தவேண்டும்.

விளக்கு ஸ்தம்பத்தின் சற்று பின்னால் தூண்கள் சூழ்ந்த ஆடலரங்கு வருகிறது.  ஒரு பதின்வயது கன்னி இம்மேடையில் கோயில் மூலவரை நோக்கி நடனம் புரியவேண்டும்.    இது உலகை மகிழ்விக்கும் எளிய நோக்கத்திற்காக அல்ல; மாறாக நடனம் என்பது நிகழ்வின் குறியீடு.   உலகியல் நிகழ்வுகள் தூய இருப்பிற்கு ஒத்திசையாதபோது, அவை லௌகிகத் தேவைகளுக்கும், அது சார்ந்த துக்கங்களுக்கும் நம்மை இழுத்துச்செல்லும்.  ஒத்திசைவின் போது,  அது நம்மை உலகியல் தேவைகளிலிருந்து மீட்டெடுத்து நமது இருப்பின் உயரிய நோக்கமான ஆன்மீக உவகையை அளிக்கிறது.    நடனம் கூட ஒரு நெருப்புக் குறியீடு.  ஓய்வின்றி அசையும் தீயின் நாளங்கள் நடனமிடுபவை போல காட்சி தருகின்றன. ஆக, உலகியல் ஆர்வங்களிலிருந்து பக்தன் இப்போது விடுபடுகிறான்.  அவனது உணர்ச்சிகள் இப்போது முரண்படுவதில்லை.  தூய இருப்பின் மீதான பக்தி முழுமையாகிறது; அவன் தியான நிலையை அடைகிறான்.

ஆலய சங்கீதம் அல்லது பஞ்சவாத்யம்

ஒன்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.  தியானநிலை என்பது  ஒரு எளிய பயிற்சி மட்டுமல்ல.  அது இயந்திரத் தனமானதோ அல்லது மயிர்பிளக்கும் ஆராய்ச்சிக்குரிய விஷயமோ அல்ல.  உதாரணமாக,  பசுங்காடுகள், மலை முகடுகள், விரிந்த நீலக்கடல், கரிய இரவின் பின்னணியில் மின்னும் நட்சத்திரங்கள் என இயற்கையின் பேரழகுகளைக் காணும் தருணங்களில் நம் மனம் உவகையால் பொங்குகிறது.  அக்கணங்களில் நாம் எண்ண அலைகள் அடங்கி, மனம் தணிந்து அமைதியாகிறோம்; ஒரு ஒத்திசைவு நிலைக்கு உயர்த்தப்படுகிறோம் – ஒரு உன்னத உயரத்திற்கு மனம் கிளர்ந்தெழுகிறது.  கராறான தர்க்க முடிவுகளுக்கு மாறான, உள்ளுணர்வின் ஒரு இறைவடிவத்தை அத்தருணங்களில் காண்பது அபூர்வமல்ல.   விழிப்புணர்வு நிலையில் மனம், இவ்வாறு மறைந்திருக்கும் உண்மை, அழகு, அவற்றின் இறையம்சம் என்று கண்டுணர்வதையே நாம் ”தரிசனங்கள்” என்று குறிப்பிடுகிறோம்.  உள்ளுணர்வின்றி தரிசனங்கள் நிகழாது.

காற்று உள்ளுணர்வின் குறியீடு.  அது தன்னளவில் ஒலியலைகளைக் கடத்தும் ஒர் ஊடகம்.  கோயில் வழிபாட்டில் அது நெருப்பின் குறியீட்டிற்கு அடுத்ததாக வருகிறது.  பஞ்சவாத்தியம் என்று பிரபலமாக அறியப்படும் ஐந்து வாத்தியங்களின் நாதங்கள், கோயிலின் கருவறையின் முன்னிருக்கும் நடனமேடையில் எழுப்பப்படுகின்றன.  அந்த இசைத்தொகுப்பு ஐந்து வாத்தியங்களிலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.  அது வாழ்வின் சங்கீத்தைக் குறிக்கிறது.  அதாவது, வாழ்வின் பௌதிகம், உணர்ச்சி, தர்க்கம், உள்ளுணர்வு மற்றும் ஆன்மீக அம்சங்கள் ஒத்திசையும்போது, வாழ்வு இனிய சங்கீதமாகிறது.

மனதிற்கு சங்கீதத்தின் மீதான ஈர்ப்பு விசேஷமானது.  இசையின் கவர்ச்சியிலிருந்து தப்புவது அத்தனை எளிதல்ல.  இசையால் அனைத்து மனக்கலவரங்களும் தணிக்கப்படுகின்றன; கவலைகள் மறக்கப்படுகின்றன –  மனம் அமைதியாகிறது.  இசையால் நிகழும் சாந்தத்திற்குப் பின், மனதில் உவகையின் ஒலிநயத்துடன் அலைகள் விரிகின்றன.   இந்த உள்ளனுபவமே ”அனுபூதி ” எனக் குறிப்பிடப்படுகிறது.  நம்முள்ளே நிகழும் ஒத்திசைவில் பிறக்கும் இந்த உவகை,  பூரண இருப்பை உள்ளுணர்வால் புரிந்து கொள்ள உதவுகிறது.   காதை நிறைக்கும் சங்கீதம், உள்ளுணர்வின் கண்களைத் திறக்கிறது.  தெய்வத்தின் இருப்பைப் புறக்கண்களால் காண முடியாது; அதற்கு, ஆன்மீகக் கண் அதாவது மூன்றாவது கண் திறந்திருக்க வேண்டும்.  இவ்வாறாக, கோயிலின் கருவறை முன் நிற்கும் நாம்,  நமது மூன்றாவது கண் திறந்தவர்களாகிறோம்.

ஆன்மீக ஒழுக்கத்தில் முக்கியான பகுதி பொறுமை!  பூத்துக்குலுங்க மரத்திற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது; பழமாகக் கனிவதற்கு காய் நேரமெடுத்துக்கொள்கிறது.  அதுபோல, மெய்மையுணர்வுக்கு (realization) நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.  அது அதற்கான நேரத்தைக் கோருகிறது.  ஆம்! மெய்மையுணர்வு என்பது,  சிலர் எண்ணுவதைப் போல பகுதிகளாக அடைவது அல்ல.  அது ஒரு மின்னல்வெட்டாக நிகழ்வது.   நாம் அதைப் பார்க்கலாம் அல்லது முழுமையாகப் பார்க்காமலிருக்கலாம்;   உண்மையை முற்றாக உணரலாம் அல்லது ஒருபோதும் உணராமலிருக்கலாம்.  எவ்வாறிருப்பினும் நாம் பொறுமை காக்க வேண்டியுள்ளது.   எனவே, கோயில் கருவறைக் கதவின் மீது நம் முழு கவனக்குவிப்புடன் நாம் காத்திருக்க வேண்டும்.  கதவு எக்கணமும் திறக்கப்படலாம்.  அவ்வாறு கதவு திறந்த பின்னரும் உள்ளே ஒரு திரை மறைக்கிறது.  அகத்திற்கும் புறத்திற்குமான திரையை நம் விழிப்புணர்வு விலக்காத வரை, நாம் சூரியனின் ஒளியைக் காண்பது இயலாததாகிறது.  ஆகவே கருவறை பீடத்தின் முன் திரை விலகுவதுவரை நாம் காத்திருக்க வேண்டியதாகிறது.

திரை விலகியதும் ஒரு பேரொளி எழுகிறது; ஆயிரம் திரியிட்ட விளக்கின் ஒளியைப் போல அது நம் கண்களை நிறைக்கிறது.  விழிப்புணர்வும் இவ்வாறே நிகழ்கிறது.  ஒரு பேரொளியால் பிற எல்லாவற்றிலிருந்தும் நாம் தற்காலிகமாக குருடாக்கப் படுகிறோம்.   அத்தகைய பேரொளிக்குப் பழகாத புறக்கண்களும் மெல்ல பழகிக்கொள்கின்றன.  வெளிச்சத்தின் பின்னணியிலிருக்கும் புதிரான இருளிலிருந்து ஆலய மூர்த்தியின் புனித உருவம் துலங்குகிறது.   ஆலய வழிபாட்டின் இந்த நிலை, நிறுவன வாழ்விலிருந்து முன்னேறும் நம் ஆன்மீகப் பயணத்தைக் குறிக்கிறது.  வழிபாட்டில் அகம், புறம் என்ற இருமைகள் கரைந்தழியும் பரவசத்தில் நம் மனம் நிறைகிறது.  கற்பூரம் எரிந்தணைகிறது; மணிகளின் ரீங்காரம் மெல்ல நிலைக்கிறது.  யாவும் சலனமற்றிருக்கின்றன!  அமைதியே எங்கும் நிறைந்திருக்கிறது.   அமைதி! அமைதி! அமைதி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s