என் வாழ்க்கைக் குறிப்புகள் – 1

சாமுவேல் என்ற ஓர் இளம் ஆசிரியர் எங்கள் பள்ளிக் கூடத்தில் இருந்தார்.  அவருக்கு பதினேழு அல்லது பதினெட்டு வயதுதான் இருக்கும்.  ஆரம்பத்திலிருந்தே எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போயிற்று.  அவர் எப்போதும் மிக வேகமாக நடப்பார்.  மழையோ வெயிலோ இல்லாமலிருந்தாலும் அவர் தன்னுடைய குடையை விரித்துப் பிடித்தபடிதான் நடப்பார்.  நடக்கும்போது அவர் ஒரு கையை விறுவிறுப்பாக வீசி நடப்பது காதுக்குக் கேட்காத ஒரு தாளகதிக்கு ஏற்ப நடப்பதைப்போல இருக்கும்.  சில மாலைவேளைகளில் என்னைக் கைப்பிடித்து மெதுவாக என் வீட்டிற்கு அழைத்தும் போவார்.  அவருடன் நடந்துபோவது எனக்கு எப்போதும் பிடிக்கும்.

ஒரு சனிக்கிழமை எங்கள் வீட்டிற்கு வந்து அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள அவருடைய பைபிள் வகுப்புக்கு வரச்சொல்லி எனக்கு பிரத்தியேக அழைப்பு விடுத்தார்.  அவர் சொல்வதைச் செய்வது எனக்கு மிகவும் உவப்பான விஷயம்.  அடுத்த நாள் இருபது அல்லது இருபத்தைந்து குழந்தைகளும் அவருடைய வகுப்பில் குழுமினார்கள்.  ஆதாமும் ஏவாளும் தங்களுடைய தந்தையான கடவுளுடன் வசித்த ஈடன் தோட்டத்தைப் பற்றி எங்களுக்குச் சொன்னார்.  தோட்டத்தின் நடுவில் பழங்கள் நிறைந்த ஒரு மரம் இருந்ததாகச் சொன்னார்.  அந்த மரத்திலிருந்து பழங்களைப் பறிக்கக்கூடாது என்று தேவன் ஆதாமையும் ஏவாளையும் தடுத்திருந்தார்.

எங்களுடைய பள்ளிக்கூடத்துத் தோட்டத்தில் ஒரு மாமரம் இருந்தது.  மாம்பழங்களைப் பறிக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர் எங்களுக்குத் தடை விதித்திருந்தார்.  கிறித்தவக் கடவுளைப் புரிந்துகொள்வதற்கு அந்த ஒப்புமை மிக வசதியாக இருந்தது.  கையில் பிரம்போடு கறாரான, கோபம் நிரம்பிய கடவுளின் சித்திரம் என்னுடைய மனதில் தோன்றியது.  அவர் எங்களுடைய தலைமை ஆசிரியரை மிகவும் ஒத்திருந்தார்.  இது என்னுடைய மனதில் ஒரே சமயத்தில் வெறுப்பையும் மரியாதையையும் பயத்தையும் பகைமையையும் உண்டாக்கியது.  என்ன ஆனாலும் அவரைத் தவிர்த்துவிட என்னுடைய மனதில் ஒரு விசித்திர ஆசை உண்டானது.

ஒவ்வொரு நாள் இரவும் என்னுடைய பாட்டி பகவத் கீதையிலிருந்து பாராயணம் செய்வதைக் கேட்டிருந்தும் ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என்று மற்ற குழந்தைகளோடு உச்சாடனம் செய்திருந்தும் இவை எதையும் நான் கடவுளோடு தொடர்புபடுத்திப் பார்க்கவில்லை.  அன்பும் பிரியமும் கொண்ட மிக நேசத்திற்குரிய ஒரு நபரால் கடவுள் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டும் கடவுள் எனக்கானவர் இல்லை என்று ஆயிற்று.

பாம்பு ஏவாளுக்கு எப்படி ஆசை ஊட்டி பழத்தைப் பறிக்கச் செய்தது என்பதைப் பற்றியும், ஆதாம், ஏவாள் மற்றும் பாம்பை எப்படி கடவுள் தண்டித்தார் என்பதைப் பற்றியும் என்னுடைய ஆசிரியர் சொன்னார்.  ரகசியமாக பாம்பின் மீது நான் பெரிதும் பரிதாபப்பட்டேன்.  பள்ளிக்கூடம் போகும்போது சில சமயங்களில் ஒரு பாம்பு சாலையைக் கடந்து ஒரு நெல்வயலுக்குள் நுழைவதைப் பார்த்திருந்தேன். பாம்புகளால் இனிமையான விஷயங்களைப் பேசமுடியும் என்பதைப் பற்றிய புரிதலை ஆசிரியர் சொன்ன கதை எனக்குக் கொடுத்தது.  அடுத்தமுறை நெல்வயலுக்குள் அந்தப் பாம்பு நுழையும்போது அதை நிறுத்தி அதனுடன் பேசவேண்டும் என்று தீர்மானித்தேன்.

எப்படியோ, ஆதாம் ஏவாளிடமிருந்து நாம் எல்லோரும் எப்படி வந்தோம் என்பதை அறிந்தபோது நான் மிகவும் பரவசப்பட்டேன்.  அதேசமயம், என்னுடைய தாத்தா என்னை சபித்தமாதிரி அவர்களை அவர்களுடைய தந்தையான கடவுள் சபித்ததை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.  என்னுடைய தாத்தாதான் கடவுள், தலைமை ஆசிரியர் அல்ல என்பதற்கு சாத்தியம் இருக்குமோ?  என்னால் அவ்வளவு உறுதியாகச் சொல்லமுடியவில்லை.

பிற்பகல் வீட்டுக்கு வந்து கடவுளைப் பற்றியும் அவருடைய சாபங்களைப் பற்றியும் என்னுடைய அம்மாவிடம் சொன்னேன்.  அம்மா சிரித்துவிட்டு அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொன்னார்கள்.  அது கிறித்தவக் கடவுள்தான் என்றும் நாம் கிறித்துவர்கள் இல்லை என்றும் சொன்னார்கள். கிறித்தவர்களான என்னுடைய சில நண்பர்களையும் என்னுடைய ஆசிரியரான சாமுவேல் அவர்களையும் குறிப்பிட்டு அவர்கள்தான் கிறித்தவர்கள் என்றும் நாம் இந்துக்கள் என்றும் சொன்னார்கள்.  இந்தப் பிரிவை நியாயப்படுத்தும் எதையும் மிகச்சிறிய அளவில்கூட என்னால் மனிதர்களிடம் பார்க்கமுடியவில்லை. ஆனால் இந்த அர்த்தமற்ற வார்த்தைகள் என்னுடைய மனதில் ஒரு நிலைபெற்ற கருத்தாக இல்லாமல் பெரிதும் ஒரு கேள்வியாகவே தங்கியது. குழந்தையிடம் ஒரு கதையைச் சொல்வது போன்ற ஆதிகுல மரபு விஷயங்களிலிருந்து ஆழ்ந்த மனோவியல் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட கலாச்சாரப் பின்னல் தொடங்குவதாகத் தோன்றுகிறது.  நூற்றுக்கணக்கான வருடங்களாக உலகின் இரண்டு பகுதிகளில் பேணி வளர்க்கப்பட்ட இரண்டு தனித்த கலாச்சாரங்கள் ஒரு விசித்திர மனோவியல் கலவையாக மாறி அந்தக் குழந்தையின் மனதில் நுழைந்து அதனுடைய எஞ்சிய முழு வாழ்க்கையின் நம்பிக்கையின் மீதும் பகுத்தறிவின் மீதும் செல்வாக்கு செலுத்தின.

என் குழந்தைப் பருவத்தில் என்னிடம் பேசியவர்களின் வார்த்தைகளால் எப்படி என் மனது தெளிவடைந்தது அல்லது மாசடைந்தது என்பதை இப்போது யோசித்துப் பார்க்கையில் சிறு குழந்தைகளிடம் உரையாடும்போது விவேகத்தைப் பயன்படுத்துவதன் அவசியத்தை நான் உணர்கிறேன்.  ஒரு குழந்தையிடம் பேசும்போது என்னால் சுதந்திரமாகவோ அல்லது இயல்பாகவோ உணரமுடிவதிலலை.  (பிற்கால வாழ்க்கையில்) அவர்களுடைய இயல்பான வளர்ச்சி அல்லது பரிவுடன் கூடிய புரிந்துகொள்ளல் ஆகியவற்றுக்குத் தடை உண்டாக்கக்கூடிய எவ்வகையான பயத்தையோ அல்லது முன் அபிப்ராயத்தையோ அவர்களுடைய மனங்களில் நுழைக்கக்கூடாது என்று நான் கருதுகிறேன்.  ஒரு பாதுகாப்பான நிலைப்பாடு எடுத்து கடவுளை நான் அவர் வழியில் விட்டுவிட்டேன்.

மேலும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s