சரியாக நாற்பத்தியோராம் நாள் குரு திரும்ப வந்தார். குரங்குகளால் நான் பட்ட கஷ்டங்களை ஏற்கனவே அவருக்கு நான் எழுதியிருந்தேன். இதற்காக அவர் தன்னுடன் எடுத்துவந்த வெடிகளை நாங்கள் வெடிக்கும்போது, குரு தனது கைத்தடியை துப்பாக்கி போல் குரங்குகளை நோக்கி நீட்டுவார். இந்த தந்திரம் நல்ல பலனைத் தந்தது. நாங்கள் துப்பாக்கி ஏந்தியவர்கள் என குரங்குகள் எண்ணின. ஆனால், குருவின் கைத்தடிக்கும் வெடிக்கும் சம்பந்தம் இல்லை என்பது, சில நாட்களிலேயே குரங்குத்தலைவர்களுக்குத் தெரிந்து போனது. நம் தந்திரத்தை மாற்றி அவற்றை குழப்ப வேண்டும் என்றார் குரு. அவற்றை விரட்டுவதற்கு பதிலாக, அவற்றுக்கு வேர்க்கடலை தர வேண்டும் என்றார். இது குரங்குகளிடம் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது எனக்கு இன்றுவரை தெரியவில்லை என்றாலும், எந்த ஒரு துன்பத்தையும் ஒருவிதமான பகடியாகப் பார்க்கக் கற்றுக்கொண்டேன்.
யெங்டாவை குருவுக்கு மிகவும் பிடித்துப்போனது. குரங்குகள் என் உணவை உண்டதும் அரிசியில் மூத்திரம் பெய்ததும் சரியானதா என்று அவனிடம் கேட்பார். “அவை பசித்திருந்ததால் உணவை உண்டது சரிதான். ஆனால் மூத்திரம் பெய்தது தவறு” என்பான் யெங்டா. இதைக் கேட்டு குரு அடக்க மாட்டாமல் சிரிப்பார். ஒரே நாளில், பல முறை அவனது தீர்ப்பை சொல்ல வைத்து, மீண்டும் மீண்டும் சிரிப்பார் குரு. ஒருவிதமாக, குரங்குகளுக்கு நான் பழகிப்போனேன்.
குரு வந்தபிறகு எங்களது மதிய உணவு கொஞ்சம் விமரிசையானது. நாங்கள் மூவரும் எப்போதும் ஒன்றாகவே அமர்ந்து உண்போம். முதல் நாள், குரு யெங்டாவிற்கு அரிசிச் சோற்றை கொடுத்தபோது யெங்டா, “அரிசிச் சோற்றை உண்ண வேண்டும் என்பது என் தலைவிதியா?” என்று கேட்டான். இதைக் கேட்ட குருவின் கண்கள் கலங்கிவிட்டன. அவன் கன்னடத்தில் சொன்னதை தானும் ஒரு முறை சொல்லிவிட்டு அதை மலையாளத்தில் எனக்கு மொழிபெயர்த்தார் குரு. “இவனுக்கு நேர்ந்த துயரைப் பார். இதற்கு முன் அவன் அரிசிச் சோறே தின்றதில்லை. அவனுக்குக் கிடைப்பது வெறும் கேப்பைக் களி மட்டுமே. அரிசிச் சோறு தின்பது அவனுக்குத் துயரமாய் இருக்கிறது” என்றார். பின்னர் என்னிடம் “செல்வம் எங்கிருந்து வருகிறது?” என்று கேட்டார். நான் மெளனமாயிருந்தேன். குரு தொடர்ந்தார், “ஆடு மேய்க்கும் இந்த யெங்டாவிடமிருந்து வருகிறது. பால், கம்பளி, மாமிசம், தோல் – எல்லாம் ஆட்டிடமிருந்து. அதே போல், கம்பு, சோளம், கோதுமை, பார்லி, கேப்பை – எல்லாம் விளைவிக்கும் ஏழை விவசாயியின் கைகளிலிருந்து. இதுவே செல்வத்தின் ஆதாரம்” என்றார்.
அடுத்த இரண்டு வாரங்களில், இவ்விஷயத்தைப் பற்றி விரிவாகப் பேசினார் குரு. மார்க்ஸ் மேலும், மார்க்ஸியப் பொருளாதாரம் மேலும் நான் முன்னர் கொண்டிருந்த பற்றினை குரு அறிவார். ஒரு வாரம் கழித்து, “நீ உலகை மாற்ற விரும்பினால், முதலில் அதன் பொருளாதார அமைப்பை மாற்ற வேண்டும். செல்வக் குவியலும் இல்லாமையும் அருகருகே இருக்க முடியாது. இருக்கவும் கூடாது” என்றார். உலகப் பொதுமைப் பொருளாதாரம் குறித்து ஒரு புத்தகம் எழுதுவதென் முடிவு செய்தார் குரு. பசியாலும் ஊட்டமின்மையாலும் பாதிக்கப்பட்டிருந்த யெங்டா நீண்ட நாட்கள் வாழவில்லை. ஆனால், அவன் மூலம் நான் அடைந்த அகத்தூண்டல், வாழ்வு மீதான என் பார்வையில் அதி முக்கியமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. நடராஜ குரு யெங்டாவை அன்புடனும் பாசத்துடனும் நடத்தியவிதம் என்னுள் இன்றும் இனிமையான நினைவாகத் தொடர்கிறது.