சில மணி நேரங்களுக்குமுன் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததை நினைத்துப் பாருங்கள். அப்போது நனவென்ற ஒன்று இருக்கவில்லை. இதை உலகம் முழுவதும் இருளில் மூழ்குவதோடு ஒப்பிடலாம். விடியலில் பொருட்கள் சிறிதுசிறிதாக துலங்கத் தொடங்குகின்றன. அதைப்போல, உங்கள் உள் உறையும் ஆழ்நனவிலி மெதுவாக நகர்ந்து, நனவின் தெளிவற்ற விழிப்புநிலை ஏற்படுகிறது. அவ்விழிப்பு தீவிரமடையும்போது ‘இது காலையா? இப்போது மணி என்ன? இன்று என்ன செய்யப்போகிறேன்?’ என கேள்விகள் தோன்றுகின்றன. உங்கள் மனதில் கேள்விகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன. நனவின் இந்த உசாவும் பண்பு ‘மனம்’ (மனஸ்) எனப்படுகிறது.
வேதாந்திகளை பொறுத்தமட்டில், விழித்திருக்கும் நனவில் நான்கு வகைகள் உண்டு. முதலாவது, நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்திற்கும் பொருள் தர முயலும் இந்த உசாவும் பண்பு. புலன் பதிவுகளும், தொடர்பற்ற கருத்துக்களும் ஏற்கனவே அறிந்தவற்றுடன் தொடர்புறுத்தப்பட்டு பொருள் பெறுகின்றன. ஒரு புதிய மனப்பதிவோ அல்லது கருத்தோ, ஏற்கனவே உணரப்பட்ட சூழல்களுடன் பொருத்திப் பார்க்கப்படுகிறது. இவ்வாறாக ஒரு மரபார்ந்த பொருத்தப்பாடு அளிக்கப்படும்போது, அது உங்கள் புரிதல் சட்டகத்தில் ஓரிடம் பெறுகிறது. இதைச் செய்வதற்கு, உங்கள் புலன்களை அல்லது மனதை எதிர்கொள்பனவற்றோடு தொடர்புடைய நினைவுகளை நீங்கள் மீட்டெடுக்கின்றீர்கள். நினைவை மீட்டெடுக்கப் பயன்படும் இப்புலம் ‘சித்தம்’ எனப்படுகிறது. இது நனவின் இரண்டாம் வகை.
பொருத்தமான நினைவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபின் அவை நிகழ் பதிவின்/எண்ணத்தின் தன்மையை முடிவு செய்ய பயன்படுகின்றன. மூன்றாம் வகை நனவு எழுவாயை பயனிலையாக்கப் பயன்படும் புலம். இது ‘புத்தி’ எனப்படுகிறது.
புதிய தூண்டலின் மீதான உங்கள் மதிப்பை தீரிமானிக்கும் வரை ஒரு ஆர்வமடங்கா நிலையில் இருக்கின்றீர்கள். அதன் தன்மை முடிவானதும் ஒன்று திருப்தி அடைகின்றீர்கள், இல்லையெனில் அவதிக்குள்ளாகின்றீர்கள். இந்த உணர்ச்சி உங்கள் தனித்தன்மையை பல வகைகளில் பாதிக்கிறது. ‘அஹங்காரம்’ என்னும் தன் முனைப்பின் உணர்ச்சியே நான்காவது வகை நனவு. ‘அஹம்’ என்றால் ‘நான்’. வலியாலும், இன்பத்தாலும், இரண்டையும் பொருட்படுத்தாத தன்மையாலும் பாதிக்கப்படும், உங்கள் உள்ளுறையும் ‘நான்’ எனும் மைய நனவுடன் உங்கள் சொந்த அனுபவங்களை பொருத்திப் பார்க்கின்றீர்கள். இதனால், மனப்பதிவின் ஓரலகு, உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உடையது என்பதைப் பொறுத்து, சடுதியில் மாற்றத்திற்குள்ளாகிறது. மனம், சித்தம், புத்தி, அஹங்காரம் என்ற நான்கும் ஒட்டுமொத்தமாக ‘கரணம்’ (உள ஆற்றல்) எனப்படுகிறது.
உசாவுதல், மீட்டெடுத்தல், காரணகாரிய ஆராய்ச்சி, பாதிப்புக்குள்ளாதல் ஆகியவை நிகழ்ந்த பின் சூழலுக்கு எதிர்வினையாற்றும் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் செல்கின்றீர்கள். இதற்கு உங்கள் அவதானிப்பு, செயல்படல் எனும் உறுப்புகள் தேவைப்படுகின்றன. புலன்கள், உடல் மற்றும் மனம் ஆகிய எல்லாம் கலந்தபின் முழுமைச் செயல்பாடாகிறது. இது உங்கள் வாழ்வின் குறிப்பிட்ட அத்தருணத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதன்மை இச்சை, செயலூக்கம் அல்லது ஆர்வத்தால் கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு ‘செயல்-செயலின்மை’ தொகுதியிலும் ஆர்வத்தின் முழுமை அடங்கியிருக்கிறது. ஒரு ஆர்வம் நிறைவேறியபின் அல்லது குலைந்தபின் உங்கள் மனம் பிறிதொன்றை நாடிச் செல்கிறது. இப்படி, தொடர்ந்து நீங்கள் ஒரு ஆர்வத்திலிருந்து இன்னொன்றை நோக்கி போய்க்கொண்டே இருக்கின்றீர்கள். நனவிலியின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் இயல்பான இச்சைகள் விழிப்புறும்போது. இந்த ஆர்வங்கள் பாய்ந்தெழுகின்றன.
சூரியனாலோ, பிற ஒளியாலோ புற உலகம் உங்கள் கண்களுக்குப் புலப்படுத்தப்படுகிறது. நீங்கள் காணும் அனைத்து உருவங்களும்/பிம்பங்களும் ஒளியின் உருமாற்றங்களே. அதேபோல், இவ்வுருவங்களையும் பிற உளப்பதிவுகளையும் உணர, உங்கள் உள் உறையும் ஒர் ஒளி இருக்க வேண்டும். எப்படி கட்புலனுருவங்கள் ஒளியின் உருமாற்றம் எனப்படுகின்றனவோ, ‘பிறர்’ எனவும், பொருட்கள் எனவும், ஆர்வங்கள் எனவும் நீங்கள் உணர்வதெல்லாம் உங்கள் நனவின் உருமாற்றங்களே.
உங்கள் உள் உறையும் இச்சைகளையும், மறைந்திருக்கும் மனப்பாங்குகளையும், ஏன் அடிப்படை செயலூக்கத்தையுமே கண்டறிய நீங்கள் இப்பாடலை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களது புலன்கள் எண்ணிலடங்கா தூண்டல்களால் தாக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. அவற்றுள் மிகச்சிலவற்றை மட்டுமே நனவால் அடையாளம் கண்டு, பொருள்தரக்கூடிய அமைப்புகளாய் வகைப்படுத்த முடியும். ஒரே சமயத்தில் பலவற்றை கவனிக்கும் திறன் நம் மனங்களுக்கு இல்லை. பொதுவாக, ஒரு சமயத்தில் ஏதோ ஒன்று மட்டுமே நம் ஆர்வத்துடன் உறவாடுகிறது. ஒவ்வொன்றையும் எதிர்கொள்ளும்போது, சூழலின் மையப்புள்ளியிலிருந்து விலகியிருக்க கற்றுக்கொண்டீர்களேயானால், வினையையோ எதிர்வினையையோ தூண்டும் ஆர்வத்தை நீங்கள் மனதில் குறித்துகொள்ள முடியும். உங்கள் மனதில் மறைந்துள்ள செயல் நோக்கங்களையும் தந்திரங்களையும் கண்டறிவது ஆர்வமூட்டும்/அறிவூட்டும் செயல். விழிப்புடன் தேர்வு செய்யும் உங்கள் திறன் மீது நனவிலியாகச் செயல்படும் மனச்சாய்வுகளின் பிடியை தளர்த்த இது உதவும். நினைவுகளை மீட்டெடுக்கும்போது தோன்றும் தொடர்புடைய எண்ணங்களின் சங்கிலி உங்களை அரித்தழிக்கும் குழந்தைப்பருவ அதிர்ச்சிகள் பலவற்றையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரக்கூடும். அசைக்கமுடியாத, அடக்கமுடியாத ஆற்றலுடன் மீண்டும் மீண்டும் ஒரு கவர்ச்சியோ, ஆர்வமோ எதிர்ப்படும் என்றால், அதுவே உங்கள் முக்கிய செயலூக்கம் என்பதை நீங்கள் அடையாளம் காணலாம்.
உங்கள் அடிப்படை செயலூக்கம் உங்களது ‘வாசனை’களின், முதிரா இளம் நினைவுகள் கொண்ட கருப்பையின் முக்கிய பண்புகளை வெளிப்படுத்துகிறது. ‘சம்ஸ்காரங்கள்” எனப்படும் தொகுக்கப்பட்ட நினைவுகளின் சாரங்களே ‘வாசனை’கள் எனப்படுகின்றன. சம்ஸ்காரம் என்பது பதப்படுத்தப்பட்ட, பண்பட்ட ஒரு உளப்பதிவு. வாழ்வில் பின்னெப்போதும் உங்களோடு தங்கி விடுவது அது. John Locke கருதியது போல நீங்கள் பிறக்கும்போது எழுதப்படாத கரும்பலகையாக பிறப்பதில்லை. மரபியலாளர் கூற்றுப்படி, நம் குரோமோசோம்களில் சுமக்கப்படும் பல மரபுக்கூறுகளே நம் வாழ்விற்கான முன்வரைவாகிறது (blue-print). சம்ஸ்கிருதத்தில் இவை ‘வாசனா’ எனப்படுகின்றன. வாசனை எனும் இந்தியக் கருத்து, மரபியலாளர் முன்வைக்கும் கருத்தைவிட சிக்கலானது. வாசனை என்பது, உளவியலாளர் கூறும் உள்ளுணர்வோடு ஓரளவு ஒப்பிட்டுக் கூறத்தக்கது. நாம் ஒவ்வொருவரும் நம் பெற்றோரிடமிருந்து ஒரு உடலையும், முற்பிறப்பிலிருந்து முன்வரையறை செய்யப்பட்ட (pre-conditioned) ஒரு ஆன்மாவையும் பெறுகிறோம் என ரிஷிகள் நம்புகின்றனர். எனவே, மனப்பாங்குகள், உளநோய்கள், உடற்குறைகள் போன்ற பல வாசனைகள் பெற்றோர்களிடமுள்ளதையும், முற்பிறப்பின் சம்ஸ்காரங்களையும் -பதப்படுத்தப்பட்ட உளப்பதிவுகளையும் ஒத்திருக்கின்றன. மரபணுக்கூறும், காரணகாரிய நனவும் நிகழ் ஆளுமையின் அடித்தளமாகின்றன. மரபியல் ரீதியாக, ஒருவரது மரபுத்தொடர்ச்சி பல கோடி ஆண்டுகள் பழமையானது. உளவியல் ரீதியாக மரபுத்தொடர்ச்சி காலமற்றது. இப்பாடலில் வானத்திற்கப்பால் ஒளிரும் கதிரவனாக குறிப்பால் உணர்த்தப்படும், ‘சம்வித்’ எனும் பிரபஞ்ச நனவின் பிரிக்க முடியாத பகுதி அது.
தனியனின் சொந்த அனுபவம் பிரபஞ்ச நிகழ்வாக உருமாற்றம் பெறுவதை இப்பாடலில் தோன்றச் செய்கிறார் நாராயண குரு. அவரது ‘தர்சனமாலா’ எனும் நூலின் முதல் பாடலுடன் இதை வாசிக்கும்போது அவரது குறிக்கோள் தெளிவாகிறது:
ஆதியில் எதுவும் இல்லாமலிருந்தது
கனவாலும் தன் விருப்பாலும்
எல்லாவற்றையும் படைத்தான் அவன்
இங்கே, பிரபஞ்ச உருவெளிப்பாட்டை தெய்வ மனத்தின் உள்ளுறையும் ஆற்றலாகக் கூறுகிறார். தன் ‘தர்சனமாலா’வில் இறையியலையும் பிரபஞ்சவியலையும் இணைக்கும் நாராயணகுரு இப்பாடலில் பிரபஞ்சவியலை உளவியலோடு பொருத்துகிறார்.
இப்பாடலின் தொடக்கத்தில் வரும் உள ஆற்றலின் தோற்றத்தை ஆராய்ந்தால், அது இயற்கை அமைப்பின் அடித்தளத்தில் தன் மூலப்படிவத்தை கொண்டிருப்பதைக் காணலாம். பிரபஞ்சப் பரிணாமம் என்று நாம் சொல்வதில், தற்செயல் நிகழ்வுகளால் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உயிரிகள் தோன்றின எனக்கருதாமல், பிரபஞ்ச விவேகம் ஒன்று செயல்படுவதைக் காண்கிறார் நாராயண குரு. தேடலுடையவன், முதலிரு வரிகளில் சொன்னவற்றை, ஒளியாய் பிரகாசிப்பதும் அனைத்தும் உருப்பெறத்தேவையான சாரத்தை வழங்குவதுமான ஒரு பிரபஞ்சக் கொள்கையின் கூறுகளாகப் பார்க்கவேண்டும் என மூன்றாவது நான்காவது வரிகளில் கூறுகிறார்.
முதல் பாடலில் ‘கரு’ எனப்பட்டது இங்கே ‘பானுமான்’ எனப்படுகிறது. ஒளிரும்/ பிரகாசமான எனப்பொருள் தரும் ‘பான்’ எனும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றுவது ‘பானுமான்’ (கதிரவன்). ‘பானம்’ எனும் சொல் ‘ஒளி’, ‘அறிவு’ என்ற இரு பொருள்களையும் தருவது. புனித ஜானின் நற்செய்தியில் ‘சொல்’ கடவுளுக்கு சமமானதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள உருத்தோற்றம் கொண்ட அனைத்திற்கும் பொருள்-செயல் காரணமாக அமைவது சொல் எனப்படுகிறது. பிரபஞ்சத்தின் விவேக அமைப்பையும் (scheme), பிரபஞ்சத்தில் காணப்படும் எண்ணிலடங்கா வடிவங்களாய் விரித்தெடுக்கக் கூடிய புறநிலை மெய்ம்மையையும் தன்னுள் கொண்ட மூலமுதல் காரணமென்னும் கோட்பாட்டை குருவும் பயன்படுத்துகிறார். இறையியல் சுட்டும் கடவுளை அவர் சுட்டுவதில்லை என்பதுதான் வேறுபாடு. அதற்கு பதிலாக, தங்கள் விகசிப்பிற்குத் தேவையான ஒரே மாதிரியான பாங்கும் அடவும் (pattern or design) கொண்ட ஒரு பிரபஞ்சவியலையும் ஒரு உளவியலையும் உள்ளடக்கிய முழுமுற்றான கொள்கை ஒன்றை அவர் கைக்கொள்கிறார். ஒவ்வொரு பாடலிலும் கொடுக்கப்படும் வழிகாட்டுதலின் நுண் விவரங்களைப் புரிந்துகொள்ள் மாணவன் தளர்வில்லாமல் சிந்திக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார் குரு.
உள ஆற்றல் என்பது மனம், நினைவு, அறிவாற்றல், தன்முனைப்பு ஆகிய நான்கன் தொகுதியைக் கொண்டது என்பதை ஏற்கனவே கண்டோம். வானிற்கப்பால் ஒளிரும் கதிரவனின் அருட்பண்புருவாய் இவற்றைக் கொள்வோமேயானால், முதலில் நாம் ‘கதிரவன்’, ‘வானம்’, ‘அப்பால்’ எனும் இவற்றின் பொருளை அறுதியிட்டுக்கொள்ள வேண்டும். மலையாள மூலத்தில், சொல்வரிசையில் முதலில் வருவது ‘பர’ என்பது. இதை ‘அப்பால்’ என்று நாம் மொழிபெயர்க்கிறோம். தனியாகப் பார்த்தால், ‘பிற’ என்றும் ‘அப்பால்’ என்றும் பொருள் தரும் இச்சொல், மீஉயர், மீச்சிறப்பு, மீப்பெரு, முழுமுதல் என்பனவற்றைக் குறிக்கும் ‘பரம்’ எனும் பொருளிலும் பயன்படுத்தப்படும். வானம் என்று பெயர்க்கப்பட்ட ‘வெளி’, ‘திறந்த வெளி’யையும் குறிக்கும். பரு வடிவக் கதிரவனை நாம் காணும் வானம் ஒரு மூடப்பட்ட அமைப்பு. ஆனால் ‘வானம்‘, ‘வெளி’ என குரு குறிப்பிடுவது ‘எல்லையிலி’யை; ‘திறந்தவெளி’யை; முழுமுதலையும் அது ஒளிரும் வெளியையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்தறிய முடியாத வெளியில்லா வெளியை. அவ்வெளி, விளைவிக்கப்பட்ட வெளியல்ல; புறவெளியை விளைவிக்கும் வெளி. நம் மனம், நினைவு, அறிவாற்றல், தன்முனைப்பு இவற்றின் இறுதி வெளிப்பாட்டை இப்பொருட் காரணத்தில் வைத்தே காண வேண்டும்.
உண்மையில் இருப்பதை (actual) தெளிந்தறிவதைப் போல இயல்திறத்தை (potential) அறியமுடியாது. ஒரு மரபணுவைப் பார்த்து அது கருவண்டாகப் போகிறதா, பார்லி பருப்பாகப் போகிறதா அல்லது கட்டுறுதியான நீர்யானையாகப் போகிறதா? என்று சொல்லிவிடமுடியாது. அதைப்போன்றே எல்லா உளவியல் தோற்றப்பாடுகளுக்கும் முதற்காரணமாய் அமையும் மனமும் தெளிந்தறிய முடியா ஒன்று.
நினைவு குறித்து சொல்வதென்றால், ஒரு படிகம் தன் வடிவியல் அமைப்பை மறப்பதில்லை. பல்லாயிரம் முறை அதை கரைத்து மறுவளர்ப்பு (re-culture) செய்தாலும் அது தன் முந்தைய வடிவத்தையே எடுத்துக்கொள்கிறது. பிரபஞ்ச உருத்தோற்ற அமைப்பில் மீள் நிகழ்வுகள், ஏற்கனவே நிகழ்ந்த இயற்பியல் -வேதியியல் உருமாற்றங்களின் மொத்த வரிசையும் அனைத்தினுள்ளும் உறையும் நினைவு என்பதையே காட்டுகிறது. வண்ணத்துப் பூச்சியின் சிறகிலுள்ள வடிவம், அது மீண்டும் மீண்டும் எந்தப் புழுவிலிருந்து வெளிவருகிறதோ அப்புழுவின் மரபணு அமைப்பைச் சார்ந்ததாகவே இருக்கும். இதைப் போன்றே மனிதமனமும் இயற்கையைச் சார்ந்ததே. ஆக, நம்மில் செயல்படும் நினைவு, ஈட்டிய செய்முறை நுண்ணறிவென்னும் (acquired know-how) பிரபஞ்சக் கொள்கையின் தொடர்ச்சியே.
உறுதியான முடிவுகள் எடுத்தல் எனும் சிக்கலை அறிவாற்றல் எதிர்கொள்கிறது. இயற்கையின் விதிகள் தவிர்க்கப்பட முடியாதவை. அவை மிகத்துல்லியமானவை. மனித விவேகத்தில் நாம் காணும் உறுதியின்மையும் பலதரப்பட்ட செயல்பாடும், அதி சிறப்பானதை சிறப்பில்லாததைக் கொண்டு விளக்க முடியாத நம் நெறிமுறையில் உள்ள போதாமைகளைக் காட்டுகின்றன. உயிர்வேதியியல், இயற்பியல்-வேதியியல், உளவியல்-இயற்பியல் தளங்களின் கீழ் படிநிலைகளில் செயல்படும் விவேகம் முன்வரையறை செய்யப்பட்ட தன்மையுடையது. ஒரு உயர்நிலையில் சுயேச்சை காரணி எழுகிறது. மனித மனத்தின் சுவாதீனமான வெளிப்பாட்டை, இயற்கையின் இறுதி விரிவின் சாரமாகவும், கழிவாகவும் பார்க்கவேண்டும். நாம் இங்கே குறிப்பிடுவது கீழ் இயற்கையை (infra-nature) அல்ல; மீஇயற்கையையும் (meta-nature) மேல் இயற்கையையும் (supra-nature) தன் கூறுகளாகக் கொண்ட பிரபஞ்ச இயற்கையை.
புலன்களிலிருந்து வரும் தரவுகளை வடிவமைப்பதை, ஒரு தனியனின் ஆர்வம் எப்படி முடிவுசெய்கிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். செல் பிளவை முடிவு செய்வதிலும், கருவிலிருந்து முதிர் மனிதனாக வளர்வதை நடத்திச் செல்வதிலும் ஒரு வழிவகை உள்ளது. இவ்வழிவகையின்றி எதுவும் உருப்பெற முடியாது. அதுவே ஒரு மனிதனின் தன்முனைப்பாக தொடர்கிறது. ‘கரணம்’ எனும் உள ஆற்றலை, இப்பிரபஞ்சமாக உருமாற்றம் பெற்ற ஆதிமுதல் ஒளியின் அருட்பண்பாகக் காணவேண்டும். மெய்ப்பொருளியல் (ontological) ரீதியாக பிரபஞ்சப் பொதுமையும், இயல்திட்டவாத (teleological) ரீதியாக நோக்கம் ஒன்றையும் கொண்ட ஒரு விவேகம் பிரபஞ்ச உருமாற்றத்தில் இருப்பதாக ஒப்புக்கொள்ளாத பரிணாமவியல் தோன்றியபின் ‘பரிணாமம்’ என்ற சொல்லின் கருத்தெல்லைகள் சுருங்கிவிட்டதை நாம் அறிந்தேயிருக்கிறோம். ஆதலால், ‘பரிணாம வளர்ச்சி’ என்பதற்கு பதிலாக ‘உருமாற்றம்’ என்ற சொல்லையே நாம் பயன்படுத்துகிறோம்.