நடராஜ குருவும் நானும் – 1

நடராஜ குருவைப் பற்றி எண்ணும்போதெல்லாம், 1938-இல் ஊட்டி ஃபெர்ன்ஹில் குருகுலத்தில் குருவை நான் முதலில் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. அவர் ஏகாந்தமாய் இருந்தார். காலை ப்ரார்த்தனைக்குப் பின்னர் என்னையும் என்னை அழைத்துச் சென்றிருந்த நண்பரையும் மதிய உணவுக்கு அழைத்திருந்தார். மிகவும் எளிய உணவு. பின்னர், வெங்காயத்தோல் தாளில் அச்சிடப்பட்டிருந்த நாராயண குருகுலம் பற்றிய கையேட்டை எனக்களித்தார். அப்போது குருகுலத்தில் ஒரு வகுப்பை நடத்தி வந்தார் அவர். பத்து ரூபாய் மாதக் கட்டணம். தங்குவதற்கும் உணவுக்குமான கட்டணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அங்கே அவர் தனியாக இருப்பது எனக்கு வேதனையளிப்பதாக இருந்தது. அதற்காகவே அவரது வகுப்பில் சேரவேண்டும் என்று விரும்பினேன். அப்போது பதினான்கு வயது நிரம்பியிருந்த நான் எனது பெற்றோருக்கு முழுமுற்றாகக் கட்டுப்பட்டவனாக இருக்க விரும்பினேன். எனவே, நடராஜன் மாஸ்டர் என்று அப்போது அறியப்பட்ட நடராஜ குருவிடம் சேர்வதாக வாக்களிப்பதற்கு முன் என் தந்தையின் அனுமதியைப் பெறவேண்டும் என நினைத்தேன். மிகுந்த வருத்தத்துடன் அவரிடமிருந்து விடைபெற்றேன்.

நானும் என் நண்பரும் ஊட்டி பேருந்து நிலையத்திற்கு நடந்தோம். ரயில் பாதை வழியாகச் சென்றபோது ஃபெர்ன்ஹில் டனலைக் கடந்து சென்றோம். குகைக்குள் நுழைந்ததும் சொல்லொணாத் தனிமை உணர்வு என்னைச் சூழ்ந்தது. ஆனால் அது தனியனாய் உணரச் செய்யவில்லை, சுயத்தை எதிர்கொள்வதாய், சடுதியில் தனது இருப்பை முதல்முதலாகக் கண்டு கொள்ளும் அனுபவமாக இருந்தது. குகையின் மைய இருளை நோக்கிச் செல்லச்செல்ல மனதில் ஒரு கேள்வி எழுந்தது. ஒரு வினோதமான குரல், “உன் வாழ்வில் என்ன செய்யப் போகிறாய்” என மீண்டும் மீண்டும் கேட்டது. “நடராஜன் மாஸ்டருடன் வாழப் போகிறேன்” என்ற பதில் தானாக எழுந்தது.

அப்போது நான் தேவரசோலாவில் சேலாஸ் ஃபாக்டரியில் டீ மேக்கராக இருந்த என் ஒன்றுவிட்ட சகோதரனுடன் தங்கியிருந்தேன். ஃபெர்ன்ஹில்லில் நடராஜன் மாஸ்டருடன் வசிப்பதற்கு என் தந்தையின் அனுமதியைப் பெறுவதற்காக அவசர அவசரமாகக் கிளம்பி கேரளாவுக்குச் சென்றேன். பொதுவாக அமைதியாய் இருக்கும் என் தந்தை நான் பேசப்பேச கடுப்பாவது தெரிந்தது. விதி என்னை துயரப்பேரிருளில் ஆழ்த்துகிறது என்று மிகவும் மனம் நொந்தார். நடராஜன் மாஸ்டரின் தந்தையான டாக்டர் பல்புவின் மீது அவர் பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரைப் பொருத்தவரை டாக்டர் பல்பு ஏழைகளின் உயர்வுக்காகப் போராடிய வீரர். என் தந்தை உழைப்பில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதி. கற்பனாவாத லட்சியங்களில் அவருக்கு நம்பிக்கையில்லை. அவர் பேசுவதைக் கேட்கும்போது என்னை முதலை வாயில் அகப்பட்டு தப்பிக்கத் துடிக்கும் மனிதனைப் போல உணர்ந்தேன். அக்கணமே என் வீட்டை விட்டு ஓடிவிடத் துடித்தேன். ஆனால் துணிவு வரவில்லை. கொல்லத்திற்குச் சென்று என் மாமனுடன் தங்கி வணிகவியல், தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்குப் பதிவியல் படிக்கும்படி என் தாயார் அறிவுறுத்தினார். வீட்டை விட்டுச் செல்ல அது ஒரு சாக்கு என்பதால் உடனே அதற்கு ஒப்புக்கொண்டேன்.

இந்தக் காலகட்டத்தில், ஹிட்லரும் முசோலினியும் நேசமாகி, உலகம் முழுவதும் தொற்றுநோய் போலப் பரவிய, இரண்டாம் உலகப் போரைத் துவங்கியிருந்தார்கள். 1942-இல் விநோதமான சூழலில் விமானப் படையில் நான் சேர்க்கப்பட்டேன். போர் முடிந்து விதிவசத்தால் எங்கெங்கோ அலைக்கழிந்து இறுதியில் ஆலப்புழை கிறித்தவக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தேன். இது நடந்தது 1947-இல். அப்போது நாராயண குருவின் அத்வைத ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். ஒரு நாள், நாராயண குருவின் பக்தர் ஒருவர் நாராயண குரு 1924-இல் நடத்திய உலக மதங்கள் மாநாட்டைப் பற்றி மிகவும் உற்சாகத்துடன் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். 1924 நான் பிறந்த வருடம் என்பதால், உலக மதங்கள் மாநாடு குறித்த ஒரு பெருமிதம் எனக்கு ஏற்பட்ட்து. அதே அத்வைத ஆசிரமத்தில் இரண்டாவது மாநாட்டை நடத்த விரும்பினேன். அத்வைத ஆசிரமப் பள்ளியின் தலைமையாசிரியராய் இருந்த திரு எம்.கே. கோவிந்தன், மாநாட்டிற்குத் தலைமை தாங்க நடராஜ குருவை நான் அழைக்கலாம் என்றார். நடராஜ குருவுக்கு மாநாட்டைப் பற்றி நான் எழுதியதற்கு அவர் மிகவும் பரிவுடன் பதிலளித்திருந்தார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த திரு ஜான் ஸ்பியர்ஸ் என்னும் அவரது நண்பருடன் வருவதற்கு ஒப்புக் கொண்டார். முடிந்துபோன ஃபெர்ன்ஹில் அத்தியாயம் அங்கே மீண்டும் துவங்கியது. பல்வேறு மதங்களைச் சார்ந்த பேரறிஞர்கள் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டனர்.

அனகாரிக புத்தரக்ஷித் மற்றும் அனகாரிக தர்மரக்ஷித் எனும் இரு புத்த பிட்சுக்களின் தாக்கத்தால் நான் சன்னியாசம் கொள்வதில் பேரார்வம் கொண்டிருந்த காலம் அது. பல வருடங்களுக்கு முன், உயர்நிலைப்பள்ளி மாணவனாய் இருந்தபோது அவர்கள் இருவரையும் முதலில் சந்தித்தபோது என்னில் உணர்ச்சிகரமான ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். அப்போது அவர்களது பெயர் புத்தப்பிரியா, தர்மப்பிரியா. புத்தப்பிரியா இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர். தர்மப்பிரியா வங்காளத்தைச் சேர்ந்தவர். என் கண்ணுக்கு அவர்கள் ஏதோவொரு ஆன்மீகப் பேரொளியுடன் கூடிய பேரழகர்களாகத் தோன்றினர். அவ்விருவரும், நடராஜ குரு தலைமை தாங்கிய மாநாட்டில் உரையாற்ற வந்திருந்தனர். அந்நாட்களில் நான் புத்த சரிதத்தின் முதல் இரண்டு காண்டங்களையும், குமாரன் ஆசானின் சண்டால பிக்ஷுகி முழுவதையும் மனப்பாடமாக ஒப்பிப்பேன். அனகாரிக தர்மரக்ஷித் ரவீந்திரநாத் தாகூரின் சண்டாலிக கதையை வழங்கினார். வங்காள பிட்சுவைவிட நன்றாகவே ஆசானின் சண்டாலிக-வை மலையாளிகள் அறிவார்கள் என்பதால் பிட்சுவின் முயற்சி ‘கொல்லன் பட்டறையில் ஊசி விற்றல்’ (bringing coals to Newcastle) என்று நடராஜ குருவுக்குத் தோன்றியது. எனவே, பிட்சு சொன்னதை மொழிபெயர்ப்பதற்கு பதிலாக, பெருங்கவிஞர் ஆசானின் சண்டால பிக்ஷுகியைப் பாடும்படி என்னைப் பணித்தார் குரு. அவரது பேச்சை மொழிபெயர்ப்பதற்கு பதிலாக, நான் பாடத் தொடங்கியதைக் கண்ட பிட்சுவுக்கு வியப்பு. இந்த நகைச்சுவையை நான் ரசித்தேன். இச்சிறு விஷயங்கள் நடராஜ குருவுக்கு என் மேல இதமான அன்பு ஏற்படக் காரணமாயின. அடுத்த சில நாட்கள் என்னிடம் மிகவும் கனிவுடன் பேசிக்கொண்டிருந்தவர், எனது தத்துவ முதுகலைப் படிப்பு முடிந்தவுடன் அவரிடம் சென்று சேர்வேன் என்ற வாக்குறுதியை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

மறைந்த குமாரன் ஆசானின் மனைவி பானுமதி அம்மா அம்மாநாட்டை நடத்துவதற்கு பெரிதும் உதவி செய்திருந்தார். அவர் நடராஜ குருவிடம் பேரன்பு கொண்டவர். அவரை ‘தம்பியண்ணன்’ என்று விளிப்பார். ஒருவரை தம்பி என்றும் அண்ணன் என்றும் ஒரே சமயத்தில் அழைப்பதை குரு கிண்டல் செய்வார். மாநாடு முடிந்த பின்னர் அறிஞர்கள் அனைவரையும் தன் வீட்டில் விருந்துக்கு அழைத்திருந்தார் பானுமதி அம்மா. நடராஜ குரு வந்ததிலிருந்து அவரை நிழல்போலத் தொடர்ந்திருந்த நான் விருந்தின்போது அவருக்கு அடுத்ததாக அமர்ந்திருந்தேன். இன்னும் ஒரு வாரத்தில் தான் மார்ஸே-க்கு (Marsailles) கப்பலேறப் போவதாகச் சொன்னார் குரு. எனக்குள்ளிருந்த அலைந்துதிரியும் மோகத்தை அது கிளறியிருக்க வேண்டும். அவரது வெளிநாட்டுப் பயண விவரங்களை தூண்டித் தூண்டி கேட்கத் தொடங்கினேன். பயணச் சீட்டைத் தவிர எல்லாம் தயார் என்றார் குரு. ‘பயணச் சீட்டு வாங்கக் கூட காசில்லாதபோது எதற்காகப் பயணம்?’ என்றேன் அவரிடம். அதற்கு அவர், “மரத்தில் இலையொன்று துளிர்க்கும்போது அது தனக்கான இடம் இருக்குமா என்று கவலை கொள்ளுமா என்ன?” என்றார். வழமைக்கு மாறான பதில் அது. அதை அவர் மிகவும் தீவிரத்துடன் கூறியதால், அதை என்னால் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. எங்கள் மேசைக்கு பானுமதி அம்மா வந்தபோது, குரு கூறியதை அவரிடம் சொன்னேன். வாய்விட்டு சிரித்த அவர், கட்டணம் எவ்வளவு என்று கேட்டார். எந்த ஆர்வமுமில்லாமல் தொகையைக் கூறினார் குரு. தனது அறைக்குள் மறைந்த பானுமதி அம்மா பத்து நிமிடங்கள் கழித்து ஒரு பெரிய உறையுடன் திரும்ப வந்தார். அதை நடராஜ குருவிடம் கொடுத்துவிட்டு “உங்கள் பயணத்துக்கான பணம்” என்றார். எந்த பாவனையும் இல்லாமல் அவர் பணத்தைக் கொடுத்த விதமும் குரு அதை எந்த ஒரு சலனமுமில்லாமல் வாங்கி தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்ட விதமும் என்னை ஆச்சரியத்திலாழ்த்தின. “விநோதமான மனிதர்கள்” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். “வானத்துப் பறவைகளைப் பார், அவை விதைப்பதில்லை, அறுவடை செய்வதில்லை, குதிரில் சேமிப்பதில்லை, ஆயினும் தேவபிதா அவற்றை ரட்சிக்கிறார்” – என்னைக் கவர்ந்த பைபிள் வரிகள் நினைவில் எழுந்தன. இம்முறை நடராஜ குருவும் ஜான் ஸ்பியர்ஸும் ஃபெர்ன்ஹில்லுக்கு ரயிலேறிய போது பிரிவுக்காக நான் வருந்தவில்லை. என் எண்ணத்தில் நடராஜ குரு ஏற்கனவே ஃப்ரான்சிற்குச் சென்றிருந்தார். அவரைக் குறித்து பெருமிதமாய் உணர்ந்தேன். இது நிகழ்ந்தது 1948-இல். மீண்டும் ஃபெர்ன்ஹில்லையும் குருவையும் மறந்தேன்.

– நடராஜ குருவின் நூற்றாண்டைக் (1895-1995) கொண்டாடும் வகையில் பதிப்பிக்கப்பட்ட “Nataraja Guru and I” என்னும் சிறு நூலிலிருந்து

நடராஜ குருவுடன் நித்யா

மேலும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s