நேர்காணல் – 7

நான் அழகிற்காக இறந்தேன்

கல்லறையில் வைக்கப்பட்டேன்

உண்மைக்காக உயிர்விட்ட ஒருவர்

என்னருகே படுக்கவைக்கப்பட்டபோது

அஞ்சினேன்

நான் ஏன் இறந்தேன் என்று

அவர் கேட்டார்

‘அழகிற்காக’ என்றேன்.

‘நான் உண்மைக்காக.  நாமிருவரும்

சகோதரர்கள்’ என்றார் அவர்

அவ்வாறாக உறவினர்களைப் போல

இரவு முழுக்க உரையாடினோம்

புல் வளர்ந்து பரவி

எங்கள் உதடுகளை மூடி

எங்கள் பெயர்களை மறைக்கும் வரை

–    எமிலி டிக்கன்சன்

16.3.1996

இந்தக் கவிதையில் அழகும் உண்மையும் இரண்டல்ல,  ஒன்றுதான் என்ற தரிசனம் உள்ளது.  ஆனால் காலம்காலமாக படைப்பிலக்கியவாதிகளிடம் அழகும் உண்மையும் ஏதோ ஓர் இடத்தில் பரஸ்பரம் முரண்படக்கூடியவை என்ற எண்ணம் உள்ளது.  அசிங்கமான உண்மை, அழகான பொய் போன்ற சொற்கள் சாதாரணமாக இவ்விஷயத்தையே குறிப்பிடுகின்றன.  டால்ஸ்டாயின் புகழ்பெற்ற சொற்றொடர் கூட உண்டு: ‘அழகானவை எல்லாம் சிறந்தவை என்று எண்ணுவதே மனித குலத்தின் ஆகப் பெரிய மாயை.’  உங்கள் கருத்து என்ன?

முதலில் இரு சொற்களையும் இந்த விவாதச் சூழலில் வைத்து நிர்ணயித்துக் கொள்ள முயல்வோம்.  அழகு என்பது என்ன?  உண்மை என்பது என்ன?  இவ்வாறு விவாதக் களத்தையும் சந்தர்ப்பத்தையும் சார்ந்து நிர்ணயங்களை உருவாக்கிக் கொள்ளாமல் அடிப்படைகளைப் பற்றிய விவாதங்களுக்குள் புகுவது மிகவும் பிழையானது.  ஏனெனில் இச்சொற்கள் மிகவும் பரந்துபட்ட முறையில் பலகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  அடிப்படைக் கருதுகோள்கள் பலவற்றை நிரந்தரமாக நிர்ணயிக்க முடியாது.  அது அந்தரங்கமான அறிதல்களைப் பொதுமைப்படுத்தி, உலகை அதன் அடிப்படையில் தவறாகப் புரிந்துகொள்வதில் கொண்டுபோய்ச் சேர்க்கும்.  அடிப்படைக் கருதுகோள்கள் எதை எடுத்துக்கொண்டாலும், அவற்றை நிர்ணயிக்க முயலும்போது அவை அன்றாடத் தளத்தைத் தாண்டியவை என்பதை உணர முடியும்.   அழகு, உண்மை இரண்டுமே அப்படி அதீத தளத்தில் ஊன்றி நிற்பவை.  ஆகவே முழுமுற்றான நிர்ணயம் ஒருபோதும் சாத்தியமல்ல.  ஆனால் புழக்க தளத்தில் நாம் அனைத்தையும் நிர்ணயித்தேயாக வேண்டும்.  இல்லையேல் உலகில் வாழமுடியாது.

அடிப்படை விஷயங்களை நிர்ணயிக்க முயலக்கூடாது என்று மகாயான பெளத்தம் கருதுகிறதே?

விவாதிக்கக் கூடாது என்றுதான் பெளத்தம் கருதுகிறது.  அடிப்படை நிர்ணயங்களிலிருந்துதான் பிற நிர்ணயங்களெல்லாம் உருவாகின்றன.  அறங்கள், மதிப்பீடுகள், ஒழுக்கம் எல்லாம் உருவாகின்றன.  அவை இல்லாமல் சமூக வாழ்வே சாத்தியமல்ல.

ஆக மூன்று நிலைகளில் சொற்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.  அதீத நிலை, புழக்க நிலை, அந்தரங்க நிலை.  ஒவ்வொரு நிர்ணயமும் ஒரே சமயத்தில் இம்மூன்று நிலைகளிலும் இருப்பதைக் காணலாம்.  இரண்டாவது தளத்தில் மட்டுமே தெளிவான நிர்ணயம் சாத்தியம்.

அழகு என்பது என்ன?  சாக்ரடீஸ் கேட்டார்.  பெண் அழகு.  பானை அழகு.  குதிரைக்குட்டி அழகு.  இவையனைத்திலும் பொதுவாக உள்ள அழகு என்ன?  அதைத் தனியாகப் பிரித்துக்கூற முடியுமா?  முடியாது.  அந்தரங்க அனுபவம் சார்ந்தே பேச முடிகிறது.  அந்தரங்கமான ஒன்றுக்கு புழக்கதளத்தில் மதிப்பு இல்லை.  ஆகவே நாம் ஏகதேசப்படுத்தலாம்.  அடிப்படைக் கருதுகோள்கள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் பொருட்டு பொதுமைப்படுத்தப்பட்ட தனியனுபவங்களே.  அழகு என்பது ஒரு பொதுவான ஒப்புதலின் அடிப்படையிலான ஏகதேசப்படுத்தல் (Beauty is an approximation of a general agreement). அந்தப் பொது வட்டத்திற்குள் இல்லாதவர்களுக்கு அதில் எந்தப் பொருளும் இல்லை.

தாஜ்மகால் அழகு அல்லவா?  நான் பலமுறை ஆக்ரா போனதுண்டு.  ஏனோ தாஜ்மகாலைப் பார்க்கத் தோன்றவில்லை.  ஒருமுறை  நண்பர் ஒருவர் வற்புறுத்தி அழைத்துச் சென்றார்.  அன்று நல்ல வெயில்.  கட்டிடத்தின் வெண்ணிறம் கண்களைக் குத்தியது.  வியர்வை வாடை.  சாம்பிராணி வாடை.  எனக்குத் தலை சுற்றியது.  அப்போது எனக்கு விசித்திரமான பார்வையுணர்வு ஒன்று ஏற்பட்டது.  அது ஒரு பேரழகியின் பார்வையல்ல.  பன்னிரெண்டு குழந்தைக்குத் தாயான பெண்மணி ஒருத்தியின் பார்வை.  அவ்வனுபவத்தை வைத்து நான் ஒரு கதை எழுதினேன்.  அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பது மும்தாஜ் அல்ல.  மும்தாஜ் நிரந்தரப் புகழ் பெறுவதை ஒளரங்கசீப் வெறுத்தார்.  அவள் உடலை அகற்ற விரும்பினார்.  ஆகவே தாஜ்மகாலில் காவலனாக இருந்த ஒருவன் மும்தாஜின் உடலை பாதுகாப்பாக வேறு ஓர் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு தன் தாயின் உடலை அங்கு வைத்துவிட்டான்.  அது அரண்மனைத் தாதியான ஒரு முதிய பெண்மணி.  பிற்பாடு ஷாஜகான் இறந்து அவரும் தாஜ்மகாலில் அடக்கம் செய்யப்பட்டார்.  ஒருநாள் இரவில் ஷாஜகான் தன் மனைவியை நோக்கி கை நீட்டினார்.  உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது.  ‘மகனே, நான் மும்தாஜல்ல.  உன் செவிலித்தாய்.  உனக்கு முலைப்பால் ஊட்டியவள்.’  ஷாஜகான் அதிர்ச்சி அடைந்தார்.  முழுநிலவு நாள் ஒன்றில் மும்தாஜ் நிலவைத் தொட்ட வெண்பளிங்கு முகடு வழியாக இறங்கி வந்தாள்.  வெண்ணிற ஒளியாலான விரல்களால் கபர் பெட்டியைத் திறந்து ஷாஜகானைத் தொட்டு அவனையும் நிலவொளியாக மாற்றி எழுப்பினாள்.  இருவரும் தாஜ்மகாலின் வெண் மேகம் போன்ற கும்மட்டங்கள் மீது தவழ்ந்தபடியும் பரஸ்பரம் ரசித்தபடியும் இரவைக் கழித்தனர்   நிலவு சரிந்ததும் மும்தாஜ் வானில் ஏறி மறைந்தாள்.  ஷாஜகான் தானும் உடன் வருவதாகக் கூறினான்.  சிரித்தபடி மும்தாஜ் கூறினாள்: “முகலாயர்களால் பல்லாயிரம் பேர் வெட்டி வீழ்த்தப்பட்டனர்.  அந்தப் பாவமே ஆயிரம் பேர் தினம் மிதித்துச் செல்லும் தரைக்கு அடியில் காலம் முழுக்க படுத்திருக்கும்படி உன்னைக் கிடத்தியுள்ளது.”  தன் வாழ்நாள் முழுக்க அவன் அன்பிற்காக ஏங்குபவனாக, தனியனாக இருந்தான்.  ஆகவே பாசமுள்ள தாய் அவனுக்குத் துணையாகப் படுத்திருக்கிறாள்.  அவளோ மரக் கூட்டங்கள்மீது பரவும் நிலவொளி போல எப்போதும் எல்லோரிடமும் பிரியமாக இருந்தாள்.  அவளிருக்க வேண்டிய இடம் நிலவுதான்.

இக்கதை ஒரு தில்லிப் பத்திரிக்கையில் பிரசுரம் பெற்றது.  மும்தாஜ் உண்மையில் தாஜ்மகாலில் இல்லை என்று பலர் நம்பினார்கள்.  பல வருடங்கள் கழித்து இக்கதையை ஒரு வரலாற்று ஐதீகமாகக் கருதி ஒருவர் எழுதியதைப் படித்தேன்.  பிறகு ஒரு நாள் கஜல் பாடகர் ஒருவருடன் யமுனைக்கரையில் நிலவின் ஒளியில் தாஜ்மகாலைப் பார்த்தேன்.  ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸின் வரிகளும் நிலவும் தாஜ்மகாலும் ஷாஜகானின் அன்பும் ஒன்றாயின.

என் கதை தகவல் ரீதியாகப் பிழையானது.  ஆனால் நிச்சயமாக அது பொய்யல்ல.  பொய் நம்மை தவறான திசைக்குக் கொண்டு செல்வது.  என் கதையோ மேலும் நுட்பமான உண்மையை நோக்கிக் கொண்டு செல்வது.  ஆகவேதான் இதையே பெரும்போலோனார் நம்ப விழைந்தார்கள்.  ஐதீகங்கள் உருவாவது இப்படித்தான்.  இதை ‘அதி உண்மை’ அல்லது ‘செறிவுபட்ட உண்மை’ என்று அரவிந்தர் கூறுகிறார்.  இதை நாம் ‘கவித்துவ உண்மை’ எனலாம்.  ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்னார்:  ‘நீங்கள் என்னை நம்பியாக வேண்டும்.  ஏனெனில் நான் கவிஞன்.’

உண்மைகள் பலவிதமானவை என்று கொள்ளலாமா?

ஆம்.  ஒவ்வொரு தத்துவ அணுகுமுறையும் தங்களுக்குரிய உண்மைகளை உருவகித்துக் கொள்கின்றன. விஞ்ஞான உண்மை என்பது நிரூபணவாத உண்மையாக இருக்கலாம் அல்லது சாரவாத உண்மையாக இருக்கலாம்.

எந்த உண்மை அழகுடன் முரண்படுகிறது?

உண்மையை சித்தாந்த உண்மை என்றும் பொது உண்மை என்றும் உருவகித்தவர்கள் அதை அழகற்றது என்றோ அழகானது என்றோ மேலும் உருவகித்துக் கொள்ளலாம்.  அப்படியானால் இங்கு பிரச்சினை அழகுக்கும் உண்மைக்கும் இடையேயான முரண்பாடல்ல.  மாறாக உருவகித்துக் கொள்வதன் பிரச்சினையேயாகும்.  அப்படி உருவகிப்பதற்கான தேவை  அச்சூழலில் அப்போது அவர்களுக்கு உள்ளது என்றே பொருள்.  அது தத்துவப் பிரச்சினையல்ல.  உளவியலோ சமூகவியலோதான் அதற்கு பதில் கூறவேண்டும்.  மேற்கைப் பொறுத்தவரை வெகு காலம் தத்துவச் சிந்தனை நிறுவன மதமாகிய கிறித்தவத்திற்கு எதிரான ஒன்றாகவே இயங்கியது.  கிறித்தவம் எதிரெதிர் நிலைகளை திட்டவட்டமாக வகுத்து வைத்திருந்தது.  அசிங்கம் என அது நிறுவியுள்ள ஒன்றை உண்மை என அறியும் மேற்குமனம் ‘அசிங்கமான உண்மை’யை உருவகிக்கிறது.

இந்த ஓவியத்தைப் பாருங்கள் – நான் இன்று வரைந்தது.  இது ஒரு முட்செடி.  பூக்களை அழகானவை என்று கூறும் எவரும் இதை அழகானது என்று கூறமுடியாது.  வின்சென்ட் வான்கா வரைந்த ஓவியத்தைப் பார்த்து இதை வரைந்தேன்.  வான்கா தந்த ஒரே சிறப்பம்சமான வண்ணத்தையும் நான் விலக்கிவிட்டேன்.  வான்கா வரைந்த இந்த ஓவியம் உலகின் அழகிய ஓவியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  ஆம்ஸ்டர்டாம் மியூசியத்தில், அவன் வரைந்த ‘உருளைக்கிழங்கு தின்பவர்கள்’ என்ற ஓவியத்தின் முன் வெகுநேரம் நான் நின்றதுண்டு.  ஏழைச் சுரங்கத் தொழிலாளர்கள், கரிபடிந்த முகம்.  இருண்ட அறை.  உருளைக்கிழங்குடன் அமர்ந்திருந்தவன் கேட்டான்: ‘நாங்கள் ஏழைக் குரூபிகள்; எங்களைப் போய் ஏன் வரைந்தான் வான்கா?’  வான்காவின் ஓர் ஓவியத்தில் பயனிழந்த பிய்ந்த செருப்புகள் மட்டும் உள்ளன.  ஏதோ ஒரு ஏழை விவசாயியின் செருப்புகள்.  பலமுறை தைத்து உபயோகப்படுத்தியவை.  இன்று இவற்றை கலைக்கூடத்தில் மக்கள் வரிசையாக நின்று பார்த்து மகிழ்கிறார்கள்.  வான்கா செய்தது என்ன?  அவற்றை அடையாளப் படுத்துகிறான். தன் கலையின் மூலம் அவற்றின் அக உண்மையைத் துலங்கச் செய்தான்.  சாலையோரம் கிடக்கும் பழைய செருப்பு ஒரு குப்பை.  வான்கா அதில் ஓர் ஏழையின் விடாப்பிடியான, துயரம் தோய்ந்த, உழைப்பு நிரம்பிய, வாழ்வைக் காட்டினான்.  கரிச்சுரங்கத் தொழிலாளிகள் அமர்ந்திருக்கும் விதத்தில் ‘கிறிஸ்துவின் கடைசி உணவு’ எனும் புராதன ஓவியத்தை பிரதிபலிக்க வைத்த மானுடத் துயரத்தின் தொடர்ச்சியைக் காட்டினான்.  நமது அன்றாட வாழ்வில் நாம் தவறவிடும் உண்மையை கலைஞன் அழுத்திக் காட்டியதும் நாம் அறிந்து பரவசமடைகிறோம்.  அப்பரவசமே அதை அழகுடையதாக ஆக்குகிறது.  பிரியம் தருவது அழகு. உவப்பு தருவது அழகு.  மனதின் பழக்கம் உண்மையை விரும்பாதபோது உண்மை அழகற்றதாக ஆகிவிடுகிறது.

ஆகவே நாம் நமது கேள்விக்கான பதிலை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று மட்டும் கூறிவிடுகிறேன்.  நமது மரபில் ‘சத்யம்-சிவம்-சுந்தரம்’ என்று ஒரு விஷயத்தின் மூன்று முகங்களாகவே உண்மையையும், நன்மையையும் அழகையும் காண்கிறோம்.  இங்கு உண்மை என்பது என்ன?  எது மறுக்கப்பட முடியாததோ அது உண்மை (Truth is that which cannot be refuted).  இந்தக் கோப்பையில் தேநீர் உள்ளது.  இது மறுக்கப்படாத உண்மை.  தேநீரும் இல்லை, கோப்பையுமில்லை.  இதுவும் மறுக்கப்பட முடியாத உண்மையே; வேறு வேறு தளத்தில்.  உண்மை என்பது நலம் தருவது.  நன்மை என்பது ஒழுங்கு.  ஒழுங்கு என்பதே லயம்.  அதுவே அழகு.  உண்மையும் அழகும் பிரதிபாகங்கள் (Concepts).  எஞ்சுவது சிவம்.  அதாவது லயம்.  நாம் அறிவது அதை மட்டுமே.  முழுக்க அறிய முடியாத மகத்தான இசைவையே.  நம் மனதை மீறிய முழுமையையே.  எல்லா விஞ்ஞானங்களுக்கும் அடிப்படையானது அது அளிக்கும் வியப்பே.  அங்கிருந்து தொடங்குவோம்.

மேலும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s