19-ஆம் நூற்றாண்டின் பெளதிகவாத சிந்தனையின் சிறந்த தொகுப்பாக நாம் ஹோல்பாக் (Holback) எழுதிய ‘இயற்கையின் அமைப்பு’ (System of Nature) என்ற நூலைக் கருதலாம். இந்நூல் இன்றுகூட ஒரு கிளாசிக் என்ற எண்ணம் எனக்குண்டு. கருத்துமுதல் வாதத்தை கடுமையாக எதிர்க்கும் ஹோல்பாக் ‘அது ஒருவிதத்தில் அல்லது மற்றொரு விதத்தில் புலன்களுக்குச் சிக்குவது எதுவோ அதுவே பொருள்’ என்று நிர்ணயிக்கிறார். அடுத்த தலைமுறையின் முதன்மையான பெளதிகவாத சிந்தனையாளர் லாப்லேஸ் (Laplace) ஆவார். அவர் வழியாகவே பெளதிகவாதம் ஒரு மெய்காண் முறையாக முழுமை பெற்றது. ‘எந்த ஒரு மனம் ஒரு குறிப்பிட்ட கால அளவில் அதற்கு ஆய்வுப் பொருளாக அமைந்த பொருளில் உள்ளடங்கியுள்ள இயற்கை சக்திகளைக் காணவும் அதன் கூறுகளை உரிய முறையில் இணைத்துப் புரிந்துகொள்ளவும் திராணியுள்ளதோ அந்த மனம் தான் கண்டடையும் விஷயங்களைத் தொகுத்துக் கொள்ளவும் சக்தியுடையதாக இருப்பின் பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் முதல் நுண் அணு வரையிலான அனைத்தையும் துல்லியமாக அறியும் வல்லமை கொண்டதாக ஆகிறது. அந்த மனத்திற்கு நேற்றும் நாளையும் திறந்த புத்தகம் போலத் தெரியவரும் (Laplace, Philosophical Essays on Probability) இந்த வரிகள் நவீன யந்திரவாத விஞ்ஞான அணுமுறையின் பிரகடனம் போல உள்ளதை கவனிக்கலாம். விஞ்ஞானத்திற்கு அனைத்தையும் அறியும் திறன் உண்டு என்று நம்பும் உற்சாகம் அன்றிருந்தது. ‘சிறிது ஜடமும் அதற்குப் போதிய சலனமும் கொடுங்கள். நாங்கள் ஒரு பூமியைப் படைத்துத் தருகிறோம்’ என்றனர் பெளதிகவாதிகள். கான்ட் அதற்குப் பதிலடியாக ‘இதோ ஜடம் உள்ளது. அதன் முடிவற்ற சலனம் உள்ளது. ஒரு விட்டில் பூச்சியையாவது உண்டுபண்ணிக் காட்டுங்கள் பார்ப்போம்’ என்றார். நூறு வருடங்களாகப் போகிறது. விட்டிலல்ல; ஓரு அணுவைக் கூட இன்னமும் மனிதக்கை உருவாக்கவில்லை.
19-ஆம் நூற்றாண்டில் இயந்திரவாத அணுகுமுறையின் போதாமைகள் பல வெளிப்பட ஆரம்பித்தன. பொருண்மையின் அடிப்படைத் தத்துவங்களை இயந்திரவாத அணுகுமுறை விளக்க முடியவில்லை. பொருண்மையின் அடிப்படை அலகு அணு (atom) என்று கூறப்பட்டது. ஆனால் அணுக்களுக்கு இடையேயான உறவுகளை இயந்திரவாத விதிகளின்படி விளக்கமுடியவில்லை. உதாரணமாக வெற்றிடத்தின் ஊடாக ஈதர் என்ற கற்பனைப் பொருண்மையை உருவகித்து அதில் பிரபஞ்சம் மூழ்கியிருப்பதாகக் கூறினார்கள். பிற்பாடு இந்தக் கருத்து கைவிடப்பட்டு மின்னூட்ட ஈர்ப்பு, மின்னூட்ட விலகல் பற்றிய கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இவை சார்ந்த முக்கியமான சமவாக்கியங்களை உருவாக்கியவர் மாக்ஸ்வெல். இயந்திரவாத விதிகளின்படி இயங்கும் ஜடம் என்ற உருவகம் அதன் இறுதிவிளிம்பை மாக்ஸ்வெல் மூலம் அடைந்தது. 20-ஆம் நூற்றாண்டில் கதிரியக்கம், நுண்துகள்கள், அணுவின் அக அமைப்பு முதலிய பல கண்டுபிடிப்புகள் வந்தன. பொருண்மையின் இயந்திர விதிகள் மெல்ல மெல்ல கைவிடப்படத் தொடங்கின. இவ்விவாதத்தின் தொடக்கத்தில் உருவான கருத்து முதல்வாத உற்சாகத்தைப் பார்த்து லெனின் எழுதினார், ‘பொருள் முதல்வாதம் என்றால் இயந்திரவாதம் அல்ல. இயந்திர விதிகளின்படி இயங்கும் பொருண்மையையே பொருள்முதல்வாதம் உருவகிக்கிறது என்று எவரேனும் கருதினால் அது அபத்தம். நாம் கூறும் பொருள்முதல்வாதம் மிக விரிவானது. அதற்கு கதிரியக்கத்தை மட்டுமல்ல பொருண்மையின் அனைத்து உட்சிக்கல்களையும் தொகுத்துக் கொள்ளும் வல்லமை உண்டு.’ (V.I. Lenin, Collected Works, Vol.14)
ஆனால் பொருண்மைக்கும் பிரக்ஞைக்கும் இடையிலான உறவை லெனின் அங்கீகரிக்கிறார் என்பதை பல தருணங்களில் நாம் காண்கிறோம். ‘பொருட்களின் சாரம் என்பது சார்புநிலையான ஒன்று. மனிதனின் அறிவில் உள்ள சார்புநிலைகள் விஞ்ஞானத்தில் பிரதிபலிக்கின்றன. நேற்று அவனுடைய பிரக்ஞை அணுவைத் தாண்டவில்லை. இன்று இது எலக்ட்ரானில் முட்டி நிற்கிறது. இவ்வுருவகமும் உடையும் பொருண்மை, அவன் பிரக்ஞை விரிவடையும்தோறும் விரிவடைந்தபடியே முன்னகரும் இயற்கையின் வடிவமும் சாத்தியங்களும் முடிவின்மை கொண்டவை’ (V.I. Lenin, Collected Works, Vol.14) ‘அறியப்படாத பெரும்பகுதியை வைத்தல்ல; அறியப்பட்ட பகுதியின் இயல்புகளை வைத்தே நாம் இயற்கையை மதிப்பிட வேண்டும்’ என லெனின் கருதினார். அவை பெளதிகவாதத்தின் எல்லைக்கு உட்படுபவையாக, புறவயமானவையாகவே உள்ளன.
சில முரணிலைப் பொருள்முதல்வாதிகள் தரிசனம் தூய பொருளை – அதாவது பொருண்மையைப் பற்றி – ஆராய வேண்டியதில்லை என்று கருதுகிறார்கள். பொருள்முதல்வாதத்தின் எல்லைக்குள் வரும் பொருள் புலன்களுக்குச் சிக்கும் பொருளன்றி வேறல்ல. பொருண்மையின் ஆதாரவிதிகளை விஞ்ஞானம் ஆராயட்டும். தத்துவம் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது. மெலுகின் இதை கடுமையாக மறுக்கிறார். அப்படியொரு நிலை எடுப்பது இயங்கியல் பொருள்முதல்வாதம் தற்கொலை செய்துகொள்வதற்கு நிகர் என்கிறார். அது ஓர் உலகப்பார்வை என்ற நிலையில் தொடரவேண்டும் என்றால் அது அவசியமாக இந்நூற்றாண்டின் ஆகப் பெரிய அறிவுப் பிரச்சினையாகிய பொருண்மையின் இருப்பு பற்றிப் பேசியாக வேண்டும் என்கிறார்.
ஏங்கல்ஸின் பிரபலமான சொற்கள் இங்கு கவனிக்கப்பட வேண்டியவை. ‘ஆயிரம் பல்லாயிரம் சொற்களை இடைவெளியின்றி பண்டிதர் கொட்டினாலும் ஜடத்தின் இருப்பை மாற்றியமைக்க முடியாது.’ பிரபஞ்சம் மானுடர் அனைவருக்கும் ஒரே அனுபவத்தை தருவதாக இருப்பது மானுடப் பிரக்ஞையின் ஒருமையினால் அல்ல. பிரபஞ்சப் பொருண்மையின் இருப்பு, அழிவின்மை, மாறுதல் கொள்ளும் தன்மை முதலியவை தத்துவார்த்தமாக நிலைநிறுத்தப்பட்டவை அல்ல. புறவயமான அனுபவமாகவே தங்களை நிலைநாட்டிக் கொண்டவை. இதனடிப்படையில் உள்ள இருவிதிகள், காரிய காரண வழி (law of causality) பொருண்மையின் இருப்பு சலனம் பற்றிய விதி (law of conservation of matter and motion) ஆகியவை நமது அறிதல் முறையைத் தீர்மானிப்பவை ஆயின. இவற்றில் பொருண்மையின் நிரந்தரத் தன்மை முதல் நிபந்தனையாகும். இங்கு பொருண்மை என்பது ஒரு குறிப்பிட்ட வடிவை அல்லது குண இயல்பைப் புறவயமாகத் தக்கவைத்துக் கொள்ளுதல் என்று குறிப்பிடப்படுகிறது. ஐன்ஸ்டீனின் ஆற்றல் பற்றிய உலகப் புகழ் பெற்ற கோட்பாடான E = MC2 இந்தப் பொது விதியைத் தகர்த்துவிட்டது என்பது உலகறிந்த உண்மை. இதன்படி பொருண்மை என்பது ஆற்றலின் ஒரு செயல்நிலை மட்டுமே. அதாவது பெளத்தர்களின் மொழியில் ஆற்றலின் ஒரு ‘தர்மம்’ மட்டுமே பொருள். பொருண்மையாக உள்ள சக்தியை (M) ஒளி வேகம் அடையச் செய்யும்போது (C2) அதை ஃபோட்டான்களினாலான ஒளி சக்தியாக (E) மாற்றிவிட முடியும். இங்கு சக்தி ‘தூய’ நிலையில் இருக்க முடியுமா என்ற வினா எழுகிறது. எடையாகவோ ஒளி சக்தியாகவோ அது இருக்கமுடியுமா? அது திகைப்பூட்டும் பெருவினாவாக விஞ்ஞானத்தில் எஞ்சுகிறது. சக்தியின் முடிவின்மையே பெருவெளி.
ஆனால் நாமறியும் சக்தி பொருண்மையின் வடிவம் கொண்டது மட்டுமே. அறிதல் பொருண்மையின் ஊடாகவே சாத்தியம். சக்தி எனும்போது நாம் நமது அறிதலின் வட்டத்திற்குள் சிக்கும் ஆற்றலையே குறிப்பிடுகிறோம். பொருண்மை வடிவுள்ள சக்தியே இயந்திர விதிகளுக்குக் கட்டுப்பட்டதாக ஆகிறது. நிர்ணயத்தன்மை பொருண்மை வடிவுகொண்ட சக்தியின் முதல் இயல்பு. ஆக்கத்தில் உள்ள நிர்ணயத் தன்மை, சார்பு நிலையில் உள்ள நிர்ணயத்தன்மை, காரிய காரண நிர்ணயத் தன்மை, செயல்களில் உள்ள நிர்ணயத்தன்மை, அமைப்பில் உள்ள நிர்ணயத்தன்மை என்று அதை வகுக்கலாம். அமைப்பு சார்ந்த நிர்ணயத்தன்மை (systemic determinacy) யின் ஒரு பகுதியே உயிரணு சார்ந்த நிர்ணயத்தன்மை (genetic determinacy). அது உயிர் ஆக்கத்திற்குக் காரணமாகிறது. இயற்கையாகவே தன்னை ஒருங்கமைவு செய்துகொள்ள முடியும் என்பதே ஜடத்தில் நாம் காணும் முதன்மையான குணமாகும்.
இங்கு நாமறியும் ஜடத்திலிருந்து நாம் அதன் சலன இயல்பை வகுத்திருக்கிறோம். அது சுயமாக இயங்குகிறது, வளர்கிறது, மாறுகிறது. ஒரு படிப்படியான முன்னகர்வு, அப்படிகளை படிப்படியாகப் பின்னகர்ந்து முடித்தல், ஒரு முழு அமைப்பை நோக்கி நகர்ந்த பிறகு மாற்றமின்றி இருத்தல், ஒவ்வொரு கட்டத்திலும் திரும்பத் திரும்ப ஒரு மாறுதலைக் கொண்டபடி இருத்தல், சுழற்சி முறையில் மாறுதல் கொண்டபடி இருத்தல், இம்மாற்ற முறையில் அனைத்தையும் ஒன்றோடொன்று கலந்து சிக்கலான மாற்ற விதிகளைக் கொண்டிருத்தல் ஆகியவை ஜடத்தின் இயல்புகளாகும். கால இடத்தில் இருப்புக் கொள்ளுதல் என்பதும் ஜடத்தின் இயல்புகளன்று. இங்குதான் முரணிலைப் பொருள்முதல்வாதத்தின் எல்லை தெளிவாகிறது. அது கால இடத்திற்குள் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பொருண்மை பற்றியே பேச முடியும். இந்த சாமானிய தளத்தில் பொருண்மையின் இயங்கு முறையை அது வகுத்து விவாதிப்பதில் பொருளுண்டு. அதற்கு மேல் விசேஷ தளத்தில் பொருண்மையை அது சக்தியின் ஒரு நிலையாகவே அங்கீகரிக்கிறது. மெலுகினின் வரிகளில் கூறப்போனால் ‘வேகம் தடைப்பட்ட சக்திதான்’ அது. அங்கு அதன் விதிகளும் இயங்குமுறைகளும் வேறு. அங்கு அறிபவனும் அறிதலும் ஒன்றாகிறார்கள். பிரக்ஞையா பொருண்மையா என்ற பழைய விவாதம் பொருளற்றுப் போகிறது. அவை ஒன்றாக ஒரே புள்ளியாக இயங்குகின்றன என்று கூறலாம். அறிதல் இருப்பை உருவாக்குகிறது அல்லது அறிதலின் விதிகளுக்குள் வரும்போதுதான் சக்தி தன் இருப்பைக் கொள்கிறது.
‘அறிவும் அறியப்படும் பொருளும்
மனிதனின் ஞானமும்
ஒரு ஆதி மஹஸ் மட்டுமேயாகும்’
என்கிறார் நாராயணகுரு. ஞானத் தேடலின் இரு வரலாற்றுத் தரப்புகள் திகைப்பு தரும்படி ஒன்றையொன்று கண்டுகொள்ளும் இடம் இது.
(கட்டுரை சுருக்கப்பட்டு சுதந்திர மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. மலையாள நூல் ‘சக்தி நடனம்’ என்பதன் முதற்பகுதி இது)
தமிழில்: ஜெயமோகன்