ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 3

புறத்தில் இருப்பதும் அகம் உணர்வதுமான
வெளி முதலான பூதங்களைந்தும்
ஆழிச்செல்வத்தில் எழும் அலைகள் போல
தம்மில் பேதமின்றித் தோன்றிடல் வேண்டும்
                                                                                 [ஆத்மோபதேச சதகம் – பாடல் 3]

இசையின் ஒத்திசைவும், வண்ணங்களின் விருந்தும், உயிர்த்தோழனின் அன்பான அரவணைப்பும், சுவைமிக்க உணவுகளும், இனிய மணங்களும் எல்லாம் இவ்வுலக வாழ்வை மறக்கவொண்ணா அனுபவமாக ஆக்குகின்றன.   இவ்வுலகின் இசையைக் கேட்கவும், அதன் அழகைப் பார்க்கவும், மணங்களில் மயங்கவும், அது தரும் சாத்தியங்களின் இனிமையைப் பருகவும், அதை அப்படியே அன்போடு அணைத்துக் கொள்ளவும் இப்பேருகில் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்று விரும்பாதவர் இருக்க முடியுமா?  ஆனால் இவை மட்டுமல்ல வாழ்வு.  தலைவலி ஏற்படும்போது, கைகால் சோர்ந்துபோகும்போது, இதயம் அமைதியிழக்கும்போது, மனம் குழம்பும்போது, ஆன்மாவை மந்திரத்தால் மயக்க, இனிய ஆதரவாய் தூக்கம் மெல்ல கவிழ்கிறது.  உலகு பற்றிய மனப்பதிவுகள் எல்லாம் மங்கித் தேய்கின்றன.  ஆழமான கனத்த மெளனம் நிலவுகிறது.  எந்த அசைவும் இல்லை.  எதுவும் அறியப்படுவதில்லை.  அமைதி கோலோச்சுகிறது.  அவ்வமைதி நிரந்தரமாக நிலவும் என்றால் யாரும் வருந்தப்போவதில்லை.  பல்வகைச் செல்வங்கள் நிரம்பிய உலகிலிருந்து ஆழ்ந்த மௌனமும் அமைதியும் நிலவும் உலகுக்கு நம்மால செல்ல முடிகிறது என்பது எத்தனை பெரிய வரம்!

சரி-தவறுகளை பிரித்தறிய முடியாத சிறு மக்களின் மனங்கள் அருமையான இவ்வுலகை கலக்கி விடுகின்றன.  மனித ஊழில் ஒரு புதிரான கரும்புள்ளி உள்ளது.  அது அவனை தடுமாறச் செய்கிறது.  அவனுக்கு நிகழ்பவை எல்லாம் தவறானவையாகின்றன.  அவன் கொண்டாடி மகிழ்வதற்கென வரும் உலகம் பெரும் பயங்கரவெளியாகிறது. தன்னைச்சுற்றி, அவனது நோக்கங்களை ஏளனம் செய்யும், இரக்கமில்லா இதயம் கொண்ட கேடு நினைக்கும் மக்களையே அவன் காண்கிறான்.  இயற்கையின் உச்சங்கள் அவனுக்கு எதிராக இருக்கின்றன.  எல்லா வகையான நோய்களும் அவன் உடலையும் மனதையும் தாக்குகின்றன.  அவன் குடம் குடமாய் கண்ணீர் சிந்துகிறான்.  துன்பம் நிறைந்த பிறவிக்காக விதியை நோகிறான்.  அடியாழமில்லா நனவிலியில் தன் பெருந்துன்பங்களை மூழ்கடிக்கத் துடிக்கிறான்.  துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.  “‘தங்களைத் தாங்களே வதைத்துக்கொள்ளும்’ இலக்கில்லாமல் திரிபவர்கள், குருடாக்கும் இருளால் சூழப்பட்ட கொடும் சூழலில் சிக்கிக் கொள்கிறார்கள்” என்கிறது உபநிடதம்.

இதோ, கூர்மையான தர்க்கத் திறமை கொண்ட, இலக்கண விதிகளையும் அணி இலக்கணங்களையும் நன்கறிந்த மெய்யியலாளர்கள் இருக்கிறார்கள். அறிபவன், அறியப்படுவது, அறிவு ஆகிய மூன்றையும் நுணுகி ஆய்வு செய்ய விழைகிறார்கள். பேரறிஞரான சங்கரர், விளைவின் மெய்ம்மைக்கும் காரணத்தின் மெய்ம்மைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று அறிவிக்கிறார்.  நீங்களும் அவருடன் சென்று வறுத்த கோழிக்கு பதில் முட்டையை உண்ணப்போகின்றீர்களா?  முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு வருகிறதென்பது யாருக்குத்தான் தெரியாது?  விளைவுகளின் நிகழ் உலகில் மட்டுமே சாத்தியமான, கற்பனைக் கோழியை விருந்தாக உண்ணுவது போல பகற்கனவுகாணும் பரிதாபத்துக்குரியவனை அவர் இகழ்ச்சியுடன் பார்க்கிறார் என்று நினைத்தால், தர்க்கத்தின் வலுவான விதிகளை சரியாகப் பயன்படுத்துவதில் மீமெய்யியலாளர் (transcendentalist) எந்தத்தவறும் செய்வதில்லை என்று யாரால்தான் சொல்ல முடியாது?

மெய்யியலாளர் மிகைப்படுத்துவது போல தோன்றக்கூடும்.  அவசரப்படாதீர்கள்!  இவ்விஷயத்தில் அவரது இறுதித்தீர்ப்பை அவர் வழங்கும்வரை அவருடன் செல்வோம்.  இரண்டு மெய்ம்மைகள் இருக்க முடியுமா? தர்க்க ரீதியாக அதற்கு வாய்ப்பேயில்லை.  உண்மை என்பது பகலில் ஒன்றாகவும் மாலையில் வேறாகவும் இருக்க முடியுமா?  நிச்சயம் முடியாது.  ஓர் உண்மை பிறிதொன்றில்லாமல், மாற்றமில்லாமல் இருக்கும் என்றால் அதற்கு முதலோ முடிவோ இருக்க முடியாது என்பதை கொள்கையளவிலாவது நாம் ஒப்புக்கொள்ளலாம்.  அதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு பிறிதொன்று இல்லையெனும்போது, உண்மையின் எந்தப் பண்பையும் பயனிலைப்படுத்த முடிவதில்லை.  ஏனெனில், பயனிலைப்படுத்துவதென்பதே ஒப்பிட்டுப் பார்ப்பதுதான்.  ஒப்பிட முடியாதபோது உங்களால் மதிப்பிட முடியாது.  மேலும், அத்தகைய உண்மை, அறிபவன்-அறியப்படுவது போன்ற இருமைகளை அனுமதிப்பதில்லை.  ஆகவே, ஒளியின் மூலத்தின் மீதே ஒளி பாய்ச்ச முயலும் சங்கரரை நாம் மன்னிக்க வேண்டும்.  இந்த இடத்தில் அறிபவன்-அறிபொருள் எனும் இருமையை மறுதலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், சங்கரரும் அவரது வாதமும் ஒன்றுமில்லாமல் மங்கிப் போகின்றன.  நடக்கப்போகும் மிச்சத்தை அறிய நாமும் அங்கில்லை.

பிறகென்ன?  ….

இல்லை, இன்னும் நம்பிக்கை இருக்கிறது.  இதோ வருகிறார் ராமானுஜர் என்னும் மெய்யிலாளர்.  உண்மையை அவர் பார்க்கும் பார்வையில் கோழி நடக்கிறது, ஒலியெழுப்புகிறது, தலையை ஆட்டுகிறது, இங்குமங்கும் பார்க்கிறது, குப்பையைக் கிளறுகிறது, தானியத்தை கொத்துகிறது, புழுவை முழுங்குகிறது.  இச்செயல்களை எல்லாம் முட்டையில் காணமுடியாது. காரணமே முழு மெய்ம்மை அல்ல என்பதே அதன் பொருள்.  முழுமை அல்லது மொத்தம் என்பது முட்டையையும் கோழியையும் மட்டும் உள்ளடக்கியதல்ல.  கோழியினத்தின் மொத்த மரபையும், மதிப்பிட முடியாத எதிர்காலப் பெருக்கத்தையும் தன்னுள் கொண்டது அது.  அவரைப் பொறுத்தவரை, உண்மை என்பது அனுபவத்தை ஒத்தது; தருக்கத்தின் எல்லைகளைக் கொண்டு அதை கெடுத்தல் கூடாது.  அப்பாடி!  இது நன்றாக இருக்கிறதே!  உலகம் மீண்டும் அதன் ஆனந்தத்துடனும், கொண்டாட்டத்துடனும் வண்ணங்களுடனும் மீட்கப்பட்டுவிட்டதே!  மீண்டும் நாம் மேசையைச் சுற்றி அமர்ந்து நல்லுணவுகளை சுவைக்கலாம்!

ஆனால், ராமானுஜர் நம்மை வேறுவகையான இன்னல்களுக்கு ஆளாக்குகிறார்.  தொலைதூர விண்மீன்களிலிருந்து நம் விரல்நகங்கள் வரை வியாபித்திருக்கும் இம்மொத்தப் பிரபஞ்சமும் முழுமுதல் இறையின் உடலாகப் பார்க்கப்படவேண்டும்.  அதன் ஒவ்வொரு அணுவும் நாராயணன் என்னும் தெய்வக்கூறால் ஆட்டுவிக்கப்படுகிறது.  நீங்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவராய் இருப்பீர்கள் என்றால், இந்தத் தத்துவம் உங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடும் – எப்படி உங்களால் கெட்டிலை அடுப்பிலேற்றி அதிலிருக்கும் இறைமையை கொதிக்க வைக்க முடியும்?  மனிதனைத் தின்னும் மனிதனை தன்னின உண்ணி (cannibal) என்கிறோம்.  இறைவனை உண்பவனை என்னவென்றழைக்க?

அவசரப்படாதீர்கள்…  அது உண்மையாய் இருக்க முடியாது.  திடமான ஒரு கல்லை யாரும் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் என்று மயங்கப்போவதில்லை.  அனுபவ உலகம் என்பது ஓரிய (homogeneous) முழுமையாக இருக்கமுடியாது.  நகத்தின் மேல் ஊசியால் குத்தினால் அதை நீங்கள் கவனிக்கக் கூட மாட்டீர்கள்.  ஆனால், நகக்கண்ணில் அதே ஊசியால் குத்தும்போது அலறுவீர்கள்.  நகத்தில் இருக்கும் உணர்ச்சி நிலைக்கும் தோலின் நரம்புமுனைகளிலும் தசைகளிலும் இருப்பதற்கும் பண்படிப்படையில் வேறுபாடுண்டு என்பதே இதன் பொருள்.  நம் மூளையைக் கொண்டே நாம் சிந்திக்கிறோம்; கால்களைக் கொண்டல்ல.  மூளையின் மென்பொருள், அழகு போன்ற நுட்பமான விழுமியங்களை உருவாக்கவும் அவற்றைப் பாராட்டவும் கூடிய அற்புதமான ஒரு அமைப்பு.

ஒருமை மீது நாம் கொண்டுள்ள பற்று வெறியாக மாறக்கூடாது.  அறிவதற்கு ஒரு ஆன்மாவும் அறியப்படுவதற்கு ஒரு பொருளும் உள்ளன என்பது சிந்திப்பதற்கு வசதியாக இருக்கிறது.  அறிபவனையும் அறியப்படுவதையும் தனித்தனியாக பிரித்து வைத்துக்கொள்ளலாம்.  உணவை செரித்துக்கொள்ள ஒரு தன்னிச்சையான அமைப்பும், பிறர் புகுந்து பார்த்துவிடாமல் நமக்கேயான எண்ணங்களை எண்ணிக்கொள்வதும் ஒரு வசதியான ஏற்பாடு.  எல்லா பெயர்களையும், வடிவங்களையும், செயல்பாடுகளையும் – அவை ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன என்ற நிலையில் – குறிப்பதற்காக இயங்கும் வகைதிரிபுப் பண்புகளின் (differentiae) எண்ணிலடங்கா தனித்தன்மைகளால் சமரசம் செய்துகொள்ளப்படாமல், உண்மை என்பது எதையும் சாராமல் சுதந்திரமாய் இருப்பதை மத்வர் என்னும் மெய்யியலாளர் ஒப்புக்கொள்கிறார்.

என் நண்பன் மாட்டிறைச்சியை சமைத்துக்கொண்டு பியர் அருந்தும்போது, நான் தனியாளாக எனக்கான காய்கறியை வேகவைத்துக்கொண்டு ஆப்பிள் ரசத்தை அருந்தமுடியும்.  நம் மனம் விரும்புவதை செய்துகொள்ள நமக்குள்ள சுதந்திரத்தை இது தெளிவாகக் காட்டுகிறது.  நான் வளராமல் இருப்பதற்கும், காலத்தை எப்போதைக்குமாக நிறுத்திவைக்கவும், ஆன்டாயின் டி செயின்ட் எக்ஸ்யூபெரியின்  (Antoine de Saint-Exupery) குட்டி இளவரசனைப்போல எனக்கேயான சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் நிகழ்த்திக் கொள்ளவும் இதே சுதந்திரம் எனக்கிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!  ஆனால், எல்லாவற்றிற்கும் எல்லை ஒன்று உள்ளதே!  என் சுதந்திரத்தை நான் அவ்வளவு தூரம் நீட்டிக்க முடியாது.  ஆதலால், எனக்கு நான் எஜமானன் அல்ல.  அப்படியென்றால் யார் எஜமானன்?  இந்த இடத்தில், நாராயணன் என்றும் விஷ்ணு என்றும் அவர்கள் அழைக்கும் சார்பிலா முழுமுதலே இவ்வுலகம் என்னும் நாடகத்தை நடத்துகிறது என்று ராமானுஜர் சொல்வதை மத்வர் ஏற்றுக்கொள்கிறார்.  இறைவனது மெய்யின் எண்ணிலடங்கா இறைமை, உளவியல், அறம் மற்றும் இயற்பண்புகளை விபூதி என்கிறார் ராமானுஜர்.  இதையே சார்பிலா முழுமுதலின், ஒன்றையொன்று சார்ந்த கூறுகளான ‘தத்வ’ என்கிறார் மத்வர்.

இப்போது சங்கரர் ஒரு புன்னகையுடன் தோன்றுகிறார்.  அவர் எதுவும் பேசுவதில்லை.  அவரது கனத்த மௌனம் மத்வரின் “அது ஒன்றே” எனும் கூற்றை அங்கீகரிக்கிறது.  இத்தருணத்தில் நாராயண குரு தனது மென்மையான குரலில் நம்மிடம் ரகசியமாய் கூறுகிறார்: “நனவின் மேற்பரப்பில் எழும் பொன்னொளிர் அலைகள் ஒவ்வொன்றும், சார்பில்லாததாக இருக்கும் அதே நேரத்தில்  சார்புள்ளதாகவும், ஆன்மாவாக இருக்கும் அதே நேரத்தில் உடலாகவும், காரணமாக இருக்கும் அதே நேரத்தில் விளைவாகவும் இருக்கும் ஆழிக் கருவூலத்திலிருந்து பிரித்துணரமுடியாதது என்பதை அறிவாயாக!.  அப்பாடா எவ்வளவு நிம்மதியாய் இருக்கிறது!  இப்போது பெரும் ஞானிகள் சொல்வதையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.  அதே சமயம், தன்னிலைகடந்ததும் அகம்சார்ந்ததுமான அனுபவ உலகுபற்றிய நம் தனிப்பட்ட நிலைப்பாட்டையும் மெய்நிலைகடந்ததன் இருமையற்ற மெய்ம்மையையும் நம்மால் உணரவும் முடிகிறது.

இப்பாடலில், வான், காற்று, நெருப்பு, நீர், நிலம் எனும் பஞ்சபூதங்களால் ஆன புற உலகு எனும் செவ்வியல் கருத்தமைவை நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறார் நாராயண குரு.  இவை புற மெய்ம்மைகள் மட்டுமல்ல நாம் வாழ்வில் அனுபவிக்கும் அனைத்தின் குறியீடுகளும்தான்.

பஞ்சபூதங்களில் நிலமே அதிகமும் பருண்மை கொண்டது.  உண்மையில் திகழும் திடத்தன்மை கொண்ட நிலத்தைக் குறிக்கும் அது குறியீட்டுத் தளத்தில் வாழ்வின் இயற்பியல் மற்றும் பருண்மைக் கூறுகளையும் சுட்டுகிறது.  ஆங்கிலத்தில் சில மனப்பாங்குகளை ‘earthy’’ என்றும் “down to earth” என்றும் கூறுவதுண்டு.

நீரானது நிலத்தைப்போல இறுகியும் அசையாமலும் இருப்பதில்லை.  ஓடுவதே அதன் பண்பு  அது இருக்கும் கொள்கலனின் வடிவை அது எடுத்துக்கொள்கிறது.  தன்னைப்போன்ற பிற நீர்மங்களுடன் எளிதில் கலக்கிறது.  நீரின் உண்மையான கூறையும் ஆதாரமான நீர்மங்களையும் அது சுட்டுகிறது.  நம் உணர்ச்சிமேலிடும் வாழ்க்கை சிலசமயங்களில் நீருடன் ஒப்பிடப்படுகிறது.  பேராழியின் அடியாழங்களைக் கொண்டது நம் வாழ்வு; அதில் எழும் அலைகளைப் போல நம் உணர்ச்சிகள் ஊசலாடுகின்றன.  வாழ்வின் நீர் பற்றி, முடிவற்ற தாகத்தை தீர்க்கும் நீர் பற்றி யேசு விளக்கினார்.  ஆறு மட்பாண்டங்களில் இருந்த நீரை அருமையான திராட்சை ரசமாக யேசு மாற்றிய பிரபலமான கதை, உருமாற்றம் பற்றிய சிறந்த குறியீட்டுச் சிந்தனை.

நீருக்கு அடுத்தபடியாக நெருப்பைப் பார்ப்போமேயானால், இன்னும் அடர்வு குறைவான கூறை எதிர்கொள்கிறோம்.  நம் வாழ்வில் இன்றியமையாதது நெருப்பு.  கண்ணுக்குப் புலப்படும் மெழுகுச் சுடரையும் வானில் ஒளிரும் கதிரவனையும் தவிர, வெப்ப இயக்கவியல் எனும் ரசவாத நெருப்பில் மொத்தப் பிரபஞ்சமுமே உருமாற்றம் பெறுகிறது.  தன் வழியில் எதிர்ப்படும் எதையும் விழுங்கும் நெருப்பைப் போலவே நம் அடி மனமும் எல்லாவற்றையும் சுவைக்கும் ஆவலில் துடிக்கிறது.  அடி மனம் நனவிலியை விடாமல் நக்கி நனவு வடிவங்களை உருவாக்குகிறது.  உணவை செரித்துக்கொள்ள ஜடராக்கினியை நம் வயிற்றிலும் இதயபூர்வ அன்பெனும் தெய்வீக நெருப்பையும் நம்முள் வைத்திருக்கிறோம்.

வரிசையில் அடுத்து வருவது காற்று.  நீரில் வாழும் மீன்போலவே, காற்றென்னும் ஆழியில் நாம் நீந்திக்கொண்டிருக்கிறோம்.  நமக்கு வாழ்வளிக்கும் ப்ராணன் எனும் சுவாசத்தை அது சுமந்தலைகிறது.  நம் அக வாழ்வின் குறியீடே காற்று.  தொட்டுணர்வது அதன் பண்பு.  காற்றின் இந்த அடிப்படைப் பண்பை எல்லா இயற்கைக்கூறுகளும் கொண்டிருக்கின்றன.   மூக்கைத்தூண்டும் தொடுகை மணம், வாயில் உள்ள சுவைமொட்டுக்களை கிளர்த்துவது சுவை, விழித்திரையின் கம்பிகளையும் கூம்புகளையும் ஒளி தீண்டுவதே பார்வை.  செவிப்பறைகளை ஒலி அதிர்வுகள் தொடுவதே கேட்டல்.  தொடுகை அளவுக்கு பரந்துபட்ட வீச்சு வேறெந்தப் பண்புக்கும் இல்லை.  நம் உடற்பரப்பு முழுவதும் அதை உணர்கிறோம்.

காற்றைக் கடந்து விசும்பிற்குச் செல்லும்போது நாம் ஒரு மறைமெய்ம்மையில் நுழைகிறோம்.  உள்ளதும் இல்லதும் அது.  ஒரு வகையில் பொருட்கள் தனித்தனியாகவும் தனித்தன்மையோடும் திகழ அனுமதிக்கும் வெளி அது.  எல்லாம் ஒரே சமயத்தில் நிகழ்வதைத் தடுக்க நேரம் என்ற ஒன்றை இயற்கை ஏற்படுத்தியது போலவே, எல்லா பொருட்களும் ஒன்றாகத் திரண்டு பரிமாணமற்ற ஒற்றைப் புள்ளியாக ஆகிவிடாமல் தடுக்கிறது வெளி.  மிகல்சன் – மார்லி (Michelson-Morley) ஆய்வால் விசும்பு ஒரு இயற்கூறாகத் திகழ்கிறது என்பதை மெய்ப்பிக்க முடியாமல் போனது.  ஆயினும், வெளி என்ற ஒரு கருத்தமைவு இல்லாமல் நம்மால் பொருட்களை எல்லைக்குட்படுத்தி அவற்றை அடுத்தடுத்து வைத்து கண்கவர் ஒத்திசைவை உருவாக்க முடிவதில்லை.  அக உலகின் ஒலி ஒத்திசைவுகளின் ஒழுங்கமைவுக்கும் புற உலகின் அதிர்வுகளுக்குமிடையேயான இணைப்பை நாம் ஆகாயம் எனப்படும் விசும்பில் காண்கிறோம்.

நிலம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் வெளி இவற்றின் இயல் வெளிப்பாடுகள் எல்லாம் இயல்பான புற நிகழ்வுகளாகவே கருதப்படுகின்றன.  நாம் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதும், ஒருவரோடொருவர் பேசும்போதும் அதைக் கேட்கும்போதும், அன்புடன் அணைத்துக்கொள்ளும்போதும், வெறுப்புடன் தள்ளும்போதுமெல்லாம் புறவயமான ஒரு இயல் உலகுடன் நாம் உறவாடிக்கொண்டிருக்கிறோம் என்பதில் நமக்கெந்த ஐயமும் எழுவதில்லை.  ஆனால், அறிவியலை சிறிதளவே கற்போம் என்றால் இந்த வழமையான எண்ணங்கள் சடுதியில் குலைகின்றன.  இனிமையாகவும் கடுமையாகவும் ஒலிக்கும் நாம் கேட்பதாகக் கருதப்படும் பல்வகை ஒலியும் உண்மையில் நம் செவிப்பறைகளைத் தீண்டும் அதிர்வுகளுக்குக் கொடுக்கப்படும் விளக்கமாக நம் மூளையின் அகத்தே உருவாக்கப்படுவதுதான்.  ஆக, ஒலி அதிர்வை, மூளையின் உளவேதியியலுடனான அதன் குறுக்கீட்டை ஒதுக்கிவிட்டு, நம்மால் ஆராய முடியாது.   ஒலியின் இந்தப் பண்பு பிற நான்கு புலன்களுக்கும் பொருந்தும்.  எந்த வெளியில் வைத்து எல்லா பொருட்களையும் நாம் கண்டும் கேட்டும் உய்த்தறிகிறோமோ அந்த வெளியே நம் அகத்தால் உருவாக்கப்படுவதுதான்.  மொத்த நடவடிக்கையும், ஊகிக்க மட்டுமே முடிந்த ஒரு பிடிமானமில்லாத தளத்தில் அகம் உருவாக்கும் படிவங்களை மேன்மேலாக அடுக்கிக் கொள்வதே.  இது விவர்த்தம் எனப்படுகிறது.  பெரும்பாலான நிகழ்வுகளில் இந்த ஊகம் வெறும் உத்தேசம் மட்டுமே.

ஒவ்வொரு தனியனின் பிரத்யேகமான அகத்திற்குச் சொந்தமான நிகழ்வுகளின் அகவயத்தன்மையைத் தாண்டி, உலகம் என்று நாம் உணர்வதன் ஒருமை பற்றி வியக்கத்தக்க ஒரு பொதுமையான கருத்து உடன்பாடு உள்ளது.  நான் எதைப் பார்ப்பதாக நினைக்கிறேனோ அதை நீங்கள் பார்ப்பதுபோல் தோன்றுகிறது; இதனால் உலக செயல்முறைகள் எல்லாம் பாழாய்ப் போகாமல் காப்பாற்றப்படுகின்றன.  இந்தப் பொதுமையை விளக்குவதற்கு மெய்யியலாளர்கள் எல்லா தனியர்களின் மனமும் ‘சிந்திக்கும் பொருள்’ என்று ஸ்பினோசா குறிப்பிடும் பொருளால் ஆனது என்று கற்பித்துக்கொள்கிறார்கள்.

இயல்கடந்த மயிர்பிளக்கும் தருக்கத்தை கூறுபோடும் ஆய்வுகளுக்கு நம்மை இட்டுச் செல்லாமல் அறியப்படாததன் மீது பெருமதிப்பும் பக்தியும் தோற்றுவிக்கும் வியப்புணர்ச்சியை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் குரு.   அறியப்படாதது, வண்ணமயமான காட்சிகளாலும் களிப்பூட்டும் இன்னிசையாலும் விடாமல் நிரப்பப்படும் நம் நனவாகவே நம்மிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.  முழுமுதலை விளக்க இங்கே பயன்படுத்தப்படும் முதன்மைச் சொல், எண்ணவொண்ணா மதிப்புள்ள ஆழிக் கருவூலத்தைக் குறிக்கும், ஜலநிதி என்பது.  சங்கரரின் அத்வைதத்தை ஆதரித்தாலும், நாராயண குரு இந்த இடத்தில் முழுமுதல் பற்றி கூறும் கருத்து, புனித விழுமியங்கள் அனைத்தும் இருக்குமிடமான மீஉயர் இறை (Supreme) என்னும் ராமானுஜரின் கருத்துடன் பெரிதும் ஒத்துப்போகிறது.

அகத்தால் உணரப்படுவதும், அதே சமயம் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்படும் செயலால் புறத்தே இருப்பதாக கண்டுணரப்படுவதுமான ஐம்பூதங்களால் ஆன உலகத்தை, பிரபஞ்ச நனவின் புனிதமான ஆழிக் கருவூலத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாய் எழும் நனவு மாற்றங்களின் அலைகளின் தொடராகவே உணரவேண்டும்.  அத்தகைய இனங்காணல் மூலம் நம் ஆன்மீக அகத்தைத் தொடும் விவரிக்க இயலாத ஒரு கவித்துவ ரசனையை நாம் நிச்சயம் பெறுவோம்.

உலகைப் படைப்பதில் நமது பங்கு ஒன்றும் குறைவானது அல்ல.  இறையுடன் சேர்ந்த கூட்டுப் படைப்பாளிகள்தாம் நாமும்.  நாமில்லாமல் இவ்வுலகில் வண்ணமில்லை, ஒலியில்லை, நாமறிந்த புலன்சார் பண்புகளே இல்லை.  பொருளற்ற அசையா பிண்டமாகவே அது இருக்கும்.  ஆயினும், தனித்தனியாகப் பார்க்கும்போது நாம் ஒவ்வொருவரும் யாருமே அல்ல. நாம் அனைவரும் பங்கெடுக்கும் ஒரு கூட்டு நனவின் சாத்தியக்கூறு, அறியப்படாததும் அதே சமயம் அறியப்பட்ட ஒன்றேயாகவும் திகழ்வதன் மீது ஆழ்ந்த பெருமதிப்பும் பக்தியும் நிச்சயம் நம்மில் நிறையும்படிச்செய்யும்.

நாம் உணரும் உலகம் அளவிடமுடியா செழுமையின் விருந்து போன்றது.  சராசரி மனிதன் அதில் கண்டுணரக்கூடிய வடிவங்களையும், போற்றத்தக்க உருவங்களையும், அழகிய வண்ணங்களையும், அவனது தேவைகளை நிறைவுசெய்ய வற்றாமல் வழங்கப்படும் பொருட்களையும் காண்கிறான்.  உலகின் நிகழ்காலத்தைத் தவிர, கடந்தகாலம் பற்றிய நம் நினைவுகளையும் எதிர்காலம் பற்றிய நம் கற்பனைகளையும் நாம் அனுபவிக்கிறோம்.  இது உலகிற்கு ஆழமும் உயரமும் கொண்ட செங்குத்துத் தன்மையை கொடுக்கிறது.  நீங்கள் ஒரு கவிஞரென்றால் அதில் வாழ்வின் வளமான பொருளை விளங்கிக் கொள்வதற்குப் பயன்படும் முடிவில்லாத வகைகளிலான குறியீடுகளையும் உருவகங்களையும், கருத்துக்குறியீடுகளையும் (ideograms) காணலாம்.   இயற்கை வழங்கும் அகத்தூண்டலால் கிடைக்கும் பேசுபொருள்கள் எல்லாவற்றையும் ஓவியர்களால் வரைந்து தீர்த்துவிடமுடியாது. மெய்யியலாளர்கள் உலகின் மறைகாரணத்தையும் அதன் புனைந்துருவாக்க நோக்கத்தையும் அசைபோட்டு மாளாது.  அறிவியலாளனுக்கு ஒவ்வொரு அணுவும் ஆய்வுக்கான ஒரு சவால்தான்.  அவர்களுடயதேயான வியக்கத்தக்க மூளையின் உள்ளே கருத்தியல்ரீதியாக உருவாக்கப்படுவதைத் தவிர வெறெதையும் உணரவோ நிருபிக்கவோ யாரும் அவர்களது அகத்தை விட்டு வெளியே செல்வதில்லை என்பதே உண்மை.  இவ்வுண்மையை அங்கீகரிக்கும் சர் ஆர்தர் எடிங்டன், ‘இயற்பியலாளன் ஆராய்வது பகுத்தறிவின்பாற்பட்ட பொருளாக கருத்தியலாக்கப்படக்கூடியதையே அன்றி எந்த இயற்பொருளையும் அல்ல’ என்கிறார்.

நியூடோடினிய இயற்பியலில், பருப்பொருளின் மூலாதார உள்பொருட்களாக இருந்தவை, கடற்கரையில் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டும் அதைத்தாண்டி ஒன்றையொன்று மேலும் நெருங்காமலும் உதிரியாய் கிடக்கும் மணல்மணிகளைப் போன்று தன்னிச்சையும் சுயகண்காணிப்பும் கொண்ட அணுக்களே.  தாவோ ஆஃப் ஃபிசிக்ஸில் (The Tao of Physics) ஃப்ரிட்ஜாஃப் காப்ரா (Fritjof Capra) சொல்வது போல:

எல்லா இயற்பியல் நிகழ்வுகளும் நிகழ்ந்த செவ்வியல் யூக்ளிடியன் ஜியோமிதியின் முப்பரிமாண வெளியே நியூடோனிய பிரபஞ்சத்தின் நிலை. எப்போதும் இயக்கமில்லாமலும் மாறாததுமான முழுமுதல் வெளி அது.  “முழுமுதல் வெளி அதன் இயல்பான பண்பில், புறப்பொருள் எதனோடும் தொடர்பில்லாத நிலையில், எப்போதும் ஒன்றேபோலும் அசையாமலும் இருக்கிறது” என்கிறார் நியூட்டன்.  இயற்பியல் உலகில் நிகழும் மாற்றங்கள் எல்லாம், ‘நேரம்’ என்னும் தனிப்பட்ட பரிமாணத்தைக் கொண்டு விளக்கப்பட்டன.  அதுவும் (நேரமும்) முழுமுதலானது; பொருட்களாலான உலகுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இறந்த காலத்திலிருந்து நிகழ்காலம் வழியாக எதிர்காலத்திற்கு மென்மையாக ஓடிச் செல்வது, “முழுமுதலான, உண்மையான, கணிக்கப்படக்கூடிய நேரம் தன்னியல்பில் ஒருசீராக, புறப்பொருள் எதன் தாக்கமும் இல்லாமல், ஓடிக்கொண்டிருப்பது” என்கிறார் நியூட்டன்.

இன்று நமக்குக் கிடைக்கும் வடிவம், ஆவியான உப்பார்ந்த நீர்மத்தில் இருக்கும் அரைகுறையாக உருகிய உப்புப் படிகங்களைப் போல் இருக்கிறது; ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் இடையே எல்லைக்கோடு எதையும் வரைய முடியாது.

துணை-அணு நிலையில் (subatomic level) பருப்பொருளானது நிச்சயத்தனமையோடு குறிப்பிட்ட இடங்களில் இருப்பதில்லை.  மாறாக ‘இருப்பதற்கான விழைவை” காட்டுகிறது.  அணு நிகழ்வுகளும் நிச்சயத்தன்மையோடு, குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட முறைகளில் நிகழ்வதில்லை; ‘நிகழ்வதற்கான மனப்பாங்கை” காட்டுகின்றன.  ஆற்றல் அலைவீச்சுக் கோட்பாட்டின் (quantum theory)  விதிமுறையில் இப்போக்குகள் நிகழ்தகவுகளாகக் (probabilities) கூறப்படுகின்றன.  அலைகளின், வடிவம் பெறும் கணிதவியல் பண்புகளுடன் தொடர்புறுத்தப்படுகின்றன.  இதனாலேயே அணுக்கூறுகளால் அலைகளாகவும் இருக்கமுடிகிறது.  அவை, ஒலியலைகளை அல்லது நீரலைகளைப் போல ‘மெய்’யான முப்பரிமாண அலைகள் அல்ல.  அவை நிகழ்தகவுடைய அலைகள், குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் காணக்கிடைக்கும் அணுக்கூறுகளின் நிகழ்தகவுகளோடு தொடர்புறுத்தப்படும் அருவமான கணிதவியல் பண்புகள்.  அணுவியலின் எல்லா விதிகளும் இந்த நிகழ்தகவுகளின் அடிப்படையிலேயே கூறப்படுகின்றன.  ஒரு அணு நிகழ்வை நாம் ஒருபோதும் நிச்சயமாய் ஊகிக்க முடியாது; அது அப்படி நிகழக்கூடும் என்று மட்டுமே கூற முடியும்.

பருப்பொருளின் உள்ளமைப்புக்கு மட்டுமல்லாமல் பருப்பொருளுக்கும் நனவுக்கும் இடையேயான எல்லைக்கும் இது பொருந்தும்.  ஒவ்வொன்றும் அதுவாக இல்லாமல் வேறொன்றாக இருப்பதைப் போலுள்ளது.  அத்தகைய ஒருங்கிணைந்த மெய்யியல் அல்லது அறிவியல் வழியாக நம் கவனத்தை போற்றத்தக்க முழுமுதலை நோக்கி ஈர்க்கிறார் நாராயணகுரு.

வாழ்வில் நாம் செல்வதற்கென இரு முக்கிய பாதைகள் நம் முன்னே உள்ளன.  ஒன்று, நம் நனவைத்துறந்து நனவிலியின் கற்பனைக்கெட்டா ஆழத்திற்குள் செல்லலாம்.  ஒவ்வொரு இரவிலும் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் சிறிது நேரமாவது, முழுமையுடன் மீண்டும் இணையும் இன்பத்தைப் பெறுகிறோம்.  உண்மையில் இன்பம் என்ற சொல் பொருத்தமானதல்ல. ஏனெனில் அந்நிலையில் இன்பமும் இல்லை வலியும் இல்லை. இடையூறில்லா அமைதியே அந்நிலையின் தன்மை.  உறக்கம் என்பது அமைதியானது என்றால், மரணம் என்பது முடிவில்லா பேரமைதியாய் இருக்க வேண்டும்.  துரதிருஷ்டவசமாக, நாம் மரிப்பதற்கு அஞ்சுகிறோம்.  யோகிகள் மரணத்திற்கு மாற்று வைத்திருக்கிறார்கள்.  ஆழ் உறக்கத்தைப் போன்றதேயான ஒரு அழிவின்மையை நமக்கு உறுதிப்படுத்துகிறார்கள், ஒரு முக்கியமான வேறுபாட்டுடன். பருப்பொருளின் ஒட்டுமொத்த அசைவின்மைக்குள் செல்வது தூக்கம் என்றால், யோகியின் ஈடுபாடு ஆன்மாவின் மாறுதலுக்குட்படாத நனவின் எல்லையில்லா பரப்பில் நுழைவது எனலாம்.  உறக்கம், ஆன்மீக ஈடுபாடு இரண்டிலுமே உடலியல் செயற்பாடுகள் மிக மிகக் குறைவாகவே இருக்கும்.

உலகியல்சார் விருப்பு கொண்ட மக்களைப் பொறுத்தவரை, உறக்கமும் ஆன்மீக ஈடுபாடும் புற உலகு அளிக்கும் சாத்தியங்களுக்கு ஈடாகா.  விழிப்பு நிலையில் உள்ள உலகில் நடைபெறுபவை பெரிதும் கவர்ச்சிகரமான காட்சிகளையும், பல்வகைப்பட்ட இன்னிசை லயங்களையும் கொண்டவை.  நம் உலகில் நம்முடன் சேர்ந்து வாழ்வோருடன் நம்மால் தோழமை பாராட்ட முடியும்.  நம்மை வருத்துவதன் மீதும் ஆபத்தை விளைவிப்பதன் மீதும் விருப்பத்தை வளர்த்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

முதல் பாடலில் நாராயண குரு புற உலகிலும் அக மெய்ம்மையிலும் என எதிலும் திகழும் ஒரு அச்சுடன் (வார்ப்பு) முழுமுதல் இறையை ஒப்பிட்டு அதை நோக்கி திரும்பும்படி கூறினார்.  காரணமாகவோ விளைவாகவோ இல்லாததும், அதே சமயம் விளைவாகவே மாறும் காரணாமவும் எப்போதும் இருக்கும் இருமையற்ற அந்த மெய்ம்மையின் முன் விழுந்து வணங்கும்படி கூறினார்.  இரண்டாவது பாடலில் அதை நனவின் வெற்றிடத்தில் ஒளிரும் வான்புகழ் கதிரவனுடன் ஒப்பிட்டார்.  இந்தப் பாடலில், கணக்கிடமுடியா மதிப்புறு முழுமுதலிலுடைய கருவூலத்தின் ஆழத்திலிருந்து அதன் உருத்தோற்றமாய், ஒரு அலையாய் நாம் எழுந்து மீண்டும் முழுமுதலுடன் ஒன்றாகக் கலக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும் என்கிறார் குரு.

வாழ்வை, ஆழியில் எழுந்து பின் அதனுடன் மீண்டும் கலக்கும் அலைத்தொடராகக் காண்பது ஒருவனது மனதை அழகாலும், அமைதியாலும் மகிழ்ச்சியாலும் நிறைக்கும்.  உலகை இவ்விதம் பார்க்கவில்லையென்றால், பிறரெல்லாம் அச்சுறுத்தலின், பகைமையின் குறியீடுகளாக மாறிவிடுகின்றனர்.  ஒருமித்த பார்வை நம்மை நம் சகோதர சகோதரிகளின் காவலர்களாக ஆக்குகிறது.  நம் இதயங்கள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன; ஆன்மாக்கள் ஒன்று கலக்கின்றன.  நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிலும் ஒரு புதிய சாத்தியத்தை, இயல்கையை, புதிய நட்புக்கான பாதையைக் காண்கிறோம்.  இப்பாடலில், பிரிவு எனும் உணர்விலிருந்து நம்மை மீட்கும் தியானத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறார் குரு. அகத்திற்கும் பிறிதிற்கும் இடையே எந்த எல்லைக்கோடும் இனி இல்லை.  வியத்தகு ஆழிக் கருவூலத்தில் பெருமகிழ்ச்சியுடன் குதித்து நம்மை மூழ்கடித்துக் கொள்ளலாம்.

இருப்புசார் பிரக்ஞையாலான உலகம் மற்றும் ஆன்மீகத்தில் தோயும் உலகு என நமக்கு இரு பாதைகள் உள்ளன.  நாம் ஒன்றில் இல்லாவிட்டால் பிறிதொன்றில் இருக்கிறோம்.  இருப்பதும், அதே போல் இறப்பதும், அழகானவையே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s