‘அறிவிலுமேறியறிஞ்ஞிடுன்னவன்’ (செயலறிவையும் கடந்து அறிபவன்) என்று தொடங்குகிறது முதல் பாடல். செயலறிவு என்பது ஒன்றை சொந்த அனுபவம் மூலமோ நேரடிப் புலனுணர்வு மூலமோ அறிவது. உங்களது விழிப்புணர்வு ஒரு நனவோடை போல உங்களில் கடந்து செல்வதை கவனியுங்கள். உங்களை அறிபவனாக இனம் காணுங்கள். உதாரணமாக, “நான் அறிகிறேன்; நானே அறிபவன்” என்று சொல்லும்போது, உங்களில் உள்ள ‘நான்’ என்பதும் நீங்கள் அறியும் பொருளும் சேர்ந்ததே நீங்கள் என்பதை உணருங்கள்.
இதைப் படிக்கும்போதே, இங்கு எழுதப்பட்டுள்ளதன் பொருளை உங்கள் நனவு எப்படி ஊடுருவுகிறது என்பதை அவதானியுங்கள். ஓரறைக்குள் நுழையும்போதே அதில் உள்ள அனைத்துப் பொருட்களையும் நீங்கள் அறிவதற்கு ஒப்பானது இது. அதேபோல், சொல்லின் உள்ளடக்கத்திற்குள் நுழைந்து அது தரும் கருத்தை நீங்கள் அறிகின்றீர்கள். ஒரு பொருளை நீங்கள் பார்க்கும்போது அதன் வடிவை மட்டும் நீங்கள் காண்பதில்லை. அதன் சாரத்திற்குள் செல்கிறீர்கள்; உங்களது நனவு அடையும் மாற்றமாகவும் அதை அறிகின்றீர்கள்.
ஆங்கிலத்தில் ‘experience’ என்ற சொல் அறிபவனுக்கும் அறிபொருளுக்கும் இடையே நிகழ்வதையே சுட்டி நிற்கிறது. சமஸ்கிருதத்தில் ‘அனுபவ’ என்ற சொல் ‘அதுவாதல்’ என்ற பொருளைத் தருகிறது. அறிபவனுக்கும் அறிபொருளுக்கும் இடையே நிகழ்வதல்ல; அறிபவனின் உருமாற்றம் அது. அறிபவனான நீங்கள் அக்கணத்தின் நனவை அறிபொருளாகவே மாற்றுகின்றீர்கள். இந்நிகழ்வில், அனுபவம் என்பதை அறிபவனில் நிகழும் மாற்றம் என்றே கொள்ள வேண்டும்.
அறிவதில் ஒரு நிலை உண்டு. அறிபவனாக உங்களது அந்தரங்க ஈடுபாட்டை நீங்கள் உணராத நிலை அது. முற்றாக நீங்கள் ஒரு அனுபவத்தில் ஈடுபடும்போது நீங்கள் உங்களைப் பற்றி நினைப்பதில்லை. உங்கள் மனநிலை பற்றி நீங்கள் சிந்திக்கும்போதும் அதைப்பற்றி பிறருக்கு சொல்லும்போதும் மட்டுமே, “நான் அறிகிறேன், நான் மகிழ்கிறேன்” என்ற எண்ணங்கள் தோன்றுகின்றன. இது இல்லாதபோது, வெறும் அறிதல் மட்டுமே நிகழ்கிறது. நம் எண்ணங்கள் மொழி வடிவம் பெறும்போதுதான் எண்ணங்களுக்கும் பொருட்களுக்கும் இடையே வேறுபாடுகள் தோன்றுகின்றன. உதாரணமாக, மரமொன்றில் ஒரு பறவையைப் பார்க்கும்போது, ‘அங்கே உள்ள’ பறவை ஒன்றைப் பார்ப்பதன்றி, உங்கள் தலைக்குள் நிகழும் அறிதலாக நீங்கள் அதை எண்ணுவதில்லை. அப்போது அறிபொருளே அறிவதும் அறிபவனுமாகிறது. அது அறிபவன் அறிபொருளுக்குள் செலுத்தப்படுவதைப் போன்றது. அறிபொருளை உங்களுக்குள் செலுத்தவோ, அறிபவனை அறிபொருளுக்குள் சேர்க்கவோ நீங்கள் போராட வேண்டியதில்லை. அனைத்தும் தானாக சடுதியில் நிகழ்ந்துவிடுகிறது.
இப்பாட்டில் நாராயணகுரு உள்ளுலகிற்கும் புறவுலகிற்கும் இடையே காணப்படும் இருமையைக் குறிப்பிடுகிறார். உங்கள் உள் உறையும் உலகை அறிய சிறந்த வழி, கண்களை மூடி மற்ற புலன்களை கட்டுப்படுத்துதல்தான். புலன்களை இயங்கவிடாமல் செய்யும்போது, உங்களது அக உலகின் பகுதிகளான கடந்துபோகும் எண்ணங்கள், அக நாட்டங்கள், நனவுநிலை விருப்பாற்றல் ஆகிய மென்னுணர்வுகளை மட்டுமே நீங்கள் அனுபவிக்கிறீர்கள்.
“நானே அறிபவன்”, “இதுவே அறிவு”, “இதுவே அறிபொருள்” என்று சொல்லும்போது என்ன நிகழ்கிறது என்று கூர்ந்து கவனியுங்கள். உங்கள் அகத்திலுள்ள அறிபவன் என்பதிலிருந்து நீங்கள் என்ன உணர்கிறீர்கள்? அறிவெனப்படும் தனித்த பொருள் எங்கே இருக்கிறது? அறிபவனைத் தவிர்த்த அனைத்துமாக அறிபொருள் பார்க்கப்படலாம். இவை தனித்தனி பொருட்களாகத் தோன்றினாலும் நனவைப் பொறுத்தவரை எந்த வேறுபாடும் இவற்றிடையே இல்லை. அத்தகைய தருணங்களிலெல்லாம் நீங்கள் உணர்வது ஒரு நனவுநிலையில் நிகழும் வெவ்வேறு மாற்றங்களைத்தான். இங்கே அறிபவன், அறிபொருள், அறிவு ஆகியவை உங்களது அந்தரங்கமான தனித்த அனுபவத்தையே குறிக்கின்றன. அவை உங்களது விழிப்புநிலைக்குள் வெறும் மாற்றங்களாகவே நிகழ்கின்றன.
வரையறுக்கப்படக்கூடியதும் வரையறுக்கப்படமுடியாததுமான ‘கரு’வே இப்பாடலின் முதன்மைச் சொல். இறுதியில் அதுவே தனிமுதலாகவும், ஆதி காரணமாகவும், பிரபஞ்ச ஆன்மாவாகவும், இயற்கையை நடத்தும் இயற்கையாகவும் பொருள் கொள்ளப்படவேண்டும். அதன் நேர் பொருள் ‘அச்சு’ (mould) என்பது. கொல்லன் ஒரு உருவத்தையோ அல்லது பாத்திரத்தையோ வடிவமைக்க உலோகத்தை உருக்கி ஒரு அச்சில் ஊற்றுகிறான். ஒரு பறவையின் முட்டையில் அதன் மரபணுச் செய்தியில் ஒரு வகையான அச்சு இருக்கிறது. அந்த அச்சிலிருந்து வெளிவரும் பறவைக் குஞ்சு ஒரு பறவையாக உருப்பெறுகிறது. மனித இனமும் இனக்கீற்றுகளின் (chromosomes) வரைபடம் கொண்ட ஒரு அச்சிலிருந்தே வருகிறது. எந்த விளைவும் அதன் காரணம் என்னும் அச்சைக் கொண்டுள்ளது. ஒரு மெய்ம்மையாக்கத்தின் அச்சு என்பது அதன் உள்ளார்ந்த ஆற்றல். அறிவின் அச்சு நனவுநிலை. வெளியிடப்பட்ட எண்ணத்தின் அச்சு மொழி. சொற்கள் அவை தரும் பொருளின் அச்சு. பருப்பொருட்களின் அச்சு அவற்றில் உறையும் ஆற்றல். ஆற்றலின் அச்சு அதை கட்டுப்படுத்தும், வழிநடத்தும் விதி. இவ்வாறாக, இவ்வுலகில் உள்ள, மிக நுட்பமானது தொடங்கி மிகவும் பெரிய பருப்பொருள் வரை ஒவ்வொன்றும் அவற்றுக்கேயான ஒரு அச்சைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் பொதுமைப்படுத்தலே கரு எனப்படுகிறது.
மற்றொரு பொருளில், கரு என்பது நனவிற்கு மெய்ம்மையும் பொருளும் தந்து அதை நிரப்புவது. உருக்கொள்வதாகவோ, இயற்கையை நடத்தும் இயற்கையாகவோ அதைப் புரிந்துகொள்ளும்போது, அது உள்ளுறையும் தன்மையுடையதாகிறது. எப்போதும் அச்சின் தனிக்கூறுகளை மட்டுமே குறிப்பிட்டு சொல்ல முடியாது என்பதால், அதை ‘எல்லாம் கடந்த’தாகக் கொள்ள வேண்டும். பிரபஞ்ச நனவில் அது உள்ளுறைகிறது; தனிப்பட்ட புரிதல்களைக் கடந்ததாகவும் இருக்கிறது.
ஒன்றைக்காட்டிலும் இன்னொன்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், ஒரே சமயத்தில் இவ்விரு பொருளிலும் கருவை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் குரு. நம்மால் அதைச் செய்ய முடியும் என்றால், நாம் காணும் இந்நிலம் உண்மையிலேயே நிலமாகவும், நீர் நீராகவும், மனிதன் மனிதனாகவும், கண்ணீரும் புன்னகையும் அவையாகவேயும் இருக்கும். புறத்தே பிரகாசமாய் ஒளிர்வது என்று குரு சொல்வது இதையே. இப்புற நிகழ்வுகள் எல்லாம் பிரபஞ்சப் பொருண்மையைச் சார்ந்தவை. இமயமும், ஆல்ப்ஸும், ராக்கீஸும் பல்லாயிரமாண்டுகளாக ‘அங்கே இருப்பதை’ப் போல இயற்பியல், வேதியியல், உயிரியல் மாற்றங்கள் பலகோடி ஆண்டுகளாக இடையறாமல் நிகழ்ந்துவருகின்றன. ஒப்புநோக்க பிற்காலத்தைச் சேர்ந்த மரபுகளும் சமூகப் பழக்கவழக்கங்களும் அதே புற உண்மையின் பகுதிகளே. செவ்வியல் அறிவியலாளர்கள் பருப்பொருளை புறவயமானது என்று சொன்னதே ஓரளவு உருவகப்படுத்தும் பொருளில்தான். ஆங்கிலத்தில் ‘matter’ என்பது லத்தீன் மொழியில் தாய் என்று பொருள் தரும் ‘mater’ என்பதிலிருந்து வந்தது. தாய் என்பது கருவின் மற்றொரு வடிவம். அவள் புதிய இயல்கைகளைப் பெற்றெடுக்கிறாள்.
இந்த இடத்தில் “அச்சை அச்சாக்குவது – கருவை கருவாக்குவது எது?” என்று நாம் கேட்கலாம். நிகழ்வுகளின் வைப்பு முறையும் பொருளும், நம் தர்க்கம் செயல்படும் விதத்துடன் ஒத்துப்போவதைக் காணலாம். நம் தர்க்கத்திற்கு பொருள்படும் விதத்தை வைத்தே நாம் ஒரு அச்சை, ஒரு வார்ப்பை புரிந்துகொள்ள முடியும். கண்ணுக்குப் புலப்படுவதை கணக்கிடக் கூடியதாகக் குறுக்கும்போது, கச்சிதமான ஒத்திசைவு கொள்ளும் பிசிறில்லா தர்க்க ஒழுங்கைக் காண்கிறோம். நாம் அச்சு என்று கருதும் எல்லாவற்றிலும் ஒரு தர்க்க ஒழுங்கு இருக்கிறது என்று எண்ணவேண்டியிருக்கிறது. பின்வரும் பாடல்களில், தன்னை ஒளிர்விக்க தன்னைத் தவிர வேறில்லாதபோதும், அறியும் அறிவே ஆன்மா என்ற வரையறையை காணப்போகிறோம். அந்தப் பொருளில் பார்த்தால், கரு என்பது ஆன்மாவே எனலாம்.
நாராயண குரு தன் குஹாஷ்டகத்தில் கருவை (1) அனைத்துலகிற்கும் ஆதாரமாய் அமைந்து தனக்கென வேறெந்த ஆதாரமும் இல்லாததாய் இருப்பது (2) அறிபொருளாகவும் அறிபவனாகவும் ஆகும் தொடரியக்கத்தின் பண்புகளை ஒழுங்கமைப்பது (3) தனக்கென ஒரு கருப்பை இல்லாத, அனைத்திற்குமான கருப்பையாக இருப்பது மற்றும் (4) கால ஒழுக்கை உற்பத்தி செய்யும் தூய காலவரையறையாக இருப்பது என்று வரையறை செய்கிறார்.
ஸ்பினோசாவின் தத்துவம் ஆத்மோபதேச சதகத்தின் முதல் பாடலுடன் பொருந்துவது. கரு என்று நாராயண குரு சொல்வது, ஸ்பினோசாவின் தத்துவத்தில் ‘சாரம்’ எனப்படுகிறது. ஸ்பினோசா கூறும் சாரம் தன்னைத் தானே தோற்றுவித்துக்கொண்டது; தன்னைத்தானே நிறுவிக்கொண்டது; காரணகாரியத்தின் அனைத்து அச்சுவார்ப்புருக்களை தன்னுள்ளே கொண்டது. நீட்சி மற்றும் ஆழ்சிந்தனை என்ற இரண்டையும் சாரத்தின் பண்புகளாகக் கூறுகிறார் ஸ்பினோசா. வேதாந்தத்தில் நீட்சி என்பது வியாப்தி எனப்படுகிறது. ஸ்பினோசாவின் நீட்சி என்ற கருத்து குருவின் பாடலில் “புறம்’ என வருகிறது; அவரது ஆழ்சிந்தனை எனும் கருத்து இங்கே அறிவெனப்படுவதை ஒத்திருக்கிறது. “பிரகாசமாய் ஒளிர்வது” ஸ்பினோசாவின் தத்துவத்தில் omnia எனப்படுகிறது. மேலும் “அறிவிலுமேறி” என நாராயண குரு சொல்வது, ஸ்பினோசா கூறும் intellectus infinitus என்பதை ஒத்ததே; ‘உருவிலும்’ என்பது motus et quies; ‘புறத்து’ என்பது res partilulares; ‘ஒத்து’ என்பது facis totius universi.
இப்பாடலில் வெளிப்படும் ஒருங்கிணைந்த பார்வை என்பதை நவீன அறிவியலாளர்கள் பெரிதும் அங்கீகரிக்கத் துவங்கியுள்ளார்கள். ஹெய்சன்பெர்கும் நீல்ஸ் போரும் உருவாக்கிய ‘குவாண்டம் தியரியின் கோபன்ஹேகன் விளக்க”த்தை பெரிதும் ஒத்திருக்கிறது இது. ஒரு தொடக்கமாக, பரு உலகை அவர்கள் அவதானிக்கப்படும் அமைப்பு என்றும், அவதானிக்கும் அமைப்பு என்றும் இரண்டாகப் பகுக்கின்றனர். இதில் அவதானிக்கப்படும் அமைப்பு என்பது குரு சொல்லும் ‘புற’த்தை ஒத்தது. அவதானிக்கும் அமைப்பு என்பது குரு சொல்லும் ஊடுருவும் அறிவும், அகமும் சேர்ந்தது. கோபன்ஹேகன் விளக்கத்தை மறுத்த டேவிட் பாம் கூட, நாராயண குரு இந்தப் பாட்டில் அளிக்கும் உலகப் பார்வையை ஒத்த ஒரு நிலையை வெளிப்படுத்துகிறார்:
உலகை தனித்தனியான ஒன்றையொன்று சார்ந்திராத பகுதிகளாகப் பகுத்துப் பார்க்கும் செவ்வியல் கருத்தை மறுக்கும் இடையறா முழுமைக்கோட்பாட்டை நோக்கி நாம் செலுத்தப்படுகிறோம்… உலகில் காணப்படும் தனித்தனியான ‘அடிப்படைக் கூறுகள்’ மூலாதார மெய்மை என்ற செவ்வியல் கோட்பாட்டையும், வெவ்வேறு தொகுதிகள் இக்கூறுகளின் குறிப்பிட்ட தற்செயல் வடிவங்களும் அமைப்பு முறைகளும் மட்டுமே என்பதையும் நாம் தலைகீழாக மாற்றிவிட்டோம். மாறாக,, மொத்தப் பிரபஞ்சத்தின் பிரிக்கமுடியா தொகுதிப் பிணைப்புதான் மூலாதார மெய்மை என்றும், மொத்தத்திற்குள், ஒப்புநோக்க, தனித்துச் செயல்படும் கூறுகள் குறிப்பிட்ட தற்செயல் வடிவங்கள் மட்டுமே என்றும் சொல்கிறோம்.
“நான், நான், நான்” எனும் இடையறா விழிப்புநிலையின் குறுக்கீட்டால் இந்தத் தொடர் நிகழ்வை உங்களால் அறியமுடிவதில்லை. வலியதான இந்த ‘நானை’ நீங்கள் அடக்கி பணிவானதாக்க வேண்டும். ஒரு சிறந்த கருவி என்பதற்கு மேல் அதற்கு எந்தப் பயன்மதிப்பும் இல்லை என எண்ணுங்கள். எதையும் படைப்பதற்கான ஆற்றல் ஏதும் அதனிடம் இல்லை. ஒட்டுமொத்த நனவில், தன்முனைப்பு (ego) கொண்ட ஒரு சிறு துகள் மட்டுமே அது. அனைத்துமாகும் மீஉயர் அண்ட நனவின் முன் உங்களது ‘நான்’ மண்டியிட்டு வணங்கட்டும். அது உங்கள் நோக்கு இயல்பாய் அமைய உதவும்.
“மீஉயர் அறிவானது உள்ளுலகிலும் புறவுலகிலும் பேரொளியுடன் ஒளிர்கிறது” என்கிறார் நாராயணகுரு. அது இப்பிரபஞ்சமாய், ஆன்மாவாய், அறிவாய், மனக்கிளர்ச்சியாய், மதிப்பீடுகளாய் சுடர்கிறது. அப்பிரபஞ்சக் கருவை, உடன்பொருண்மையின் (consubstantiation) அண்ட முட்டையை நாம் பயபக்தியுடன் நோக்க வேண்டும்.
இப்பாடலை நீங்கள் ஆழ்ந்து சிந்திக்க நினைத்தால், இந்நாளில் நடக்கும் எல்லாவற்றின்மீதும் அதன் ஒளியை பொருத்திப்பாருங்கள். மனதிற்குள் திரும்பத் திரும்ப பாடலை சொல்லிப்பாருங்கள். உங்களது நனவு வெளியுலகாகவும் அகச்சிந்தனையாகவும் இடையறாமல் இயங்கும் அதிசயத்தை உணருங்கள். பொருட்களை பார்க்கும்போதும், பிறருடன் பேசும்போதும், ஒரு நாளில் நீங்கள் ஈடுபடும் அன்றாட அலுவல்களில் இதை செய்து பாருங்கள். அந்த அதிசயத்தை நீங்கள் உணரும்போது, உங்களின் உள் உறையும் பிரபஞ்சத்தின் மீதான பெரும் பக்தி உங்களுள் இயல்பாக ஏற்படும். உங்களால் யோசிக்க, பார்க்க, உணர, அறிய, செய்ய முடிகிறது என்பதும் அவற்றின் மூலம் முழுமுதலின் அண்ட வெளிப்பாட்டில் நீங்களும் பங்கேற்க முடியும் என்பதும் உங்களில் ஒரு நன்றி உணர்வை ஏற்படுத்தும். புறத்தே உள்ள மெய்வெளிப்பாட்டிற்கும் உங்களது அக ஆழத்தின் கனவுகளுக்கும் விருப்புகளுக்கும் இடையேயான பரஸ்பரத்தன்மை பெரிய அதிசயமல்லவா?
நமது இயல்பெளிமையை நாம் கைவிடும்போது நமது இயல்பான கரவின்மையை, அதிசயித்து நிற்கும் திறனை இழந்துவிடுகிறோம். வியப்பெய்தும் உணர்வை நாம் மீண்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சில மணி நேரங்களுக்கு முன் கட்டையாய் படுக்கையில் கிடந்த இவ்வுடல் இப்போது இங்கே அமர்ந்து தர்க்கம் செய்துகொண்டிருப்பது ஒரு அதிசயம். அவ்வுறக்கத்தின்போது இல்லாத பல்பரிமாணப் பிரபஞ்சத்தை அது இப்போது காண்கிறது என்பதும் ஒரு அதிசயம். நுட்பமான ஆழங்களில் இருந்து வரும் கனவுகள் கூட வியப்புக்குரியவைதான். உங்களிடம் என்னால் பேச முடிவதும், உங்களால் நான் சொல்வதைக் கேட்டு புரிந்துகொள்ளமுடிவதும் எல்லாம் அதிசயமே.
எதையும் பகுப்பாய்வு செய்வதும் முத்திரை குத்துவதுமே உங்கள் பழக்கமாகிப் போனதால் வியப்புணர்வென்பதையே தொலைத்துவிட்டீர்கள். சேமித்துவைத்த முத்திரைகளைக் கொண்டு உங்களது எண்ணமென்னும் புறாக்கூண்டை நிரப்பிவிட்டு, நீங்கள் மெய்யறிவு பெற்றுவிட்டதாக எண்ணிக்கொள்கிறீர்கள். ஆனால் இம்முத்திரைகள் உங்களை மேலும் குருடாக்கும் தடைகளே. பக்தியுணர்வே அற்றவர்களாகிவிட்டீர்கள். ‘கடவுள்’ என்று சொல்லும்போது உங்களில் எந்த உணர்வும் எழவில்லையென்றால், ‘முழுமுதல்’ எனும்போதே உணர்ச்சிப்பெருக்கில் நீங்கள் மூழ்கவில்லையென்றால், உங்களுக்கு ‘கடவுள்’ என்றால், ‘முழுமுதல்’ என்றால் என்னவென்றே தெரியவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். உங்கள் பக்தி சாரத்தை நீங்கள் சீரமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதையே இது காட்டுகிறது.
ஒரு குழந்தைக்கு ஒவ்வொரு கணமும் ஒரு அதிசயம்தான். தங்கள் வியப்பு நிறைந்த மனங்களால், சிறு குழந்தைகள் பேரழகைப் படைத்துக் கொள்கின்றன. நாம் ஒருவரை ஒருவர் பார்க்கவும் தொட்டுக்கொள்ளவும் முடிகிறது என்பதே அதிசயமானதுதான், ஆனந்தமானதுதான். நான் குறிப்பிடும் போற்றுதல் என்பது அந்த வியப்பின் மெய்சிலிர்ப்பைத்தான். இவையெல்லாவற்றையும் நிகழ்த்தும், அறியப்படுபவனும் அறியப்படாதவனுமான அந்த மாயாவியின்பால் நீங்கள் பக்தியை வளர்த்துக்கொள்ளவேண்டும். ஒருவனுக்கு வீடுபேற்றை அளிப்பதில் பக்தியைப் போல் பிறிதொன்றில்லை என்கிறார் சங்கரர். விடுதலைக்கு மிகச்சிறந்த வழி அதுவே. பக்தி என்பது இதயபூர்வமானது, முழுமையான அன்பு அது.
உங்களது அன்றாடக் கடமைகளிலிருந்து விலகாமல், உங்களைச் சுற்றியும், உங்கள் அகத்தேயும் இந்த அதிசயம் நிகழ்வதை கவனியுங்கள். உண்ணும்போதும் நடக்கும்போதும், வேலையில் ஈடுபட்டிருக்கும்போதும், உறங்கச் செல்லும்போதும், நாள் முழுவதும் இந்த அதிசயத்தைக் குறித்து பக்தியுடன் சிந்தியுங்கள். நீங்கள் பார்ப்பதையும் உணர்வதையும் குறிப்பெடுத்து வைப்பீர்கள் என்றால், மாலையில் அவற்றைப் படித்துப் பாருங்கள் – ஒரு நாளில் எத்தனை பொக்கிஷங்களைக் கண்டு போற்றியிருக்கிறோம் என்று வியந்துபோவீர்கள்.
இப்பாடல் மூலம் நீங்கள் ஒரு தீவிர ஆன்மீகப் புலத்திற்குள் நுழைகின்றீர்கள்.
….
[1977-இல் போர்ட்லாண்ட் நாராயண குருகுல மாணவர்கள், நாராயண குருவின் ஆத்மோபதேச சதகத்தின் மீதான ஒரு ஆழ்சிந்தனைக்கு இசைந்தனர். நாளொன்றுக்கு ஒரு பாடல் வீதம் கற்பதும் அதன் அடிப்படையில் புற நிகழ்வுகளையும் அக வாழ்வையும் கூர்ந்து அவதானித்து அவற்றைப் புரிந்துகொள்ள முயல்வது என திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு பாடல் மீதான சிந்தனைகளை மாணவர்கள் முன் வைத்தார் நித்ய சைதன்ய யதி. அவை பதிவு செய்யப்பட்டு ‘That Alone, the Core of Wisdom’ என்ற நூலாக உருப்பெற்றது.]
Thanks for sharing this highest knowledge