4.2.1996
காலையில் எட்டுமணிக்கு யதி நடக்கக் கிளம்புவதை ஒரு பிரம்மசாரி தட்டி எழுப்பிச் சொன்னார். அவசரமாக முகம் மட்டும் கழுவிவிட்டு ஓடிச்சென்றோம். கோட்டும் தொப்பியும் கைத்தடியுமாக யதி நின்று கொண்டிருந்தார். யதி காலை ஐந்துமணிக்கு எழுந்திருப்பார். இசை கேட்பார். பிறகு தியானம். பிறகு கடிதங்கள். குருகுல முகப்பில் பெரிய சைப்ரஸ் மரங்களின் இலைகளில் பனித்துளிகள் மணிகள் போல ஒளிவிட்டன. கிழக்குப் பக்கமாகத் திரும்பி நடந்தார். எதிரே வரும் குழந்தைகள் ‘குரு’ என்று கீச்சுக் குரலில் கூவியபடி ஓடிவந்தன. பெயர்களைக் கூறிச் சிரித்தபடி நடந்தார். சிவப்புநிற திரவத்தில் மிதப்பதுபோல கிழக்கே சூரியன். யதி உதயத்தைப் பார்த்தபடி நின்றார். முகமும் தாடியும் கண்ணாடிச் சில்லும் சிவப்பாக ஒளிவிட்டன.
வழக்கமாக துறவிகள் கலையிலக்கியங்களை இரண்டாம் பட்சமாகவே கருதுகின்றனர். உலகப்பற்று, போகம் சார்ந்தவை என்று அவற்றைக் கருதுபவர்களும் உண்டு. உங்களுக்கு இவற்றில் உள்ள தீவிரமான ஈடுபாட்டிற்கு என்ன காரணம்?
துறவிகளைப் பற்றிய இந்த மனப்பதிவே தவறானதுதான். துறவிகளைச் சுற்றியுள்ளவர்கள் அப்படிப்பட்ட ஒரு சித்திரத்தை உருவாக்கி விடுகிறார்கள். விரக்தியும் நிராகரிப்பும் நிரம்பிய இறுக்கமான மனிதராக ஒரு துறவியைக் காட்டுவது அவரை மையமாக்கி நிறுவனத்தைக் கட்டியெழுப்ப உதவியாக உள்ளது. நகைச்சுவை உணர்வு மிகுந்த காந்திஜிகூட நமக்கு ஒரு அழுமூஞ்சி வடிவம்தானே? ராமகிருஷ்ணரும், அரவிந்தரும், ரமணரும், நாராயண குருவும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். ஆழ்ந்த கலைத்தேர்ச்சியும் இலக்கிய ரசனையும் உடையவர்கள்.
கலை என்றால் என்ன?
கலை என்று இரு ஒலிகள். இரு கேள்விகள் அவை. ‘இது எங்கிருந்து வந்தது?’ ‘இது எங்கு லயிக்கிறது?’ கலை என்பது இவ்விரு கேள்விகளின் இடையேயான ஒரு வியப்பு. கலை என்ற சொல்லை ‘அடையாளம்’ என்று அர்த்தப்படுத்துவதுண்டு. ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்துக் காட்டும் பொருட்டு, தரப்படும் அடையாளம் அது. அன்றாட வாழ்வில் ஒன்றை அடையாளப்படுத்தும் பொருட்டு ஒரு புள்ளியை வைப்போம். அதை விரிவடையச் செய்து ஓவியமாக மாற்றலாம். குறியீட்டுத்தன்மையை அளித்து கவிதையாக மாற்றலாம். பொதுமையிலிருந்து தனித்துவத்தைப் பிரித்தறியும் அடையாளம்தான் அது. இவ்வாறு இலக்கணம் உருவாகிறது. ஒன்றைப் பிறிதிலிருந்து பிரித்துக்காட்டுவதே இலக்கணம். இலக்கணங்கள் விதிமுறைகள். கலை மாறிக்கொண்டிருக்கும் ஒரு செயல்பாடு.
அறிதல் எனும் செயல் நடக்கும்போது இரு அமைப்புகள் பரஸ்பரம் உரசுகின்றன. ஒன்று அகம், இன்னொன்று புறம். இவற்றின் கலவையே அனுபவம் என்பது. இரு உலகுகளுக்கு நடுவே இவற்றின் கலவையாக உள்ளது உயிர். புது அனுபவம் ஒவ்வொன்றும் அதை பீதியடையச் செய்கிறது. மேனாட்டு உளவியலில் இதற்கு உள நிகழ்வு (psychic phenomenon) என்று பெயர். நம் மரபில் அதை நாம் அந்தகரண விருத்தி என்கிறோம். எந்த அனுபவமும் முதலில் துன்பத்தையே தருகிறது. சிறு குழந்தைகளை கவனித்தால் இது தெரியும். அனுபவம் என்பது ஒருவித சமன்குலைவு என்பதே இதற்குக் காரணம். தொடர்ந்து அனுபவம் நிகழ்ந்தால் அதை உயிர் ‘அறிகிறது’. பின்பு துன்பமில்லை. மெல்ல அதுவே இன்பமாகிறது. இவ்வாறு அனுபவத்தை ‘அறிய’ மனிதன் மூன்று அமைப்புகளை உருவாக்கியுள்ளான். கலை, விஞ்ஞானம், ஆன்மீகம். இவ்வமைப்புகள் மூலம் மனிதன் பரஸ்பரத் தொடர்பு கொள்கிறான். ஞானத்தைப் பெருக்கி தொகுக்கிறான். இவ்வாறாக ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய குறியீட்டு மொழி உருவாகிறது. ஆன்மீகத்தின் மொழி பிற இரண்டிலிருந்தும் சற்று மாறுபட்டது. பெரிதும் அந்தரங்கமான, உருவக மொழி அது. ஒவ்வொரு அனுபவத்திலும் உள்ள விளக்கமுடியாத ஆச்சரியத்திலிருந்து ஆன்மீகம் அதை அடைகிறது. விஞ்ஞானம் ஒரு எல்லையில் திண்ணம் உடைய மொழியில் பேசுகிறது. ஆன்மீகம் மறு எல்லையில் முற்றிலும் திண்ணமற்ற மொழியில் பேசுகிறது. நடுவே ஒரு பாலம் போல கலை உள்ளது.
அடையாளம் மூன்று அடிப்படைகளினால் ஆனது. பெயர், வடிவம், எண்ணிக்கை. ஒரு பொருளுக்கும் வானத்திற்கும் இடையேயான எல்லைக்கோடே அதன் அமைப்பைத் தீர்மானிக்கும் வடிவம் ஆகும். அவ்வடிவத்திற்கு ஓர் ஒலியடையாளம் தரப்படும்போது அது பெயர் உடையதாகிறது. அவை வரிசைப்படுத்தப்பட்டு தொகுக்கப்படும்போது அது எண்ணிக்கை. இம்மூன்றும் பரஸ்பரம் பின்னிப் பிணைந்து நாம் காணும் இப்பிரபஞ்சத் தோற்றம் உருவாகிறது. மேற்கத்திய மனோதத்துவ ஆய்வின்படி நாம் அறிபவை எல்லாமே அர்த்தப்படுத்தப்பட்ட சித்திரங்கள்தாம். இவற்றை ஜெர்மனில் Gestalt என்கிறார்கள். ஓர் அடையாளத்துடன் இன்னொன்றைக் கலந்தால் இரண்டும் சிக்கலாகின்றன. இவ்வாறு சிக்கலான பல்வேறு அமைப்புகளால் நம் அறிவு கட்டப்படுகிறது.
இந்த அமைப்புகளில் எல்லாம் அடிப்படையாக ஒன்று உள்ளது. இவற்றையெல்லாம் சார்பு நிலையில்தான் நாம் உருவகிக்கிறோம். ஏதோ ஒன்று மறுக்க முடியாததாக இருக்கும் நிலையிலேயே அறிதல் சாத்தியமாகிறது. ஒரு கத்தரிக்கோல் தன்னையே வெட்டிக்கொள்ள முடியாது. கண்களால் கண்களைப் பார்க்கமுடியாது. அறிவின் அடிப்படையான அளவுகோல் எதுவோ அது மாறாததாகவே இருக்கும். மறுக்கமுடியாத ஒன்றே அளவுகோல் ஆகும். கலையிலக்கிய, விஞ்ஞான, தியான முறைகளின் ஊடே நாம் இந்த மறுக்க முடியாமையை உணர்கிறோம். ஒவ்வொரு தளத்திலும் ஒரு மாறாத அடிப்படையும், அதையொட்டி ஒரு தருக்கமும் உள்ளது. எந்த அறிதலும் தருக்கம் வழியாக அந்த மாற்றமின்மையை வந்தடைகிறது.