நடராஜ குருவும் நானும் – 10

நாங்கள் பெங்களூரை அடைந்தவுடன், “நீ மீண்டும் பேசத்தொடங்காததால், உன்னை அழைத்துக்கொண்டு நகரைச் சுற்றுவது சரியல்ல” என்றார் குரு.  வழக்கமாக குமார் மற்றும் சேகரன் இவர்களின் வீட்டிற்குச் செல்லும் குரு அதைத் தவிர்த்து ஜெயநகரில் புதிதாகக் கட்டப்பட்ட ஒரு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார்.  அவர் கதவைத் திறந்தவுடன் ஒரு விமானம் அவ்வறையில் இருந்து கிளம்புவதுபோல் ‘ம்ம்ம்…’ என்னும் பேரொலி எழுந்தது.  என்னால் நான் காண்பதை நம்பமுடியவில்லை – எங்களைச் சுற்றி சிறியதும் பெரியதுமாக கருமேகம் போல் கொசுக்கூட்டம்!  குரு அவசர அவசரமாக எல்லா ஜன்னல்களையும் திறந்தார்.  கொசுக்களை விரட்டுவதில் நானும் உதவினேன்.  குருவிடம், ஒரு ஸ்டவ், கெட்டில், தேயிலைத்தூள், சர்க்கரை மற்றும் பால் பொடி இவை கொண்ட, ஒரு நடமாடும் சமையலறை இருக்கும்.  நாங்கள் ஏதாவது ஒரு புதிய இடத்திற்குச் செல்லும்போது தேநீர் தயாரிப்பது குரு கடைப்பிடித்த சம்பிரதாயம்.

ஜெயநகர் சென்ற சில நாட்களில் நான் பேசத்துவங்கினேன்.  சரளமாகப் பேசும் திறனை நான் இழந்துவிட்டிருந்தேன் என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.  மற்றவர்களுக்கு முக்கியமானதாக இருந்த விஷயங்கள் பலவற்றின் மீதும் எனக்கு அக்கறை இல்லாததால் மெளனமாக இருத்தல் மிக எளிதாக இருந்தது. நான், ஒரு வாக்கியத்தை முடிப்பதற்குள் மறந்துபோன சொற்களஞ்சியத்திலிருந்து சொற்களைத் தேடிக் கொண்டிருப்பதை குரு என் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.  சில சொற்களை நான் சொன்னால் மீதியைச் சொல்லி வாக்கியத்தை முடித்து வைப்பார் குரு.  எனது மெளனத்திற்குப் பொருத்தமான இடத்தில் நான் தங்க வேண்டும் என்று கூறி ஜான் ஸ்பியர்ஸ் தங்கியிருந்த கக்கலிபுராவிற்கு என்னை அழைத்துச் சென்றார்.  மதிய உணவருந்திய பின்னர் நாங்கள் சோமனஹல்லிக்குச் சென்றோம்.  அங்கே கிராமத் தலைவர் அவர் வீட்டில் எங்களை வரவேற்றார்.  எங்களுக்கு தேநீர் கொடுத்து பின்னர் அவர் தானமளிக்க இருந்த நிலத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்.  அங்கு ஒரு குடிசை இருந்தது.  அதன் சுவர் பாதி உயரம் மட்டுமே எழுப்பப்பட்டிருந்தது.  தென்னையோலையால் கூரையிடப்பட்டிருந்த அதில் தரை ஏதும் போடப்படவில்லை.  அறைக்கு வெளியேயும் உள்ளேயும் ஒன்றே போல் இருந்தது.  புல்லும் முட்புதர்களும் உள்ளேயும் இருந்தன.  பனையோலைகளை எடுத்து வந்து அவற்றை வைத்து படுக்கை தயார் செய்த குரு,  அதன் மீது தன் டர்க்கிஷ் துண்டை விரித்து, ‘உனக்கு படுக்கை தயார்’ என்றார்.  குருவின் அன்பும் பரிவும் என்னை மிகவும் நெகிழச் செய்தன.  ஆனால் அந்தப் படுக்கையில் நான் உறங்க விரும்பவில்லை.  நான் மேலும் சில ஓலைகளைக் கொண்டு வந்து இன்னொரு படுக்கை தயார் செய்தேன்.  அதற்குள் நன்றாக இருட்டிவிட்டது.  குரு கொஞ்சம் விறகு சேகரித்து தீ மூட்டினார்.  வெல்லம், சீரகம், தண்ணீர் இவற்றைக் கெட்டிலில் சேர்த்து டீ போல ஒன்றைத் தயாரித்தார்.  பிறகு, கிறிஸ்மஸ் தாத்தாவைப் போல், தன் பையிலிருந்து நான்கு லட்டுகளை எடுத்தார். அப்போது சாப்பிட இரண்டு, மறுநாள் காலைக்கு இரண்டு.

குருவிடம் இருந்த சிறிய டார்ச்சைத் தவிர விளக்கு ஏதும் இல்லாததால் நாங்கள் சீக்கிரமே உறங்கச் சென்றோம்.  ஒரு மணி நேரம் சென்றிருக்கும்.  குருவின் குரல் கேட்டது, “நித்யா, அப்படியே அசையாமல் இரு”.  நாங்கள் வைத்திருந்த லட்டுக்காக அந்தப் பகுதியில் இருந்த அத்தனை கட்டெறும்புகளும் குடிசைக்குள் வந்துவிட்டிருந்தன.  கம்பளம் விரித்தாற் போல் எறும்புக் கூட்டம்.  லட்டுகளை வெளியே எறிந்த குரு, எறும்புகளை மிதித்துவிடாமல் எழுந்து நிற்கச் சொன்னார்.  அப்படியே அசையாமல் நாங்கள் நின்றுகொண்டிருந்தபோது குடிசைக்கு வெளியே காற்றின் பெரும் ஓலம்.  சிறிதுநேரத்தில் அடைமழை.  எங்கள் தலைக்கு மேல் வெளிச்சம் – சூறாவளி போன்ற காற்றில் கூரை பிய்த்துக்கொண்டது.  அருவி போல் எங்கள் மேல் மழை.  நனையும் ஆசிரமத்தின் மண்சுவரைப் பற்றி எண்ணிக்கொண்டு அசையாமல் நின்றுகொண்டிருந்தோம்.  எலும்பும் நனையும் வண்ணம் மழையில் நிற்பதைத் தவிர அந்த இரவில் எங்களால் வேறேதும் செய்ய முடியவில்லை.

காலையில் எங்களுக்குக் குளிக்கவேண்டிய அவசியமே இருக்கவில்லை.  துணிகளைப் பிழிந்துவிட்டு கிராமத் தலைவரைப் பார்க்கச் சென்றோம்.  அவரது ஆட்கள் மீண்டும் கூரை வேய்வது வரை, நான் தங்கிக் கொள்ள ஒரு அறையை எனக்குக் கொடுத்தார் அவர்.  அவர் ஒரு மளிகைக் கடையும் வைத்திருந்தார்.  அரிசி, சர்க்கரை மற்றும் மளிகைச் சாமான்களை வைத்துக் கொள்ள ஒரு பெரிய பானையும், தண்ணீருக்கு ஒரு பானையும், அரிசியும் கறியும் சமைக்க சில அலுமினியப் பாத்திரங்களும் அந்தக் கடையில் வாங்கி வந்தார் குரு. எனக்குத் தேவையான அரிசியும் மளிகை சாமான்களும் எனக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன  மறுநாள் குரு கிளம்பிச் சென்றார்.  நான் சோமனஹள்ளி குடிலுக்குச் சென்றேன்.  என்ன நடக்கிறதென்பதைப் பற்றி கவலைப்படாமல் ஒரு நாள் முழுக்க அங்கு அமர்ந்திருந்தேன்.  மதிய உணவையும் இரவுணவையும் ஒரே நேரத்தில் சமைத்துவிடுவது என் வழக்கம்.  சமையல் முடிந்ததும் அருகிலிருந்த நதிக்குச் சென்று குளித்துவிட்டு நீர் சுமந்து வருவேன்.  எப்போது ஒரு வாளி தண்ணீர் எடுத்துவந்து வைத்துவிட்டு உணவருந்துவேன்.  ஒருநாள் திரும்பி வந்தபோது என் உணவைக் காணவில்லை.  நீர்க்குடம் சரிந்து கிடந்தது.  என் புத்தகங்கள் கிழிக்கப்பட்டிருந்தன.  எழுதும் மை கொட்டப்பட்டிருந்தது. அப்போதுபோல் என் வாழ்வில் ஒருபோதும் ஆதரவற்றவனாய் நான் உணர்ந்ததில்லை.  காரணமே இல்லாமல் யார் என்னிடம் வெறுப்பு கொண்டிருக்கிறார்கள்?  காரணத்தைத் தேடி சுற்றும் முற்றும் பார்த்தேன்.  திடீரென்று யாரோ என்னை மேலிருந்து பார்ப்பதுபோன்று உணர்ந்தேன்.  அங்கிருந்து வெளியே ஒடி வந்தேன்.  ஐந்தாறு குரங்குகள் கூரையில் அங்கங்கே உட்கார்ந்திருந்ததை பயத்துடன் பார்த்தேன்.  நான் என்ன செய்யக்கூடும் என்று அவற்றுக்குத் தெரியவில்லை.  அருகிலிருந்த ஆலமரத்தில் வேறு முப்பது நாற்பது குரங்குகள் இருந்தன.  என் சுயநிலை இழந்து சத்தமிட்டு அழத்துவங்கினேன்.  கூரையில் இருந்த குரங்குகள் மரத்திற்குச் சென்றன.  ஓடிச்சென்று கஷ்டப்பட்டு மரத்தில் ஏறினேன்.  குரங்குகளெல்லாம் மரத்திலிருந்து கீழே குதித்தன.  திமிர்பிடித்த ஒன்று என் செருப்பொன்றை எடுத்துக்கொண்டு அடுத்த மரத்துக்கு ஓடியது.  எனக்குப் பைத்தியம் பிடிப்பது போலிருந்தது.  இருந்த ஒரு செருப்பை மாட்டிக்கொண்டு அடுத்த மரத்திடம் போய் அந்தக் குரங்கின் மீது கல்லெறிந்தேன்.   அது செருப்பை என் முகத்தில் எறிந்தது.  ஏதோ செருப்பு கிடைத்ததே என்று மகிழ்ந்தேன்.  அதன் பின்னர் உணவை அங்கு வைத்துவிட்டுச் செல்வதைத் தவிர்த்தேன்.  சமைத்ததை எடுத்துக்கொண்டு நதிக்கரைக்குச் சென்று குளித்துவிட்டு அங்கேயே உண்டுவிடுவேன்.  குரங்குகள் இதற்கெல்லாம் சளைத்துவிடவில்லை. ஒருநாள் திரும்பி வந்தபோது அரிசிப்பானையின் மூடி திறந்திருந்தது.  உள்ளே பார்த்தால் குரங்கு மூத்திரம்!  ஒரே ஒரு குரங்கின் வேலையா அல்லது கூட்டுச் சதியா என்று தெரியவில்லை!

துணையைத் தேடிய ராபின்சன் க்ரூஸோவைப் போல, மனிதர்கள் யாராவது கண்ணில் படமாட்டார்களா என ஏங்கின என் கண்கள்.  அப்போதுதான் தேவதூதன் போல பத்து வயதுச் சிறுவனான யெங்டா வந்தான். ஆடு மேய்த்த அவனுக்குக் கன்னடம் மட்டுமே தெரியும்; எனக்கு மலையாளம் மட்டும்.  ஆனால் மெளனம் அவற்றைவிடச் சிறந்த மொழியாக இருந்தது.  யெங்டா எனக்காக விறகு பொறுக்கி வருவான். நான் எங்கள் இருவருக்கும் சமைப்பேன். கிட்டத்தட்ட ஒரு தாதியைப் போல் இருந்த அவன் குரங்குகளிடமிருந்து குடிசையைக் காப்பாற்றினான்.  அவை எல்லாம் ஹனுமான்கள் என்று கருதிய அவன் அவற்றைக் கல்லால் அடிப்பது பாவம் என்றான்.  வேண்டுமென்றால் சத்தம் போட்டு விரட்டலாம்.  குரங்கின் மொழி அவனுக்குத் தெரிந்திருந்தது – அவன் எழுப்பிய வினோத ஒலி குரங்குகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

மேலும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s