கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரி மேலாளர் திரு ஆர். சங்கரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில், உளவியல் துறையில் விரிவுரையாளர் பதவி எனக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வேலையை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் என்னிடம் அணிவதற்கு சட்டையே இருக்கவில்லை. எனக்கு வேலை கிடைத்த அன்றே குரு வந்தார். தன்னிடமிருந்த இரண்டு சட்டைகளை எனக்குக் கொடுத்து பிரச்சினையை தீர்த்து வைத்தார். அந்நாட்களில் நான் பருமனாக இருக்கவில்லை. ஆனால் குரு பருமனாக இருந்தார். அவர் குள்ளம், நான் உயரம். எனவே, அவரது சட்டையை அணிந்த நான் மாறுவேடப் போட்டியில் பங்குபெறுபவனைப் போல இருந்தேன். ரவுடிகள் என்று பெயர் பெற்ற எஸ்.என். கல்லூரியின் மாணவர்கள் என்னை “மாஸ்டராக” ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் எனக்கிருந்தது.
உளவியல் துறையில் நான் ஒருவன் மட்டுமே ஆசிரியர் என்பதால், அங்கே துறைத்தலைவர், மூத்த பேராசிரியர், இளைய விரிவுரையாளர், என் ‘பியூன்’ எல்லாம் நானே. ஒரு காலத்தில் நாராயண குருவின் பெரும் பக்தராக இருந்த திரு. சங்கர் பின்னர் அவரது பெயரையே எந்த இடத்திலும் சொல்வதைத் தவிர்த்தார். சிவகிரி யாத்திரையின்போது குருகுலத்தின் நடவடிக்கைகள் இரு எதிர்க்கட்சிகளின் இயக்கம் போன்ற தோற்றத்தைப் பெற்றது. குரு புதிய ‘letterhead’-ஐ வடிவமைத்தார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் ஓரிரு கையேடுகள் தயாரித்தார். அவற்றில் குருகுலத்தின் செயலாளர் என என் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்நேரத்தில், சிவகிரி மடத்திற்கும் எஸ்.என்.டி.பி. தலைவர்களுக்கும் எதிரான எவரும் கல்லூரியிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டியிருந்தது. நடராஜ குரு ஏற்கனவே வெளியேற்றப்பட்டவர். ஆனால், நான் குழிபறிக்கும் தொழிலின் துவக்க நிலையில் இருந்தேன். திரு. சங்கர் என்னை பதவியிலிருந்தோ, கல்லூரியிலிருந்தோ நீக்கவில்லை. ஆனால் ஶ்ரீ நாராயண கல்லூரியில் இனி உளவியல் துறை என்று ஒன்று இயங்காது என்று எல்லோரும் அறியச்செய்தார். அதற்கு பதிலாக அரசியல் துறை இயங்கும். இது நடந்தது 1954-இல், நான் கல்லூரியில் சேர்ந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு. இந்த முடிவை நான் நடராஜ குருவிடம் சொன்னபோது, “என்ன புத்திசாலித்தனம்! நீச்சல் குளத்தில் ஒன்றுக்கிருப்பது போலிருக்கிறது!” என்றார். நான் முழு நேரமும் குருகுல வேலையில் ஈடுபடமுடியும் என்பதால், இதுவும் நன்மைக்கே என்று குரு நினைத்தார்.
மங்களானந்தா சுவாமியை ஆசிரியராகக் கொண்டு குருகுலத்தின் மலையாள இதழ் தொடங்கப்பட்டது. ஆனால், அது தொடர்பான எல்லா வேலைகளையும் நானே செய்யவேண்டியிருந்தது. குரு ஒரு கட்டுரை அளிப்பார். அதை நான் மொழிபெயர்ப்பேன். என்னை செம்மைப்படுத்திக் கொள்வதற்கு இது மிகவும் உதவிகரமாக இருந்தது. கடந்த முப்பதாண்டுகளில் குருகுலத்திலிருந்து பிறந்த எழுத்துக்கள் தமக்கென ஒரு தனித்தன்மை உடையனவாய், கேரளத்தில் பிற எவருடைய சிந்தனைகளிலிருந்தும் எழுத்துக்களிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டதாய் அமைந்துள்ளன. வருடந்தோறும் விரிவுபடுத்தப்படுவதாய் பாடங்களை வடிவமைத்த குருவின் ஞானத்திற்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். 1952-இல் பெங்களூரில் தொடங்கப்பட்ட Values, வர்க்கலையில் தொடங்கப்பட்ட இதழ் போன்றவை இன்றும் தொடரும் ஒரு ஞானப் பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டுகள். இந்நேரத்தில், நடராஜ குருவின் Word of the Guru என்ற நூல் பெங்களூரில் பதிப்பிக்கப்பட்டது. இதுவே, நாராயண குருவைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசிக்கத் தகுதியான முதல் நூல் என்பேன். விற்பதற்காக பை நிறைய புத்தகங்களுடன் கேரளத்தின் அனைத்து நகரங்களுக்கும் சென்றேன். அச்சகத்திற்குப் பணம் தர வேண்டும் என்பதோடு, குருகுலத்திலும் அடுப்பெரிய வேண்டுமே! படிக்கும் எண்ணமே இல்லாதவர்களுக்கு அப்புத்தகங்களை விற்றதற்காக நான் பிற்காலத்தில் வருந்தியதுண்டு. ஆனால் குரு என்னை நம்பிக்கையிழக்கச் செய்ததில்லை.
புத்தகம் விற்று சிறிது லாபம் ஈட்டியபோது, கொல்லத்திற்குச் சென்று நல்ல வார்னிஷும் பெயிண்டும் வாங்கி வந்தேன். சிறிய குருகுலக் கட்டிடம் வெள்ளையடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. கதவுகளும் ஜன்னல்களும் வார்னிஷ் பூசப்பட்டன. மூன்று மாதங்கள் ஊட்டியில் தங்கிவிட்டு வர்க்கலைக்கு வரும்போது குரு எனது அபாரமான பணியைப் பாராட்டுவார் என நினைத்திருந்தேன். சிறிது நேர நல விசாரிப்புகளுக்குப் பிறகு, சமையலறையில் பொருட்களைப் பார்த்தார் குரு. அங்கே அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி எதுவுமில்லை. குரு என்னிடம் கேட்டார், “அவசியமானவை எவை அநாவசியமானவை எவை என்று உன்னால் பிரித்துப் பார்க்க முடியுமா?” வீரத்தில் விவேகமே சிறந்தது என்பதால் நான் பதில் பேசாமல் இருந்தேன். தொடர்ந்து அவர் கேட்டார், “வெள்ளையடிக்கப்படாத கட்டிடத்தில் இருந்துகொண்டு சூடாகக் கொஞ்சம் கஞ்சி குடிப்பதா? அல்லது அலங்கரிக்கப்பட்ட அறையில் பட்டினி கிடப்பதா? எது சிறந்தது?” இது மிகவும் அல்பமானதாகத் தோன்றலாம். ஆனால் இந்த எளிய நிகழ்ச்சி, விழுமியங்களின் படிநிலையை மதிப்பிடுவதில் என்னுடைய கொள்கையை மாற்றியமைத்தது.
அன்று மாலை, அரிசியும் மளிகை சாமான்களும் வாங்குவதற்கு யாரிடமாவது கடன் வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் குரு என்னை போக விடவில்லை. குருகுலத்தின் இதழ்களின் அட்டையை ஒட்டுவதற்காக வாங்கி வைத்திருந்த கோதுமை மாவு மட்டுமே கொஞ்சம் இருந்தது. அதை வைத்து நான் ஒரு சப்பாத்தி செய்தேன். பிரார்த்தனைக்குப் பிறகு சப்பாத்தியை குருவின் முன் வைத்தேன். சீரகமும் வெந்தயமும் போட்டுக் காய்ச்சிய நீரும். அவர் எரிச்சலடைவார் என நான் நினைத்ததற்கு மாறாக அவர் மகிழ்ந்தது தெரிந்தது. சப்பாத்தியை நான்கு துண்டாக்கினார். கால் பாகத்தை தான் எடுத்துக் கொண்டு மிச்சத்தை எங்கள் மூவருக்கும் கொடுத்தார். பிறகு, “ஒரு மாற்றத்திற்கு, காலி வயிறுடன் இருப்பது நல்லது” என்றார். நாளை எப்படி உண்போம் என்ற சிந்தனையில் இரவு முழுதும் படுக்கையில் அமர்ந்திருந்தேன். யாரிடமும் கடன் வாங்குவதை குரு விரும்பவில்லை. காலை ஐந்துமணிக்கு வாசலில் இரைச்சல் கேட்டு வெளியே வந்தேன். ஒரு மாட்டு வண்டி வந்திருந்தது. யாரோ ஒருவர் வாழைக்காய், தேங்காய், அரை மூட்டை அரிசி, அனைத்து வகையான காய்கறிகள் இவற்றை எடுத்துவந்தார். பிற்காலத்தில் குருகுலம் நடத்தப்பட எந்தப் பொருளியல் அடிப்படையை நடராஜ குரு பின்பற்றினார் என்பதை, முன்பின் அறியாத ஒரு பரோபகாரியின் இந்தத் திடீர் பரிசு எனக்கு விளக்கியது. பொதுவாழ்வில் மறைந்துள்ள இயற்கையான கருணை எந்தவொரு வெற்றிடத்தையும் மாயமாய் நிரப்பவல்லது என்பதை நான் ஐயமற உணர்ந்த தருணமது. மறுநாள், நான் குருவின் கவனத்திற்கு இதைக் கொண்டுபோனபோது, “நீ வெற்றிடத்தை உருவாக்கும் அளவுக்கு தைரியமுடையவனாய் இருந்தால், இயற்கை அதை வெறுக்கிறது. வெற்றிடம் உடனடியாக மூடப்படுகிறது.” எனது கடந்த முப்பதாண்டு கால வாழ்க்கை இதற்கு சாட்சி. இதை நான் மீண்டும் மீண்டும் கண்டுகொண்டே இருக்கிறேன். குருவின் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் அவரைப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைப்பவன், கடலில் இருந்து ஒரு புட்டி நீரை அள்ளி அதில் கடலைக் கண்டடைய எண்ணுபவன்.