நாராயண குருவுக்குப் பின் சிவகிரி மடத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க இருந்த சுவாமி போதானந்தருக்கு ஆலோசகராக இருக்க வேண்டும் என்பது நடராஜ குருவுக்கு நாராயண குரு இட்ட கடைசி பணிகளில் ஒன்று. ஆனால், நாராயண குருவின் மகாசமாதிக்குப் பின் மூன்றே நாட்களில் சுவாமி போதானந்தா மறைந்தார். அவரது இடத்திற்கு சுவாமி அச்யுதானந்தா வந்தார். இதெல்லாம் நிகழ்ந்தபோது நடராஜ குரு ஐரோப்பாவில் இருந்தார். ஐந்து வருடங்கள் அங்கிருந்த அவர், 1933-இல் வர்க்கலைக்குத் திரும்பினார். சிவகிரி உயர்நிலைப்பள்ளியில் அவரது பதவி வேறொருவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மடாதிபதியின் ஆலோசகர் என்ற வகையில் மட்டுமே சிவகிரி மடத்துடனான அவரது தொடர்பு இருந்தது. ஆண்டுதோறும் மாநாடுகளும் அனைத்திந்திய பொருட்காட்சியும் நடத்துவதன் மூலம் ஆசிரமத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்று நினைத்தார் நடராஜ குரு. சுவாமி அச்யுதானந்தாவின் ஒப்புதலுடனும் ஒத்துழைப்புடனும் ஆறு மாதங்கள் அதற்காகக் கடுமையாக உழைத்தார். ஆனால் வழக்குப் போடுவதையே தொழிலாகக் கொண்ட சுவாமி தர்மதீர்த்தா, மாநாடும் பொருட்காட்சியும் நடத்தினால் ஆசிரமத்தின் அமைதி கெடும் என்றும், சன்னியாசிகளின் தியானத்திற்கு இடையூறு ஏற்படும் என்றும் கூறி, ஆற்றிங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் அதற்கு ஒரு தடையுத்தரவு பெற்றார். இதனால் நடராஜ குரு திட்டத்தை அப்படியே கைவிட நேர்ந்தது. அதோடல்லாமல், ஆலோசகர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாகக் கூறி சிவகிரி மடத்திலிருந்து ஒரு அறிவிப்பும் பதிவுத்தபாலில் அவருக்கு வந்து சேர்ந்தது.
1952-இல் சிவகிரி யாத்திரை முடியும் தறுவாயில், குரு தன் மனதுக்கு மிக நெருக்கமான ஒரு இடத்திலிருந்து விலக நேர்ந்ததற்குக் காரணமான நிகழ்ச்சிகளை என்னிடம் கூறினார். அதை ஒரு பேரிழப்பாகக் கருதினார் குரு. அப்பொழுதும் தர்ம சங்கத்தின் உறுப்பினராக இருந்தார் அவர். நீதிமன்ற ஆணையால் நடத்த முடியாமல் போன மாநாட்டையும் பொருட்காட்சியையும் இப்போது நடத்த எண்ணினார் குரு. மூங்கிலும் தென்னையோலைகளும் கொண்டு வேயப்பட்ட குடிசைகளை அமைத்து அவற்றை பொருட்காட்சிக்கான அரங்குகளாகவும் யாத்ரீகர்கள் தங்குமிடமாகவும் பயன்படுத்துவது பற்றி என்னிடம் விளக்கினார். அந்நாட்களில் வர்க்கலை குருகுலத்தில், தற்போது நுழைவாயிலின் அருகே இடதுபுறம் இருக்கும் கட்டிடத்தைத் தவிர, வேறெந்தக் கட்டிடமும் கிடையாது. சுற்றுச்சுவர் கூட இல்லாத இடமது. நாராயண குருவின் சிலையும் அப்போது கிடையாது. மாமரங்கள் செழிப்பான இளங்கன்றுகளாக இருந்தன. எல்லா ஏற்பாடுகளையும் நானும் சுவாமி மங்களானந்தாவுமே செய்ய வேண்டியிருந்தது.
நாங்கள் செய்யும் ஏற்பாடுகளை கவனித்த உள்ளூர் மக்கள், யாத்ரீகர்களை தங்கள் வணிகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முனைந்தனர். சாலையோரமாக டீக்கடை போட தற்காலிக ‘ஷெட்’களை அமைத்தனர். மாநாடு சிறப்பாக அமையவேண்டும் என்று குரு நினைத்ததால் நாடகங்கள், இசைக் கச்சேரி, குழு நடனங்கள் போன்றவற்றை நடத்துவதற்கு எங்களை அனுமதித்தார். நிகழ்ச்சி செலவுகளை ஈடுசெய்ய, நாங்களே தயார் செய்த அனுமதிச்சீட்டுகளை விற்க எண்ணினோம். முதல் வகுப்புக்கு ஒரு ரூபாய், இரண்டாம் வகுப்புக்கு ஐம்பது காசுகள், மூன்றாம் வகுப்புக்கு பத்து காசுகள், மிகவும் ஏழ்மைப்பட்டவர்களுக்கு அனுமதி இலவசம். இந்தப் பாகுபாட்டை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று எனக்குக் தெரியவில்லை. நான்கு கோடுகள் கிழித்து இரு முனைகளிலும் எந்த வகுப்பு என்று எழுதி வைக்கச் சொன்னார் குரு. இது பாரிஸ் அல்ல வர்க்கலை என்று குருவுக்கு நினைவுறுத்தத் தவறவில்லை நான். நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு மிகவும் முன்பாகவே மேடையின் அருகே பெருங்கூட்டம் கூடிவிட்டது. நான்காகப் பகுக்கப்பட்ட பிரிவுகள் சடுதியில் மறைந்து ஒரு பிரிவினையில்லா சமூகம் உருவாகிவிட்டது. வர்க்கலையின் ஏழைகள் அறிவிப்புப் பலகைகளை மதிக்கும் அளவுக்கு நுட்பமானவர்களாக இருப்பார்கள் என்று தான் எதிர்பார்த்தது தவறு என்பதை குரு ஒப்புக்கொண்டார். ஒரு சன்னியாசியின் குழப்பமடைந்த மூளை இம்மாதிரி விஷயங்களுக்குப் பொருந்தாதது என்பதை விரைவில் உணர்ந்தோம். சன்னியாசிகள் பழங்காலந்தொட்டே செய்து வரும் வித்தையைக் கையாண்டு என் பிச்சைப்பாத்திரத்துடன் வாயிலில் நிற்பதென்று முடிவெடுத்தேன். பலரும் ஐந்து பைசாவும் பத்து பைசாவும் கொடுத்து என்னைக் காப்பாற்றினர்.
ஒரு பெரிய சினிமா காட்சியும் எங்கள் நிகழ்ச்சி நிரலில் இருந்தது. உண்மையில் சில ஸ்லைடுகளைத் திரையிடுவதுதான் அது. அதற்கான புரொஜக்டரையும் ஸ்லைடுகளையும் கொடுத்தது, நிகழ்ச்சி எதுவும் நடத்தக்கூடாது என்று சொன்ன அதே தர்மதீர்த்தா என்பது ஒரு முரண்நகை. கீழ் எது மேல் எது என்று கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருபது வருடங்களுக்கும் மேல் பழமையானவை அந்த ஸ்லைடுகள். திரையில் தெரிவது என்ன படம் என்பது குறித்து யாரும் கவலைப்படவில்லை. காட்சி என்ன என்பதை நானும் மங்களானந்தாவும் மாறி மாறி அறிவித்தோம். இந்தக் கூத்து நடந்துகொண்டிருந்தபோது குரு தன் அறையில், நாராயண குருவை சமூக சீர்திருத்தவாதி என்று சொன்னவரிடம் பெரிதாக சண்டையிட்டுக் கொண்டிருந்தார். திரைக் காட்சி தோல்வி அடைந்தபோது சுவாமி மங்களானந்தா கம்பீரமாக மைக்கின் முன் நின்றுகொண்டு புத்தர்-சண்டாளி கதையைக் கூறத்தொடங்குவார். நான்கு மணி நேரம் அனைவரும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, இனிமையான பாடல்களுடன் கலந்த சுவாமிஜியின் உரைகள் நிகழ்ச்சிகளின் முக்கியமான பகுதியானது. குருவின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
மாநாடு தொடங்கிய இரண்டாம் நாளிலிருந்து முதலமைச்சர் திரு சி. கேசவன் குருகுலத்திற்கு வந்து எங்களை பெருமைப்படுத்தினார். மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் அவர். மார்க்ஸியக் கொள்கையில் பற்றுடையவராக இருந்தபோதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு முற்றிலும் எதிரானவர். பொருட்காட்சி மைதானத்தில் இரண்டு புத்தகக் கடைகள் வைத்திருந்தோம். ஒன்று காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுடையது, இன்னொன்று கம்யூனிஸ்ட் கட்சியுடையது. சுத்தியலும் அரிவாளும் கொண்ட செங்கொடியைப் பார்த்த முதலமைச்சர் ஸ்பெயின் நாட்டு காளையைப் போல் சீற்றம் கொண்டார். அமைப்பாளன் நான் என்பது அவருக்குத் தெரியும். என்னைத்திரும்பிப் பார்த்து அந்தக் கொடியை நீக்கச் சொன்னார். அது முடியாது என்று பணிவுடன் அவரிடம் சொன்னேன். தான் மாநிலத்தின் முதலமைச்சர் என்பதை எனக்கு நினைவூட்டினார் அவர். அதற்கு நான், குருகுலம் உலகப்பொதுமையானது என்பதால் மாநிலத்துக்குச் சொந்தமானது அல்ல; எங்களுக்கென உள்ள தலைவருக்கு மட்டுமே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்; குருகுல வளாகத்தைப் பொறுத்தவரை ஜான் ஸ்பியர்ஸ்தான் எங்கள் முதலமைச்சர் என்று பதில் சொன்னேன். உடனே, தான் நடராஜ குருவைப் பார்க்கவேண்டும் என்றார் திரு கேசவன். குருவும் எரிச்சலடைவார் என நினைத்தேன். ஆனால் அவரோ சாந்தமான முகத்துடன் முதலமைச்சருக்கு ஒரு கதை சொல்லத் துவங்கினார். சான்டர்ஸன் என்னும் தலைமயாசிரியர் பள்ளி வளாகத்தின் தன்னாட்சியில் இங்கிலாந்தின் அரசர் தலையிடுவதை எதிர்த்த கதை அது. நான் கொடுத்த சூடான டீயை அருந்திக்கொண்டே அதைக் கேட்டுக் கொண்டிருந்தார் முதலமைச்சர். சமநிலைக்கு வந்தபின்னர் அவர் கிளம்பிச் சென்றார். நடராஜ குருவின் இந்த தனித்தன்மை என் மனதில் ஆழப் பதிந்தது. சுற்றியுள்ள அனைவரும் எரிச்சலடையும் போது அவர் அமைதியாக இருப்பார்; மற்றவர்கள் ஏன் என்றே அறியமுடியாத வகையில் சில சமயங்களில் பெரிதும் எரிச்சலடைவார்.
அந்நாட்களில் மாநாட்டின் ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது ஒரு ஹோமத்துடன் நிகழ்ச்சிகளைத் தொடங்குவதை ஒரு வழக்கமாக அமைத்தார் குரு. அப்போது உபநிடதங்களைப் பாடுவது குருகுலத்தில் வழக்கமில்லை. விவேகானந்தா கல்லூரியைப் பார்த்து பின்னாட்களில் குருகுலத்திலும் அது மேற்கொள்ளப்பட்டது. ஹோமத்திற்குப் பிறகு குரு ஒரு பிரவசனம் நிகழ்த்துவார். பின்னர் நாள் முழுவதும் குரு தன் அறையில் அமர்ந்திருக்க நூற்றுக்கணக்கான மக்கள் அவர் பாதங்களைத் தொட்டு வணங்கி அவரிடம் ஆசி பெறுவர். ஜான் ஸ்பியர்ஸ், சுவாமி மங்களானந்தா, மாதாஜி கமலாபாய் மற்றும் நான் எங்களுக்குள் காலையும் மாலையும் மணிக்கணக்கில் த்ததுவ விவாதங்களில் ஈடுபடுவோம். சிவகிரியில் இருப்போர் எங்களை எப்போதும் பழித்துக் கொண்டிருப்பதை வதந்தி பரப்புவோர் எங்களிடம் கொண்டு வருவர். அதை எதிர்த்து எங்கள் பேச்சு நகரும்போது சிந்தனையில் முகிழ்க்கும் பேச்சு தரம் குறையும். சில சமயங்களில் எங்கள் கோபம் எல்லை மீறும். அச்சமயங்களில் குரு எங்களைக் கடிந்து பார்த்துக்கொண்டே கடந்துசெல்வார். சில சமயங்களில் அவரது கடுஞ்சொற்களை விட அவரது மெளனம் மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும். நாங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் அவர் பொறுமையாகக் கேட்பார். உரை முடிந்த பின்னர் அவரது அறைக்குச் செல்லும்போது, ரசனையின்மை, தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்தியது, மாநாடு சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கவேண்டும் என்பதை நாங்கள் மறந்துபோவது போன்று பல தவறுகளை சுட்டிக் காட்டுவார் குரு. நாம் பேசுவது பொதுமக்களிடமல்ல, நமது உயர் ‘சுயத்’திடம் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினார் அவர். குருவின் இருப்பை எப்போதும் உணர்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டும் என எண்ணினார். நடராஜ குரு மட்டுமல்ல, நாராயண குருவும், இதுவரை இருந்த அனைத்து குருக்களும், ஏன் கடவுளே கூட நாம் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பார்.
சிவகிரியில் இருந்ததைப் போல மக்கள் கலந்து கொள்ளும் வழிபாடுகள் எதுவும் குருகுலத்தில் இருக்கவில்லை. தாங்கள் குருகுலத்திற்கு உண்மையாக இருக்கிறோம் என்பதை தங்களுக்குத் தாங்களே மெய்ப்பித்துக் கொள்ள மக்களுக்கு ஒரு கருவி தேவைப்பட்டது. இதற்காக, குருகுலத்தின் உறுப்பினர்களாக அவர்களது பெயர்களைப் பதிவு செய்யச் சொன்னார் குரு. இதற்கு அவர் வைத்த பெயர் ‘Yellow Fellowship’. அந்த வருடம், நாராயண குரு, சிவகிரி மடம் மற்றும் பிற சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்புறுத்தி, குருகுலத்தின் ஆன்மீக, சமூக, சட்ட மற்றும் அற நிலைப்பாட்டை விளக்கி நான்கு கையேடுகளை எழுதி பதிப்பித்தார் குரு.