இந்துமதம் எனும் சொல்லை நாம் காணும் மதப் பின்புலமுள்ள எண்ணற்ற நிகழ்வுகளைத் தொகுக்கும் ஒரு பொதுச் சொல்லாகக் கருதலாம். வெவ்வேறு படிநிலைகளில் மத நம்பிக்கை கொண்டு வாழும் மக்கள் இந்துக்களில் உள்ளனர். தீவிர உலகியல்வாதிகளான சார்வாகர்கள் முதல் துாய கருத்துமுதல்வாதிகளான (idealists) அத்வைத வேதாந்திகள் வரை அனைவருக்கும் இந்து மதம் எனும் பெருங்குடும்பம் இடமளிக்கிறது. அவர்களுக்குள்ளும் ஒரு குறிப்பிட்ட கடவுளை நம்புபவர்கள், அந்த நம்பிக்கையற்றவர்கள் என இரு தரப்பினரைக் காணலாம். அனைவரும் ஒரே கடவுளில் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று இந்து மதம் வலியுறுத்துவதில்லை. அவரவர் வழிபாட்டிற்கு கடவுளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அது வழங்குகிறது; சிவன், விஷ்ணு, தேவி, கணபதி, சுப்பிரமணியன் என பல தெய்வங்கள். இது தவிர இன்னும் எண்ணற்ற இறைபடிமங்கள் இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான மக்களால் வழிபடப்படுகின்றன.
முழுமுதற்கடவுள் கோட்பாடு (Henotheism)
பல தெய்வங்களை வழிபடும் பண்பாடு பண்டைய கிரேக்கத்திலும் காணப்பட்டது. ஆனால் பல தெய்வ வழிபாடு குறித்த இந்தியக் கண்ணோட்டம் அதிலிருந்து சற்று வேறுபடுகிறது. அதாவது, ஒரு கடவுளை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் அதேநேரம் பிற கடவுள்களை உபதெய்வங்களாகக் (demi-Gods) கொள்வது இதன் தத்துவமாகும். மார்க்ஸ் முல்லர் இதை முழுமுதற்கடவுள் கோட்பாடு (henotheism) என்று குறிப்பிடுகிறார். உதாரணமாக, சிவன் கோயிலில் மற்ற தெய்வங்கள் உபதெய்வங்களாக வீற்றிருக்கும். ஒரு விஷ்ணு கோவிலில் சிவனுக்கே சற்று குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆகவே, நாம் இந்து மரபை பல தெய்வங்களை ஒரே நேரம் துதிக்கும் பல்லிறைக்கோட்பாடு (polytheism) கொண்டதாகக் கொள்ள இயலாது. இங்கு உண்மையில், இறையை பன்மையாகக் காணும் நோக்கு இல்லை.
ஒரே கடவுள் – மாறுபடும் கருத்துருக்கள்
ஒரு கடவுளே கூட எப்போதும் ஒரே குறிப்பிட்ட வடிவில் சித்தரிக்கப்படுவதில்லை. உதாரணமாக, பரவசத்தில் நடனமாடும் நடராஜரும், குருவாக வீற்றிருக்கும் தக்ஷிணாமூர்த்தியும், ஆண் பாதி, பெண்பாதியென உடல்கொண்ட அர்த்தநாரீசுவரனும் சிவனே. கருணை வடிவில் சரஸ்வதியாக வீற்றிருக்கும் தேவி, பத்திரகாளி வடிவில் அச்சமூட்டுபவளாகத் தோன்றுகிறாள். விஷ்ணுவே கூட சக்ரதாரியாக போர்க்குணத்துடனும், யோக நித்ரையிலாழ்ந்த அனந்தபத்மனாபனாகவும் காட்சி தருகிறார். இவ்வகைச் சித்தரிப்பில் பொதிந்திருக்கும் புதிர்களும் முரண்களும் எண்ணற்றவை. எனவே, இந்து மரபின் தொன்மங்களும், இறைபடிமங்களும் எளிய மனிதர்களிடையே பெரிய புரிதல்களை ஏற்படுத்தாமல் போனது இயற்கையே. இந்து சிந்தனைகளை மூடநம்பிக்கைகளின் மூட்டை என்று அவரகள் காணும் போக்கு உருவானது. இந்த மனநிலை ஆரோக்கியமானதல்ல. நமது மதத்தை நிராகரிப்பதன் மூலம் நமது கலை, ஆன்மீகப் பாரம்பரியத்தை நாம் இழக்கிறோம்; அதுவும் தவறான காரணங்களினால் அல்லது சரியான காரணமின்மையினால். பெருமரத்தின் வேர்களை வெட்டுவதற்கு ஒப்பானது இது. இந்தப் புராதன மரபைக் காக்கவும், அதிலிருந்து பயன்பெறவும் அவற்றின் சின்னங்களை மீள்கண்டுபிடிப்பு செய்வது இன்றியமையாததாகிறது. கணபதி ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்? ஏன் அவர் யானைத்தலையோடு காட்சி தருகிறார்? சுப்பிரமணியனுக்கு ஏன் ஆறு தலைகள்? அவர் ஏன் மயில்வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்? சிவன் ஏன் பிறைசூடனாகச் சித்தரிக்கப்படுகிறார்? என்பனவற்றின் அடிப்படைப் புரிதல்கள் நமக்கு வேண்டும். இவ்வாறான, ஆன்மீகப் படிம மொழியின் மறுமதிப்பீடு இந்நாளில் தவிர்க்க முடியாததாகிறது.
அறிவியலின் மொழியில்
நாம் அறிவியலின் யுகத்தில் வாழ்கிறோம். இன்று, நவீன சிந்தனை தர்க்கங்களாலும், காரண காரிய ஆய்வாலும், அறிவியலின் பிற கோட்பாடுகளாலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. தெளிவற்ற, புதிரான, பொருள்மயக்கமுடைய எவ்விதக் கருத்தமைவையும் அது ஏற்றுக்கொள்ளாது. ஆனால், நமது முன்னோர்களோ, அனுபவ அறிவைக்கடந்த ஞான நிலையின் உச்சத்தை, அவர்தம் உள்ளுணர்வாலும் கற்பனையாலும் எட்டியிருந்தனர். எனவே தங்களை வெளிப்படுத்த அவர்களுக்குக் கவிதையும் மற்ற பல்வேறு கலைவடிவங்களும் தேவைப்பட்டன. இந்திய இலக்கியத்தில் உரைநடை புழக்கத்திற்கு வருவதற்கு வெகுகாலம் முன்னரே கவிதை தோன்றியிருந்தது. உதாரணமாக, ஒரு மண்வெட்டியை மண்வெட்டி என்று கூறுவது அறிவியல்; அதையே “உழவனின்தூரிகை” என்று கூறுவது கவிதை. உருவகங்களாலும் குறியீடுகளாலும் உணர்த்துவதில் நம் முன்னோர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். இவ்விதம் குறிப்புணர்த்துவதை, இயற்கை மேல் ஏற்றப்பட்ட மனிதப் பண்புகளின் அசட்டுத் தொகை (Anthropomorphic) என மேற்கத்திய விமர்சகர்கள் ஏளனம் செய்ததை நாமறிவோம். ஏளனம் செய்வது எளிது; ஆனால் நமது மரபின் தனிச்சிறப்பை ஆராய்ந்தறிவறிவது சற்றுக் கடினமானது, பொறுமையைக் கோருவது. நமது ரிஷிகளின் உன்னதக் கற்பனைகளுக்கு நீதி செய்ய நாம் விரும்பினால், அக்காலத்து இலக்கியக் கருவிகளில் தேர்ச்சி பெறுவது அவசியம். அவர்கள் கற்களும் உலோகங்களும் கூட நம்முடன் பேசவேண்டும் என்று கூறினர். வாழ்வின் முடிவிலா துக்கங்களை, அவற்றின் தீர்வுகளைக் கண்டடைந்த போது அவர்கள் எய்திய ஆனந்தத்தை நம்மிடம் பகர வேண்டும் என்று விரும்பினர். தொன்மங்கள் பேசும் ஞான மொழி, ஆலய உருவகங்களின் ரகசிய மறைமொழி இவற்றை அறிவியலின் மொழியில் மறுவிளக்கம் தரும் கலையை நாம் புரிந்து கொள்ளும்போது, அம்முயற்சி வெகு ஆர்வமூட்டுவதாக அமையும்.
ஒரு முக்கிய குறிப்பு
இவ்வாறு நாம் காணும் படிமங்கள் கட்டற்ற கற்பனையினால் விளைந்த, பெரிதும் அகவயமான (Subjective) பிம்பங்களாக இருந்திருந்தால், அவற்றை நம்மால் ஒரு “பொதுமொழிக்கு” உயர்த்த இயலாமல் போயிருக்கும். ஆனால், இந்து மரபு குறிப்பிடும் எல்லா படிமங்களும் (Images), அவற்றின் வலைப்பின்னலில் உள்ளுர ஒரு கோட்பாட்டைக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆகவே அவற்றை பொதுமொழியில் தொடர்புற வைக்க முடிகிறது. மனிதனின் ஆழ்மனம், பிரபஞ்சப் பொதுவில் இருந்து தொடங்கி தனக்கேயுரியவை வரை என்ற வீச்சில் பிம்பங்களை வனையும் வல்லமை கொண்டது என்பதை ஃப்ராயிட் (Sigmund Freud), யுங் (Carl Gustav Jung ) இருவருமே ஏற்றுக் கொள்கிறார்கள். நம் கனவுகள் அவற்றை வெளிக்கொணர்கின்றன. உள்ளுணர்வின் (intuition) நோக்கிலும் இதுவே நிகழ்கிறது. நமது ஆன்மீக இலக்கியங்களில் வரும் குறியீடுகளை வகைப்படுத்தினால், முரணியக்க அடிப்படையில் அவற்றை, விரித்தல் வாதம் (ascending dialectics) மற்றும் குறைத்தல் வாதம் (descending dialectics) சார்ந்தவை என இரு பிரிவுகளில் தொகுக்கலாம். இது தவிர நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் வானம் (வெளி) எனும் பிரிவுகளைச்சாரும் குறியீடுகளும் உள்ளன.
இந்த தளத்தில் சிறிது வெளிச்சம் பகர இக்கட்டுரைத் தொகுப்பு முயல்கிறது. இது ஒரு முழுமையான ஆய்வறிக்கையல்ல. இருப்பினும், ஒரு விவேகியின் மனதில் ஆர்வத்தை எழுப்பி மேலும் விரிவான ஆய்வுக்கு இது வழிவகுக்கும் என்று கருதுகிறோம்.
AN INTELLIGENT MAN’S GUIDE TO THE HINDU RELIGION எனும் புத்தகத்தின் தமிழாக்கம் – மொழிபெயர்த்தவர் : கெ.பி.வினோத்
(சொல்புதிது வெளியீடு)