அங்கிருந்து சென்று மெளனத்தில் ஆழ்வது என்ற உறுதியுடன் எனது பொருட்களை எல்லாம் மூட்டைகட்டிக் கொண்டு, குருவை வணங்கி விடைபெறும் எண்ணத்துடன் முன் வாயிலை அடைந்தேன். அப்போது, நான் ஏற்கனவே வெறுப்பு கொண்டிருந்த மனிதனை அழைத்து, ‘இவன் என்னுடைய புத்தகங்களை எல்லாம் திருடிக்கொண்டு ஓடப்பார்க்கிறான். போலீஸைக் கூப்பிடு” என்றார் குரு. எனக்கு அளவில்லா கோபம் வந்தது. என் பைகளை தரையில் வீசி எறிந்து, “இங்கிருந்து எதையும் நான் எடுத்துச் செல்ல விரும்பவில்லை! எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன். அதற்கு குரு, “அப்படியானால் சரி, அந்தப் பைகளை எடுத்து உள்ளே வை” என்றார். யாரோ எடுத்து வைத்தார்கள். நான் வெளியே செல்வதைப் பார்த்து வாசலுக்கு வந்த குரு, “நீ சுத்த பைத்தியம். ஒரு பைத்தியக்காரனை சமூகத்தில் உலவ விடுவது ஆபத்தானது” என்றார். “சர்க்கஸ் புலியை தெருவில் விட சர்க்கஸ் முதலாளி அனுமதிப்பானா? அப்படித்தான் இதுவும், நான் சர்க்கஸ் முதலாளி, நீ முரட்டுப்புலி. கூண்டுக்குள்ளே போ!” இச்சொற்களை நான் ரசிக்கவில்லை. நான் தெருவிலிறங்கி நடக்க ஆரம்பித்தேன். குரு பின்னாலேயே வந்து என் கையைப் பற்றி, “உண்மையாகவே நீ போகத்தான் வேண்டுமென்றால், நீ போவதற்கு முன்னால் உனக்கான தண்டனையை நான் கொடுக்க வேண்டும்” என்றார். “தாராளமாக” என்றேன். என் வலது கன்னத்தில் இரண்டு முறை அறைந்தார். சரியான கிறித்தவனைப் போல, எனது மறு கன்னத்தையும் காட்டினேன். எனது இடது கன்னத்திலும் அறைந்தார். பாதி கெஞ்சலாகவும் பாதி வாழ்த்தாகவும் ஒலித்த குரலில், “வேறு யாரும் உன்னை அடித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நான் உன்னை அடிக்கிறேன்” என்றார். நான் தொடர்ந்து நடந்தபோது, மிகவும் மிருதுவாக என் கையைப் பற்றி, “எங்கு போனாலும் ‘அலபமாத்ர அகிலம்’ என்பதை மட்டும் மறக்காதே. பிறர் சொல்வதாக நாம் காதில் கேட்பது காற்றில் எழும் ஒரு அதிர்வு மட்டுமே. அது பாராட்டாகவோ குற்றச்சாட்டாகவோ ஒலிக்கலாம். ஒன்றுக்கொன்று முரண்பட்டதை இல்லாமலாக்கி தன் சமநிலையை இழக்காமலிருப்பதே உண்மையான ஆன்மீகம்” என்றார். என் கால்கள் தடுமாறின. என் கோபம் காணாமல் போனது. அமைதியும், ஆசீர்வதிக்கப்பட்ட உணர்வும் தோன்றியது. ஆனால் எப்படியும் நான் போய்விடுவது என்று தீர்மானித்தேன்.
நாள் முழுவதும் இலக்கின்றி அலைந்தேன். அப்போது உலகப்புகழ் பெற்ற போதகர் பில்லி க்ரஹாம் என்பவரின் உரையைக் கேட்பதற்காக கோட்டயம் சென்றுகொண்டிருந்த ஒரு கிறித்தவ நண்பரைப் பார்த்தேன். மறுநாள், மேடையில் பில்லி க்ரஹாம் தோன்றுவதற்காகக் காத்திருந்த லட்சக்கணக்கானவர்களுடன் நானும் அமர்ந்திருந்தேன். மொத்த ஏற்பாடுகளும், மேடையில் பேச்சாளர் தோன்றிய விதமும் அற்புதமான ஒரு நாடகம் போலிருந்தது. மீண்டும் நான் ஏமாற்றப்பட்டவனாகவும் தெளிவடைந்தவனாகவும் உணர்ந்தேன்.
என் சொந்த கிராமத்திற்குச் சென்று, ஆசிரமம் போல் நான் பயன்படுத்திக் கொள்வதற்கென்றே என் வீட்டில் தனியாகக் கட்டப்பட்ட அறைக்குள் சென்று மெளனத்தில் ஆழ்வதற்கு என் தாயின் சம்மதத்தைக் கேட்டேன். இது போன்ற நேரங்களில் என் தாயார் எப்போதும் தைரியமாகச் செயல்படுவார். வார்த்தைகளை வீணாக்காமல் நான் ஓய்வெடுப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்தார். நான் என்னை தனிமைப்படுத்திக் கொள்ள அத்தனி அறையில் நுழைந்து கதவை மூடிக்கொள்வதைக் காண மிகப்பெரிய கூட்டம் ஒன்று ஆசிரமத்திற்கு வந்தது. ஒரு மாதம் கழிந்த பின்னர் வர்க்கலையிலிருந்து இருவர் என்னைக் காண வந்தனர். நான் அறையிலிருந்து வெளிவராததால், நான் குருகுலத்தில் விட்டுவந்திருந்த எனது நோட்டுப் புத்தகங்களை கொடுத்துவிட்டுச் சென்றனர். தனிமையில் நான் இருந்த முதல் மாதத்தில் எனது பழைய சம்ஸ்காரங்கள் அனைத்திலிருந்தும் என்னை துண்டித்துக் கொள்ள நினைத்தேன். ஆதலால், எதையும் படிக்கவோ எழுதவோ யார் முகத்திலும் விழிக்கவோ மறுத்தேன். நான் அங்கேயே தனிமையில்-மெளனத்தில் பதினெட்டு மாதங்கள் இருந்தேன்.
மக்களிடமிருந்து விலகி நான் தனிமையில் ஆழ்ந்த போது, அருகாமையில் இருந்தவர்களில் 80 சதவீதம் மக்கள் என்னை முழுப் பைத்தியம் என்று கருதினர். ஆனால், மக்களின் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. நான் இன்னொரு சாய்பாபா ஆகிவிடும் அபாயம் எனக்குத் தெரிந்தது. இதனால் ஆசிரமத்தை விட்டு இமயமலைக்குச் செல்ல நினைத்தேன். போவதற்கு முன் மீண்டும் மெளனமாக நடராஜ குருவின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் வர்க்கலைக்குச் சென்றேன். குரு மற்றவர்களுடன் அமர்ந்து கஞ்சி அருந்திக் கொண்டிருந்தார். கதவருகில் என்னைக் கண்டதும் எழுந்து ஓட்டமும் நடையுமாக வந்தார். விழுந்து வணங்கிய என்னைத் தூக்கி நிறுத்தி சத்தமாக “இதோ மனம் திருந்திய மைந்தன் (Prodigal Son) திரும்ப வந்துவிட்டான். இதை ஓவியமாக்க மைக்கலேஞ்சலோ இல்லையா?” என்றார்.
மறுநாள் காலை நடராஜ குருவின் பிரார்த்தனை வகுப்பில் கலந்து கொண்டேன். ‘ஆத்மோபதேச சதகத்தின் முதல் சுலோகத்தில் வரும் ‘கரு’வின் முக்கியத்துவம் யாருக்காவது தெரியுமா?’ என்று கேட்டார். என்னை நோக்கி கேட்கப்பட்டது அந்தக் கேள்வி. ஸ்பினோசாவின் கருவைப் போன்றது அது என்பதை சொல்ல நினைத்தேன். ஆனால் என் மெளனத்தைக் கலைத்துக் கொள்ள விரும்பவில்லை. எனக்குள் நிகழ்ந்த இந்தப் போராட்டத்தை என் கண்களில் கண்டார் போலும். குரு சொன்னார், “நித்யா பேசியிருந்தால், ‘ஸ்பினோசாவின் கரு’ என்று சொல்லியிருப்பான்.” கருவின் அர்த்தத்தை விவரமாக சொன்ன குரு அது வைசேஷிக தத்துவத்தின் ஒரு பிரிவிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதையும் விளக்கினார். வகுப்பு முடிந்ததும், அவரது பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு, சம்பிரதாயமாக விடையேதும் பெறாமல் தெருவில் இறங்கி நடந்தேன்.
ரயிலேறி திருவனந்தபுரம் சென்று, மருத்துவக் கல்லூரியில் பயிற்சி (residency) மேற்கொண்டிருந்த என் சகோதரியைப் பார்த்தேன். நான் மெளனமாக இருந்தது அவருக்கு வருத்தமளித்திருக்கும் போலும். அவரும் எதுவும் பேசவில்லை. நாராயணகுரு எழுதிய புத்தகங்கள், எனது நோட்டுப் புத்தகம், பைபிள், கீதை மற்றும் Altar Flowers – இவை கொண்ட என் தோள் பையில் ஒரு காகித உறையை வைத்தார் என் சகோதரி. மருத்துவக் கல்லூரியிலிருந்து மீண்டும் ரயில் நிலையத்திற்கு நடந்தேன். மிகவும் களைப்பாக இருந்த்து. நோய்வாய்பட்டிருந்த திரு குஞ்ஞிகிருஷ்ணனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக கடக்காவூர் செல்ல இரண்டாம் வகுப்பு டிக்கட் வாங்க நினைத்தேன். கேரளாவிற்கு இனி திரும்பப் போவதில்லை என்று என் மனதிற்குத் தோன்றியது. போவதற்கு முன் அந்த நல்ல மனிதரைப் பார்க்க வேண்டும் என எண்ணினேன். ரயில்பெட்டியில் ஏறும்போதே மிகவும் சோர்ந்திருந்தேன். சகோதரி கொடுத்த உறையிலிருந்து ஒரு ரூபாய் எடுத்துக்கொண்டேன். மீதம் 29 ரூபாய் இருந்தது. ரயில் கடக்காவூரை அடைந்தபோது நான் நன்றாகத் தூங்கிவிட்டேன். அடுத்த நிறுத்தத்தில் பெரும் உலுக்கலோடு வண்டி நின்றபோது, விழித்துக் கொண்டு வெளியே பார்த்தேன் – அது வர்க்கலை!
செய்வதறியாமல் குழம்பி உட்கார்ந்து ரயிலில் ஏறுவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நான் கண்டது யாரை! நடராஜ குருவல்லவா! தன் தடி, பை, மேலங்கி, ஃப்ரெஞ்ச் வட்டத் தொப்பி இவற்றுடன் என் எதிரே வந்து நின்றார். என்னைப் பார்த்துவிட்டு என்னருகே வந்து அமர்ந்தார். நான் பேசுவதில்லை என்பதால் அவரும் பேச விரும்பவில்லை. “நீ என்னுடன் வருகிறாயா?” என்பதுபோல் கைகளால் சைகை செய்தார். நான் மிகவும் குழம்பிப்போய் தர்மசங்கடமாக உணர்ந்தேன். Hound of Heaven கவிதை என் நினைவுக்கு வந்தது. “இதோ மீண்டும் அந்த வேட்டைக்காரன். இவரிடமிருந்து என்னால் தப்பவே முடியாது” என்று எண்ணிக் கொண்டேன். அவரிடம் முழுமுற்றாக என்னை ஒப்புக்கொடுப்பதே சிறந்தது என்று தோன்றியது. டிக்கட் பரிசோதகர் அவ்வழியே வந்தபோது குரு அவரை அழைத்தார். பெங்களூர் கன்டோன்மென்ட் செல்ல எனக்கொரு டிக்கட் கொடுக்கும்படி அவரிடம் சொன்னார் குரு. என்னைப்பார்த்து என்னிடம் பணம் உள்ளதா என்று சைகையில் கேட்டார். பயணக்கட்டணம் 29 ரூபாய் – சரியாக என்னிடம் மீதமிருந்த பணம்! கொட்டாரக்கராவில் ரயில் நின்றபோது சுவாமி சங்கராரண்யா எங்களை சந்தித்தார். அவர் வாழைப்பழங்கள் கொண்டு வந்திருந்தார். அப்போது எனக்கு மிகவும் பசியாயிருந்தது. நான் சாப்பிட்டேனா என்று குரு கேட்கவில்லை – நான் சாப்பிட்டிருக்க மாட்டேன் என சரியாக ஊகித்திருந்தார். பெரும் கருணையுடன் ஐந்து வாழைப்பழங்களை என்னிடம் தந்தார். வழக்கமாக ஒன்றே ஒன்றுதான் தருவார். வாழைப்பழங்களைத் தின்றுவிட்டு நான் உறங்கப் போனேன். ரயில் ஜோலார்பேட்டையை அடைந்தபோது குரு இரண்டு சிற்றுண்டிகள் வாங்கினார். மீண்டும் நான் குருவுடன் உண்ணத்தொடங்கினேன்.
இது என்ன உறவு, குரு கடைசி எல்லை வரை துரத்தி கேலி செய்கிறார், அவமதிக்கிறார். ஆனாலும் அவரை விட முடியவில்லை. ஆனால் முடிவில் சரணடைகிறார். இப்பகுதியை படிக்கும்போது சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.
”இதோ மீண்டும் அந்த வேட்டைக்காரன். இவரிடமிருந்து என்னால் தப்பவே முடியாது”
ஆனால் முடிவில் சரணடைகிறார். இது காதலேதான். இத்தகைய உறவு கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவைகள்தான்.
எனது கடந்த முப்பதாண்டு கால வாழ்க்கை இதற்கு சாட்சி. இதை நான் மீண்டும் மீண்டும் கண்டுகொண்டே இருக்கிறேன். குருவின் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் அவரைப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைப்பவன், கடலில் இருந்து ஒரு புட்டி நீரை அள்ளி அதில் கடலைக் கண்டடைய எண்ணுபவன்
அழகான மொழிபெயர்ப்பு. நன்றி
ஆனந்தன்