அறம் (தர்மம்)

மனித வாழ்வுக்கு பெரிய அர்த்தம் எதுவும் இருக்கிறதா?  உள்ளதென்றால் அது என்ன?’ நம் காலத்தில் பொதுவாகக் கேட்கப்படும் கேள்வி இது.  சுற்றியுள்ளவர்களின் குடும்ப, சமூக, உலக வாழ்வை அவதானிக்கும் இளைஞர்கள் கேட்பது : ‘வளர்ந்து திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்து, குடும்பத்தைக் காப்பது மட்டுமே வாழ்வின் ஒரே நோக்கமாகுமா?’

‘அர்த்தம்’ என்றால் என்ன? அடித்துப் பறித்து, திருடி, வஞ்சனை செய்து ஏராளமாகப் பொருளீட்டி, வங்கியில் சேமித்து வைப்பது, வாழ்வின் அர்த்தமாகுமா?  மற்றவர்களுக்கு உதவுவதாகக் கூறி போலியாக சங்கங்கள் அமைத்து சமூகத்தைச் சுரண்டும் திறமையளிக்கும் படிப்பு, லட்சக்கணக்கில் பணத்தை லஞ்சமாகக் கொடுத்து வாங்கும் பட்டங்கள் – இவை வாழ்விற்கு அளிக்கும் பொருள் என்ன?  மருத்துவனாக, பொறியாளனாக, நிதிநிர்வாகியாக ஆகிவிட்டால் வாழ்வு பொருள் கொண்டதாகி விடுமா?  குடும்பத்தில் மன அமைதி கிட்டுமா?

தேசியம் என்ற பேரில் கட்சி பிரிந்து மக்களை தங்களுக்குள் அடித்துக்கொள்ளச் செய்து. பணம் செலவழித்தோ, அடாவடியாகவோ, சிறு சிறு பகுதிகளில் பிரதிநிதித்துவம் பெற்று, தேசியத்தை கலக்கி சில நாட்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி என்ற பெயரில் மக்களின் பிரதிநிதியாக அதிகாரத்தை கைப்பற்றுவதால் மனிதனுக்கு வாழ்வில் கிடைக்க வேண்டிய உன்னதமும் சிறப்பும் கிட்டிவிடுமா?  இவர்கள் தம் வாழ்வில் உண்மையையும், அறத்தையும், நீதியையும் மனமாரப் பின்பற்றி சான்றோனாக இருப்பதற்கு பதில், மக்கள் வியர்வையில் உண்டாகும் அரசு வருவாயை சுரண்டும் கல்நெஞ்சர்களாக தரங்கெட்டுப்போனது எதனால்?

இப்படி தர்மம் அழியும்போது தர்மத்தை நிலைநாட்ட தெய்வம் அவ்வப்போது அவதரிக்கும் என்று சொல்லிக் கேட்பதைத் தவிர, நீதியைக் காப்பாற்றுவதற்குத் தோன்றும் ஒரு சத்தியவானின் ஈனக்குரல் நம்முடைய காதுகளில் கேட்காதிருப்பது எதனால்?  இவ்வுலகைப் படைத்தவன் என்று ஒரு தெய்வம் உண்டோ?   உண்டென்றால், மனிதனின் கண்ணீரையும், வியர்வையையும், ரத்த ஆறுகளையும் கண்டு அத்தெய்வத்தின் கருணை தோன்றுமோ?  தோன்றுமென்றால் அவற்றிற்கு தீர்வு காணும் வழி தெய்வத்திலுண்டோ?  தெய்வத்தை வேண்டி தினமும் தோத்திரங்களும் பிரார்த்தனைகளும் செய்பவர்களிடமிருந்து மக்கள் பெறுவது என்ன?

பள்ளி, கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் மனிதனுக்கு உபயோகப்பட வேண்டுமென்பதற்காக வழங்கப்படும் படிப்பு சிறுவர் முதல் இளைஞர்கள் வரை அனைவரிடமும் அறிவும் பண்பாடும் பொறுப்பும் வளர்வதற்கு உதவாமல் போவது ஏன்?  தெய்வம் உண்மையில் இருக்கிறதென்றால் அவ்வுண்மையை நாம் எங்கே உணர்கிறோம்?  தெய்வம் சர்வ வல்லமையுடையதென்றால் அவ்வல்லமை பிரபஞ்சத்தில் நடைமுறையில் பூகம்பமாய், பிரளயமாய், வறட்சியாய், மருந்தில்லாத பெரும் நோய்களாய் மட்டுமேயல்லவா தோன்றுகிறது!  இதுவா தெய்வத்தின் சர்வ வல்லமை?  அவ்வல்லமையை அல்லாமல் வேறெதைக் கண்டு மனிதன் அஞ்சுவது?

மிருகங்களின் வாழ்வூக்கத்தை விட விரும்பத்தக்க ஒரு இச்சை மனிதனுக்குண்டென்றால், அதை காம இச்சையிலிருந்தும், பேராசையிலிருந்தும், பதவி மோகத்திலிருந்தும் வேறுபட்டதாக மனிதனால் ஏன்  மேம்படுத்திக்கொள்ள இயலவில்லை?  இதிலிருந்தெல்லாம் நமக்கு என்றாவது விடுதலை கிடைக்குமா?  மனித வாழ்வு தொடங்கிய காலம் முதல் இக்கேள்விகள் உண்டு.  இவற்றிற்கு அன்றும் இன்றும் பொருத்தப்பாடுமுண்டு.  இன்று இக்கேள்விகள் மேலும் தீவிரம் கொண்டு நம்மை அதிரச்செய்வதாய் உள்ளன. இந்திய ரிஷிகள் சொன்ன எல்லா பிரச்சினைகளும் ஆய்வுப்பொருள்களாய் தரம் பிரிக்கப்பட்டு நம்முன் வைக்கப்பட்டுள்ளன.

மதங்களிலும் சாத்திரங்களிலும், ஒவ்வொரு பிரச்சினைக்கும் மூலகாரணம் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிவதே முக்கியமான தேடலாய் இருக்கிறது.  இதையே நாம் காரண காரிய ஆய்வென்கிறோம்.

ஒரு பகுதியில் வாந்திபேதி காரணமாக சில மணி நேரத்திற்குள் பலர் இறந்தால் அதை கொள்ளைநோய் என்கிறோம்.  நோய்க்குக் காரணம் தொற்றுநோய் பரப்பும் கிருமிகள் என நாம் அறிவோம்.  காலராவும் பிளேகும் வந்து இறக்கிறார்கள்.  இத்தகைய மரணம் இருதய நோயால் வரும் மரணம் போன்றதல்ல.  மாரடைப்பு வந்து இறப்பது போன்றதல்ல சர்க்கரை வியாதியால் வரும் மரணம். ஆட்கொல்லி நோய்கள் மனிதரிடையில் பெருகுவதற்கு அவர்களது சமூக பழக்கவழக்கங்களே காரணம் என்பதை நாம் அறிவோம்.  அனோஃபிலிஸ் கொசுவால் மலேரியா உண்டாகிறது.  முறைதவறிய நடத்தையால் எய்ட்ஸ் வருகிறது.  இவ்வாறு ஒவ்வொன்றிற்கும் காரணம் என்ன என்பதைக் கண்டறிவதிலிருந்தே இந்தியர்களின் கல்வி தொடங்கியது.

எல்லாவற்றையும் நிலைநிறுத்தும் சக்தி எது?  மாவில் மாங்கனியும், தென்னையில் தெங்கும், நெற்பயிரில் நெல்மணியும் விளையும் சக்தி இருக்கிறது.  இதையே இந்தியர் தர்மம் என்றனர்.  ‘தரிப்பது’ தர்மம் எனப்படுகிறது.

நல்லதோ கெட்டதோ, எதற்கும் அடிப்படையில் ஒரு  அறம் இருக்க வேண்டும்.  எனவே, நம்மில், நம் வாழ்க்கைத் துணையில், நம் குழந்தைகளில் ஆரோக்கியமும் கேடும் உண்டாவதற்குக் காரணமான தர்மம் என்ன என்பதை நாம் ஆராய வேண்டும்.  அதைக் கண்டடையும்போது, தர்மத்தைக் காப்பாற்றவும் அதர்மத்தை அழிக்கவும் தேவையான நுண்ணறிவும் வாழ்வுத் திறனும் நமக்கு கிட்டும்.  இதனால்தான், ஒருவன் தன் வாழ்வில் தர்மத்தை அறிய இருபத்தி ஐந்து வருடங்களாவது ஒதுக்க வேண்டும் என பண்டைய இந்தியர் கருதினர்.  தர்மத்தின் வளர்சிதை மாற்றத்தை தெளிவாக அறிவதன் மூலம் இந்த அற தரிசனம் நமக்கு ஏற்படுகிறது.

மருத்துவன் நாடி பிடித்துப்பார்த்து மலேரியாவையும் டைஃபாய்டையும் கண்டறிவது போல தர்ம அதர்ம பெருக்கத்திற்கு தனித்தனி குணங்களுண்டு.   தர்மத்தின் வளர்சிதை மாற்றத்தைப் பற்றிப் பேசும்போது அதன் உள்ளுறையும் குணங்களென்ன என்பதைக் கூறலாம்.  இவ்வளர் சிதை மாற்றத்தில் அடுத்த படியாய் வருவது ‘ஸ்திதி’. அறத்திலிருந்து குணம், குணத்திலிருந்து  ஒரு பொருள் அல்லது ஒரு உயிரி அல்லது ஒரு தனியனுக்கு பிற்காலத்தில் வாழ்வதற்கான நிலைபேறு.  எக்காலத்திற்குமான நிலைபேற்றை வழங்கும் குணம் எதை மூலகாரணமாய்க் கொண்டு உண்டாகுமோ அது மட்டுமே என்றென்றைக்குமான தர்மம்.  (That which cannot be repeated forever is immortal, so says Immanuel Kant). அதற்கு எதிராக வருவது, முதலில் அறத்தை நம்பி தொடர்ந்து செல்லும்போது அதர்மத்தை முழுவதும் வளர்த்து, அதற்கு ஏவலாளாக ஆகிறவனையும், அவனது செயல்களையும் இவ்வுலகில் சாத்தியமற்றதாக்கி விடுவதாகும்.   தர்மம் தர்மத்தை காப்பாற்றுகிறது.  தர்மமே அதர்மத்தை அழிக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு விதமான பாரம்பரியம் உண்டு.  ஒன்று தாய்தந்தையரின் மரபணுக்களிலிருந்து உருமாற்றம் பெற்று வரும் அறமும் குணநலன்களும்.  மற்றொன்று உயிர் தோன்றிய காலம் முதல் அதன் பிரவாகத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் மரபணுக்கள் மூலம் கடத்தப்பட்டு, ஒவ்வொரு தனி மனிதனிலும் உறையும் தன்மை.  இவ்வாறு இரண்டு தனித்துவங்கள் உள்ளதால் தாய் தந்தையர் அல்லது அவர்க்குப்பின் வரும் மக்களுடைய இயல்பிலிருந்து பெறப்படுவதும் அதிலிருந்து வேறுபட்டதுமான ஒரு தனிமை ஒரு மனிதனுக்கு உண்டாகிறது. இதைப்பற்றி American Association for the Advancement of Science என்னும் நிறுவனத்தின் இதழில் ஒரு மரபணுவியலாளர், “மூளையில் ஒன்றுடன் ஒன்று கலந்தும் புணர்ந்தும் ஆளுமையை கட்டமைக்கும் அடிப்படை தந்துக்கள் (strands) சில குரோமோசோம்களுடன் வருவதில்லை. அது ஒரு மூன்றாம் கட்சியின் கட்டமைப்பு” என்கிறார். அதற்கு பல எடுத்துக்காட்டுகளும் தருகிறார்.

ஒரே வீட்டிலுள்ள உடன் பிறந்தவர்களில் ஒருவன் படிப்பில் அக்கறை காட்டி புத்திசாலியாய் பாடங்களைக் கற்கும்போது, மற்றொருவன் காலை எழுவதிலிருந்து தினப்படி வேலைகள் வரை எதிலும் நாட்டமில்லாமல் எங்கோ சுருண்டு கிடக்கிறான்.  ஒன்று அவன் உடல் நலக் குறைவுள்ளவன் அல்லது அவனது பெற்றோர் எதிர்பார்க்கும் அறம் அவனிடம் இல்லை என்று அறியவேண்டும்.  நமக்கு அதற்கெல்லாம் நேரமிருப்பதில்லை. குழந்தைகள் அவர்களது முன் தலைமுறையில் யாரோ ஒருவரிடமிருந்து கொண்டுவரும் மரபணு மூலம் வரும் விதியால் நடத்தப்பட்டு, வாழ்வெனும் பெரும்பாரத்தை இழுத்துக்கொண்டு சென்று, ஒரு பெரும் சிக்கலின் முன் நிற்கிறார்கள்.

வளர்ந்த நாடுகளில் அவ்வாறிருக்கும் குழந்தையை பாதித்திருக்கும் அசிரத்தை அல்லது அறப்பிறழ்வைக் கண்டறிந்து தேவையான உதவிகளைச் செய்வதற்கான அமைப்புகள் உள்ளன.  குழந்தை வளரவும் மலரவும் வழிவகுக்கும் படிப்பை மேற்கொள்வதற்கு விளையாட்டுப் பள்ளி முதல் தொழில்நுட்ப/பட்டப்படிப்பு கல்லூரிகள் வரையிலான நிறுவனங்கள் இருக்கின்றன. உருமாறிப் போன தர்மத்தை அறிவியல்பூர்வமாய் ஆராய்ந்து, மனக்குழப்பங்களிலிருந்து இளைய தலைமுறையைக் காப்பாற்றத் தேவையான படிப்புகள் அங்குண்டு.

நம் நாட்டுக் குழந்தைகளின் நிலைமை கொடுமையானது.  பெற்றோர் கவனத்தில் படாமல் இருக்கவேண்டும்; அவர்களைத் தவிர்க்க வேண்டும்; பள்ளிவிட்டு ஓடிப்போக வேண்டும் என்றெல்லாம் எண்ணுகின்றனர்.  தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றனர். கள்ளோ கஞ்சாவோ குடித்துவிட்டு தலைசுற்றி விழத் தலைப்படுகின்றனர். தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வதில் இன்பம் காணும் masochist-ஆகவோ, பிறரைத் துன்புறுத்தி மகிழும்   sadist-ஆகவோ மாறுகின்றனர்.

இது அதர்மத்தின் பெருக்கால் மட்டும் வருவதில்லை.  தன் மனமறியும், தனக்கே உரித்தான அற தரிசனத்தை பெற்றோரோ, ஆசிரியரோ, பிறரோ அறிவதில்லை எனும்போது அவனது அசாதாரணமான அறதரிசனம் ஒருவனை தவிப்பில் ஆழ்த்திவிடும்.  அவனும் சங்கம்புழையைப் போல,

“கபட உலகத்தில் நேர்மையான
நெஞ்சம் கொண்டிருப்பதுவே என் தோல்வி”

என்று பாடுவான்.

இவ்வளவு கடினமான ஒரு சூழலில்தான் மனிதனின் ஆளுமை மலர்வதற்கான தன்னறம் குறிக்கப்பட்டிருக்கிறது..

தாய்ப்பால் பருகும் காலம் தொட்டே குழந்தை ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.  எது தேவை எது தேவையில்லை என்று தேர்வதற்கான உரிமை அதற்குண்டு. அது தனக்குத் தானே எஜமானன்.  இருந்தும் அப்பருவம் முதலே பெற்றோரும் பிறரும் குழந்தையின் நியாயமான தேர்வை ஒதுக்குகின்றனர்.  அது விரும்பாததை அதன்மீது திணிக்கின்றனர். இவ்வாறாக, நம் நாட்டில் நூற்றில் தொண்ணூறு பேர் தொடக்கம் முதலே தன்னறத்திலிருந்து அன்னியப்படுத்தப்படுகின்றனர். இப்பெரும் துரோகத்தின் பலன்தான் நாம் தற்போது அனுபவிக்கும் வாழ்வின் அர்த்தமின்மை!

‘விடுதலைக்கான சமூகவியல்’ (ஒரு விமோசன சாமூஹ்ய ஶாஸ்த்ரம்)  என்னும் நூலில் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் வாழ்க்கைப் பேறுகளைப் (புருஷார்த்தங்களை) பற்றிப் பேசுகிறார் குரு.  அதில் “தர்மம் – நம் வாழ்க்கைமுறை நமக்குப் பொருத்தமானதுதானா? ” என்னும் தலைப்பிலான கட்டுரை.

One thought on “அறம் (தர்மம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s