அதற்கடுத்த நாள் சென்னையிலிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது. உடனடியாக விவேகானந்தா கல்லூரியின் தத்துவத் துறையில் விரிவுரையாளராகச் சேரும்படி கல்லூரியின் மேலாளர் அனுப்பிய தந்தி அது. குரு மிகவும் மகிழ்ந்துபோனார். இம்முறையும் தனது இரண்டு சட்டைகளை எனக்குக் கொடுத்தார். சென்னைக்குப் போவதற்கு முன் உடல்நலமில்லாமல் இருந்த என் தந்தையைப் பார்க்கச் சென்றேன். பிச்சைக்காரனைப் போலல்லாமல் நான் எப்பொழும் நன்றாக உடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதற்காக விலையுயர்ந்த துணியை வாங்கினார். ஆனால் அதைத் தைப்பதற்கு நேரம் இருக்கவில்லை. நான் சென்னையை அடைந்தபோது என் உடல் முழுக்க கரி அப்பியிருந்தது. தலைமுடி சிடுக்கடைந்து போயிருந்தது. இயக்குநர் குழுவில் உறுப்பினர்களாயிருந்த சென்னையின் மிகப்பெரிய கனவான்களின் முன்னால் என்னை ஒரு நாகரிக மனிதனாகக் காட்டிக்கொள்ள விரும்பினேன். இரு நாட்கள் தங்குவதற்கு ஒரு ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன். அரை அவுன்ஸ் எண்ணெய் வாங்கிக் கொண்டேன். எண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு குளித்துவிட்டு என்னிடம் இருந்த உள்ளதிலேயே நல்ல உடையை அணிந்துகொண்டேன். அந்த எண்ணெய் வாசனை கலக்கப்பட்டது. மயிலாப்பூர் செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தபோது வாசனை தாங்கமுடியாதபடி அடித்தது. என் தலைமுடியிலிருந்து வரும் வாசம் தெரியாதபடி குழு உறுப்பினர்களுக்கு மூக்கடைப்பு இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனையாக இருந்தது. மின்விசிறிக்குக் கீழ் என் தலை இல்லாதவாறு பார்த்துக்கொள்வதில் கவனமாக இருந்தேன். நல்ல வேளையாக, என்னைப் பணியிலமர்த்துவது என்று ஏற்கனவே இயக்குநர் குழு முடிவெடுத்திருந்தது. விரிவுரையாளராக நியமிக்கப்பட்டதோடல்லாமல் விவேகானந்தா கல்லூரி மாணவர் விடுதியின் காப்பாளராகவும் நான் நியமிக்கப்பட்டதால் என்னை அதிர்ஷடக்காரனாக உணர்ந்தேன்.
நம்பியார்மகராஜ் என்று மற்ற துறவிகளால் அன்புடன் அழைக்கப்பட்ட சுவாமி நிஷ்ரேயசானந்தா கல்லூரியின் தலைவராக இருந்தார். ராமகிருஷ்ண மடத் துறவிகளின் பெயருடன் அவர்களின் ஜாதிப் பெயர் ஒட்டிக்கொண்டேயிருந்தது. மிகச் சிறந்த இந்தியத் துறவிகளுக்கு எடுத்துக்காட்டானவர் சுவாமி நிஷ்ரேயசானந்தா. குறைவில்லா அறிவும் சுத்தமான பழக்கவழக்கங்களும் கொண்டவர். அவர் என்னை விடுதிக்கு வரவேற்றார். அந்நாட்களில், கல்லூரி விடுதியில் அரிஜன மாணவர்களுக்கென்று சில அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே பெரும் பிரிவினை இருந்தது. இந்தப் பிரிவினையை திறமையாகக் கையாண்டு ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று நிஷ்ரேயசானந்தா சுவாமி என்னிடம் கேட்டுக்கொண்டார். தவறாக நடந்துகொள்ளும் மாணவனை அரிஜன மாணவர்கள் அறைக்கு மாற்றிவிடுவேன். அதைத் தொடர்ந்து ஒரு அரிஜன மாணவனை மற்றவர்கள் அறைக்கு மாற்றுவேன். புத்திசாலித்தனமாக இப்படி மாறுதல்கள் செய்ததில் ஒரு வாரத்திற்குப் பிறகு அரிஜன மாணவர்களுக்கென தனி அறையே இல்லாமல் போனது. முழுக்க முழுக்க பிராமண சார்புடைய நிர்வாகம் இதற்கான பழியை நம்பியார்மகராஜ் மீது போட்டது. இதை நான் குருவுக்குத் தெரிவித்தபோது, அவர்கள் அரசியல் எதுவும் எனக்குத் தெரியாததுபோல் இருந்துவிடும்படி கூறினார்.
பின்னர் குரு வந்து என்னுடன் தங்கினார். குருவின் மொத்த நேரத்தையும் நானே எடுத்துக்கொள்ளலாம் என்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்தது. ஒருநாள் பிற்பகலில், இரவுணவுக்கு என்ன செய்யலாம் என்று கேட்டபோது வர்க்கலையில் செய்வது போல கஞ்சி தயாரிக்கச் சொன்னார் குரு. கஞ்சி தயாரித்துவிட்டு கறி செய்யத் துவங்கும்போது, குருவின் பழைய நண்பரான டாக்டர் ஏ. தியாகராஜன், இரவுணவுக்கு குருவை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார். நானும் அவருடன் வர வேண்டும் என்று குரு கட்டாயப்படுத்தினார். செய்திருந்த கஞ்சியை பத்திரமாக வைத்துவிட்டு வரச்சொன்னார். டாக்டர் தியாகராஜனின் மனைவியை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அவரைப் பார்ப்பவர்கள் இருபதாம் நூற்றாண்டின் கார்கி என்றே அவரைக் கருதுவார்கள். அவர் குருவிடம் பகவத் கீதையைப் பற்றி குறைந்தது நூறு கேள்விகளாவது கேட்டிருப்பார். அடுத்த இரண்டு வருடங்களில் குரு சென்னைக்குப் பலமுறை வந்து சென்றார். திருமதி தியாகராஜனுடனான சொற்போர் அடிக்கடி நிகழும். உண்மையில் அந்த அம்மையாருக்குப் பதில் அளிக்கும் முகமாகவே கீதை உரையை குரு எழுதினார். அன்றிரவு, உணவும் விவாதமும் முடிந்த பின் என் அறைக்குத் திரும்பிய குருவும் நானும் நன்றாக உறங்கினோம்.
காலை நான்கு மணிக்கே எழுந்து உட்கார்ந்துகொள்வது குருவின் வழக்கம். குரு விழித்திருக்கும்போது நாம் உறங்குவது நாகரிகமல்ல என்பதால் நானும் எழுந்துவிடுவேன். பகவத் கீதைக்கான அறிமுகத்தை குரு ஏற்கனவே தன் மனதில் உருவாக்கி வைத்திருந்தார். அதைச் சொல்ல ஆரம்பித்தார்; நான் பதிவு செய்தேன். குருவின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இப்படித்தான் தொடங்கின. சொல்லி முடித்த பிறகு, நேற்றிரவு தயாரித்த கஞ்சியை நான் என்ன செய்யப்போகிறேன் என்று கேட்டார் குரு. யாராவது ஏழை ரிக்ஷாக்காரனுக்குக் கொடுத்துவிடுவேன் என்றேன். “எந்த ரிக்ஷாக்காரனாவது உப்பும் வெங்காயமும் இல்லாமல் அதை அப்படியே சாப்பிடுவானா?” என்று கேட்டார் குரு. “உப்பும் வெங்காயமும் சேர்த்துக் கொடுப்பேன்” என்றேன். அவற்றைக் கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொண்ட குரு உப்பைத்தூவி வெங்காயத்தை கஞ்சியில் கலக்கினார். “நான்தான் அந்த ரிக்ஷாக்காரன்” என்று சொல்லிக்கொண்டே அந்தக் கஞ்சியைக் குடித்தார். பெரும் துயரத்துடன் பார்த்துக் கொண்டே நின்றேன் நான். அவருக்காக நான் தயாரித்த கஞ்சியை வீணாக்கினால் நான் வருத்தப்படுவேன் என்று குரு நினைத்தார் போலும். இம்மாதிரி மறக்கமுடியாத பாடங்களைக் கற்பிக்கும் குருவை நான் வேறெங்கு கண்டடைவேன்?
அந்நாட்களில் நான் இன்டர்மீடியட் வகுப்பிற்கு தர்க்கமும், இளங்கலை மாணவர்களுக்கு காண்டின் (Kant) தத்துவமும், முதுகலை மாணவர்களுக்கு எஃப்.ஹெச்.ப்ராட்லியும் கற்பித்தேன். நான் நடத்த வேண்டிய பாடப்பகுதிகளை என்னைப் படிக்கச் செய்து அவற்றில் பல கேள்விகளைக் கேட்பார் குரு. இது அப்பாடங்களில் எனது ஆர்வத்தை மேலும் வளர்த்தது. குருவுடன் விவாதம் முடிந்தபின்னர், உடனே, அப்புதிய பாடங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள பொறுமையின்றித் தவிப்பேன்.
குருவுடன் படித்தவர் ஒருவர் பேராசிரியராக இருந்தார். அவர், குரு விவேகானந்தா கல்லூரிக்கு வர வேண்டும் என்று விரும்பினார். குரு மாநிலக் கல்லூரியில் படித்தபோது G.D.G.D. (“Get Drunk and Go to the Dogs”) Club என்றழைக்கப்பட்ட ஒரு குழுவை தான் தொடங்கியது பற்றி என்னிடம் கூறியிருந்தார். எனது மூத்த பேராசிரியரும் அதில் ஒரு உறுப்பினர். குரு ‘அண்ணா’ என்றழைத்த அப்பேராசிரியர் மூலமாக தன்னுடன் படித்தவர்களை எல்லாம் குரு கண்டுபிடித்தார். சென்னையில் மூத்த வக்கீலாக இருந்த திரு கோபாலசுவாமி, சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியின் முதல்வராக இருந்த திரு டி.பி. சந்தானகிருஷ்ணன நாயுடு ஆகியோர் அதில் அடங்குவர். அவர்களையெல்லாம் குரு அவ்வப்போது சிறு கூட்டங்களுக்கு அழைப்பார். கூட்டம் டாக்டர் தியாகுவின் வீட்டிலோ எனது அறையிலோ நடைபெறும். குருவின் மாணவப் பருவக் கதைகள் பலவற்றையும் நாராயண குரு அவரைப் பார்க்க வந்த நிகழ்ச்சிகளையும் அறிய இந்தக் கூட்டங்கள் எனக்குப் பெரிதும் உதவின.
ஶ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சித்தேஶ்வரானந்தாவும் சுவாமி சித்பவானந்தாவும் மாணவப் பருவத்தில் குருவின் நெருங்கிய தோழர்களாக இருந்தவர்கள். இவ்விரு துறவியரும் நாராயண குருவின் பக்தர்கள். ராமகிருஷ்ண மடம் துவங்கப்பட்டதிலிருந்தே குரு அதனுடன் தொடர்பு கொண்டிருந்தார். குருவும் நானும் அம்மடத்திற்குச் சென்றோம். சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் வசிக்கத் தேவையான நிதியைத் திரட்டியவர்கள் பெயரையெல்லாம் குரு எனக்குச் சொன்னார். தன் பன்னிரண்டு வயதிலேயே சுவாமி விவேகானந்தரின் சிகாகோ முகவரி தனக்கு மனப்பாடம் என்றார் குரு. இதுபோல் பலவிதங்களில் ராமகிருஷ்ண மடத்துடன் நெருக்கமாக இருந்தபோதும், அம்மடத்தில் இருந்த சாதிப் பாகுபாடுகள் அதற்கு ஒருவிதமான மேட்டிமை உணர்வை அளிப்பதாக நடராஜ குரு எண்ணினார். மடத்தை அவர் அணுகிய விதம் எனக்குப் புரிய ஆரம்பித்தபோது, நான் வெகு நாட்கள் அங்கு இருக்கப் போவதில்லை என்பது எனக்குத் தெரிந்தது.