நமது சொற்புலனில் ஒலி – ஆனந்தத்தை ஆக்கும் மையம் நம்மில் உள்ள விசுத்தி சக்கரம் ஆகும். (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரம், அனாகரம், விசுத்தி, ஆக்ஞை, நாதம், பிந்து, சகஸ்ரம் என்று ஒன்பது சக்தி மையங்கள் நம் உடலில் உள்ளன என்று யோக – தாந்திரீக மரபு உருவகித்துள்ளது). இந்த விசுத்தி சக்கரம் ஆக்ஞை, அனாகதம் ஆகிய இரண்டுக்கும் நடுவில் உள்ளது. நம் உயிர்மூச்சின் சொல்லுக்குரிய மையம் அது. அதன் ஒலி ‘ஹ’ என்பதாகும். தாந்திரீக முறைப்படி பிராணன் கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் சலனம் கொள்கிறது. உயிர்மூச்சு பலவகைப்படும் (முக்கிய பிராணன், அபானன், வியானன், சமானன், உதானன்) இந்த ஐந்து வகை உயிர்மூச்சுகளைப் பற்றி மாண்டூக உபநிடதம் குறிப்பிடுகிறது. முதல் வகை மூச்சான முக்கிய பிராணன் மையமானது. அது பிற நான்கு மூச்சுகளை அரசன் மந்திரிகளை நியமிப்பதுபோல நியமிக்கிறது. பிராணன் இதயத்தில் உள்ளது. அபானன் ஜீரண உறுப்புகளில், சமானன் நுரையீரலில், உதானன் உடலில் உயிரை நிலைநிறுத்துகிறது. வியானன் பிரக்ஞையை கட்டுப்படுத்துகிறது). சொல்லுக்கு சக்தியளிப்பது வியானன். முக்கியப் பிராணன் வியானனில் சொல்லுக்குரிய சக்தியை நிலைநிறுத்துகிறது. அதுவே முதல் மெய்யெழுத்தை உருவாக்குகிறது. பதினாறு மெய்யெழுத்துக்களினால் விசுத்தியெனும் தாமரையின் பதினாறு இதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மெய்யெழுத்துகளுக்குரிய பதினாறு ஸ்வரங்களையும் இவ்விதழ்களுடன் சம்பந்தப்படுத்தியுள்ளனர். இவ்வாறு இசையும் மொழியும் விசுத்தி சக்கரத்தில் இணைந்து இயங்குகின்றன. இந்திய இசையில் ஏழு ஸ்வரங்கள் உண்டு (ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம்) இவை ஏழு சிகரங்கள். இவற்றின் உச்சியில் உள்ளது விசுத்தி சக்கரம். ஒலியுடன் இணையும் மொழி வைகரி எனப்படுகிறது. (பிரக்ஞையின் ஏழு நிலைகளான சூனியாதீதம், சூனியம், நிர்வாணம், துரியம், சுஷுப்தி, ஸ்வப்னம், ஜாகரம் ஆகியவற்றுடன் இணைந்தவையாக மொழிக்கும் ஏழு நிலைகள் உள்ளன. சம்ரதீகம்,சாக்ஷிகி, சம்வர்த்திகம், பரா, பஸ்பந்த், மத்யமம், மவகரி. ஜாகரம் விழிப்புநிலை. வைகரி அதன் கேட்கும்-அறியும் மொழி. பிற ஆழ்மனங்களில் ஆழ்நிலை மொழிகள் இயங்குகின்றன. ஒன்றிலிருந்து ஒன்றாக அவை முளைத்தெழுகின்றன. இவற்றுடன் வைகுண்டம், பிரம்மலோகம், தபோலோகம், ஜனர்லோகம், சுவர்லோகம், புவர்லோகம், ஜடலோகம் எனும் ஏழு உலகங்களையும் சதானந்த கோசம், சின்மய கோசம், ஆனந்தமய கோசம், சுத்த மனோமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், அன்னமய கோசம் எனும் ஏழு உடல்களையும் இணைத்து அன்று புரிந்துகொண்டிருந்தனர். இன்றைய போதம், நனவிலி போல இவையும் பொது உருவகங்களே). வைகரி எழுவதற்கு பேசுபவனுக்குள் விசுத்தி சக்கரத்தில் வியானன் குவிய வேண்டும். இதற்கு உள்முயற்சி (அப்யந்தர பிரயத்னம்) என்று பெயர். சொல்லை தனித்துவ அடையாளம் தந்து கூற உரிய ஒலிவடிவுடன், சுவரத்துடன் அதைப் பிணைத்தாக வேண்டும். அதை ஜனித ஸ்வரம் எனலாம். அப்போது சொல் குறிப்புணர்த்தும் தன்மை உடையதாகிறது (அபிவியஞ்கம்).
எழுத்துக்களைப் பிணைத்தும் பிரித்தும் சொற்களை உருவாக்குவது அட்சர வின்யாசம். சொற்களைப் பிரித்து அர்த்தங்களை உருவாக்குவது விஸ்லேஷணம். சொற்களைப் பிணைப்பது விகர்ஷணம். சொற்களை முடிவிற்குக் கொண்டுவருவது விராமம். இவற்றை நிகழ்த்தும் பொருட்டு சொல்லின் ஒலிகளில் மாத்திரைகளை ஏற்றியிறக்க வேண்டும். இது ஸ்தோபம் எனப்படும். இசைக்காக உருவாக்கப்படும் ஒலி மாறுபாடு வர்ணஸ்தோபம். சொற்களில் அர்த்தத்தின் பொருட்டு உருவாக்கப்படும் ஒலிமாறுபாடு பதஸ்தோபம். இவ்வாறு சொல்லையும் ஒலியையும் இணைக்கும் எண்ணற்ற இலக்கண முறைகள் உள்ளன.
இந்த பிராணன்
உத்கீதம் ஆகிறது
உத் என்றால் இது
இவையெல்லாம் பிராணனால்
தாங்கி நிறுத்தப்படுபவை
சொல்லே கீதம்
உத் என்பதும் கீதமென்பதும் இணைந்து
உத்கீதமாகிறது.
உத்கீதம் என்பது பிரணவம் (ஓம்). மேற்கத்திய தத்துவ மரபில் தெகார்தேயின் இணைவுச் சித்தாந்தம் (கார்டிஷியன் கோ-ஆர்டினேட்) பல்வேறு பிரபஞ்ச தரிசனங்களை இணைத்து முழுமைப்படுத்தும் ஓர் அடிப்படை தரிசனமாகக் கருதப்படுகிறது. இந்திய மரபில் இந்த இடம் பிரணவ சித்தாந்தத்திற்கு உண்டு. நாம் பிரபஞ்சத்தை காரியம் காரணம் என இரண்டாகப் பிரித்து நிற்கும் ஓர் அறிதலாகக் காண்கிறோம். இவ்வறிதலைக் கடந்து நிற்கும் முழுமுதல் உண்மையெனவும் குறிப்பிடுகிறோம். அறியமுடியாத ஒன்றை முழு முதல் உண்மையாகவும் அறியப்படுவதை அல்லது அறியக்கூடுவதை ஆய்படு பொருளாகவும் யதார்த்தமாகவும் காண்கிறோம். அனுபவ அறிதல்கள் எல்லாமே அனுபவத்திற்குக் கட்டுப்பட்டவை. ஆகவே திரிபடைந்தவை, சார்பு நிலையுள்ளவை, நிபந்தனைக்குட்பட்டவை. (இவ்வறிதலை பெளத்த மரபு விகல்பம் என்றது) திரிபற்ற முழு முதலான காரணம் ஒன்று பிரபஞ்சத்திற்கு உள்ளது. அது விஹாரி (ஆடுபவன்). அது உருவாக்கும் தோற்றமே விஹாரம் (ஆட்டம்). (பெளத்தம் மகாதர்ம காய புத்தனை விஹாரி என்கிறது).
விஹாரம் இரண்டு நிலைகளில் உள்ளது. ஸ்தூலம், சூட்சுமம் இவ்விரண்டுக்கும் அடியில் காரணம் உள்ளது. அதற்கு அடியில் இம்மூன்றுக்கும் அடிப்படையான துரியம். துரியமே காரணமாகவும் சூட்சுமமாகவும் இறுதியில் ஸ்தூலமாகவும் தன்னை வெளிப்படுத்துகிறது. அதாவது ஸ்தூலம் சூட்சுமம் காரணம் ஆகிய மூன்று வெளிப்பாடுகளினால் பரம் தன்னை மறைத்துக் கொண்டுள்ளது; அல்லது வெளிப்படுத்துகிறது. (பரத்தின் நடுவில் ஒரு முரண் பதுங்கியுள்ளது. There is a lurking paradox in the heart of the absolute – நடராஜ குருவின் ஆப்தவாக்கியம்) இவ்வியப்பைக் குறியீட்டு ரீதியாகச் சுட்டுவதே பிரணவம். அதில் உள்ள அகாரம் பிரபஞ்சத்தின் பேரண்டத் தோற்றம் எனலாம். அது பிற அக ஒளிகளினால் துலக்கம் பெறுவது. செயற்புலன்களிலும் (கர்ம இந்திரியங்கள்) ஞானப் புலன்களிலும் (ஞான இந்திரியங்கள்) அது உயிர் கொள்கிறது. உயிர் தன்னையும் தன் சூழலையும் அறிகிறது. செயலுக்கான உத்வேகத்தை அடைகிறது. எந்தப் புலனில் தூண்டுதல் ஏற்பட்டாலும் அதை சித்தம் (பிரக்ஞை) ஏற்றுக்கொண்டு அதை விரிவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு புலனறிதல் உருவாகும்போதும் சித்தத்தின் ஆழத்திலிருந்து உள்ளுணர்வு, முன்னனுபவம், பிறவி இயல்பு, கலாசாரம் ஆகியவை சார்ந்த அக வினைகள் நீருக்கடியில் சேற்றில் வேரூன்றிய தாமரை மெல்ல மேலெழுந்து இதழ் விரிப்பதுபோல மலர்கின்றன. அப்போது நம் மனம் உலகை அறிகிறது. அறிதல் காலம், இடம், பரு, அறியும் தன்னிலை, அனுபவிக்கும் தன்னிலை, செயல்படும் தன்னிலை (காலம், தேசம், பிண்டம், ஞாத்ருத்துவம், போக்த்ருத்துவம், கர்த்ருத்துவம்) ஆகியவற்றுடன் இணைந்து ஒரு முழு அனுபவமாக மாற்றுகிறது. இவ்வனுபவம் மீண்டும் ஆழங்களுக்குச் சென்று விதை வடிவம் கொண்டு காத்திருக்கிறது. பிறகு எப்போது வேண்டுமானாலும் சுஷுப்தியிலிருந்து (ஆழ்மனத்திலிருந்து) ஸ்வப்னத்திற்கும் (உபமனதிற்கும்) அங்கிருந்து ஜாக்ரத்திற்கும் (பிரக்ஞைக்கும்) அதை முளைக்க வைத்து திருப்பிஎடுக்க நம்மால் முடிகிறது.
நம் புலனறிதல்களை நாம் ஆழத்தில் குறியீட்டு வடிவில் சேமிக்கிறோம். இவை அந்தரங்கமான படிமங்கள். அவற்றின் ஒலியடையாளமே ‘உ’ ஆகும். உ என்ற ஒலி பிரதிபாவின் குறியீடு எனலாம். புற உலகம் போலவே முடிவற்றது அவ்வுலகம். மனித கற்பனை பிரதிபாவின் விளைவே. கலைகள், இலக்கியம், விஞ்ஞானம் ஆகிய அனைத்திற்கும் அடிப்படையான அக இயக்கம் இங்குதான் நிகழ்கிறது. புலன் மூலமும் மனம் மூலமும் கிடைக்கப் பெறும் அறிவையெல்லாம் அது தனக்குரிய விதத்தில் மாற்றியமைத்து தொகுத்துக்கொள்கிறது.
இவ்வாறு இவ்விரு அமைப்புகளும் இடைவிடாது இயங்குவதனூடாக இவற்றின் அடிப்படையான பிரம்மாண்டங்களை மறைத்து விடுகின்றன. இவையிரண்டுக்கும் காரணம் உள்ளே தனித்திருக்கிறது. எவ்வாறு ஸ்வப்னத்திலிருந்து ஜாக்ரத் தாமரைபோல எழுந்து இதழ் விரிக்கிறதோ அதைப்போல இவையனைத்தும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மூல காரணத்திலிருந்து முளைத்தெழுகின்றன. இவ்வியக்கத்திற்கான ஓர் இயக்க வரைபடமே பிரணவம். ஒன்றிலிருந்து ஒன்றாக எழுந்து முரண்பட்டு இயங்கக் கூடிய இம்மனப் பிரபஞ்சங்களின் இயல்புகளை பெருமளவு சரியாக ஊகிக்கும் ஃப்ராய்டு, யுங் முதலியவர்கள் இவற்றின் இயக்கங்களின் முரண்பாடுகளை ஒருங்கிணைத்து விளக்கும் பொது சித்தாந்தம் ஒன்றை உருவாக்க முடியாமல் பெரிதும் குழம்புகிறார்கள்.
புலனறிதலின் உலகில் இயற்கையின் பருவடிவச் சிறப்பியல்புகள் (வடிவம் முதலியவை) முதன்மையாக உள்ளன. ஆனால் பிரதிபாவின் உலகில் அவற்றின் கணங்களே முதன்மைப்படுகின்றன. ஆகவேதான் கனவில் நாம் காண்பவை எல்லாம் உணர்ச்சிகளினால் தீவிரமாக அடையாளப்படுத்தப்பட்டவையாக உள்ளன. இவ்வாறு இரு பிரபஞ்சங்களும் மாறிமாறி ஆக்கி இயக்குகின்றன. புலன்களுக்கு சக்தி தருவதற்காக ஸ்வப்னத்தை உருவாக்குகிறது. சாமானிய மன இயக்கத்தில் இவ்விரு தளங்களுக்கும் மாறிமாறி உயிர்சக்தி சுழன்றபடி உள்ளது. அடுத்த கட்டம் பற்றி அறிய பொதுவாக அனைவரும் விரும்புவதோ முயல்வதோ இல்லை. காரணமும், காரணத்திற்கு காரணமான துரியமுமோ ‘ம்’ என்ற அரை எழுத்தால் சுட்டப்படுகின்றன. அது மெளனத்திற்குரிய எழுத்து. இவ்வாறு மொழியின் இயல்பை பிரகதாரண்யகம் விளக்குகிறது. பிராணனில் இருந்து வருவது சொல். தன் முழுமை நிலையில் பிரணவம் ஆகிறது. பிராணனில் உரு அலையாகப் பிறந்து பிரபஞ்ச முழுமையில் நிறைவு பெறுகிறது சொல் எனலாம். இதுவே மொழி பற்றிய நமது மரபு சார்ந்த பிரக்ஞை ஆகும்.
(அவ்வெனும் எழுத்தினால் அகண்டமாகி நின்றனை
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து வந்தனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அகர உகர மகாரமாய் நின்றதே சிவாயமே
எனும் சிவவாக்கியர் பாடலில் மொத்த பிரபஞ்ச சிருஷ்டி இயக்கத்தையும் தொகுக்க முயலும் நோக்கு உள்ளதை இங்கு நினைவு கூறலாம்)
(நித்ய சைதன்ய யதி பிரகதாரண்யக உபநிடதத்திற்கு எழுதிய உரை மூன்று பாகங்களாக ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் வெளியாகியுள்ளது. இங்கு அதிலுள்ள ஒரு பகுதி எளிமைப்படுத்தப்பட்டு மொழிபெயர்ப்பாகியுள்ளது. அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை மொழிபெயர்ப்பாளரின் விளக்கக் குறிப்புகள். அத்வைத மரபு தன் ஆதார தரிசனங்களை உபநிடதங்களிலிருந்தும் தருக்க முறையை பெளத்தத்திலிருந்தும் பெற்றுக்கொண்டது. சில இடங்களில் பெளத்த ஞான மரபின் இணைக் கூறுகள் இதை விளக்கும் பொருட்டு சுட்டப்பட்டுள்ளன.)
மொழியாக்கம் : ஜெயமோகன்