நட்சத்திரங்கள் எங்குள்ளன?
அவற்றைப் பார்ப்பவனின் மூளையில்
– பிஷப் பெர்க்லி
17.3.1996
யதியிடம் நேற்று அவர் பேசியது கடைசியில் ‘அறிதல்’ எனும் நிகழ்வின் சிக்கலில் சென்று நின்றுவிட்டது என்றோம். கார்ல் சாக்ஸ் எழுதிய நூல் ஒன்றை யதி கொண்டு வரச்சொன்னார். அதன் சில பகுதிகளைப் படித்தார். கார்ல் சாக்ஸ் உலகப்புகழ் பெற்ற நரம்பியல் நிபுணர். அவர் இன்னொரு ஆய்வாளருடன் சேர்ந்து நான்கு வித்தியாசமான நரம்பு நோயாளிகளைப் பற்றி எழுதிய ஆய்வு அது. முதல் நோயாளி ஓர் ஓவியர். தன் ஐம்பதாவது வயதில் தன் நிற உணர்வை முற்றிலும் இழந்துவிட்டார். நிறக்குருடு (colour blindness) என்பது வழக்கமாக ஒரு நிறம் தெரியாது போவதேயாகும். முழு நிறக்குருடு என்பது மனித வரலாற்றிலேயே மிக அபூர்வம். ஓவியரின் அனுபவங்கள் வியப்பூட்டுபவை. அவருடைய உலகம் மிக வித்தியாசமானதாக ஆகிவிட்டது. தொலைவில் உள்ளவை கூடத் தெளிவாகத் தெரிந்தன. பல பொருட்கள் தெரியாமலாகிவிட்டன. பொருட்களின் பரிமாணம்கூட மாறிவிட்டது. பொருட்கள் பற்றிய உணர்வுகள் மாறுபடவே உலகமே வேறாக ஆகிவிட்டது. அவர் நிறங்களைப் பற்றிய ‘ஞான’த்தை இழந்துவிட்டார். தன் பழைய ஓவியங்களைக்கூட அவரால் கறுப்பு வெள்ளையிலேயே நினைவுகூர முடிந்தது. தொடர்ந்து கார்ல் சாக்ஸ் நிறமென்பது என்ன என்று ஆராய்கிறார். அது மூளையின் ஒரு நரம்பமைப்பு மட்டும்தான். பரிமாணங்களும், காலமும், இடமும்கூட அப்படித்தானா என்று ஆராய்கிறார்.
மிக அடிப்படையான கேள்விகள் எல்லாமே மிகவும் பழமையானவை. நமது மரபு இருவகை ஒளிகளை உருவகித்தது. வெளியே பெளதிக ஒளி மூலம் தொடங்கி புலன்களை அடையும் தோற்றங்கள். உள்ளே சுயம்பிரகாசமான ஆத்மா அறியும் தோற்றங்கள். அறிதலென்பது ஒரு சந்திப்புப் புள்ளி. யோகிகள் அதை ‘விதர்க்கம்’ என்கிறார்கள். நீரில் கரையாத உப்பு நம் அனுபவத்திற்கு அப்பாற்பட்டது. அறிதலின் எல்லை மிகமிகக் குறுகியது. எந்தப் பொருளும் நமது உள்ளொளியில் மறுவடிவம் கொண்டாலொழிய நாம் அதை அறிய முடியாது. காலமும் வெளியும்கூட இவ்வாறு நம்மில் பிரதிபலித்து அறியப்படுபவையே. நம் உயிர்சக்தி வெளியிலிருந்து நாமறியும் பிம்பங்களை மீண்டும் வெளியே விரித்துக்கொள்கிறது. இதையே ‘பாஸ்யம்’ என்று யோக மரபு குறிப்பிடுகிறது.
நட்சத்திரங்கள் எங்குள்ளன? அவை நட்சத்திரமும் நமது தலையும் சந்திக்கும் இடத்தில் உள்ளன. அதற்கப்பால் நட்சத்திரம் என்றால் என்ன என்று நாமறிய முடியாது. உயிர்கள் அறியும் உலகம் அவை உருவகித்தறியும் உலகே. ஆகவே உபநிடதம் எது பார்வையோ அதுவே படைப்பு என்கிறது. ஆகவே ஆழத்தை நோக்கிச் செல்லும் எந்த ஞானமும் தன்னை அறிதலில் சென்று முடிவடைகிறது.
அறிதல் என்பது கால இட எல்லைக்கப்பாற்பட்ட பிரம்மாண்டத்தை கால இடத்தில் பொருத்திப் பார்ப்பதாகும். அதாவது துண்டுபடுத்தி அறிதல் (fragmentation). அதை மேற்கே de-limitation என்றும் selective structuralism என்றும் கூறுவார்கள் துண்டுபடாத உண்மை நமக்கு சாத்தியமல்ல. அது முழு உண்மையுமல்ல. இவ்வாறுதான் அறிவை அடைய முடியும் என்பதனால்தான் வேதாந்திகள் அறிவை உடலறிவு, புத்திப்புலன் அறிவு, உயிர் அறிவு, சிறப்பு அறிவு, பிரபஞ்ச அறிவு, சாராம்ச ஞானம், முழுமையறிவு, மெய்யறிவு என்று பிரித்தார்கள்.
நாம் அறிவது அறிவையல்ல. அதன்மீது தேவைக்கேற்ப நாம் போடும் அடையாளங்களையே. அவை பெயர், வடிவம் என்று இருவகை. பிறரின் கண்ணீர்த்துளி என்னுள் ஏன் சோகத்தை நிரப்புகிறது? அதில் நான் முழுமையான அர்த்தமொன்றைக் காண்பதனால்தான். காலையில் பசிக்கிறது. உணவு அதை நீக்குகிறது. இங்கு பசி துண்டுபடுத்தப்பட்ட விஷயம். எப்போதும் பசிக்கிறது. உயிர்கள் அனைத்திற்கும் பசிக்கிறது. இங்கு பசி சார்பற்ற முழுமை (absolute) அதாவது துண்டுபட்ட உண்மைகள் வழியாக ஓடும் துண்டுபடாத முழுமையான உண்மையை நாம் உணரமுடியும். ஞானம் என்பது இவ்விரு நுனிகளையும் இணைத்தபடி இயங்குவதாகும்.
ஒன்றொன்றாய் தொட்டு எண்ணி
எண்ணும் பொருள் ஒடுங்கினால்
எஞ்சுவதே பரம்…
என்று நாராயணகுரு சொன்னார். தொட்டு எண்ணுதல் என்ற செயல்தான் துண்டுபடுத்துதல். ஆனால் அச்செயல் துண்டுபடாத முழுமையின் உள்ளே நடக்கிறது. துண்டுபடுத்தலை முழுமை செய்தால் துண்டுபடாமை தரிசனமாகக்கூடும்.
கேள்வியின் இதயத்தில் பதில் ஒளிந்துள்ளது. பார்ப்பவனின் பாதி பார்க்கப்படும் பின்புலமாக, பொருளாக உள்ளது. இவ்வாறு பிரபஞ்ச சாரமான உயிருக்கு பிரபஞ்சமே ஆகிறது. ஏஷர் இதை இவ்வாறு கூறுகிறார்:
ஒரு நிமிடம் நாம் நம் மனதை திரும்பிப் பார்ப்போம். மனதைப் பின்புலமாக்கியபடி, அதை ரசித்தபடி இருக்கும் சுயத்தைப் பார்த்துவிட்டீர்களா? அப்படியென்றால் அக்கணமே தவறு செய்துவிட்டீர்கள். அந்த சுயத்தை பின்புலமாக்கியபடி மனம் அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டது.
ஒருநாள் ஒரு அமீபா பசி தாங்காமல் அலைந்தது. இன்னொரு அமீபாவை விழுங்கியது. அதற்கும் பயங்கரப் பசி. வாயும் வயிறும் இல்லாத அவ்விரு உடல்களும் பரஸ்பரம் ஒன்றாயின. முடிவற்று ஒன்றையொன்று தின்ன ஆரம்பித்தன. இன்றும் தின்கின்றன.