‘மரணம்’ – இந்த வார்த்தையைவிட அதிகம் அச்சம் தருகிற, ஓயாமல் நினைவில் ஊடாடிவருகிற, வஞ்சகமான பயங்கரம் நிரம்பிய வேறு வார்த்தை கிடையாது. அது இறுதியும், முழுமையும் கொண்டது. இருந்தும் பலருக்கு மரணம் ஓர் ஆறுதல்; அவர்களின் எல்லாத் தொல்லைகளையும் முடிவுக்குக் கொண்டுவருகிற ஒரு வாக்குறுதி.
மரணத்தைக் கண்டு பயப்படுகிறவனுக்கும், அதை விரும்பி நாடுகிறவனுக்கும் மரணம் நேர்கிறது. மரணத்தைவிட நிச்சயமான விஷயம் இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லாவிட்டாலும் நிறையப் பேர் அதைப் பற்றி சிந்திக்க விரும்புவதில்லை. எனவே, அது எப்போதும் புறந்தள்ளப்படுகிறது. மரணத்தைப் பற்றி சிந்திப்பது பயம் தருவதாக இருக்கலாம்.
அதே சமயம், மரணம் (இந்தியாவில்) ‘சமாதி’ என்று அழைக்கப்படுகிறது; யோகிகளைப் பொறுத்தவரை அது ‘இறுதிக்கலப்பு’ என்று கருதப்படுகிறது. ஒரு யோகி மஹாசமாதியில் புகும்போது அவர் (முழு நிறைவான கலப்பு அல்லது இணைப்பு) மனித வாழ்க்கையின் இடர்களிலிருந்து விடுதலை பெறுவதாகக் கருதப்படுகிறார். அதன் பிறகு அவர் நிலைபேற்றில் வாழ்கிறார்.
இந்த வகையில், இறவாமைக்கும், முடிவின்மைக்குமான நுழைவாயிலாகவும் மரணம் கருதப்படுகிறது. மரணம் ஒரு முரண்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஒரே சமயத்தில் அதிக விருப்பத்தைத் தூண்டுவதும், அச்சத்தைத் தருவதுமான அனுபவம் அது.
மரணம் குறித்த பயம், அது பற்றிய நம் அறியாமையாலும், மரணத்துக்குப்பின் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாததாலும் உண்டாகிறது. இது ஒரு பெரிய கேள்வி. மிக விரிவான ஆய்வுக்காக, சாக்ரடீஸ் இந்த விஷயத்தை எடுத்துக்கொள்கிறார். பிளேட்டோவின் இரண்டு உரையாடல்களில், மரணத்தைப் பற்றி மிகுந்த நேசத்துடனும், எதிர்பார்ப்புடனும் சாக்ரடீஸ் பேசுவதை நாம் கேட்கிறோம். சில நாடுகளில் மரணத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது; காரணம், முற்பிறவிகளிலும், இறப்புக்குப்பின் ஒரு மனிதன் மீண்டும் வாழ்க்கைக்குத் திரும்புகிறான் என்பதிலும் அவர்களுக்கு உள்ள நம்பிக்கைதான். அந்த வகையில் அடுத்த மரணம், ஒரு மனிதன் கடந்து போகும் பல மரணங்களில், பல லட்சக்கணக்கான மரணங்களில் ஒன்றுதான். இந்த நம்பிக்கை மரணத்தின் பெருமளவு முக்கியத்துவத்தை நீக்கிவிடுகிறது. ஒரு தனிநபராக இந்த பூமியில் ஒரே ஒரு முறைதான் தோன்றுகிறோம் என்றும், உடலைவிட்டு நீங்கியபிறகு மீண்டும் இங்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் நினைக்கும் மற்றவர்களுக்கு, சம்பவிக்கப் போகும் மரணமே ஒரே மரணம்; எனவே, அது மிக முக்கியமானது. அப்படியானால், பூமியில் இந்த வாழ்க்கை சுகமானது எனில், மரணம் நம்மைப் பறித்துச் செல்வது மட்டுமின்றி, இந்த அழகான உலகத்துக்கு மீண்டும் வரும் வாய்ப்பையும் அது எப்போதும் தரப்போவதில்லை.
உறவினர்கள் நண்பர்கள் என்று நாம் நேசிக்கும் பலரோடு கூடி வாழ்வதே வாழ்க்கை என்று பொருள் கொள்கிறது. உயர்ந்தவர்களை நாம் போற்றுகிறோம். இங்கு பூமியில் நாம் இருக்கும்போது பலரோடு பந்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். ஒரு நபரின் மரணத்தில் ஒரு நாண் அறுபடுகிறது. இறந்தவர் நம்மால் நேசிக்கப்பட்டவரென்றால் அறுபடுவது ஓர் இதய நாண். அப்படிப்பட்டவர் இறந்து மறைவது மிகுந்த துயரம் தருவது. அவர் மறைந்துவிட்டார் என்பதை நம்புவதற்கு பலர் விரும்புவதில்லை. இறந்தவர் மீது நமக்குள்ள பற்றின் காரணமாக, ‘அவருக்கு இறவாமை உண்டு’ என்று நாம் ஆராயாமல் ஏற்றுக் கொள்கிறோம். இறந்தவர் நமக்காக எங்கோ காத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்; அங்கு சென்று அவரை சந்திக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். அந்த நம்பிக்கை இல்லையென்றால் பலரால் மரணத்தை எதிர்கொள்ள முடியாது. எப்போதும்போல, மிகப்பெரிய பயம் சந்தேகத்தால்தான் உண்டாகிறது; இறந்தவர் உலகத்தின் மீது நமக்குள்ள நம்பிக்கை நியாயமானதுதானா? என்ற சந்தேகம்தான் அது. அது உண்மையில்லையென்றால் அப்படி நம்புகிறவர்கள் ஏமாற்றப்படுவார்கள்.
மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. சில சமயங்களில் ஒருவர் மரணத்தை எதிர்பார்த்து வருடக்கணக்கில் காத்திருக்கலாம்; ஆனாலும் அது வராமல் போகலாம். இன்னொருவர், ஆணோ, பெண்ணோ ‘எல்லாம் இங்கு பாதுகாப்பாக இருக்கிறது. இன்னும் இருபது, முப்பது, அல்லது நாற்பது வருடங்களுக்கு வாழலாம்’ என்று நினைக்கிறார்; அந்த நபர் திடீரென்று விழுந்து இறக்கிறார். நிச்சயமற்ற அம்சம்தான் அதனுடைய அச்சம் தரும் தன்மையை அதிகரிக்கிறது.
நாம் எல்லோரும் ஒரு நாள் அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும். எனவே அதைப் பற்றிச் சிந்திப்பது நல்லது. மரணம் என்று அழைக்கப்படும் இது என்ன? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இதை நான் பார்க்கிறேன். நாம் இந்தக் கணத்தில் அனுபவிக்கும் எல்லா இன்பங்களும், எல்லா பயங்களும், எல்லாத் துன்பங்களும், எல்லா பிரச்சினைகளும் இந்தக் கணத்தில் இறந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சில அடுத்த கணத்தில் மறுபடியும் பிறக்கின்றன. மரணத்தைப் பார்க்கும் ஒரு முறை அது. இன்னொரு முறை, ‘நாம் வளர்கிறோம்’ என்று நாம் சொல்லும்போது நாம் உண்மையில் மரணத்தை நோக்கி நடைபோடுகிறோம்; அதாவது, இந்த உடலின் மரணம்.
நம் உடலின் பலவகை செல்கள் உணர்வற்று, துன்பமற்று இறக்கும் ஒருவகை மரணத்துக்கு நாம் ஆட்பட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடைய தனி செல்கள் ஏறத்தாழ தற்சார்பு வாழ்க்கை கொண்டவை. ஒரு செல் இறந்தால் அதன் இடத்தை இன்னொரு செல் எளிதாக நிரப்புகிறது. ஓர் அர்த்தத்தில் நாம் ஒரு நபரல்ல, பல தன்னாட்சி கொண்ட அலகுகளின் ஒரு பெரிய குடியுருப்பு. ஒரு செல்லின் அல்லது ஒரு தன்னாட்சி கொண்ட அலகின் அழிவு பெரிய வேறுபாட்டை உண்டாக்கி விடாது; ஒரு நபரின் மரணம் மனிதகுலத்தை பாதிக்காததுபோல. மனிதகுலம் என்பது, எல்லாத் தனிநபர்களும் சேர்ந்த கூட்டுப் பொதுத்தன்மையே. அதேபோல, மனம் மற்றும் உடல் சார்ந்த நம்முடைய உயிரியக்கத்தில், வந்து வந்து மறையும் தனித்தனி எண்ணங்கள், தனித்தனி உணர்ச்சிகள், மற்றும் கூடிக் கலையும் திரண்டிணைந்த கருத்துக்கள் ஆகியவை (கருத்துக்களும் கூட, கூடி வாழ விழைகின்றன) உள்ளன. இந்த உடலின் கூட்டான, ஒன்றாக இணைக்கப்பட்ட செயல்பாடும், இந்த உடலின் எண்ணற்ற நுட்பத் திறமைகளும் இணைந்தே பணியாற்றுகின்றன. இந்த நுட்பத் திறமைகளில் ஏதோ ஒன்றோ சிலவோ செயலிழக்கும்போது மற்றவை உழைப்பைப் பங்கிட்டுக் கொள்கின்றன. சில செயலின்மைகளும் தவறான செயல்பாடுகளும் இருந்தாலும் எப்படியோ பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
நாம் மரணத்திலிருந்து தொலைவில் இருப்பதாக நினைக்கிறோம்; ஆனால், நாம் ஏற்கனவே ஓரளவுக்கு இறந்து போய்விட்டோம். என்னுடைய விழுந்துவிட்ட பற்களின் ஆன்மாக்களைப் பற்றி நான் நினைக்கும்போது, என்னுடைய விழுந்துபோன பற்கள் எங்கே போயின என்று வியப்படைகின்றேன். அவை இறந்து விட்டன; அவை மறைந்துவிட்டன. ஆனால், ‘நான் இறந்துவிட்டேன்’ என்று நான் நினைப்பதில்லை. என்னுடைய விழுந்துபோன பற்களைப் பொறுத்தவரை நான் ஏற்கனவே இறந்துவிட்டேன். ஒவ்வொருமுறை என்னுடைய நகங்களை வெட்டும்போது மறைந்துபோகும் என்னுடைய உடலின் அந்த பாகத்தின்மீது நான் அனுதாபப்படுகிறேன். உங்களுடைய முடி வெட்டப்படும்போது, உங்களின் ஒரு சிறுபகுதி போய்விடுகிறது என்று நீங்கள் நினைப்பதில்லை. கைகால்கள் துண்டிக்கப்பட்ட பிறகும் சிலர் அப்படியே மாறாமல் இருக்கிறார்கள்.
‘நமக்குள் இருக்கும் நபர் யார்?’ என்ற கேள்வியை இது எழுப்புகிறது. கைகளோ கால்களோ துண்டிக்கப்படும்போது ‘நான்’ அல்லது சுயம் என்ற கருத்தாக்கம் குறைக்கப்படுவதில்லை. கை கால் இல்லாத நிலையிலும் ஒரு நபர் முழுமையான மனிதனாக இருக்கலாம். உண்மையில் நாம் கைகால் அற்றவர்கள். நமக்குள்ளே கை காலில்லாத ஒரு நபர், நுட்பத்திறமைகள் இல்லாத ஒரு நபர், எல்லாவற்றையும் உள்ளிட்ட ஒரு நபர், ஓர் இறைநிலை கொண்ட நபர் உள்ளார். லட்சக்கணக்கான ஆன்மாக்கள் கை, கால்கள் – ஆக்கக் கூறுகளோடு சேர்ந்து இந்த நபரும் உள்ளார்.
இப்படியாக, நாம் பகுதியளவான மரணங்களை, தனித்தனியான மரணங்களை, இறுதியில் ஒரு முழுமையான அல்லது கூட்டு மரணத்தை அனுபவிக்கிறோம். அந்தக் கடைசி மரணம் நிகழும்போது கூட, உடலின் எல்லா பாகங்களிலும் மரணம் ஒரே சமயத்தில் நிகழ்வதில்லை என்று சொல்கிறார்கள். இதயத்துடிப்பு நின்றுவிட்ட பிறகுகூட இன்னொரு நபருக்கு மாற்றப்படக்கூடிய அளவுக்கு சிறுநீரகம் இயங்கிக் கொண்டிருக்கலாம். நீண்ட நாள் பயன்பாட்டுக்கு உகந்தமாதிரி கண்களைக்கூட இன்னொரு நபருக்குப் பொருத்தலாம். வேறொரு நபருக்கு நாற்பது வருடங்களுக்கும் மேலாக உதவும்படி எலும்புகளைப் பொருத்தலாம். ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ பத்திரிக்கையின் உண்மைத்தன்மையில் எனக்குப் பெரிதாக நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஒரு நபரிலிருந்து ஒன்பது பாகங்கள் எடுக்கப்பட்டு வேறு ஒன்பது நபர்களுக்கு அதே நாளில் பொருத்தப்பட்டன என்று அதில் வந்த ஒரு செய்தியைப் படித்தேன். அந்த நபரின் இதயம் இன்னொரு நபரிடத்திலும், சிறுநீரகம் வேறொருவரிடமும், கண்கள் இன்னொருவரிடமும் இயங்கி வந்தன; எனவே அந்த மனிதன் ஒரே நேரத்தில் ஒன்பது பேர்களில் வாழ்ந்துகொண்டிருந்தான். சிலர் கடவுள் அவர்களுடைய இதயத்தில் வாழ்வதாகக் கருதுகிறார்கள். ஆனால் அவர்களுடைய இதயம் செயலிழந்து, அதற்குப் பதிலாக ஒரு பிளாஸ்டிக் இதயம் பொருத்தப்பட்டால் எந்தக் கடவுள் அங்கே வாழ்கிறார்? ஒரு பிளாஸ்டிக் கடவுளோ? அதன் பிறகு அந்த நபர் சாதாரண மனிதனைப் போல யோசிக்கவும், நேசிக்கவும் செய்வானா? ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு எளிதாக ரத்தத்தைச் செலுத்த முடியும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
(தமிழில் : ஆர். சிவகுமார்)