நம்முடைய எந்தப் பகுதி உண்மையில் ‘நாம்’? அது நாம் உண்ணும் உணவா, நம்முடைய எலும்புகளின் மஜ்ஜையாக மாறும் உணவு ஊட்டமா, நம் மூளையின் செல்களா, அல்லது நம்முடைய மத்திய நரம்பு மண்டலமா, அல்லது நம்முடைய தசைகளா? நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் பெரிதாகக் குறைக்காமல் நம்முடைய சில பகுதிகளை நீக்கிவிட முடியும்; வேறு சில பகுதிகளை நீக்கினால் நாம் இறந்துவிடுவோம். இரண்டாவதாகச் சொன்னதை ‘நாம் யாராக இருக்கிறோம்’ என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த வகையான ஆய்வு யாராலும் மேற்கொள்ளப்படவில்லை. பேய்கள், ஆவிகள், ஆன்மா மற்றும் வாழ்க்கை, மரணம் ஆகியவை பற்றி மக்க்ள் பேசுகிறார்கள். மொத்தத்தில், மிக முக்கிய விஷயமான வாழ்க்கை மற்றும் அதனுடைய மரணம் பற்றி எந்த ஆழ்ந்த ஆய்வையும் மேற்கொள்ளாத, மூட நம்பிக்கைகள் நிரம்பிய ஒரு மக்கள் திரளின் மத்தியில் நாம் வாழ்வதாகத் தோன்றுகிறது.
நாம் அடிக்கடி, குறிப்பாக இந்தியாவில், முற்பிறவி பற்றிய நினைவுகள் மற்றும் மறுபிறவி பற்றிய உதாரணங்கள் குறித்த விசித்திரக் கதைகளைக் கேட்கிறோம். மறுபிறவி பற்றிய நம் ஊகங்களைப் பலவீனமடையச் செய்யும் எதிர்க்கோட்பாடுகளும் உள்ளன. சில சமயங்களில் மூன்று அல்லது நான்கு வயதுள்ள ஒரு சிறுவன், இவன் தெரிந்துகொள்ள சாத்தியமில்லாத, பல வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு கொலையை விவரிப்பதை, மறுபிறவியை நம்புவதற்கான ஒரு காரணமாகக் காட்டுகிறார்கள். அந்தக் கொலையோடு தொடர்புடைய நபர்களை அவனால் அடையாளம் காட்டமுடியும். அந்தக் கொலை குறித்த விவரணையை அவனால் தரமுடிகிறது. அதன் பிறகு, கொல்லப்பட்ட நபராகத் தன்னையே அவன் அடையாளம் காண்கிறான். மக்கள் இது முற்பிறவி நிகழ்வாகத்தான் இருக்கவேண்டும் என்று உறுதியாக அறிவிக்கிறார்கள்.
இதற்கு எதிரான கோட்பாடு, கூட்டு நனவிலி பற்றிய யுங்கின் கோட்பாட்டை ஒத்துள்ளது. ஒரு முக்கிய நிகழ்வு நடக்கும்போது, ஒவ்வொருவருடைய மனதின் ஆழ் அடுக்குகளுக்குள் அது சென்று படிகிறது. அன்றாட வாழ்வின் செயல்பாடுகளில் அம்மக்கள் ஈடுபட்டு கவனம் கொள்ளும்போது அப்பதிவு இன்னும் இன்னும் ஆழங்களுக்குள் தள்ளப்படுகிறது. இது ஒரு தனித்த நினைவு இல்லை; சமூக மயமாக்கப்பட்ட ஒரு கூட்டு நினைவு. தனித்த நிகழ்வுகள் சுற்றிச் சுழன்று மனதின் மேற்பரப்புக்கு மீண்டும் வருவதற்கு வாய்ப்புகளை அடைவதுபோல, கூட்டு நனவிலியும் சுழன்று அந்தச் சிறுவனைப் போன்ற ஒருவரின் மனம் வழியாக அதன் நினைவை வெளியே தள்ளுகிறது. அந்தக் குழந்தை மறுபிறவி அடைந்த குழந்தையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கூட்டு நனவிலி கண்டடையும் வடிகாலாக அது இருக்கலாம். உங்கள் உடல் அமைப்பில் பாக்டீரியாவோ, வைரஸோ, அல்லது நோய் உண்டாக்கும் ஏதோ ஒரு காரணியோ இருந்தால், அது நீண்ட நாட்களுக்கு செயலற்றதாக முடங்கியிருந்து, பிறகு உடம்பின் ஏதோ ஒரு பகுதியில், எதிர்ப்பு குறைவாக இருக்கும்போது அங்கு அது மேலெழும்பி வருகிறது. அதே போலவே இதுவும் நடக்கலாம். மேலும், குறி சொல்லுதல், தொலைவில் நடப்பவற்றை உணர்தல் போன்றவை பற்றியும் கோட்பாடுகள் உள்ளன. மறுபிறவிக்கு எதிரான கோட்பாடுகளையும் மீறி பகுத்தறிவுக்குப் புறம்பான, விசித்திர விஷயங்களை மக்கள் தொடர்ந்து விரும்புகிறார்கள். இது நம்மிடமுள்ள தொல்கதையை உருவாக்கும் அம்சத்தைத் தொடுகிறது.
நான் ஒரு தீக்குச்சியை உரசும்போது ஒரு பிரத்யேக சத்தத்துடன் அது கொழுந்துவிட்டு எரிகிறது. பிறகு நான் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தும்போது, அதுபோன்ற சத்தத்தை அது உண்டாக்குவதில்லை. மெழுகுவர்த்தி ஒரு யோகியைப்போல எரிகிறது. தீக்குச்சி ஒரு ரெளடியைப் போல எரிகிறது. இதற்கு அவற்றின் மூலக்கூறுகளே காரணம். இதுபோலவே நாமும் நம்மை மெழுவர்த்திகளைப்போல இருப்பதாக நினைத்துக் கொள்ளலாம். ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தப்படுகிறது; அந்த நாள் முதல் அது எரிகிறது. இறுதியில் மெழுகும், திரியும் தீர்ந்து போகின்றன. அவ்வளவுதான் அது.
‘நிர்வாணம்’ என்று பொருள்படும், ‘எரிந்து தீர்ந்து போவது’ என்பதைப் பற்றி புத்தர் பேசும் கோட்பாடு இதுதான். ஓர் உடல் எரிந்து தீர்ந்துபோய் இந்த அருஞ்செயலைச் செய்துவிடும் என்று அவர் நினைப்பதில்லை. அவர் ஒரு தொடரைப் பற்றிச் சிந்திக்கிறார். அவருடைய கருத்துப்படி, உங்களுக்கு எண்பது அல்லது தொண்ணூறு வயது ஆகும்போது இறந்து போகிறீர்கள்; உடல்தான் மறைந்து போகிறது; உடலின் தேவை தொடர்கிறது; முன்வினைப்பயனின் திரட்சி இன்னொரு வடிவத்தை எடுப்பதால் இந்தத் தேவை தொடர்கிறது. முன்வினைப்பயன் என்ற உந்துவிசையை நாம் ஓர் அமைப்புமுறைக்குள் செலுத்துகிறோம். அந்த உந்துவிசையின் ஒவ்வொரு பகுதியும் நிறுத்தப்படும்போது, அதற்கு எரிபொருள் இடப்படாதபோது அது எரிந்து தீர்ந்து போகிறது. கர்மவினைகளின் தொடரான இந்த இறப்பு, ஒரு மெழுகுவர்த்தி அல்லது ஒரு தீ எரிந்து போவதைப்போன்றது.
ஒரு தொடர் என்று நாம் நினைத்துக்கொள்ள வேண்டுமா? தனித்தனியாக மெழுகுவர்த்திகளைப் போல் அதனதன் நறுமணத்தோடு அல்லது துர்நாற்றத்தோடு நாமும் நம்மை தனித்தனி நிகழ்வுகளாக ஏன் கருதிக் கொள்ளக்கூடாது? ஒரு நபரின் நறுமணம் இன்னொரு நபரின் துர்நாற்றம். வாழ்க்கையை எரியும் மெழுகுவர்த்தியாக பாவித்தால் மரண பயம் போய்விடும்.
என்னை எப்படி பயப்படுத்த முடியும்? நான் ஒரு மெழுகுவர்த்தி. என்னுடைய மெழுகின் அளவு வரம்புடையது. அது எல்லா நேரமும் எரிந்துகொண்டிருக்கிரது என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு சுவாசத்தின் போதும் கொஞ்சம் சக்தி வெளியேறுகிறது. என்னுடைய ஒவ்வொரு இதயத்துடிப்பின் போதும் கொஞ்சம் சக்தி தீர்ந்து போகிறது. என் இரைப்பைக்குள் ஒவ்வொரு முறை உணவு இடப்படும்போதும் என் வயிறு உழைத்து தன் சக்தியை செலவழிக்கிறது. காந்தி விரும்பியதைப்போலவே சிலபேர் 120 வருடங்களுக்கு உயிரோடிருக்க விரும்புகிறார்கள். அந்தக் காரணத்துக்காக காந்தி தன்னுடைய இரைப்பைக்கு அதிகம் வேலை கொடுக்க விரும்பவில்லை. எப்போதாவது கொஞ்சம் நிலக்கடலை சாப்பிடுவார். தன்னுடைய ஜீரணமண்டலத்துக்கு அதிக வேலை கொடுக்க அவர் விரும்பவில்லை. வாழ்நாளை அதிகரிக்க ஒருவர் மேற்கொள்ளும் ஒருவகை சிக்கனப்படுத்துதல் இது. கத்துவதற்கும், குதிப்பதற்கும் பதிலாக ஒருவர் அமைதியாக உட்கார்ந்திருந்தால் சக்தி குறைவாகத்தான் செலவாகும். இது உங்கள் வாழ்வை நீடிக்கக் கூடும்.
ஆனால், முக்கிய விஷயம் என்ன? வாழ்க்கைக்கு குறிப்பிட்ட எந்த அர்த்தமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. வாழ்க்கை என்ற வகுப்பறைக்குள், எந்தத் தலைமை ஆசிரியரும் வந்து ஒவ்வொரு வாழ்க்கைக்கும் நிறைவேற்றுவதற்காக ஒரு பிரத்யேக செயல் திட்டத்தைத் தருவதில்லை. அப்படி ஒரு செயல்திட்டம் இருப்பதாக கிறிஸ்துவர்கள் சொல்கிறார்கள்; ஆனால், அவர்கள் அப்படிச் சொல்வது தேவாலயத்தை நிலைநிறுத்தத்தான். அதற்காக இந்த மாதிரி நிறைய பொய்கள் சொல்லப்பட வேண்டும். மதத்துக்குள் இருக்கும் பல சிக்கல்கள், மரணத்தை பகுத்தறிவோடு பார்ப்பதைத் தடுக்கின்றன. நான் ஒரு கிறிஸ்தவனாகவோ, இந்துவாகவோ இல்லாமலிருப்பதால் அக்கறை கொள்ளவேண்டிய பெரிய விஷயமாக மரணம் எனக்குப் படுவதில்லை. மரணத்தை தெளிவாகப் பார்ப்பதற்கான தகுதியை அது எனக்குத் தருகிறது.
நமக்கு ஏற்கனவே தெரிந்ததிலிருந்து நாம் தொடங்கவேண்டும். எனக்கு மிகத் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம், ‘முற்பிறவியைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்பதுதான். என்னால் தெரிந்துகொள்ள இயலும் என்று நான் எதிர்பார்க்காத ஒரு விஷயம், ‘மரணத்துக்குப்பின் என்ன நடக்கும்’ என்பதுதான். மரணம், தூக்கத்தைப் போன்றதாக இருக்கலாம். ஆனால், தூக்கத்தில் கூட கனவில் வருவன எல்லாம் சரியா, தவறா என்று புரிந்துகொள்ள, ‘மத்திய நரம்பு மண்டலம்’ என்று அழைக்கப்படும் நுட்பத்திறம் கூட உதவும் என்பது உறுதியில்லை. மத்திய நரம்பு மண்டலம் இல்லாமல், நான் மரணத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்படிச் செய்ய முற்றிலும் ஒரு புதுமுறையில் சிந்திக்க என்னை நான் பயிற்றுவித்துக் கொள்ளவேண்டும். ‘சிந்திக்க’ என்ற வார்த்தைகூடப் பொருந்தவில்லை. ஏனென்றால், மூளை செயல்படும்போதுதான் சிந்திப்பது என்பது நிகழமுடியும்.
நேற்று எனக்குத் தோன்றிய ஒரு கோட்பாட்டின்படி, விறகு அடுப்பு, சமையலறை அடுப்பு, இஸ்திரி பெட்டி, தட்டச்சுப்பொறி, கிதார் மற்றும் இவைபோன்ற, ஒருவருடைய வீட்டில் இருக்கும் சாதனங்கள் மற்றும் கருவியைப் போன்றவையே இந்த உடலும் அதனுடைய எல்லா உறுப்புகளும். எனக்கு இசையில் ஆர்வம் வரும்போது பியானோவை வாசிக்கிறேன். அந்த நேரத்தில் பியானோ என்னில் ஒரு பகுதி. சாப்பிட ஆசை வரும்போது சமையலறைக்குச் சென்று சாப்பிடுகிறேன். அப்போது சாப்பிடுவது என்னில் ஒரு பகுதி. இங்கிருக்கும் நாம் மட்டும் நாம் அல்ல, நாம் அனுபவித்துகொண்டிருப்பது எதுவோ, அதுவும் நாம்தான் என்று நாராயண குரு நமக்கு போதித்திருக்கிறார். இந்த உடலிலிருந்து வெளிவந்து இந்த மரமாக, இவன் மற்றும் அவனாக, நீங்கள் எல்லோருமாக, குப்பை, அழுக்கு மற்றும் கழிவறையாக, நான் காணும் எல்லாமுமாக நான் இருக்க நாராயண குரு சொன்னது எனக்கு உதவுகிறது. தனித்த, புனித, என்ற உணர்வை அது என்னிலிருந்து நீக்கி விடுகிறது. ‘நான் புனிதன் அல்லன்’ ஏனென்றால் மலக்குழியும் என்னில் ஒரு பகுதியே.
நான் அறிந்துகொள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும் முதலில் என்னுடைய அறிவாக ஆகவேண்டும். இந்தப் பிரபஞ்சத்தோடு ஒன்றிணையும் அனுபவத்தை உணர்வதே, நான் நாராயண குருவிடமிருந்து பெற்ற பெரிய உதவி. என்னுடைய இந்தச் சிறிய உடலில் நடந்துகொண்டிருப்பது, என்னுடைய சிறிய படிப்பறையில் நான் கடிதத் தொடர்பை மேற்கொள்ளும்போது நடக்கும் என்னுடைய செயல்பாட்டை ஒத்ததே. ஆனால், மற்ற சமயங்களில் நான் வெளியே போய் மக்களை சந்தித்தும் வருகிறேன்.
சில சமயங்களில் மக்கள் என்னிடம் வருவதில்லை, அவர்களுடைய கடிதங்கள் மட்டுமே வருகின்றன. இருந்தும் ஒவ்வொரு கடிதமும் அதை எழுதிய நபர் அதைப் பெற்றுக்கொண்ட நபரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதுபோலவே அந்தக் கடிதத்தோடும் தொடர்பு கொள்கிறேன். இப்படியாக நான் பரவி விரிந்துள்ளேன்.
அப்படிப் பரவியுள்ள நபராக நான் இருக்கும் பட்சத்தில் நான் இறப்பேனா? என்னுடைய அப்பாவி அப்பா, ‘தான் இறந்துவிட்டதாக நினைக்கிறார்.’ ஆனால், நான் அவரைப்பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் அவரைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கும்போது, என்னுடைய நினைவிலும், என்னுடைய சகோதரியின் நினைவிலும், மற்றும் என்னுடைய அம்மாவின் நினைவிலும் அவருடைய உருவமும், அவருடைய வார்த்தைகளும் அவருடைய நகைச்சுவைப் பேச்சுக்களும், அவருடைய பல அனுபவங்களும் வாழ்கின்றன. ஆக, என்னுடைய அப்பாவின் எவ்வளவு பகுதி இறந்து போயுள்ளது? ஆயிரக்கணக்கான மாணவர்களோடு பழகியிருக்கிறார். எங்கு நான் போனாலும், ‘ஓ, உங்களுடைய அப்பாவை எனக்குத் தெரியும். அவர் எனக்கு ஆசிரியர்’ என்று பலர் சொல்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அவரைப் பற்றி நினைக்கிறார்கள். உதாரணமாக, மகாத்மா காந்தியைப் போன்ற ஒரு நபர் எப்படி இறக்க முடியும்?