பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு துறவிபோல வாழ வேண்டும் என்கிற ஆவலில் தத்துவப் பாடப்பிரிவில் சேர்ந்தேன். முறைப்படி துறவியாக மாறும் முன்னரே நான் காவி ஆடைகளை அணியத் தொடங்கியிருந்தேன். கல்லூரிக்கு வெளியே யாரேனும் என் பெயரைக் கேட்டால், அத்வைதானந்தா என்றோ சச்சிதானந்தா என்றோ அந்த நேரத்தில் சட்டென்று வாய்க்கு வருகிற ஏதோ ஒரு பெயரைச் சொல்லிவிடுவேன். விவேகானந்தரின் சரிதையைப் படித்தபோது அவரும் இதேபோல நடந்துகொண்டதைப் படித்திருந்ததால் நானும் அது போலவே இருக்க விரும்பினேன். ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு முறையான துறவியாக எப்போதும் இருந்ததில்லை. அவர் காவி உடைகளையும் அணிந்ததில்லை. ஆனால் அவர் மறைந்தபோது விவேகானந்தர் ஒரு ஹோமம் நடத்தி அதில் அவருடைய ஆடைகளையும் முடியையும் எரியூட்டினார். தமக்கு விவேகானந்தர் என்றும் பெயர் சூட்டிக்கொண்டார். அதற்குப் பிறகு அவர் தம் சகோதர சீடர்களுக்கு துறவை வழங்கினார்.
என்னாலும் அதைப் போலச் செய்யமுடியும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு எனக்கு ஒரு குரு அவசியம் என்று எண்ணினேன். ரமண மகரிஷி யாருக்கும் துறவை வழங்கியதில்லை. யாரையும் தம் சீடராக அழைத்ததுமில்லை. அதே சமயத்தில் யாராவது அவரைத் தம் குரு என்று சொல்லிக் கொள்வதை தடுத்ததுமில்லை. எனவே அவர் மறைவுக்கு முன்பு அவரைக் காணச் சென்றேன். திருவனந்தபுரத்தில் இருந்த அரசு சமஸ்கிருதக் கல்லூரியில் முதல்வராக இருந்த பேராசிரியர் கோபால பிள்ளையிடம் ரமண மகரிஷி ஆசிரமத்துக்குச் செல்லும் என் ஆவலைச் சொன்னேன். அவரும் என்னோடு வருவதாகச் சொன்னார்.
துறவு மேற்கொள்ள விரும்பும் ஒருவன் தன் தாயாரின் ஆசிகளைப் பெறுவது முக்கியம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே முதலில் நான் என் அம்மாவைப் பார்க்கச் சென்றேன். என் அப்பா வீட்டில் இல்லாத நேரம். எப்போதும் வெளியே செல்லாத மனிதரான அவர் அன்றைக்கு எங்கோ வெளியே சென்றிருந்தார். என் அம்மாவிடம் நான் துறவுமேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவருடைய ஆசிகளை வாங்க வந்திருப்பதாகவும் சொன்னேன். அதைக்கேட்டதும் அவருடைய முகம் பொலிவுற்றது. புன்சிரிப்புடன் தன் கைகளை என் தலையின் மீது வைத்து இத்தருணத்துக்காகவே நெடுநாட்களாகக் காத்திருந்ததாகச் சொன்னார் அவர். “நீ பிறப்பதற்கு முன்னாலேயே நாராயண குருவின் சேவைகளைத் தொடர்ந்து செய்துவர எனக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடு என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்” என்று மேலும் சொன்னார் அவர். என் தீர்மானத்தைக் கேட்டதும் என் அம்மா உணர்ச்சி பொங்க அழுது புலம்புவார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பி வந்தேன். பேராசிரியர் கோபால பிள்ளையுடன் ரயிலேறினேன்.
அந்த நாட்களில் ரமண ஆசிரமத்தில் எனக்கொரு நண்பருண்டு. அவர் பெயர் ஜெயராம். அதற்கு முன்னால் ஒருமுறை சென்றிருந்தபோது மற்றொருவரும் நண்பரானார். அவர் பெயர் ஶ்ரீராம். அவர் தற்சமயம் (1990) கன்ஹன்காத்தில் உள்ள ஆனந்த ஆசிரமத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். தற்போது அவர் பெயர் சச்சிதானந்தா. அவர் சுவாமி ராமதாஸ் அவர்களின் சீடர். அந்தக் காலத்தில் நாங்கள் அனைவரும் ஒரு குழுவாகச் சுற்றியலைந்தோம். ஶ்ரீராம், ஜெயராம், ஜெயஜெயராம் என அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
ஜெயராம் சுவாமி ராமதேவானந்தா என்று பெயரை மாற்றிக்கொண்டார். ஆசிரமத்தில் மகரிஷிக்குப் பதிலாக நின்று துறவு வழங்கும்படி சுவாமி ராமதேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டேன். நான் மகரிஷியையே குருவாக நினைப்பதாகவும் ஹோமத்துக்குப் பிறகு காவியுடைகளை எனக்கு எடுத்துக் கொடுத்து, ஏற்கனவே தீர்மானித்திருந்த நித்ய சைதன்ய யதி என்னும் பெயரால் அழைத்து துறவு வழங்கவேண்டும் என்றும் சொல்லி வைத்தேன். பிரம்மசாரிகளுக்கே சைதன்யர் என்னும் பெயர் பொருத்தமென்றும் துறவிக்கு மிகவும் பொருத்தமான பெயர் சுவாமி நித்யானந்தா என்றுதான் இருக்க வேண்டும் என்றும் சொன்னார் அவர். சுவாமி என்கிற சொல்லின்மீது ஏனோ இனம்புரியாத வெறுப்பு எனக்கு ஏற்படுவதாகவும் ஒரு துறவியின் பெயருடன் ஆனந்தம் என்கிற சொல் இணைந்திருப்பது ஒருவித அகம்பாவத்தின் வெளிப்பாடாக இருக்கிறது என்றும் அவரிடம் எடுத்துச் சொன்னேன்.
சுவாமி என்கிற சொல்லுக்கு பதிலாக நான் யதி என்னும் சொல்லைத் தேர்ந்தெடுத்தேன். ஹோமச் சடங்குகளுக்குப் பிறகு அவர் என்னை யதி நித்ய சைதன்ய என்று அழைத்தார். ஆனால் மக்கள் என்னை சுவாமி என்கிற ஒட்டுச் சொல் இல்லாமல் அழைக்கத் தயங்கினார்கள். அதனால் பெயருக்கு இறுதியில் சுவாமி என்கிற சொல்லைச் சேர்த்து யதி நித்ய சைதன்ய சுவாமி என்று அழைக்கத் தொடங்கினார்கள். உடனே நான் யதி என்கிற ஒட்டுச்சொல்லை பெயருக்கு இறுதியில் கொண்டுவந்து நித்ய சைதன்ய யதி என்று அழைத்துக்கொண்டேன். அதிருஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ, நடராஜ குருவின் மறைவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்க வேண்டியிருந்ததால் என் பெயருடன் குரு என்கிற சொல் முன்னொட்டாக ஒட்டிக் கொண்டது. நான் யாரையும் சீடராக வரித்துக் கொள்ளவில்லை. என்றாலும் குரு என்கிற சொல் தலைக்குப் பொருந்தாத மகுடம்போல் என் பெயருடன் ஒட்டிக்கொண்டுள்ளது.
பல்கலைக் கழகத்திலிருந்து ஆன்மீக அனுபவத்தை நோக்கி
திருவண்ணாமலையிலிருந்து மழித்த தலையுடனும் காவி ஆடைகளுடனும் துறவிக் கோலத்தில் திரும்பிய பின் எனது புதிய பெயர் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. என்னைச் சுற்றியும் அதே பழைய உலகம்தான். ஆனால் என் மனதுக்குள் ஏதோ மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சீருடை அணிந்த போலீஸ்காரன் அந்த உடுப்புக்குத் தகுதியானவனாக தன்னைத் தானாக வளர்த்துக்கொள்வது போன்றது அந்த அனுபவம் என்று நடராஜ குரு ஒருமுறை குறிப்பிட்டார். உண்மையிலேயே அது அத்தகைய அனுபவம்தான். எந்தத் துறவியையும் நான் முன்மாதிரியாகக் கொள்ளவில்லை. உலக வாழ்வை எல்லோரும் போல வாழ்ந்துகொண்டிருக்கும்போதே, வித்தியாசமான முறையில் நடக்கவும் பார்க்கவும் பேசவும் விரும்பினேன்.
“இளவயதுத் துறவிக் கோலம் தோல்வியில் முடியக்கூடும். நாடக மேடையில் துறவிக் கோலம் ஒரு நடிகனுக்குப் புகழைக் கொண்டுவரக்கூடும். ஆனால் அக்கோலம் வெறும் பாவனை என்பதும், உண்மையல்ல என்பதும் மக்களுக்குத் தெரிந்தே இருக்கும்” என்று நீண்ட காலத்துக்கு முன்னால் நடராஜ குரு சொன்ன ஒன்றிரண்டு அறிவுரைகளை நினைத்துக்கொண்டேன். எனக்குள் பல மாற்றங்கள் உருவாகின என் தத்துவ விளக்கங்களாலும் நியாயத் தீர்ப்புகளாலும் மற்றவர்கள் மெச்சும்படி நடந்துகொள்வதை எனக்கு நானே தடைவிதித்துக் கொண்டதே என்னிடம் நிகழ்ந்த முதல் மாற்றம்.
பல்கலைக் கழக இறுதித் தேர்வுகள் மிக வேகமாக நெருங்கி விட்டன. வெறும் கல்லூரிப் பாட வினாவிடைகளுடன் என்னை நான் முடக்கிக் கொள்ளவில்லை. தேர்வுக்கான பாடங்களைப் படிப்பதைத் தாண்டி பலவிதமான நூல்களையெல்லாம் படித்துக்கொண்டிருந்தேன். என் இரு நண்பர்கள் முதல் வகுப்பில் தேறுவதற்காகவும் முடிந்தால் முதல் தகுதிநிலை பெறுவதற்காகவும் பெருமுயற்சி செய்து வந்தார்கள். ஏறத்தாழ நடமாடும் தத்துவஞானி என்னும் நிலையை நான் அடைந்துவிட்டதால் ஒரு சாதாரணச் சான்றிதழ் உதவியுடன் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் எனக்கு நாட்டமில்லை.
தேர்வுகள் முடிந்ததும் அன்றே திருவனந்தபுரத்திலிருந்து வெளியேறி சுவாமி விவேகானந்தர் சென்றதைப்போல என் முக்கியமான தேடலை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. ஶ்ரீபரமஹம்ஸர் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரியை நோக்கிப் பயணமானார் விவேகானந்தர். வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களால் சூழப்பட்ட கன்னியாகுமரியில் கரைப்பகுதியிலிருந்து தள்ளியிருந்த பாறையொன்றை அடைந்து அதன் மீது உட்கார்ந்தார்.
இதற்கிடையில் என் ரகசியத் திட்டம் பற்றிய செய்தி, அடுத்தவர்கள் சொல்லும் எந்தச் செய்தியையும் காதுகொடுத்துக் கேட்கிற பொறுமையே இல்லாத என் குடும்ப உறவினர் ஒருவரை எட்டிவிட்டது. ஒரு நண்பகல் வேளையில் என்னைப் பார்க்க வந்தார் அவர். மறுநாள் நடக்க இருந்த நுண்பொருள் கோட்பாட்டியல் பற்றிய எழுத்துத் தேர்வுக்கு பாடங்ளை அன்று படிக்கத் திட்டமிட்டிருந்தேன். வகுப்பில் ஏற்பட்டிருந்த பொதுவான எண்ணம் நுண்பொருள் கோட்பாட்டியல் பாடப்பிரிவு தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்பதுதான். வகுப்பில் கொடுக்கப்படும் குறிப்புகளை நான் சரியாக கவனிப்பதில்லை என்பதால் போராசிரியர்களும் அவ்வண்ணமே நினைத்திருந்தனர். இந்தியப் பல்கலைக்கழகங்களில் – குறிப்பாக கேரளத்தில் – பாடப்புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கான பதில்களை மனப்பாடம் செய்து எழுதாவிட்டால் தேர்வுத்தாட்களைத் திருத்துபவர் எழுதுபவனுக்கு எதுவும் தெரியாது என்றே நினைப்பார்.
இந்துக் குடும்பமொன்றில் தலைமகனாகப் பிறந்த ஒருவனுடைய கடமைகளைப் பற்றியும் தம்மைத் தொடர்ந்து பிறந்தவர்களையெல்லாம் ஒரு தந்தையின் இடத்திலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் என் உறவினர் மிகப்பெரிய சொற்பொழிவை நிகழ்த்தத் தொடங்கிவிட்டார். ஒரு நாடோடியைப் போல மறுபடியும் குடும்பத்தைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு வெளியேறுவது பெருங்குற்றம் என்று உணர்த்த அவர் படாதபாடுபட்டார். ஏற்கனவே எட்டு ஆண்டுக் காலம் வீட்டைவிட்டு வெளியேறி வாழ்ந்த அனுபவம் எனக்கிருந்தது. என் உதாசீனத்தால்தான் என் தந்தையின் இதயம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் நம்பினார்.
துறவிக்கோலத்துக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டிருந்ததாலும் என்னுடைய பெயரோடு யதி என்கிற சொல்லைச் சேர்த்திருந்ததாலும் என் கோபத்தை உள்ளுக்குள்ளேயே விழுங்கிக்கொள்ளவும் தொண்டைக்கடியில் குமுறும் சூடான வார்த்தைகளை விழுங்கவும் வேண்டியிருந்தது. என் தேர்வுகள் முடியும் வரையில் என்னைத் தனிமையில் விடும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். ஆனாலும் அவர் தம் அறிவுரை மழைகளை தொடர்ந்து பொழிந்தபடியே இருந்தார்.
இரவு பன்னிரண்டு மணியளவில் விளக்குகளை அணைத்துவிட்டு தூங்கச் செல்ல நினைத்திருந்தேன். அந்த நாட்களில் பல்கலைக்கழக நூலகத்தையே படிப்பறையாகவும் வசிக்கும் அறையாகவும் வைத்துக்கொண்டிருந்தேன். பெரிய மேசை ஒன்றின் மீது படுத்துத் தூங்கிவிடுவேன். அன்று அந்த உறவுக்காரரும் என்னோடு அந்த மேசையில் படுத்துத் தூங்கினார். அவர் தொடர்ந்து அந்த மேசையில் புரண்டுகொண்டே இருந்தார். என் காதுக்கருகே அவர் வாய் இருந்ததால் கடுமையான குறட்டையொலி கேட்டவண்ணம் இருந்தது. அதிகாலை நான்குமணி வரையில் இந்த நிலை தொடர்ந்தது.
ஒன்பதரை மணியளவில் தேர்வு நடந்த அறைக்குச் சென்றபோது, தூக்க மயக்கம் என்னைக் கலக்கியது. என்னால் தலையை நிமிர்த்தவே முடியவில்லை. கேள்வித்தாளை ஒருமுறை பார்த்தேன். எல்லாம் தெரிந்த கேள்விகளாகவே இருந்தன. ஆனால் என் இமைகள் திறக்கவே இயலாதபடி கனமாக இருந்தன. விரல்களிடையே பேனா நிற்க முடியாமல் தடுமாறியது. மூளையில் எதுவும் தோன்றவில்லை. மேசை மீது தடித்த வலது கையே தலையணையாக, கைமீது தலைவைத்து தூங்கிவிட்டேன்.
மாணவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் மிகவும் இரக்க குணமுள்ளவராக இருந்தார். எனக்கு என்ன ஆனது என்று கேட்டார் அவர். அரைமணி நேரம் கழித்து என்னை எழுப்பும்படி அவரை கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். முதல்நாள் இரவு நடந்த குழப்பங்களையெல்லாம் அவரிடம் எடுத்துச் சொன்னேன். அவர் என்னைப் புரிந்துகொண்டார். அரைமணி நேரம் கழித்து என்னை எழுப்பி முகம் கழுவச் சொல்லி எஞ்சிய நேரத்தில் தேர்வெழுதும்படி சொன்னார். ஏதோ நிறைவு தரும் வகையில் அத்தேர்வை எழுதினேன்.
தேர்வுகள் எல்லாம் முடிந்தபிறகு, எனக்காக இருஜோடி துணிமணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு நான் வைத்திருந்த எல்லாவற்றையும் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட நினைத்தேன். என்வசம் இருந்த எல்லாப் புத்தகங்களையும், கடிகாரம், எழுதுபொருட்கள் ஆகியவற்றையும் என் நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். நேர்முகத் தேர்வு நடைபெற்ற தினம் எனக்கு மிகவும் பிடித்தமான பேராசிரியரான திரு சேஷாத்ரி அவர்களே கேள்விகள் கேட்க வந்தார். அவருடன் வேறு வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து மூன்று பேராசிரியர்கள் வந்திருந்தார்கள்.
நேர்முகத் தேர்வுக்குப் பிறகு, என் பேராசிரியர்கள் வெளியே வந்து என்னை வாழ்த்தினர். நுண்பொருள் கோட்பாட்டியல் தாளில் நான் விடையெழுதிய விதம் எல்லோருக்கும் பெருத்த ஏமாற்றம் தந்ததென்றும் யாருக்கும் முதல் வகுப்பு தருவதில்லை என்று நிர்வாகம் தீர்மானித்திருப்பதாகவும் சொன்னார் அவர். அதனால் எனக்கு இரண்டாவது வகுப்பும் முதல் தகுதியும் தரப்பட்டது. இத்தகுதியின் காரணமாக அடுத்தபடியான முதுகலை பட்டப்படிப்பில் எழுத்துத் தேர்வு இல்லாமலேயே சேர்ந்துகொள்ள முடியும்.
என் எதிர்காலத் திட்டம் பற்றி என் பேராசிரியர் என்னிடம் கேட்டார். எந்த நோக்கத்துக்காக தத்துவத்தைப் பாடமாக எடுத்தேனோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு தெரியாத இடம் நோக்கிச் செல்ல இருப்பதாகச் சொன்னேன். அவர் பட்டம் பெற்ற தருணத்தில் அதுவே தன் குறிக்கோளாகவும் இருந்ததாகச் சொன்னார். கூடவே ஒரு அறிவுரையையும் வழங்கினார். “கடவுள் எல்லோருடைய இதயங்களிலும் நிறைந்திருக்கிறார். சாலைகளில் சந்திக்க நேர்கிற எல்லோரிடமும் கடவுளை அடையாளம் காண முடியும். எனவே எப்போதும் கடவுளின் துணையோடு இரு. இந்தக் கல்லூரியில் நீ கற்ற தத்துவம் வெறும் ஆரம்ப அடிகள் மட்டுமே. பிளேட்டோ, சங்கரர், ஹெகல் என எந்தத் தத்துவக் கண்டுபிடிப்புகளையும் உன் வாழ்வில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. அதற்கு மாறாக, மற்ற அசலான தத்துவ ஞானிகளைப் போலவே நீயே ஒரு தத்துவத்தைக் கண்டுபிடி” என்றார்.
“ஒரு தத்துவஞானியின் கையில் தர்க்கம் என்பது வலிமையான ஆயுதமாக விளங்க முடியும். ஆனால் அதே நேரத்தில் கவிதையின் நுட்பமான அழகை ரசிப்பதிலிருந்தும் இசையில் கரைவதிலிருந்தும் உன்னை நீயே விலக்கிக் கொள்ளக்கூடாது” என்றும் எச்சரித்தார். இறுதியாக நான் எப்போதும் ஆசிரியராக இருக்க வேண்டும் என்றும், எனக்கு முழுக்க முழுக்க தெரிகிற விஷயத்தையே மற்றவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் என்றும் சொன்னார்.
என்னைத் தழுவி என் கைகளில் முத்தமிட்டார். அவர் காலில் விழுந்து வணங்கினேன். ஒரு துறவி ஒரு சம்சாரியின் காலில் விழுவதை ஒரு மரபுவாதியான அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சிறிது நேரம் வருத்தத்தில் மூழ்கினார். அக்கணத்திலிருந்து அடுத்த நடவடிக்கைக்கும் எனக்கும் இடையே எப்போதும் நடக்கும் இடைக்காட்சியாக இந்த ஐயப்பாடுடன் கூடிய உறுதியின்மை தொடரத் தொடங்கியது.
கன்னியாகுமரிக்குச் சென்று மூன்றுநாட்களில் திரும்பி வரும்படி டாக்டர் மீஸ் அவர்கள் என்னிடம் சொன்னபோது பலவிதமான விதிகளை விதித்தார். இப்போது, அதே இடத்துக்கு விடுதலையான மனிதனாகப் புறப்பட்டேன். திரும்பிவரும் நோக்கமோ, கால அளவோ எதுவுமின்றிப் புறப்பட்டேன். என் தோள்பையில் நான் வைத்திருந்த மாற்றுத் துணிகளைத் தவிர பகவத் கீதையும் நாராயண குருவின் எல்லாப் படைப்புகளும் மட்டுமே இருந்தன. கூடவே ஓவியம் வரையவும் பயணக் குறிப்புகளை எழுதவும் ஒரு குறிப்பேடு இருந்தது.
இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி தொடர்ந்து செல்வதும் எந்த இடத்திலும் மூன்று இரவுகளுக்கு மேல் தங்காமல் செல்வதும் துறவிகளின் பழக்கமாக இருந்தது. அப்பயணத்தின்போது நான் குறித்து வைத்த பல குறிப்புகள் காணாமல் போய்விட்டன. எந்த இடத்திலும் இரண்டு இரவுகளுக்கு மேல் தங்கவில்லை என்பது மட்டும் நன்றாக நினைவில் உள்ளது. கன்னியாகுமரி, திருச்செந்தூர், குமாரகோவில், மருத்துவமலை, அருவிப்புரம், சிவகிரி மற்றும் சுவாமி வித்யானந்த தீர்த்தபாதர் வாழும் ஆசிரமம் ஆகிய இடங்களில் தங்கினேன்.
செங்கோட்டை அருகே கேரள எல்லையைக் கடந்து தமிழக எல்லைக்குள் நுழைந்தேன். அதற்கப்புறம் வெப்பநிலை மிகவும் கடுமையாக இருந்தது. மேல்சட்டை அணிந்துகொள்ளும் அவசியமே இல்லாமலிருந்தது. அதனால் என் சட்டைகளை அவை தேவைப்படக்கூடிய ஒருவருக்குக் கொடுத்துவிட்டேன். பல கோயில்களுக்குச் சென்றேன். அவை தோன்றிய விதம், அவை தொடர்பான கதைகள் ஆகியவற்றை சேகரித்தேன். அக்கோயில்களையும் கோயில்களில் காணப்படும் அழகான சிற்பங்களையும் ஓவியங்களாக என் குறிப்பேட்டில் தீட்டிக்கொண்டேன்.
முடிவின்மையை நோக்கி விரிந்திருக்கும் கித்தானாக வாழ்க்கை தோன்றியது. வாழ்வில் என் கற்பனைக்கு அகப்படக்கூடிய எல்லாவற்றையும் வாழ்நாள் முழுக்க அதில் தீட்டிக்கொண்டே இருந்தேன். சிறிய கோயிலாக இருந்தாலும் சரி பெரிய கோயிலாக இருந்தாலும் சரி, வழியில் கண்ட எல்லாக் கோயில்களுக்கும் சென்றேன். வடிவ அழகுடனும் தனிமையுடனும் காணப்படும் சில தேவாலயங்களிலும் சில மாலைவேளைகளைக் கழித்தேன். மசூதிக்குள் செல்லும் துணிச்சல் மட்டும் வரவில்லை. ஆனால் பல முஸ்லீம்கள் தம் வீடுகளுக்கு என்னை அழைத்துச்சென்று உபசரித்தார்கள். இஸ்லாமியப் பாடல் முறைகள் மரபான இந்து முறைகளுக்கு நெருக்கமானவை. அவர்கள் வசிக்கும் பகுதிகளிலே, இந்துக்களுக்கு இருப்பதைப் போலவே அங்கிருந்த விநாயகர், முருகன், அம்மன் ஆகிய கடவுளரின் சக்தி தொடர்பான நம்பிக்கைகள் அவர்களுக்கும் இருந்தன.
அந்த நாட்களில் நுட்பமான அனுபவங்களினூடே இந்தியாவின் பண்பாட்டை அறிவதற்கு இந்தியாவெங்கும் பிரயாணம் செய்வது ஒன்றே கவர்ச்சியான வழியாக இருந்தது. அநேகமாக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புதிரை அவிழ்க்க எனக்குத் துணையாக இருந்த ஒரு புது மனிதனை நான் சந்தித்தேன். ஆழ்ந்த தியானத்தில் அமிழ என்னைத் தூண்டுகிற ஒருவரை அல்லது திரும்பத் திரும்ப உச்சரிக்கும் மந்திரத்தின் ஆற்றலை எடுத்துரைக்கும் ஒருவரை நான் ஒவ்வொரு நாளும் சந்தித்தேன். பழமையான இந்தியாவில் இது இன்றும் சாத்தியமாகலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிற வாழ்க்கை முறைகளின் அசிங்கங்களாலும் வன்முறைகளாலும் இந்தியாவின் நிகழ்கால முகம் மூடிக்கிடக்கிறது. ஒரு காலத்தில் இந்தியப் பண்பாட்டு வரலாற்றை உட்செரித்துக் கொண்டிருந்த மக்கள் அழகான இதயம் கொண்ட பழைய இந்தியாவை மறந்துவிட்டார்கள். அவை அனைத்தும் தொடர்ச்சிகளற்ற துண்டுதுண்டுக் கதைகளாகச் சிதறி மறக்கப்பட்டுவிட்டன.
(Love and Blessings : The Autobiography of Guru Niya Chaitanya Yati. Edited by Peter Oppenheimer)
தமிழில்: பாவண்ணன்