அதன் எல்லா வரலாற்றுப் பிழைகளையும் தாண்டி, ரோமன் கத்தோலிக்க திருச்சபை பராமரித்து வரும் அறுபடா குரு-சிஷ்ய பாரம்பர்யத்தை குரு மிகவும் உயர்வானதாகக் கருதினார். ஜான் ஸ்பியர்ஸ் எப்போதும் திருச்சபையை வெறுப்பவர். ஆதலால், குரு கத்தோலிக்க திருச்சபையைப் புகழும்போதெல்லாம் அதைத் தொடர்ந்து சூடான விவாதம் நிகழும். ஜானின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குருவை எப்போதுமே சீண்டியதில்லை என்பதை நான் கவனித்திருக்கிறேன். ஜான் சமநிலைக்குத் திரும்பிய பின்னர் குரு திரும்பவும் விவாதத்தைத் தொடர்ந்து தன் கருத்தை தெளிவாக விளக்குவார். ஜானுக்கும் குருவுக்கும் இடையே நிகழ்ந்த கருத்து மோதல்கள் எங்களுக்கு வரமாகவே அமைந்தன. அவ்வாறில்லையென்றால், எங்களிடையே அவ்வளவு ஆழமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விவாதங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. குரு சொல்லத்தயங்கும் உன்னத ஞான வாக்குகளை அவரிடமிருந்து வரவழைப்பதில் ஜானுக்கு இருந்த திறமை எப்போதும் என்னை வியப்பிலாழ்த்தும். மாதம் தவறாமல் எழுதவேண்டும் என்ற கட்டாயத்தை குருவுக்கு உருவாக்க வேண்டும் என்பதற்காகவே ‘வால்யூஸ்’ மாத இதழைத் தொடங்கி தொடர்ந்து நடத்தினார் ஜான். அவ்விதழில் பதினெட்டு வருடங்கள் குரு எழுதியவை இன்று நம் முன்னே பெரும் ஞானக் களஞ்சியமாக உள்ளன.
நல்ல வேளையாக நடராஜ குருவுக்கு பன்னிரண்டு சீடர்களில்லை. ஆயினும், அவர் தேர்ந்தெடுத்த மூவரும் வெவ்வேறு வகையானவர்கள். மங்களானந்தா சுவாமி அச்சு அசலாக ஒரு இந்திய குருவின் இந்திய சீடர்; முழு முற்றாக தன்னை குருவுக்கு அர்ப்பணம் செய்துகொண்டவர்; குரு சொல்வதை இம்மி பிசகாமல் பின்பற்றுபவர். இன்னொரு புறம் ஜான் ஸ்பியர்ஸ் – எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிப்பவராக, கருத்துக்களை மறுப்பவராக, ஆணைகளைத் திருத்துபவராக. ஒரு பெரிய நாடகத்திற்குப் பிறகே பிரச்சினை தீரும். மழுப்பலாக இருந்துவிடுவதே என் தந்திரம். பின்னணியில் மறைந்துகொண்டு, இயற்கை எனக்கு வாரி வழங்கியிருந்த தற்காப்பு முறைகளை எல்லாம் பயன்படுத்துவது என் வழி. நான் தொட்டாற்சுருங்கி என்பது குருவுக்குத் தெரியும். எனவே, பொதுவில் என்னைச் சீண்டுவதைப் பொதுவாகத் தவிர்த்துவிடுவார்.
பொதுமக்கள் எனக்கு எதிராக இருந்தால், குரு என் பக்கமே நிற்பார். சிவகிரி உயர்நிலைப் பள்ளி குருகுலத்திற்கு எதிரில் இருக்கிறது. மதிய இடைவேளையில் பெரும்பாலான மாணவியர் குருகுலத்திற்கு வந்து என்னைச் சூழ்ந்து அமர்ந்து கதை கேட்பது வழக்கம். மாணவியரைச் சுற்றி மாணவர்களும் அமர்வார்கள். அவர்களில் சிலர் கதையும் கேட்பார்கள். ஒன்றிரண்டு மாணவிகள் தேவைக்கு அதிகமாக நெருக்கமாக அமர்ந்து பிறரை பொறாமை அடையச் செய்வர். எப்படியோ, சிவகிரி பள்ளியின் ஆசிரியர்கள் ஒரு மாணவிக்கும் எனக்கும் தொடர்பிருப்பதாகக் கதைகட்டிவிட்டார்கள். இதன்பின் பள்ளி மாணவியர் குருகுலம் பக்கமே வராமல் தடுக்கப்பட்டனர். இது என்னை அவமானத்திற்குள்ளாக்கியது. குருவுக்கு இது தெரிந்தபோது, என்னை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றார். மாணவியர் குருகுலத்திற்கு வராமல் தடுக்கப்பட்டதற்கு நாங்கள் எந்த விதத்தில் தரக்குறைவாக நடந்து கொண்டோம் என்று நிரூபிக்கும்படி தலைமையாசிரியருக்கு சவால் விடுத்தார். குரு தலைமையாசிரிடம் கத்திக்கொண்டிருக்கும்போதே எல்லா ஆசிரியர்களும் மாணவ மாணவியரும் அங்கு குழுமிவிட்டனர். வம்பிற்கு ஆளான அந்த மாணவியும் அதிலிருந்தாள். அவளை தன்னை நோக்கி இழுத்து, “உனக்கு இவன் மேல் காதலா? எதுவாயிருந்தாலும் அதை எல்லாருக்கும் தெரியும்படி சொல்!” என்றார். தைரியமான அந்தப் பெண், மற்றவர்களைப் போல தானும் குருகுலத்தின் அழகான சூழலை விரும்பியே அங்கு சென்றதாகவும், பொறாமை கொண்ட ஒரு ஆசிரியர்தான் அந்தக் கதையைக் கட்டிவிட்டவர் என்றும் சொன்னாள். (இரண்டு மாதங்களுக்குப் பிறகு அப்பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார்.) குருவின் துணிச்சலான இந்த நடவடிக்கையையும் முழு ஆதரவையும் கண்ட தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் திகைத்துப் போயினர். பின்னர் அவர்கள் குருகுலத்திற்கு எதிராக ஒரு வார்த்தைகூட சொல்லத் துணியவில்லை. தனி மனிதர்களை மட்டுமல்ல, குழுக்களையும் ஒழுங்குபடுத்துவது குருவுக்கு கைவந்த கலை.
மாநாடு முடிந்தபின் குரு ஊட்டிக்குத் திரும்பினார். மங்களானந்தா சுவாமி தொடர்ந்து பயணத்தில் இருந்தார். ஆகவே, வர்க்கலையில் ஜி.என்.தாஸுடன் தனியாக இருக்கவேண்டி வந்தது. எப்போதும் ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பார் அவர். பெரும் உற்சாகத்துடன் இருப்பவர் திடீரென்று சோர்ந்து போவார். தென்னிந்தியக் கோயில்கள் பற்றி நாராயண குரு அறிந்திருந்தவற்றைப் படித்தபின் சுற்றியலையும் ஆர்வம் என்னுள் மீண்டும் தோன்றியது. பழையபடி யாசகனாகி ஒவ்வொரு கோயில் நகராக அலைந்தேன்.
கடைசியில் சென்னைக்குச் சென்றேன். அங்கு உணவும் படுக்க இடமும் கிடைப்பது அரிது. இரவில் நடைபாதைகளில் உறங்கினேன். உணவில்லாமல் இறக்கப் போகிறோம் என்று தோன்றியது. ஒரு நாள் காலை நல்ல பசியுடன், தெம்பில்லாமல் குறிக்கோளின்றி நகரில் சுற்றியலைந்தேன். ஒரு சிலையைப் பார்த்து அது விவேகானந்தருடையது என்றெண்ணி அருகில் சென்றால், அது வேறு மனிதருடையதாக இருந்தது. சோர்ந்து போய் சுற்றிலும் பார்த்தபோது பெரிய எழுத்துக்களில் “விவேகானந்தா கல்லூரி” கண்ணில் பட்டது. அதில் ஏன் நாம் ஆசிரியராகக் கூடாது? என்று தோன்றியது. யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பின்னாலிருந்து யாரோ அழைத்தார்கள். அழைத்தது ராமகிருஷ்ணா மிஷனின் ஒரு துறவி. அவர் நான் யாரென்றறிவதில் ஆர்வமாயிருந்தார். பொய் கலவாமல், நான் யார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றேன். நான் அவதியுற்றிருப்பதை சுவாமி எளிதில் கண்டுகொண்டார். ஒரு புறம் நல்ல பசி. அதே சமயம் கழிவறை செல்ல வேண்டிய அவசரம். என்னிடம் அழுக்கான ஒரு வேட்டியும் துண்டும் மட்டுமே இருந்தன. சுவாமி என்னை வலிய ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று, சுத்தமான துண்டு, எண்ணெய், சோப்பு, கொஞ்சம் பற்பொடி எல்லாம் தந்தார். கழிவறையையும், குளியலறையையும் காண்பித்து நான் குளித்து, துணி துவைத்த பின்பு உடுக்க வெள்ளை வேட்டியும் துண்டும் கொடுத்தார். கடவுளிடமிருந்து சுவாமியிடம் அடைக்கலமானேன். மைசூரிலிருந்து என்னை கேரளத்திற்கு அனுப்பிய சுவாமி விமலானந்தரைப் போலவே, இவரும் என்னை வர்க்கலைக்குத் திரும்பிச் செல்லத் தூண்டினார். திருவல்லவாழில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனில் நான் சேரலாம் என்று கூறினார். சிரமம் பாராது என்னுடன் ரயில்நிலையத்திற்கு வந்து வர்க்கலைக்குப் பயணச்சீட்டு வாங்கித்தந்து என்னை ரயிலேற்றினார்.
நான் குருகுலத்திற்குத் திரும்பியபோது குரு அங்கிருந்தார். பிரார்த்தனை முடிந்த பின்னர் தன் இரவுணவான கஞ்சியைக் குடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் குருகுலத்தை விட்டுச் சென்று யாசகனாய் அலைந்ததற்கு என்னிடம் கோபம் கொள்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், நான் எங்கு போனேன் என்றெல்லாம் கேட்காமல், இன்னொரு பாத்திரத்தில் கஞ்சி கொண்டுவரும்படி தாஸிடம் கூறினார். நான் குருகுலத்திற்கு முதன்முறை வந்தபோது குரு சொன்னது என் நினைவுக்கு வந்தது. கற்றலைப் பொறுத்தவரை அவர் குரு நான் மாணவன்; சமூக தளத்தில் அவர் சுதந்திரமானவர்; எனக்கு எதையும் செய்யக் கடன்பட்டவர் அல்ல; அதே போல் நானும் சுதந்திரமானவன் என்று அப்போதே கூறியிருந்தார். சுதந்திரம் என்று அவர் சொன்னதென்ன என்பதை அன்றிரவு நான் உணர்ந்தேன். எடுத்த எடுப்பில், நாராயண குருவின் சுப்ரமணிய கீர்த்தனையில் தான் கண்டடைந்த நுணுக்கங்களைப் பற்றிய தத்துவ விவரிப்பில் இறங்கிவிட்டார். நான் குருகுலத்தை விட்டுச் சென்றதைப்பற்றி குரு எதுவும் கேட்காதது எனக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது.