மீண்டும் நுண் அலகு இயந்திரவியலுக்கு வருவோம். 1927-இல் இயற்பியலறிஞர்கள் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரஸல்ஸ் நகரில் வைத்து ஒரு சர்வதேசக் கருத்தரங்கு நடத்தினார்கள். இங்கு நுண்ணலகு இயந்திரவியலின் இயல்புகள் வரையறுக்கப்பட்டன. பிற்பாடு இது கோபன் ஹேகன் விளக்கம் (Copenhagen Theory) என்று அறியப்பட்டது. பல்வேறு விளக்கங்கள் பிற்பாடு வந்துவிட்டன என்றாலும் இவ்விளக்கமே பொதுவான அங்கீகாரம் உடையதாக உள்ளது. இதை ஐன்ஸ்டீன் தொடர்ந்து எதிர்த்தார். அறியமுடியாமை என்ற முடிவை விஞ்ஞானத்தின் மீது அது சுமத்துகிறது என்றார். முற்றிலும் புரியாததாக உள்ள இப்பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மைகளில் மிக அற்புதமான உண்மை அது புரிந்துகொள்ளும் விதத்தில்தான் உள்ளது என்பதே என்றார் (Albert Einstein on Physical Reality, Franklin Institute Journal, 1963).
நீண்ட காலமாக விஞ்ஞானமும் தத்துவமும் வெளியே எங்கோ, எதனுடனும் தொடர்பின்றி, தன் தனித்துவத்தால் தன்னை நிறுவிக் கொண்டிருக்கிற ஒரு இறுதி உண்மையின், மெய்மையின், வெளிப்பாடுகளாகவே அனைத்து பிற உண்மைகளையும் கண்டுவந்தன. இறுதி உண்மைக்கு அருகே வரும்தோறும் ஓர் உண்மையின் மதிப்பு அதிகரிக்கிறது என்று கருதப்பட்டது. இறுதி உண்மையின் முழுமையான நேரடி அறிதல் சாத்தியமில்லை என்றாலும் உண்மைகளின் ஒன்றொடொன்று இணையும் தன்மை வழியாக அதன் தோற்றம் வெளிப்படுகிறது என்றும் நம்பப்பட்டது. இதிலிருந்து பல வகையிலும் உபயோகமான தரிசனமொன்று முளைத்தது. பிரயோசனவாதம் (Pragmatism) என்று அது பெயரிடப்பட்டது. மனம் என்பது கருத்துகளை உருவாக்கும் ஓர் இயந்திரம் மட்டும். அது கருத்துகளுடன் மட்டுமே தொடர்புகொள்ள முடியும். எனவே உண்மையை நிரூபித்துக்கொள்ள மனம் மட்டும் போதுமானதல்ல. மனம் ஊகிக்கும் உண்மை உண்மைதானா என்று நிரூபிக்க வேண்டிய கடமை பிறவகையான புறவய அறிதல் முறைகளுக்கு உண்டு. அவை அவ்வுண்மையின் பயன் அல்லது விளைவின் அடிப்படையிலேயே அதை மதிப்பிடுகின்றன. இவ்வாறு வாதிடும் பிரயோசனவாதிகள் அறிவின் பயனே அதை அளக்கப் பயன்படுத்தப்பட வேண்டிய அளவுகோல் என்கிறார்கள். நீண்ட காலமாகவே பிரயோசனவாதம் விஞ்ஞானத்தால் இறுதி உண்மையை ஒருபோதும் அறிய முடியாது என்று வாதிட்டு வருகிறது. கோபன் ஹேகன் விளக்கம் அறிவியலை மீண்டும் இந்த இடத்தை நோக்கி நகர்த்த முயன்றது.
ஹென்றி பியர்ஸ் ஸ்டப் என்ற பிரபலமான இயற்பியலாளரின் கூற்று இது. ‘நுண் அலகு விஞ்ஞானத்தின் கோபன் ஹேகன் விளக்கம் மூலம் நாம் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான். கால இடத்துடன் இணைந்து கற்பிதம் செய்யப்படும் அடிப்படைத் தத்துவங்களை வைத்து இயற்கையை விளக்க முனைவது சாத்தியமல்ல. இயற்பியலின்படி இயற்கை என்பது நுண்துகள்களின் இணையும் பிரியும் இயக்கமும் ஆகும். அங்கு கால இட நிபந்தனைகளுக்குக் கட்டுப்படும் பொருண்மைகள் ஏதுமில்லை. பொருண்மையான புலனறிதல்களின் விதிகளினால் நுண் பொருண்மைகளைத் தீர்மானிக்க நாம் சமூக வாழ்வின் தேவைக்கு ஏற்ப உருவாக்கிக்கொண்டுள்ள பொதுவான ஒப்புதல்களினாலான விதிகளின் மூலம் பொருண்மையை விளக்க முயல்கிறோம்.’
நுண்ணலகு இயந்திரவியலின் ஸ்தாபகர்களாகக் கருதப்படும் இயற்பியலாளர்களை சோவியத் இயற்பியலாளர்கள் கடுமையாக விமரிசனம் செய்தார்கள். அவர்களை பூர்ஷ்வா இயற்பியலாளர்கள் என்றும் முத்திரை குத்தினர். இவர்களில் முதன்மையானவர் எஸ்.டி. மெலுகின். இவர் தனது அணுகுமுறையை முரணிலைப் பொருள் முதல்வாத நோக்கு சார்ந்தது என்று அடையாளப்படுத்துகிறார். ஐசன்பாக், மாக்ஸ் பிளாஸ், டி.போக்லி முதலிய இயற்பியலாளர்களின் பார்வையை விமர்சிக்கிறார். எனினும் பொருள் என்பது ஒரு குறிப்பிட்ட களத்தினுள் நிலைத்திருப்பதாக உருவகிக்கப்படும் ஒரு நிகழ்வு மட்டுமே என்று ஒப்புக் கொள்கிறார் (S.T. Melukin, Philosophy in the USSR – Problem of Dialectical Materialism – The Systemic Organisation of Matter). இதுவே முரணிலைப் பொருள் முதல்வாதத்தின் (Dialectical Materialism) அடிப்படைகளை மறுபரிசீலனை செய்யத் தூண்டுவதாகும்.
வரலாற்று ரீதியான முரணிலைப் பொருள்முதல்வாதம் என்று மார்க்ஸியம் குறிப்பிடப்படுகிறது. முரணிலை இயக்கம் (Dialectics) மேற்கத்திய சிந்தனையின் உதய காலம் முதல் இருந்துவரும் ஒரு அணுகுமுறை, இந்திய மரபில் ‘யோக மீமாம்சை’ என்று அதை முன்பு குறிப்பிட்டனர். பெளத்த தரிசனத்தின் ‘ஊஹாபோக’ தர்க்க முறை இதன் மிக விரிவான ஒரு தளமாகும். இவ்வணுகுமுறையுடன் பெளதிகவாத அணுகுமுறையும் இணையும்போதுதான் முரணிலை பெளதிகவாதம் உருவாகிறது. பெளதிகவாதம் பிரக்ஞைக்கு அப்பால் தனித்துவத்துடன் இருக்கும் பொருள் (அல்லது ஜடம்) பற்றி உருவகிக்கிறது. அது தொடர்ந்து இயங்கியபடி இருப்பது. அது விதிகளுக்கு ஏற்ப இயங்குவது. சுயமாக விரிவடைவதும் மாறுதல் கொள்வதுமாகும். உலகில் அல்லது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே பொருளின் ஏதாவது ஒரு நிலையின் தோற்றமேயாகும். இந்த அடிப்படை தரிசனத்தின் அடிப்படையில் ஞானம், வரலாறு, மனம் என அனைத்தையும் தொகுத்து வகுக்க முயல்கிறது பெளதிக வாதம் அல்லது பொருள்முதல் வாதம்.
மனித குலத்தின் சமூக ரீதியான வளர்ச்சியின் விளைவாக, அவ்வளர்ச்சிக்கு இணையாக, தத்துவ தரிசனத்தில் ஏற்பட்ட மாற்றமே முரணிலைப் பொருள்முதல் வாதத்தை உருவாக்கியது. மனித குலத்தின் (மனிதப் பிரக்ஞையின்) இயங்கியலையே அது தன் ஆதாரமாகக் கொண்டது. ஜடம், அதன் சலனம், அதன் இடம், அதன் காலம், அதன் திட்டமுறைமை முதலிய அனைத்தையும் திடமான விதிகளின் அடிப்படையில் விளக்க முயல்கிறது இத்தரிசனம். இதில் ஜடத்திற்கும் அதன் உள்ளார்ந்த இயல்புக்கும் மிக அதிக முக்கியத்துவம் உண்டு. இத்தரிசனத்தின் பெயரே இது சலனவடிவமான ஜடத்தை தன் அடிப்படைப் பேசுபொருளாகக் கொண்டுள்ளது என்பதைக் காட்டும். அதன் சலனம் முரணிலைகளினூடாக நடைபெறுகிறது என அது விளக்க முயல்கிறது. பொருளின் இயல்புகளும் செயல்களும், அவற்றில் அடங்கியுள்ள விதிகள், அதன் மூலம் உருவாகும் நிகழ்வுகள் – இவ்வாறு அது வரலாற்றை விளக்க முயல்கிறது. இவ்வரலாற்றுப் பார்வை மனிதனில் வரலாறு மூலம் உருவாகும் அறிவு, அதன் படைப்பாக்கம் மூலம் வரலாற்றில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றை மிகுந்த முக்கியத்துவம் தந்து பேசுகிறது. மனிதப் பிரக்ஞை உலக அமைப்பில் உருவாக்கக்கூடும் என அது நம்பும் மாற்றமே அதன் இலட்சியவாத அம்சத்தினைத் தீர்மானிக்கிறது.
பெளதிகவாதத்தின் மெய்காண்முறையை இங்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. பொருண்மையின் அடிப்படை இயல்புகளாகவும் அனைத்து மானுடர்களுக்கும் பொதுவானவையாகவும் முதலில் உருவகிக்கப்பட்ட விஷயங்களையே அது தன் அறிதல் முறையின் ஆதார விதிகளாகக் கொண்டது. இவ்விதிகளின் அடிப்படையில்தான் அது பிற்பாடு கண்டடையப்பட்ட அனைத்து விஷயங்களையும் வகுத்துரைக்க முற்பட்டது. இவ்வாறு முன்னகர்ந்து போகுந்தோறும் தேவையானவற்றை எல்லாம் தொகுத்துக் கொள்ளவும், சாத்தியங்களை ஊகித்தறியவும், விஞ்ஞானத்தையும் தத்துவ ஞானத்தையும் இணைக்கவும் இவ்வறிதல் முறையால் சாத்தியமாயிற்று. இந்தப் புதிய தரிசனத்தால் வாழ்வின் சாரமென்ன என்பதை நிர்ணயித்துக் கொள்ளவும், அச்சாரத்தை நிலைநிறுத்தும் தர்மங்களை உருவகிக்கவும், அதற்கேற்ப எதிர்காலத்தைக் கற்பனை செய்யவும் முடிந்தது.
முற்றிலும் பொருள்முதல்வாதம் சார்ந்த இத்தரிசனத்தை வளர்த்து நிறுவ அதன் சித்தாந்திகள் மதங்களுடனும், பல்வேறு கருத்து முதல்வாத மரபுகளுடனும் வேறுபல இலட்சியவாதங்களுடனும் போரிட நேர்ந்தது. எனவே ஜடத்தின் தத்துவ நிர்ணயத்தை முரணிலைப் பொருள் முதல்வாதம் எவ்வாறு நிகழ்த்துகிறது என்று அறிவதற்கு முன் அத்தரிசனத்தின் வரலாற்று ரீதியான பரிணாமகதிகளை எப்போதும் கணக்கில் கொள்ளவேண்டும்.
பல்வேறு இயல்புகள் கொண்ட பல கோடி தனிப்பொருட்களாக நம்மைச் சுற்றி நிரம்பியுள்ள இந்த உலகை பொதுமைப்படுத்தி ஒற்றையான ஓர் இருப்பாகக் காண்பதற்காக வரலாற்றில் ஏதோ ஒரு தருணத்தில் நாம் முயன்றோம். அதற்கான வாழ்வியல் ரீதியான அவசியம் ஏற்பட்டது போலும். இவ்வாறுதான் ஜடம் என்ற கற்பிதம் நமக்குக் கிடைத்தது. பொருண்மை என்ற பொது இயல்பு ஜடப் பொருட்கள் அனைத்திலும் கண்டடையப்பட்டது. பொருட்களின் இயல்புகளில் அடிப்படையாக உள்ள ஒரு விஷயம் பிற்பாடு பொருண்மை மீதும் போடப்பட்டது. பொருட்கள் அனைத்தும் காரண காரிய உறவுக்குக் கட்டுப்பட்டவை என ஆதி சிந்தனையாளர் அறிந்தனர். ஒரு பொருள் இன்னொன்றிலிருந்து பிறக்கிறது. இன்னொன்றாக ஆகிறது. இன்மையிலிருந்து எப்பொழுதும் உதிப்பதில்லை. உருமாற்றம் மட்டுமே பொருட்களில் நிகழும் மாற்றம். எனவே பொருண்மையும் அப்படித்தான் என ஆதி சிந்தனையாளர்களில் ஒரு பகுதியினர் நிறுவினர். இந்திய மரபுச் சிந்தனையாளர்களில் சாங்கியம், வைசேஷிகம், நியாயம், யோகம் ஆகிய நான்கு தரிசனங்களும், பொருண்மையின் நிரந்தரத் தன்மையை ஏற்பவை. தொடக்ககால பெளத்தமும் அவ்வாறு கருதியது. மெலுகின் தனது நூலில் ஆரம்ப காலம் முதல் பொருண்மையை அழிவற்றதாகவும், காலத்தில் நிரந்தரத்தன்மை கொண்டதாகவும் காணும் தத்துவார்த்த மரபு எவ்வாறு பரிணாம மாற்றம் பெற்று வருகிறது என்று விரிவாக விளக்குகிறார். இது பொதுவாக தத்துவப் பயிற்சி உடையவர்களுக்கெல்லாம் தெரிந்திருக்கக்கூடியதுதான். இத்தரிசனத்தின் சாரம் பொருண்மை அகாலத்தில் உள்ளது என்பதே. பொருட்களே காலத்தை தங்கள் உருமாற்றம் வழியாக நிகழ்த்துகின்றன.
பெளதிகவாதம் மேற்கே நியூட்டனின் கண்டுபிடிப்புகளினூடாக திட்டவட்டமாக தர்க்க முறைமையைப் பெற்றது. ஈர்ப்பு விதிகளின் மூலமும், முடிவின்றி அகாலத்தில் நிறுத்தப்பட்ட பொருண்மையின் பெருந்தரிசனம் பல நூற்றாண்டுகளுக்கு மேற்கை ஆண்டது. இறை நம்பிக்கையாளர்கள் இந்தப் பொருண்மையை ‘வெளியே நின்று’ இயக்கும் கருத்தாக கடவுளைக் கண்டனர். நியூட்டனும் அவ்வாறே கருதினார். டெகார்ட் போன்ற இறை நம்பிக்கையாளர்கள் இரண்டு இருப்புகளை உருவகம் செய்தனர். ஒன்று பெளதிகமானது அல்லது ஜடம். வாழ்வில் நாம் காணும் தத்துவங்கள் எல்லாம் நுட்பமாக ஒன்றோடொன்று முரண்படுபவையும் இறுதியில் இறைமையும் ஜடமும் சந்திக்கும் இடத்தில் முரணின்றி அணைபவையும் ஆகும் என்று இவர்கள் கருதினர். இவ்வாறு கருத்து x பொருண்மை என்ற இருநிலை தத்துவத்தில் வேரூன்றியது. கருத்து அல்லது கடவுள் பொருண்மையின் சிருஷ்டிகர்த்தர் ஆகி இருக்கிறார் என்று ஒரு கட்சியும், பொருண்மையின் ஒரு விளைவே பிரக்ஞை ஆதலால் பொருளே கருத்தின் காரணம் என மறுகட்சியும் வாதாடின. கருத்துமுதல்வாதமும், பொருள்முதல்வாதமும் இருநூறு வருடம் போராடின.
இவ்விவாதத்தின் ஒரு முக்கியமான சந்திப்புப் புள்ளி ஹெகல். ஹெகலின் தத்துவார்த்த முன்னோடி ‘ஸ்பினோசா’ எனலாம். ஸ்பினோசா ஜடத்தை பிரபஞ்சப் பொதுமையாக உருவகித்தபோது, பிரபஞ்சத்தின் ஆத்மாவையும் ஒரு பெரும் பொதுமையாக உருவகித்து பிரபஞ்ச தேவதை வாதம் (Pantheism) என்ற கோட்பாட்டை உருவாக்கினார். ‘ஒரு பொருள் என்பது வேறு ஒன்றில் அல்லாமல் தன்னில் தன் இருப்பைக் கொண்டுள்ள ஒன்று’ என்று ஸ்பினோசா கூறுகிறார். ஒரு பொருளை அவர் பொருண்மையும் ஆன்மீக சாரமும் உள்ள ஓர் இருப்பாகவே கண்டார். இதனடிப்படையில் பிரபஞ்சமும் இறைமையும் ஒன்றே என்று எண்ணினார். சாராம்சமான பிரக்ஞை எல்லா ஜடங்களிலும் இல்லையே என்ற கேள்வி ஸ்பினோசாவிற்கு எதிராகத் தொடர்ந்து நின்று கொண்டிருக்கிறது. ஹெகலின் லட்சியவாதம் (Idealism) இப்பார்வையில் வரலாற்று ரீதியான விரிவாக்கம் எனலாம். உண்மை என்பதும் ஞானம் என்பதும் ஒன்றே என்கிறார் ஹெகல். எனவே பொருண்மை, பிரபஞ்ச பிரக்ஞை (அல்லது பிரபஞ்ச மையம்) இரண்டும் வேறு வேறல்ல. பிரபஞ்சத்தின் சாரமாக ஹெகல் இறுதியான முழுமுதல் கருத்தை (idea) உருவகித்தார். சமூகம், மனித மனம் அனைத்தையும் இயற்கை உருவாக்குகிறது. இந்தக் கருத்துதான் இயற்கைக்கு – பொருண்மைக்கு – தானாகவே வளரவோ மாறவோ முடியாது. பிரபஞ்ச சாரமான பெரும் பிரக்ஞையிலேயே அது நிகழ வேண்டும். ‘இயற்கை என்பது முறைப்படி அமைக்கப்பட்ட ஒரு முறைமையின் பல்வேறு கூறுகளினால் ஆனதாகும். அதன் ஒவ்வொரு கூறும் பிறவற்றுடன் நுட்பமாகவும் விரிவாகவும் தொடர்பு கொண்டுள்ளது. அத்தொடர்பு காரணகாரிய உறவுகளினால் ஆனது. நமக்கு மிக அருகேயுள்ள உண்மையிலிருந்து அடுத்த உண்மை பிறப்பது இயற்கையின் உள்ளார்ந்த மையக் கருத்தில் ஏற்படும் எண்ண மாற்றங்களினால்தான். அக்கருத்தும் அப்பொருண்மையும் உண்மையில் வேறுவேறல்ல. அக்கருத்தின் பரிணாமமே வளர்ச்சி என்று கொள்ளப்படுகிறது.’ (CWF Hegel, Santhichewerice)
ஹெகலின் கூற்றுப்படி தனக்குத் தானே பரிணாமம் கொள்ளும் திட்டம் உடைய முழுமுதல் கருத்தின் நடைமுறை வெளிப்பாடே நாம் காணும் பிரபஞ்சம். இதிலிருந்து நாம் அறிய வேண்டியது வரலாற்றை விட தர்க்கத்தின் ஒத்திசைவுக்கே நாம் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பதே. வரலாறு விஞ்ஞானம் முதலியவற்றின் தர்க்கங்கள் எல்லாமுமே ஒன்றோடொன்று பூரணம் செய்து முழுமையை உருவாக்கும் தன்மை உடையவை. அம்முழுமை முழுமுதல் கருத்தை மேலும் மேலும் தெளிவுபடுத்தக்கூடியதாக இருக்கும். இவ்விதிகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஜடத்திற்கு உள்ளார்ந்த இச்சையும் திட்டமும் உண்டு என்றாகிறது. ஹெகல் இதனால் தன் சிந்தனையை வரலாற்று பெளதிகவாதம் என்று குறிப்பிடத் தயங்கவில்லை. 18-ஆம் நூற்றாண்டின் பெளதிகவாதச் சிந்தனையில் ஹோல்பக், ஹெல்வற்றியஸ், டிடெரோட் முதலிய பிரெஞ்சு சிந்தனையாளர்களின் பங்களிப்பு விரிவானது. பொருட்களின் பரஸ்பர உறவு, மாற்றமின்மை அகாலத்தில் அவற்றின் இருப்பு முதலியவற்றைப் பற்றி அவர்கள் கூறியவற்றை கான்ட், ஹெகல், ஷெல்லிங் முதலிய சிந்தனையாளர்களால் நிராகரிக்க முடியவில்லை. கருத்துமுதல்வாத சிந்தனை அவற்றை உள்ளடக்கியபடியே தன் தர்க்கத்தை உண்டுபண்ண வேண்டியிருந்தது. ஹெகலின் ‘இச்சையும் திடமும் உடைய’ பொருண்மை பற்றிய கருத்து இவ்வாறு உருவானதே.