1.1.1996
யதி தன் அறைக்கு எங்களை வரச் சொன்னார். சிறிய அறை. அதன் ஒருபக்கச் சுவர் விரிந்த மலைச்சரிவைப் பார்க்கத் திறக்கக்கூடியது இரண்டு கணினிகள். விசாலமான பெரிய மேஜை. அதன்மீது எழுதுபொருட்கள். கலையழகுமிக்க சீசாக்கள். அறையின் இரு சுவர்களிலும் நூல்களின் அடுக்குகள். சுவர்களில் நடராஜ குரு, ரமணர், நித்யானந்தர் முதலியவர்களின் உருவப்படங்கள். தாகூரின் புகைப்படம்.
கவிதைக்கும் மொழிக்கும் இடையேயான உறவு என்ன? கவிதை மொழியின் ஒரு விளைவு மட்டும்தானா?
கனவுக்கு மொழி இல்லையே. கனவில் கவிதையில்லையா? அதன் image கவிதையன்றி வேறென்ன?
ஆனால் மொழியை மீறிய தளம் கவிதைக்கு இல்லை என்று கூறப்படுகிறதே?
நான் இமய முகடுகளில் பலமுறை ஏறிச்சென்றதுண்டு. அங்கு மிக உயரத்தில் பனி பாறை போல உறைந்திருக்கும். அதைத் தொட்டால் பனி மெல்ல உருகி பள்ளம் ஏற்படுகிறது. அதன் வழியாக நீர் துளித்துளியாக வழிகிறது. பாறை விரிசலிடுகிறது. உடைந்து சிறு ஓடையாக வழிகிறது. அது பெரிய நீரோடையாகலாம். அப்போது நீர்சுழிக்கும் ஒலி ஏற்படுகிறது. ஓடை சிறு வெள்ளாடு போல தாண்டிக் குதிக்கிறது. அது கங்கையாகலாம். மந்தாகினியாக நடைபோடலாம். ருத்ர பிரயாகைக்கு வரும்போது பெயருக்கு ஏற்ப ரெளத்ர பிரவாகம்தான். காதுகளை உடைக்கும் பேரோசை. பிறகு ரிஷிகேசம். நீர் மலினமடைகிறது. காசியில் அதில் சகல பாவங்களும் கலக்கின்றன. கல்கத்தாவில் கங்கை கடல் போலிருக்கும். மறுகரை தெரியாது. அதன்மீது கப்பல்கள் நகரும். கடலும் கங்கையும் ஒன்றாகுமிடம் எவருக்கும் தெரியாது. ஆயிரம் ஒலிகள் அதன்மீது ஒலிக்கும். ஆனால் கங்கையும் கடலும் பேரமைதியில் மூழ்கியிருப்பதாகப்படும். பனிப்பாறையின் அதே அமைதி.
நம் பனிப்பாறையை அனுபவமெனும் விரல் தீண்டும்போதுதான் விழிப்பு ஏற்படுகிறது. தீண்டப்படாத பனிப்பாறைகள் ஒருவேளை யுக யுகங்களாக அங்கேயே, யார் பார்வையும் படாத உயரத்தில், அப்படியே இருந்து கொண்டிருக்கக்கூடும். பெரும் செவ்விலக்கியங்கள் மெளனமானவை. அவை ஒரு மனதின் வெளிப்பாடுகளல்ல, பல்லாயிரம் வருடங்களாக உறைந்து கிடந்த ஒன்று உயிர் பெற்றெழுவது ஆகும். மனம் என்பது ஒரு தனிமனித அமைப்பல்ல. ஒரு பெரும் பொதுமை அது. காலாதீதமானது. நவீன உளவியல்கூட யுங்கிற்குப் பிறகு அதை உணர்ந்துள்ளது.
கவிதை என்பது ஒருவகை அடையாளம் மட்டுமே என்று கூறலாமா?
நிர்ணயிக்க முயலாதீர்கள். கேனோபநிடதம் ஆதி முழுமையின் ஒலிவெளிப்பாடாக ‘ஹ’ என்ற ஒலியைக் குறிப்பிடுகிறது. அடிவயிற்றிலிருந்து எழும் வியப்பின் ஒலி அது. அது மனிதனைப் பொறுத்தவரை ஈடிணையற்ற பெருவியப்பு மட்டுமே. ‘அல்லா’ என்பதும் அதே போல ஒரு வியப்பொலி மட்டுமே. அத்தகையதோர் வியப்பே கவிதையும். பனிப் படிவிற்குள் ஒரு காலடிச் சுவடைக் கண்டதும் டிபூசிக்குள் பேரானந்தம் நிறைந்தது. அது அவர் காதலியின் காலடிச்சுவடு. மெளனம் நிரம்பிய பனிவெளியில், வெறுமையின் பயங்கர அழகு நிரம்பிய தனிமையில், கால இடம் எனும் திரைவிலக்கி அவள் அவருக்குக் காட்சி தந்தாள். நினைவு எனும் வரத்திலிருந்து எழுந்து இறந்தகாலப் பேரழகை நித்திய நிகழில் நிறுத்தும் பெரும்படைப்பு டிபூசியின் ‘பனிப் படிவில் காலடித்தடம்’ எனும் செரனேட். குமார சம்பவத்தில் காளிதாசனும் பாதத்தடம் பற்றிச் சொல்கிறான். சிம்மபாதத் தடம் அது. யானை மத்தகம் பிளந்து, உதிர மதுவருந்தி, தள்ளாடி நடந்து சென்ற மிருக ராஜனின் பாதத்தடம். சிதறிய உதிர மணிகள். கலைஞனும் கவிஞனும் நமக்குத் தருவது பாதத் தடங்கள் மட்டுமே. காதலன் அல்லாத ஒருவனுக்கு அப்பாதத் தடம் ஏதும் அளிப்பதில்லை. வேட்டைக்காரனுக்கும் கவிஞனுக்கும் சிம்மத்தடம் தருவது வேறு வேறு அர்த்தங்களை.